முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

நாகூர் ரூமி


பி.கே.சிவகுமாரின் ‘அட்லாண்டிக்குக்கு அப்பால்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு விமர்சனம் என்ற பேரில் ஒன்றை வெ.சா. எழுதியிருக்கிறார். அந்த நூலில் நேசகுமாரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் ஒரு கட்டுரையில் சிவகுமார் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். (பெரியார் பன்னிரண்டு என்ற அந்த கட்டுரையை ஏற்கனவே நான் என் தளத்தில் இட்டுள்ளேன்).

அந்த கட்டுரை மீதான தனது கருத்தை வெ.சா. இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்:

“நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளை சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7-ம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல் மொராக்கோவிலிருந்து ·பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது?. இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் காஃபிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த காஃபிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸுன்னிகளுக்கு ஷியாக்களும் கா·பிர், அஹ்மதியாக்களும் காஃபிர், முஜாஹித்துகளும் காஃபிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸுஃபிகள் காஃபிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸாகேப்’, ‘”ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார் தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸூஃபி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். “தமா தம் மஸ்த் கலந்தர்” அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக்கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸூல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது?

பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது? “முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர்தான்” என்று ஃபட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான்? ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (cul-de-sac).”

உண்மைக்கு முற்றிலும் புறம்பான விஷயம் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?

இஸ்லாம் மார்க்கத்தில் ‘வற்புறுத்தல் இல்லை’ என்று சொல்கிறது திருக்குர்ஆன் (அத்தியாயம் 2: வசனம் 256). மேலும் உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்றும் கூறுகிறது (அத்தியாயம் 109: வசனம் 6). தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் தந்தையின் சகோதரராகிய அபூதாலிபைக்கூட இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்று நபிகள் நாயகம் நிர்ப்பந்திக்கவில்லை. இறக்கும்போதும் அபூ தாலிப் தன் முன்னோர்களுடைய மார்க்கத்திலேயேதான் இருந்தார் என்பது இஸ்லாமிய வரலாறு.

நிர்ப்பந்தம் என்பதே இஸ்லாத்துக்கு விரோதமானது. எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவையும் ஸ்பெயினையும் முஸ்லிம்கள் ஆண்டார்கள். வற்புறுத்தலையும் வன்முறையையும் பிரயோகிக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியாவில் எதற்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகிப் போகவேண்டும்? ஸ்பெயினில் முஸ்லிம்கள் இருந்த சுவடே இல்லாமல் ஏன் போகவேண்டும்?

இஸ்லாத்துக்கு எண்ணிக்கை கூடுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தோஷமும் கிடையாது. காதலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இருக்கின்ற கொடுமைகளிலிருந்து விடுதலை வேண்டியும், சுதந்திரம் சமத்துவம் போன்றவற்றை இழந்த தன்மையிலிருந்து தப்பிக்கவும் இஸ்லாத்தை ஒருவர் தழுவுவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. காரணம், மதமாற்றம் என்பது மனமாற்றத்தையொட்டி நடக்க வேண்டும். அப்போதுதான் அது நிற்கும். வேறு எந்தக் காரணங்களுக்காக மதம் மாறினாலும் அதற்கு நிரந்தரத்தன்மை இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

ஒரு காஷியஸ் கிளே, ஒரு மால்கம் எக்ஸ், ஒரு மார்ட்டின் லிங்ஸ், ஒரு மர்மட்யூக் பிக்தால் இவர்களைப்போல இஸ்லாத்து மனிதர்கள் வருவார்களேயானால் அதை நான் வரவேற்பேன். ஒரு பிரச்சனைக்கான தற்காலிகத் தீர்வின் பொருட்டு ஒருவர் மதம் மாறுவது அந்தப் பிரச்சனை தீர்ந்த பிறகு அர்த்தமற்றதாகிப் போய்விடும். இவ்வகையான மதமாற்றங்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.

எனினும், எனது தனிப்பட்ட கருத்துக்களை வரலாறு உதாசீனப்படுத்தி முன்னேறுவதைத்தான் நான் பார்க்கிறேன். இந்த உலகில் அதி வேகமாகப் பரவி வரும் மார்க்கங்களில் ஒன்றாக, அல்லது ஒன்றே ஒன்றாக இஸ்லாம் இருக்கிறது. என்ன செய்வது?

