நரேந்திரன்
“I could not become anything: Neither bad nor good, neither a scoundral nor an honest man, neither a hero nor an insect. And now I am eking out my days in my corner, taunting myself with the bitter and entirely useless consolation that an intelligent man cannot seriously become anything; that only a fool can become something.”
– Fyodor Dostoevsky (Notes from Underground)
கடைசியில் புலி வந்தே விட்டது. இராக்கிய பிரதமர் அல்-மாலிக்கி முகத்தில் மெல்லிய புன்னகையுடன் மரண சாசனத்தில் கையெழுத்திட, அதிபர் ஜலால் தாலாபானி அதனைத் தடுக்க மறுக்க, வன்முறைகள் நிறைந்த ஒரு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் மீறி Saddam Hussein Abd al-Majid al-Tikriti (a.k.a) சதாம் ஹ¤செய்னுக்குச் சென்ற வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இராக்கியர்கள் இனி ச.மு, ச.பி எனச் சரித்திரம் எழுதத் துவங்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
தூக்குமேடை ஏறச் செல்லும் ஒரு முதிய மனிதனை வார்த்தைகளால் காயப்படுத்திய, வீடியோ எடுத்த அற்பர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், Saddam is no Saint. ஒரு சக மனிதனின் இயற்கைக்கு முரணான மரணம் நம்மை வருந்த வைத்தாலும், சதாமின் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்வது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியமான ஒன்று.
இக்கட்டுரை சதாமிற்கு எதிராகவோ அல்லது அமெரிக்கர்களுக்கு ஆதரவாகவோ எழுதப்படவில்லை எனக் கூற விழைகிறேன். என் உண்மையான எண்ணம் தகவல் அளிப்பது மட்டுமே. சதாம் ஹ¤செய்னின் கடந்த காலம் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பவர்களுக்கு இக்கட்டுரையில் படிக்க ஒன்றுமில்லை.
பத்து வயதாகும் வரை பள்ளிக்குச் செல்லாமல், கோழித் திருடனாக (literally!) திக்ரித்தில் உலா வந்த சதாம் ஹ¤செய்னின் வாழ்க்கை ஒரு action packed adventure.
சர்வாதிகாரம் என்பது திரும்பவே முடியாத ஒருவழிப்பாதை. முன்னாலிருப்பவர்களை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லும் அதே சமயம், தனக்குப் பின்னால் வருபவர்களின் மீது ஒரு கண் வைத்தே ஆகவேண்டும். சந்தேகமும், அச்சமும் சர்வாதிகாரிகளின் உடன் பிறந்தவை. அந்த உணர்வுகளே அவர்களைப் படுகொலைகள் செய்யத் தூண்டுகின்றன.
சதாம் ஹ¤செய்னின் ஒரு புகழ் பெற்ற வீடியோ ஒன்று உண்டு. 1979-ஆம் ஆண்டு, ஜுலை 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ ஒரு நல்ல திரைப்படக் காட்சியைப் போலிருக்கும்.
பாக்தாதில் உள்ள ஒரு அரங்கினுள் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிரிக்கிறார்கள். பெரும்பாலோர் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மக்களிடம் செல்வாக்குப் பெற்ற, சதாமுக்குப் போட்டியாக வரக்கூடிய முக்கியஸ்தர்கள். அரங்க மேடையில் கையில் சுருட்டுடன், இதழ்க்கடையில் அலட்சியப் புன்னகையுடன் அரங்கை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார் சதாம் ஹ¤செய்ன். அரங்கம் அமைதியாயிருக்க, ஒலி பெருக்கியில் முன் ஒருவர், அச்சத்துடன், முகத்தில் வியர்வை வழிய, தன் கையிலிருக்கும் தாளிலிலிருந்து ஒவ்வொரு பெயராகப் படிக்கிறார். பெயர் அழைக்கப்பட்ட துரதிருஷ்டசாலிகள் ஒவ்வொருவராக எழுந்து நிற்க, உடனடியாக ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் சீருடை அணியாத போலிசாரால் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எங்கே அடுத்ததாக தன் பெயர் வந்து விடுமோ என்ற திகிலுடன் அரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள் மற்றவர்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தி இரண்டு பேர் அரசுக்கு எதிராக சதித்திட்டம் செய்ததாக (பொய்யான) குற்றம் சாட்டப்பட்டு அன்றைய தினமே கொல்லப்பட்டார்கள்.