ஆபிதா பர்வீனின் ‘தமாதம் மஸ்த் கலந்த’ரைக் கேட்டு வெ.சா. பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறாராம். அது ஆபிதா பர்வீனின் குரல் ஏற்படுத்திய விளைவு. நான்கூடத்தான் மாலினி ரஜூர்கர், கிஷோரி அமோன்கர் போன்றோரின் குரல்களைக் கேட்டு சந்தோஷமடைகிறேன். அதற்கும் கொள்கை ரீதியில் ஒரு மதத்தைச் சார்ந்திருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

பாரதி அல்லா அல்லா என்று அரற்றினானாம். பாடினானாம். அதனால் முஸ்லிம் குழந்தைகளும் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடவேண்டுமாம். வெ.சா. சொல்கிறார். ஏன்? ஒரு முஸ்லிம் எதைச்செய்ய வேண்டும், எதைச்செய்யக் கூடாதென்று சொல்வதற்கு அளவுகோல் பாரதியல்ல. அல்லாஹ்வும் நபிகள் நாயமும்தான். பாரதி எனும் அந்த அற்புதமான கவிஞன் முஹம்மது நபி உண்மையான தீர்க்கதரிசி என்று கட்டுரை எழுதினான். பாரதியைத் தன் துணைக்கு அழைக்கும் வெ.சா. பாரதியின் அக்கருத்தை ஏற்றுக்கொள்கிறாரா?

“முஹம்மது நபியவர்கள் மஹா சுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகீக தந்திரி, வியாபாரமானாலும் யுத்தமானாலும் நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி உறுதி. ஆதலால் அவர் அபிமானிக்கப்பட்டார்” என்றதும் பாரதிதான். இதைப்பற்றி வெ.சா. என்ன கூறுவார்?

“இந்தியாவின் ஏழை மக்களில் அனேகம் பேர் ஏன் முஸ்லிமாக உள்ளனர்? கத்தி முனையில் அவர்கள் மதம் மாற்றப் பட்டனர் என்பது தவறு. ஜமீந்தார்கள், பூஜாரிகளிடமிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்தனர்” என்று, சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற வேட்கையின் விளைவாக இஸ்லாத்தில் இணைந்த மக்களைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் கூறுகிறார்! (விவேகானந்தர் உரைத்தொகுப்பு 8, பக்கம் 330). இதைப்பற்றி வெ.சா.என்ன கூறுவார்? விவேகானந்தர் உளறிவிட்டார் என்று கூறுவாரா?

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவரல்ல என்பது இஸ்லாத்தின் அடிப்படை. தாய்க்கு மரியாதை செலுத்தலாம். தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபிகள் நாயகம்(ஸல்) சொன்னார்கள். ஆனால் தாயை வணங்க வேண்டும் என்று அதை அர்த்தப்படுத்திக் கொள்வது இஸ்லாத்தின் பார்வையில் தவறு.

யார் யாருக்கு எந்த இடம் தரவேண்டும், எந்த அளவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாரத மாதா என்று சொல்லி ஒரு உருவப்படததை வரைந்து வைத்துக் கொண்டு, அதில் உள்ள பெண் தெய்வ உருவத்தைப் பார்த்து ‘வணங்குகிறோம்’ என்று முஸ்லிம்கள் பாட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எந்த வகையில் நியாயம்? உருமற்ற இறைவனை வணங்கும் முஸ்லிகளின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாணதல்லவா அது? அதைப்பாட மாட்டோம் என்று சொல்ல முஸ்லிம் தலைவர்கள் வேண்டியதில்லை. எந்த சாதாரண முஸ்லிமும் சொல்லி விடுவான்.

ராமர் கோயில் கட்டுவோம் கட்டுவோம் என்று சொல்லிப் பார்த்தார்கள். அது பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்படுவதற்கான சாத்தியமில்லை என்று தெரிந்தவுடன், பிஜேபி போன்ற காலாவதியாகிவிட்ட கட்சிகளுக்கு வேறு ‘அஜெண்டா’ இல்லை என்ற காரணத்தால், வந்தே மாதரத்தை ஒரு ‘சீசனல் அஜெண்டா’வாக எடுத்துக்கொண்டு கட்டாயமாக்க வேண்டும் என்று அத்வானிகள் கூறிவருகிறார்கள்.