தன்னை எதிர்ப்பவர்கள் நிலை என்னவாகும் என்ற எச்சரிக்கைச் செய்தியை இராக்கியர்களுக்குப் பரப்ப விரும்பிய சதாம், மேற்படி காட்சியை நூற்றுக் கணக்கான பிரதிகள் எடுத்து இராக் முழுவது வினியோகித்தார். சற்று சிரத்தை எடுத்து இணைய தளங்களில் தேடினால் மேற்படி படக் காட்சிகள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இரும்புக் கரம் கொண்டு ஆட்சி புரிந்த சதாமின் ஆட்சிக்காலத்தில் எவருக்கும் பாதுகாப்பில்லை. அவரை எதிர்த்து, ஜோர்டான் நாட்டிற்குத் தப்பியோடிய அவரின் சொந்த மருமகனும் இதற்குத் தப்பவில்லை. மேற்கத்திய நாடுகள் ஆதரவு வழங்கும் என்ற அவரது மருமகனின் கனவு வெறுங்கனவாக முடிய, பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற சதாமின் உறுதி மொழியை அடுத்து, வேறுவழியின்றி இராக் திரும்பியவர் படுகொலை செய்யப்பட்டார்.
வராலாறு அறிந்தவர்கள் ஹலாப்ஜா படுகொலைகளை மறந்திருக்க மாட்டார்கள். இராக்கின் வடபகுதியில் பெருவாரியாக வாழும் குர்திஷ் இனத்தினர் சதாமுக்கு எதிரானவர்கள். புரட்சி செய்த அவர்களை ஒடுக்க, குர்திஷ் இன மக்கள் பெருவாரியாக வாழும் ஹலாப்ஜா நகரத்தின் மீது விஷ வாயு (mustard gas) குண்டுகளை வீச, ஆண், பெண், குழந்தகைள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்றைக்கும் காணக் கிடைக்கும் புகைப்படங்கள் எத்தகைய பலசாலியையும் அதிர வைக்கும்.
இராக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரங்களே சதாம் ஹ¤செய்னை ஆட்சியில் வைத்திருந்தன இரான் போர், குவைத் ஆக்கிரமிப்பு, வட பகுதி குர்திஷ் இனப் புரட்சி, தென்பகுதி ஷியாக்களின் புரட்சி, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ராணுவப் புரட்சிகள், கொலைத் திட்டங்கள் என அத்தனையையும் தாங்கி அவரை நிலை நிறுத்தியவை அவரும், அவரது இரு மகன்களும் இதயமற்று நடத்திய படுகொலைகளே என்பதை யாரும் மறுக்க இயலாது.
இறுதியில் அவரது பயங்கரவாதமே அவருக்கு எமனாய் அமைந்தது எனலாம். ஏப்ரல் 2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகளால் விரட்டப்படுவதற்கு முன், எண்ணெய் வளமுள்ள இராக்கை ஏழ்மையில் இருந்தது. தனது சொந்தங்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் சதாம் நம்பவில்லை. அவரது உற்றார், உறவினர் மட்டுமே அவரைச் சுற்றி இருந்தார்கள். உயர் பதவிகள் வகித்த அவர்களில் பெரும்பாலோர் திறமை அற்றவர்களாக இருந்தது, சதாமின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று.
சதாமின் ஆட்சியில் நன்மைகள் இல்லாமலில்லை. அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் பல மிகச் சிறப்பானவையே. எகிப்தின் கமால் அப்துல் நாஸரின் சோசலிக் கொள்கையில் பிடிப்பு கொண்ட சதாம், இராக்கிய எண்ணைக் கம்பெனிகளை தேசிய மயமாக்கினார். அரேபிய நாடுகள் அனைத்தைப் பார்க்கிலும், இராக்கிய பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. குவைத் ஆக்கிரமிற்கு முன் வரை, இராக்கியர்களின் வாழ்கைத் தரம் மற்ற அரேபிய நாடுகளை விடச் சிறந்ததாக இருந்தது. கடைசிவரை சதாம் ஒரு மதவெறியற்ற, நடுநிலையாளராகவே இருந்தார். அல்-காய்தா போன்ற அமைப்புகள் சதாம் ஹ¤செய்னை உதாசீனப்படுத்த இதுவும் ஒரு காரணம்.
***
இராக்கிய ஆக்கிரமிப்பில் எல்லோரும் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை மட்டுமே குறை கூறுவது சரியல்ல என்பது என் எண்ணம். அவர் ஒரு வெறும் கருவி என்பதினைப் பெரும்பாலோர் உணர மறுக்கிறார்கள். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் உலகில் அமெரிக்காவின் ஆளுமை தொடர வேண்டும் என்ற பென்டகனின் திட்டத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அவர். சரியாகச் சொல்லப் போனால் Right Man at the Right Time எனலாம். ஜார்ஜ் புஷ், முந்தைய அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டனைப் போலவோ, அல்லது துணை ஜனாதிபதி அல்-கோரைப் (Al-Gore) போலவோ சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவரல்ல என்பது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அனைவரும் அறிந்த ஒரு சமாச்சாரம். விஷயமறிந்தவர்களுக்கு, ஜார்ஜ் புஷ் is not an elected but “Selected” President என்பதுவும் தெரியும்.
“வளைகுடா எண்ணெயைப் பெறுவதற்கு அமெரிக்காவிற்கு ஏதேனும் தடங்கல் வருமானால், அதனை எதிர்த்து அமெரிக்கா எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கும்” – சொன்னவர் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். அதற்கு Carter Doctrine என்றே பெயர் வைத்திருந்தார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜ் டபிள்யூ, கார்ட்டர் டாக்டரினை உயிர்ப்பித்திருக்கிறார். இந்த விஷயத்தில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.
அமெரிக்கா இராக்கை விட்டு உடனடியாக வெளியேறுவது சந்தேகமே. இந்த போரில் அவர்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். இராக்கின் கேந்திர முக்கியமான இடங்களில் மிக பிரமாண்டமான பதினான்கு ராணுவ மற்றும் விமான தளங்களைக் கட்டி வருகிறது அமெரிக்கா. அத்தனையையும் விட்டு விட்டு அமெரிக்கர்கள் திரும்பி விடுவார்கள் என்பது வெறும் கனவே. இத்தனை விலை கொடுத்துக் கைப்பற்றிய இராக்கின் எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அமெரிக்கா விரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதாலாம் வளைகுடாப் போர் அமெரிக்கர்களுக்கு மிக இலாபமான ஒன்று. போருக்கான செலவு என்று பல பில்லியன் டாலர்களை சவுதி அரேபியா மற்றும் குவைத்திடமிருந்து பெற்ற அமெரிக்கா, அப்போரின் மூலம் ஏறக்குறைய நாற்பது பில்லியன் டாலர்கள் இலாபம் ஈட்டியது. போருக்குக் கொண்டு சென்ற ஓட்டை, உடைசல்களை சவூதிகளுக்குத் தள்ளி விட்ட வருமானம் இதில் சேர்த்தியில்லை.
இராக் போரில் இறந்து போன மூவாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் அமெரிக்கர்கள், இப்போரினால் இறந்து போன ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இராக்கியர்களைக் குறித்து பெரிதாக வருந்துவதில்லை. இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர்களும் அடக்கம். அமெரிக்க ராணுவ ஜெனரல்களிடம் இராக்கியர்கள் மரணம் குறித்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை நோக்கி “collateral damage” என்று அலட்சிய பாவத்துடன் அவர்கள் பதிலிருக்கும் போது உண்மையிலேயே வலிக்கிறது.
இராக் போரின் பின்னனி குறித்த உண்மையான தகவல்களை அறிய விரும்புவர்கள், நோம் சோம்ஸ்கியின் (Noam Chomsky), Imperial Ambitions-ஐப் படிக்குமாறு வேண்டுகிறேன். சோம்ஸ்கி பெரும்பாலான அமெரிக்கர்களால் உதாசீனப்படுத்தப்பட்டவர். அவர் எழுதியது என்று கூறுவதை விட, அவர் பல இடங்களில் இராக் பிரச்சினை குறித்து அளித்த பேட்டிகளின், பேச்சுக்களின் தொகுப்பே மேற்கண்ட புத்தகம். வெளி உலகம் அறிந்திராத பல அரிய தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆச்சரியப்படலாம். அதிர்ச்சியும் அடையலாம்.
பலமுறை கூறியுள்ளது போல, குறைபாடுகள் இருப்பினும் ஜனநாயகம் ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை ஆளுகிறவர்களை மாற்றிக் கொள்ளவும், தூக்கி எறியவும் உண்டான உரிமையை ஜனநாயகம் நமக்கு வழங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் இப்படிப்பட்ட நடைமுறை இல்லை. அதைக் காப்பதில் நாம் சிறிது சிறிதாக மறந்து வருவது வருந்தத்தக்கது. ஜனநாயகத்தை உலகிற்கு வழங்கிய கிரேக்க, ரோமானிய பேரரசுகள் காலப் போக்கில் காணாமல் போய்விட்டன. ஜனநாயகத்தைக் காப்பதில் அக்கறை குறைந்த மக்களால், சர்வாதிகாரம் தலைதூக்கி, அப்பேரரசுகள் அழிந்து போயின என்பது வரலாறு. வோட்டுரிமையை உதாசீனப்படுத்திய அமெரிக்கர்களுக்கு ஒரு ஜார்ஜ் புஷ் கிடைத்தார்; நாளை நமக்கு (இந்தியர்களுக்கு) ஒரு சதாம் ஹ¤செய்ன் கிடைத்தாலும் கிடைக்கலாம். வரலாறு விசித்திரங்களை உள்ளடக்கியது!
சதாமின் கடந்த காலம் பயங்கரமானதும், நினைவு கொள்ளத்தக்கதுமான ஒரு சரித்திர நிகழ்வு. அப்பாவி இராக்கியர்களின் நடுவே நெஞ்சம் நடுங்கும் பல படுகொலைகளை நிகழ்த்திக் காட்டியுள்ள சதாம் ஹ¤செய்னின் ஆட்சிக்காலம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இந்தியர்களுக்கு ஒரு பாடம். எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்புள்ள, ஆட்டு மந்தை மனோபாவ இந்தியர்கள், எதனையும் ஆய்ந்தறியும் திறனற்றுப் போயிருக்கும் அவர்களுக்கு காலம் காலமாகச் சரியான, உண்மையான தகவல்கள் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.
இன்று சதாம் ஹ¤செய்னுக்கு ஆதரவாக அறிக்கைகளை அள்ளி வழங்கும் அரசியல் தலைவர்கள் சதாமின் பின்னனி அறியாதவர்களாக இருக்கலாம். அவர்களின் “பொது அறிவு” அப்படிப்பட்டது. அறிந்திருந்தாலும் “வோட்டு வங்கி” அரசியல் அவர்களின் கண்களை மறைத்துவிடுவது கண்கூடு. அதே சமயம், நம்மிடையே ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் இன்று உலா வரும் பல தலைவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் சதாமை விடவும் பல மடங்கு பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடத் தயங்காதவர்கள். அடிக்கடி நிகழும் என்கவுண்டர்கள் இதற்கான வெள்ளோட்டங்களாக இருக்கலாமோ? I wonder….
- யாரிந்த நீதிபதிகள் ?
- சதாம்
- நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…
- நீர்வலை (5)
- திண்ணை ஏழு ஆண்டுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)
- ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…
- படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…
- சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?
- காதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி !
- மடியில் நெருப்பு – 19
- தாயகமே உன்னை நேசிக்கிறேன்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி
- புதிய காற்று
- ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்
- விடாது துரத்தும் ஜின்
- யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்
- ஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- Limp scholarship and Nadar bashing
- திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு
- அம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா
- பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்
- பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்
- ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18
- நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”
- இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்
- ஒரு செம்பு சுடு தண்ணீர்.
- பொய் – திரைப்பட விமர்சனம்
- உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- கடித இலக்கியம் – 39
- திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு
- இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்
- பேய்மழை
- புத்தக அலமாரி
- * ஒற்றை சிறகு *
- விறைத்துப்போன மௌனங்கள்
- பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்
- மீசை