இதெல்லாம் அரசியலின் நாடகங்களில் ஒன்று. சிறுபான்மையினரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று செய்யப்படுகின்ற முயற்சி. மதமும் கடவுளும் வேண்டாம் என்று சொல்பவர்களை அவமானப்பப்டுத்தும் முயற்சி. சரியான இந்துக்களை ஏமாற்றும் முயற்சி.

விஷயம் அறிந்த மத்திய அரசு அந்தப் பாடலைப் பாடவேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை என்று சொல்லிவிட்டது. சரி, அந்தப் பாடலைக் கட்டாயமாக்க வேண்டும் என்று இன்று சொல்லும் அத்வானி துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், பிஜேபி ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு ஏன் அதைச் செய்யவில்லை?

திண்ணையில் தொடர்ந்து நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன், மலர்மன்னன் போன்றோர் ஒரு குழுவாக இயங்கி மாற்றி மாற்றி இஸ்லாத்தின் மீது குப்பைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மனதார இஸ்லாத்தைத் தழுவிய மாதவிக்குட்டி / கமலா தாஸ் என்ற பெண் எழுத்தாளர் — தற்போது சுரய்யா — உண்மையில் மனம் மாறவில்லை. காதலுக்காகத்தான் அப்படிச் செய்தார். அவரே பேட்டிகளில் கூறியுள்ளார் என்று நேசகுமார் கட்டுரை எழுதினார்.

அது உண்மையாகவே இருந்தாலும், அதனாலென்ன? ஒரு கமலாதாஸ் இஸ்லாத்துக்கு வரவில்லையெனில் அது அவருக்குத்தான் நஷ்டம்.

ஆனால் உண்மை அதுவல்ல. ‘மதம் மடுத்து’ என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நான் இஸ்லாத்துக்கு வந்ததைப் பிடிக்காதவர்கள் செய்த அவதூறு அது என்று அவரே விளக்கி விட்டார் (பர்தா அணிந்த ஃபெமினா படத்துடன்). தேதஸ் என்ற பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டியிலிருந்து:

“நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?”
“எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததை பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யை புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக் கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை”.
“இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்”
“எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில் தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்.”
.(மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006).
“எனக்கு இஸ்லாம் பிடித்திருக் கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது.” என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.
“ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (cul-de-sac.)” என்று கட்டுரையை முடிக்கிறார் வெ.சா. இந்த வாக்கியம் எதற்கு? குறிப்பிட்ட ஆங்கில வார்த்தை தனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவா?

மதச்சார்பின்மை என்பது அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு. நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு மதச்சார்புதான். ஹிந்து ஹிந்துவாகவும், முஸ்லிம் முஸ்லிமாகவும், கிறிஸ்தவர் கிறிஸ்தவராகவும்தான் இருக்க வேண்டும்.

ஆனால் மாற்று மதத்தவர்களிடம் நட்போடு இருக்க வேண்டும். இது மதச்சார்பின்பையல்ல. எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய மனிதத்தன்மை இது. முதலில் நாம் அனைவரும் மனிதர்கள். பிறகுதான் வாழ்நெறியான மதம் வருகிறது. யாரும் யாருக்கும் எதையும் திணிப்பது தவறு. வந்தே மாதரம் பாடவேண்டும் என்று ஒரு முஸ்லிமை நிர்ப்பந்திப்பதும் தவறுதான்; கலிமா சொல்லு என்று ஒரு முஸ்லிமல்லாதவரை நிர்ப்பந்திப்பதும் தவறுதான். ஆனால் எனக்குத் தெரிந்து பின்னது நடந்ததாக வரலாறு இல்லை. ஆனால் முன்னது நடந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் humanitarianism இருந்தால் secularism இருக்க வேண்டிய அவசியமில்லை.

வெ.சா. போன்ற பழுத்த இலக்கிய விமர்சகர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவார்கள் என்று நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. அவர் வாய்கூசாமல் பொய் சொல்வதைப் பார்த்தால், வெகு வேகமாக இந்த உலகில் பரவி வரும் இஸ்லாத்தைப் பற்றிய உள்ளார்ந்த பயம் நேசகுமார்களைப்போல அவருக்கும் இருப்பதாகவே படுகிறது.

அஞ்ச வேண்டாம் முதியவரே. நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டே நீண்ட காலம் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று நான் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.


ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி