மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


‘மணமற்ற பூக்களும் வீணடிக்கப்பட தேவையில்லாத கல்லறை’

1906 இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கினை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர் முகமது அலி. டாக்காவில் அந்த அமைப்பின் முதல் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.1 இந்த முதல் மாநாட்டில் முஸ்லீம் லீகின் முதல் நோக்கம் பின்வருமாறு கூறப்பட்டது: “பிரிட்டிஷ் அரசிடம் முஸ்லீம்களுக்கு விசுவாசத்தை வளர்ப்பது.”2 1912 இல் ஏற்பட்டஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பிரிட்டிஷ் போர்களே அவரை பிரிட்டிஷ¤க்கு எதிராக தூண்டியது. பாரதத்தின் மீதான பற்று அல்ல. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கப் பார்வையால் தேசப்பற்று என்பதை குறுகிய வட்டமாகக் கண்டவர் மௌலானா அவர்கள். 1911 இல் ‘காம்ரேட்’ இதழில் மௌலானா முகமது அலி தெள்ளத்தெளிவாக எழுதினார்: “இந்தியா ஒரு தேசம் என்கிற கோஷத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.” மேலும் தேச ஒற்றுமைக்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் அந்த கல்லறையில் மணமற்ற பூக்களை கூட தாம் வீணாக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.3 1912 இல் ‘காம்ரேட்’ பத்திரிகையில் அவர் எழுதினார்: “முஸ்லீமின் உணர்வுகள் என்றைக்கும் அவனது மார்க்கத்தவருடனேயே இருக்கும். இஸ்லாமினை ஏற்பதன் மூலம் ஒருவன் இனமோ தேசமோ என்றைக்கும் கட்டாயமாக ஒரு குறுகிய தேசப்பற்றில் ஆழ்ந்து போவதில்லை. நிலவரையறைச் சார்ந்த தேசப்பற்றென்பது மானுட சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு மததிற்கு கிடையாது.”4

1918 இல் முஸ்லீம் லீக் தலைவராக முகமது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசையும் தேச ஒற்றுமையையும் 1911-12 இல் கடுமையாக விமர்சித்த மௌலானா விரைவில் காங்கிரஸ் மாநாட்டிற்கே வருமளவுக்கு மாற்றமடைந்தார். 1919 இல்தான் முதன் முதலாக மௌலானா முகமது அலியும் அவரது சகோதரர் ஷௌகத் அலியும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டனர். 19 மார்ச் 1920 இல் கிலாபத் இயக்கத்தின் சந்திப்புக்குழுவினர் பிரிட்டிஷ் பிரதமர் லயாட் ஜியார்ஜினை சந்தித்தனர். அங்கு அவர்களிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:5

‘தேசியம் கடந்த பார்வை’

லயாட் ஜார்ஜ்: திரு.முகமது அலி உங்கள் தரப்பினைக் கூறுகிறீர்களா?
முகமது அலி: நான் சில விஷயங்களை இங்கே குறித்துள்ளேன். நான் போக போக அதனை விளக்குகிறேன். எனவே உங்களுக்கு தெளிவாக நான் கூற வருவது புரியும். நான் தெளிவாக்க விரும்பும் ஒரு விஷயம். நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.

லயாட் ஜார்ஜ்: அப்படியானால் அரேபிய பிரதேசங்களுக்கு விடுதலை அளிக்கப்படக்கூடாது எனக் கூறுகிறீர்களா?
முகமது அலி: ஆமாம். முஸ்லீம்கள் என்கிற முறையில் ‘ஜஸிர்த் உல் அரப்’ (அராபிய தீவு -அதாவது அரேபியா முழுவதும்) மற்றவர்களால் நுழையப்படாமல் முழுக்க முழுக்க துருக்கி மூலமாக இஸ்லாமிய அதிகாரத்தில் இருக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீன் மெசபடோமியா ஆகிய பிரதேசங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மெக்கா மெதினா ஜெருசலேம் ஆகியவற்றின் பாதுகாவலராக கலீபா நியமிக்கப் பட வேண்டும்…..(மௌலானா பாலஸ்தீனத்தில் எக்காலத்திலும் யூதர்கள் அதிக அளவில் குடியேற முடியாது என நம்பிக்கை தெரிவிக்கிறார்.)

(இடையில் குறுக்கிட்டு மௌலானாவுடன் வந்த சையது ஹ¤சைன் கூறுகிறார்) கிலாபத் இயக்கம் முழுக்க முழுக்க முஸ்லீம்களை மட்டுமே கொண்ட இயக்கமில்லை. அதில் ஹிந்துக்களும் இருக்கிறார்கள். கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுவாக ஹிந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதே வழக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியிருந்த போது முஸ்லீம்கள் வெளிப்படையாக அந்த முழு இயக்கத்தையும் எதிர்த்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் அதற்கு வர ஆரம்பித்துள்ளனர். இன்று இந்த தேசிய இயக்கம் இந்த அளவு ஒரு அசாதாரணமான இயக்கமாகியுள்ளது. இப்போது நாம் இந்தியாவில் புதிய சகாப்தம் ஒன்றின் தொடக்கத்தில் உள்ளோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய சக்தியாகும் (The British Empire is the greatest Muslim Power in the world) உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தோ-இஸ்லாமிய-பிரிட்டிஷ் ஒற்றுமை யதார்த்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் திருப்தி அளிக்குமாறு ஏற்படுமானால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஜீவித இலட்சியத்தை பூர்த்தி செய்திட உதவும். (it would certainly be a very splendid fulfilment of the destiny of the British Empire. That is all I have to say.)

இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் தமது பேரரசு தமது கிறிஸ்தவ எதிரி நாடுகளை நடத்துவது போலவே துருக்கியையும் நடத்துவதாகவும் தமது பேரரசில் இருக்கும் முஸ்லீம்களின் உதவிக்கு தம் பேரரசு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதனை தாம் நினைவில் கொண்டு செயல்படுவதாகவும் ஆனால் தம்மோடு போரிடும் கிறிஸ்தவ நாடுகளை நடத்துவது போலவே இஸ்லாமிய நாட்டையும் தாம் நடத்தவேண்டியிருந்த போதிலும் இஸ்லாமிய மக்களின் கருத்துக்களுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் கூறி அந்த சந்திப்பை முடித்துக்கொண்டார். இந்த உரையாடலின் முக்கிய அம்சம் மௌலானா எந்த இடத்திலும் மறந்தும் கூட இந்திய தேச விடுதலை குறித்தோ அல்லது சுவராஜ்ஜியம் குறித்தோ வாயைத் திறக்கவில்லை என்பதுதான். மட்டுமல்ல அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது கிலா·பத் மற்றும் அராபிய பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம்.

பின்னர் மசூதியில் பேசிய மௌலானா மேன்மை தங்கிய அரசரின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இஸ்லாமிய குடிமக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிகம் என கூறினார்.5

வாகன ஓட்டிகளின் வாக்குகளுடன்:

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் பாரதம் முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டாலும் கூட கருத்தியலில் அது ஒரு ஒவ்வாதக் கூட்டணியாக விளங்குவது சிறிது உற்று நோக்குபவர்களுக்கு விளங்கத்தான் செய்தது. மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை எழுதியது: “இவர்களது பேச்சுக்களை கவனித்துப்பார்த்தால் இவர்களில் ஒரு சாராருக்கு எங்கோ இருக்கும் துருக்கி கிலாபத் கிளர்ச்சியின் மையமான விஷயமாக இருக்கிறது. இன்னொரு சாராருக்கு இங்கு சுவராஜ்ஜியம் அடைவது முக்கியமாக இருக்கிறது.”6 இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1920 இல் கிலாபத் இயக்கம் காங்கிரஸ் தலைவர்களின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் உருவாகியது. லாலா லஜ்பத் ராய் போன்ற தேசியத் தலைவர்களும் கிலா·பத் இயக்க உற்சாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு காணப்பட்ட ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை புதியதோர் விடியலுக்கு கட்டியம் கூறும் விதமாக அமைந்ததாக கூறிய லஜ்பத் ராய் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வாய்க்கும் அரிய சந்தர்ப்பமாக அதனை கண்டார்.

ஆனால் கிலாபத் இயக்கத்திற்கு தங்கு தடையற்ற ஆதரவு ஒன்றும் கிடைத்திடவில்லை. மதன் மோகன் மாளவியா அதனை எதிர்த்தார். ஆனால் திலகர், லஜ்பத்ராய் உட்பட அனைவரும் கிலா·பத் இயக்கத்தின் வேகத்தில் உற்சாகத்தில் இருந்தனர். இந்த இயக்கத்தை சந்தேகித்த சித்தரஞ்சன் தாசை மௌலானா முகமது அலி வழிக்கு கொண்டு வந்திருந்தார். 1886 வாக்குகள் ஆதரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் இது மோசடியாக கல்கத்தா தெருவின் வாகன ஓட்டிகளுக்கு கையூட்டு அளிக்கப்பட்டு அவர்களும் காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினர்களாக பங்கேற்க வைக்கப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமக்கு கூறப்பட்டதாகக் கூறுகிறார்.7

இந்தியா மீதான ஆப்கானிய ஜிகாத்திற்கு ஆதரவு:

1921 இல் பாரதத்தின் மீது படையெடுக்குமாறு ஆப்கானிய அமீருக்கு மௌலானா கடிதம் எழுதினார். ஆப்கானிய படையெடுப்பு குறித்து மௌலானா முகமது அலி கராச்சி செஷன்ஸ் கோர்ட்டில் கூறிய உரை தெள்ளத்தெளிவானது. அவர் எந்த இடத்திலும் தமது பிரிட்டிஷ் எதிர்ப்பு இந்திய மண்ணின் மீது பிரிட்டிஷ் செய்த ஆக்கிரமிப்பினால் எனக் கூறவில்லை மாறாக தமது வாக்குமூலத்தில் கூறினார்:

“இஸ்லாமிய அரேபிய புனிதத்தலங்களைக் கைப்பற்றியவர்கள், இஸ்லாத்தை பலவீனப்படுத்தும் நோக்கமுடையவர்கள் அதை மேன்மைப்படுத்த நமக்கு சுதந்திரமளிக்க மறுப்பவர்கள் இவர்களுக்கு எதிராக மேன்மை பொருந்திய ஆப்கானிய அமிர் அவர்கள் ஜிகாத்தினை நடத்த எண்ணம் கொண்டிருந்தால் அவருக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் ஆயுதம் ஏந்த கூடாது என முதல் கட்டமாக இஸ்லாம் விதிக்கிறது. இரண்டாவது கட்டத்தில் ஜிகாத் எனது பிரதேசத்திற்கு வரும் தருணத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் முஜாகிதன்களுடன் இணைந்து அவர்களுடன் செயல்பட வேண்டும்.”8

காங்கிரஸில் இருந்த தலைவர்களுக்கு இது நெருடலாக இருந்தது. மௌலானாவின் இந்த முழக்கத்திற்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு ஆதரவு கிடைத்தது. 1921 மே 10 ஆம் தேதி நடந்த அலகாபாத் காங்கிரஸ் பொது கூட்டத்தில் மகாத்மா காந்தி கூறினார்: “அலி சகோதரர்கள் அமீருக்கு செய்தி அனுப்பியதற்காக கைது செய்யப்படுவார்களா? நான் கூடத்தான் செய்தி அனுப்புவேன் ஐயன்மீர் நீங்கள் இங்கு வரும் பட்சத்தில் உங்களை ஆங்கில அரசு எதிர்க்க திரட்டும் பட்டாளத்தில் ஒரு இந்தியனும் சேராமல் பார்த்துக்கொள்வதற்கு நான் இருக்கிறேன் என்று.”9

‘அவர்கள் கா·பீர் என்பது நம்மையல்ல’

பின்னாளில் கிலா·பத் இயக்க மேடையை நினைவு கூர்கிறார் சுவாமி சிரத்தானந்தர்: ” மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் நான் மகாத்மாவின் கவனத்தை ஈர்த்தேன். நாங்கள் இருவருமாக (மகாத்மாவும் சுவாமி சிரத்தானந்தரும்) நாக்பூர் கிலா·பத் இயக்க மேடைக்கு இரவு சென்றோம். அங்கு மௌலானாக்களால் பேசப்பட்ட ஆயத்துக்களில் ஜிகாத்து மற்றும் நம்பிக்கையவற்றவர்களை கொல்வது குறித்தும் அடிக்கடி கூறப்படுவதை மகாத்மாவுக்கு நான் சுட்டிக்காட்டினேன். மகாத்மா புன்னகை புரிந்தவாறே அவர்கள் அதனை பிரிட்டிஷ் அரசதிகாரிகளைக் குறிப்பிடுகின்றனர் என கூறினார். என்றால் கூட அதுவும் மகாத்மாவின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானதாக அமைவதை நான் கூறி சொன்னேன் ‘உணர்ச்சி மேலிடும் போது இவை மௌலானாக்களால் ஹிந்துக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.” 10

விரைவில் மாப்ளாவில் அரங்கேறிய ஹிந்து படுகொலைகள் சுவாமி சிரத்தானந்தரின் வார்த்தைகளை மெய்ப்பித்தன. சுவாமி சிரத்தானந்தரே இஸ்லாமிய கொலையாளியின் குண்டுகளுக்கு பலியானார். அப்போது மகாத்மா காந்தி ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை முழுமையாக கடைபிடித்தார். 1926 இல் கௌகாட்டி காங்கிரஸ் மாநாட்டில் சுவாமி சிரத்தானந்தருக்கு நிறைவேற்றப்பட்ட அஞ்சலியின் போது சுவாமி சிரத்தானந்தரைக் கொன்ற அப்துல் ரஷீத்தை தம் சகோதரன் என அழைத்த மகாத்மா காந்தி அவனை தாம் குற்றவாளியாகக் கருதவில்லை என்றும் மக்கள் மனதில் துவேஷத்தை விதைப்பவர்களே குற்றவாளிகள் என்றும் கூறினார்.11 சுவாமி சிரத்தானந்தரைக் கொன்ற அப்துல் ரஷீத்துக்காக காங்கிரஸின் முன்னணித் தலைவரான ஆஸப் அலி ஆஜராகி வாதாடினார். அவன் தூக்கிலிடப்பட்ட போது அப்துல் ரஷீத்துக்கு மறுமையில் அல்லா மிக உயர்ந்த இடத்தினை அளித்திட தியோ பந்த் மதரசாவில் ஆசிரியர்களும் மாணவர்களுமாக பிரார்த்தனை செய்தனர்.12

ஈசா நபியும் மகாத்மாவும்

1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்: “பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈஸா நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈஸா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்தில் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வதாகும்…அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈஸா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக)ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது (வெட்கம் வெட்கம் -கூட்டம்) …யூதேய தேசத்தில் ஈஸா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக)கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன.” மகாத்மா காந்திக்கு ஜே எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது. 13

27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத் அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. 14

ஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக் குறிப்பிட்டார்.15 இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரின் உரை தம் இதயத்தை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார்.16

“விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத…”

கிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ‘இன்ஸாப்’ மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை ‘மகாத்மா’ எனக் குறிப்பிடுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது. “சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன? சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” 17

1924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி விடுதலை பெற்றதை கொண்டாட நடந்த நிகழ்ச்சி யில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. அந்த விழாவில் ஒரு ஹிந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.18

‘இன்ஸாப்’ மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்: “அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்திக்கு பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: ‘ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்.’19 இது குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி குறிப்பிட்டார்: “…நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீதுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.”20

இறுதியாக மகாத்மா காந்தியே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின் மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார்.21

நபி என நம்பப்படும் முகமது என்ன கூறுகிறார்?

அபூதர் அல் கி·பாரி (ரலி) அறிவிக்கிறார்கள்….அப்போது நபி (ஸல்) அவர்கள் ” அதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து “உங்கள் சமுதாயத்தாரில் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணமடைகிறவர் சொர்க்கம் புகுவார்” என்றார். நான் (ஜிப்ரீலிடம்) “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் “(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)22

கோகட் கலவரம்:

10 செப்டம்பர் 1924 இல் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) கோகட் எனும் இடத்தில் ஹிந்து-முஸ்லீம் கலவரம் வெடித்தது. இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். இஸ்லாமிய வியாபாரிகளுக்கு ஹிந்து சிறுபான்மையினர் போட்டியாகவும் இருந்து வந்தனர். இந்நிலையில் ஜீவன்தாஸ் என்பவர் நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் முஸ்லீம்கள் நபி என நம்பும் முகமதுவை கேலி செய்யும் கவிதை வெளியானதாக முஸ்லீம்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் ஹிந்து தலைவர்கள் எழுத்து மூலம் மன்னிப்பு எழுதிக்கொடுத்ததுடன் அந்த இதழின் 900 பிரதிகளை தீயிட்டு கொழுத்தவும் ஒப்புக்கொண்டனர். அது பொது இடத்தில் எரிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையையும் ஏற்று அந்த இதழ்களை பொது இடத்தில் எரித்தனர். அந்த இதழ்களின் அட்டைப்படத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் இருந்த போதிலும் அது எரியூட்டப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்தவைக் குறித்து மகாத்மா காந்தி எழுதினார்:

” அதற்கு பின்னரே மிக மோசமானவை நடைபெற்றன. ஒரு குருத்துவாரா உட்பட கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலைகள் அடித்தொழிக்கப்பட்டன. பல கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. இவற்றினை நான் மதமாற்றம் எனக் கூற மாட்டேன் ஏனெனில் அவை பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட நடிப்புதான். குறைந்த பட்சம் இரண்டு ஹிந்துக்களாவது மிகக் கொடூரமான முறையில் மதம் மாற மறுத்தமைக்காகக் கொல்லப்பட்டனர். ஹிந்துக்கள் தங்கள் சிகைகளையும் நூல்களையும் நீக்கி முஸ்லீம்கள் ஆனார்கள். அல்லது அவர்கள் பாதுகாப்பு தேடும் போது அவர்கள் அணுகிய முஸ்லீம்கள் ஹிந்துக்கள் தங்களை முஸ்லீம்கள் என வெளிப்படையாகக் கூறி அறிக்கையிட்டு பின்னர் ஹிந்து மத சின்னங்களை அவர்கள் நீக்கிவிட வேண்டுமெனக் கூறினார்கள்.”23

கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை அறிந்த ஒரு தலைவரும் இருந்தார். அவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். இந்தக் கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் ஹிந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி விசித்திரமான முறையில் டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் பிரசன்னமானார். கோகட் கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: “கோகட் ஹிந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்…”24
முஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்காரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:

“எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் நண்பருக்கு,

எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸா·பர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான் நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ ஹிந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது…. ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை -அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது….இந்த விஷயங்களில் நீங்கள் ஹிந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. ” 25

கலவரம் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது குறித்து அடுத்த சர்ச்சை ஏற்பட்டது. முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கிம் அஜ்மல் கான், டாக்டர்.அன்சாரி) இந்த அறிக்கைகள் வெளியிடப்படாமல் இருப்பதே நல்லது என வாதாடினார்கள். இதனை மோதிலால் நேரு கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து மாற்றங்களுடன் அறிக்கைகள் வெளியிடப்படுவது நல்லது எனக் கருதப்பட்டது. மகாத்மா முதலில் ஷௌகத் அலியின் அறிக்கையை படித்தார். அதிலுள்ள கருத்துக்களில் எவ்வித மாற்றமும் செய்யாததுடன் அதன் இறுதி பாரா தெளிவற்று இருந்தமையால் அது தெளிவாக அமையும் வண்ணம் அதை திருத்தி எழுதினார். ஆனால் கலவரம் குறித்த மகாத்மா காந்தியின் அறிக்கையினை மிகத்தீவிரமாக ஷௌகத் அலி எதிர்த்தார். ஜெனரல் டையரின் கொடூரத்துடன் அக்கலவரத்தை மகாத்மா ஒப்பிட்டிருந்ததையும் ஹிந்துக்களே அக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறியிருந்ததையும் நீக்கிவிட அவர் கூறினார். காந்திஜியும் உடனிருந்த மற்ற காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவற்றை முழுமையாக நீக்கிவிட்டார்.26

பின்னர் கோகத்திலிருந்து ராவல் பிண்டியில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஹிந்துக்களுக்கு மகாத்மா காந்தி பிப்ரவரி 10 1925 இல் ஒரு கட்டளையை அனுப்பினார்:
“பிரச்சனைகளுக்கு ஸ்வராஜ்ஜியத்தின் பார்வையில்தான் நான் தீர்வு கூறமுடியும். தற்போதைய தனிப்பட்ட இலாபங்களை விட்டு விட்டு நாளைய தேச நலனின் அடிப்படையில் தியாகங்களை செய்யத்தான் வேண்டும். முஸ்லீம்கள் இறங்கி வரவில்லை என்றாலும் கூட ஹிந்துக்கள் தங்கள் சொத்துக்களையும் வீடுவாசல்களையும் முழுவதுமாக இழக்க வேண்டியிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்தவரையில், முஸ்லீம்களுடன் சமாதானம் ஏற்படுத்தாமல், அரசு பாதுகாப்பு இல்லாமல் முஸ்லீம்களின் நல்லிணக்கத்துடன் பாதுகாப்பாக வாழலாம் என்கிற நிலை ஏற்படும் வரை ஹிந்துக்கள் கோகட்டுக்கு திரும்ப நினைக்கவே கூடாது. இது மிகவும் ஆதர்சமான அறிவுரை என்பதும் ஹிந்துக்களால் ஏற்கப்படாது என்பதும் எனக்கு தெரியும் என்றாலும் இதுதான் என்னால் கொடுக்கமுடிந்த மிகச்சிறந்த அறிவுரையாகும்….”

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 1919 இல் கிலாபத் இயக்கத்தினை ஆதரித்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுக்கு (லாலா லஜ்பத் ராய், ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்) இஸ்லாம் குறித்து அறிவு ஏற்படலாயிற்று. 1921 இல் மாப்ளா படுகொலைகள் அரங்கேறின.

1922 இல் சித்தரஞ்சன் தாஸ¤க்கு எழுதிய கடிதத்தில் லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். “நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன். நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா?”27

1924 இல் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் இரவீந்திர நாத் தாகூர் பல முஸ்லீம்களுடன் தாம் கேட்ட போதும் அவர்கள் ஒரு இஸ்லாமிய நாடு பாரதத்தின் மீது படையெடுக்கும் பட்சத்தில் தாம் இஸ்லாமிய நாட்டுடன் இணைவதையே விரும்புவார்கள் என்று கூறியதையும் மௌலானா முகமது அலி உட்பட இந்த விஷயத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு இஸ்லாமியன் மற்றொரு இஸ்லாமியனுடன் போரிடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளதையும் கூறினார்.28

ஹஸ்கே லேங்கே பாகிஸ்தான்

1928 இல் இந்திய தேசிய காங்கிரசினை விட்டு நேரு அறிக்கையை (சுயராஜிய அரசியல் சாசனம்) எதிர்த்து முழுமையாக வெளியேறினார் மௌலானா முகமது அலி. பின்னர் பிரிட்டிஷாரின் முக்கிய ஆதரவாளரான ஆகாகானுடனும் அப்போது முஸ்லீம்-லீக்கில் முக்கியமானவராக வளர்ந்து வந்த முகமதலி ஜின்னாவுடனும் இணக்கமானார். 1928 இல் ஆகாகான் தலைமையில் நடந்த அனைத்து கட்சி முஸ்லீம்கள் மாநாட்டில் முகமது அலி பங்கேற்றார். 1930 இல் பிரிட்டனுக்கு அவர் சென்றது ஒட்டு மொத்த இந்தியர்களுக்காக அல்ல மாறாக முஸ்லீம்களுக்காக மட்டுமே.29

எருசலேமில் ஏன் புதைக்கப்பட்டார்?

திண்ணைக்காக ஹமீது ஜா·பர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: “மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.”30

என்ற போதிலும் மௌலானா முகமது அலியின் சொந்த விருப்பமே அவர் எருசலேமில் புதைக்கப்படவேண்டும் என்பதுதான். ஏன்? ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையின் இயலாமையை வெளிக்காட்டும் விதமாகக் கேலியாக குறிப்பிடுகிறார் பாபா சாகேப் அம்பேத்கர் : ” மற்ற வார்த்தைகளில் சொன்னால் ஒரு உண்மையான முஸ்லீம் என்றென்றும் பாரதத்தை தம் தாய் நாடாக ஏற்றுக்கொள்ளவோ ஹிந்துக்களை தம் சகோதர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவோ இஸ்லாம் என்றைக்கும் அனுமதிக்காது. மௌலானா முகமது அலி என்கிற பெரிய இந்தியர் மற்றும் உண்மையான முஸ்லீம் தாம் பாரதத்தில் அல்லாது எருசலேமில் புதைக்கப்பட விரும்பியது அதனால் தானோ என்னவோ!”31விக்கிபீடியாவில் மௌலானா முகமது அலி குறித்த கட்டுரையும் அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவர் எருசலேமில் புதைக்கப்பட்டதாக கூறுவது அம்பேத்கர் அவர்களின் கூற்றுக்கு வலு சேர்க்கிறது.

1. பாகிஸ்தானிய இணைய தளம்: www.storyofpakistan.com/person.asp?perid=P038
2. மேத்தா & பட்வர்த்தன் ‘The communal Triangle’ பக்.24
3. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 12)
4. மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை: ஜமீல் அகமது, ‘Jauhar:A Prince Among The Patriots’
5. பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாடல் குறித்து வெளியான செய்தி மற்றும் மசூதி பேச்சு: The Islamic Review, ஏப்ரல் 1920 (மேலும் காண்க: http://www.chapatimystery.com/archives/homistan/imagining_pakistan_ii_jauhar.html)
6. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 7)
7. அதே நூல் அதே அத்தியாயம். மகாத்மா காந்தி மூத்த தலைவர்களை புறக்கணித்து தமது இஷ்டப்படி காங்கிரஸை நடத்தி செல்வதாகவும், அவர் ஊழல் செய்து விட்டதாகவும் கூட கடுமையாக ஒரு தமிழ் விடுதலை போராட்ட வீரர் இந்த மாநாடு குறித்து கூறியுள்ளார். ஒரு வேளை அவர் ஊழல் என்று கூறியது இந்த வாகன ஓட்டிகள் விவகாரமாக இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே.
8. செஷன்ஸ் கோர்ட் ஜூரி முன் முகமது அலி உரை : மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 12)
9. 1921 மே 10 அலகாபாத் பொது கூட்ட உரை மற்றும் அதே கருத்தினை மகாத்மா 4 மே 1921 ‘யங் இந்தியா’வில் கட்டுரையாகவும் எழுதியிருந்தார்.
10. Liberator ஜுலை 1926 மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 7)
11. பட்டாபி சீதாராமையா, ‘History of Congress’ பக்.516
12. டைம்ஸ் ஆ·ப் இந்தியா 1927 நவம்பர் 30
13. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923
14. மகாதேவ் தேசாய் ‘Day to day with Gandhi’ பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21
15. மகாத்மா காந்தி, ‘Collected Works’ 24:334-40
16. மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96
17. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 12)
18. அதே நூல் அதே அத்தியாயம்.
19. அதே நூல் அதே அத்தியாயம்.
20. மகாத்மா காந்தி, ‘Collected Works’ 23:பிற்சேர்க்கை
21. மகாத்மா காந்தி, ‘Collected Works’ 26:214
22. இந்த கதீஸ் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை: இப்னு கலாம் ரசூல் எழுதிய ‘வெற்றி யாருக்கு’ (சுவனப்பாதை -மாத இதழ் 2:2) : நன்றி: திரு.நேசகுமார்
23. மகாத்மா காந்தி, ‘Collected Works’: 26: பிப்ரவரி 1925 மற்றும்: யங் இந்தியா 25-9-1924 & 12-2-1925
24. சையது ஷரி·புதீன் ·பிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட ‘அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ‘ பாகம்-1 பக்.28-29
25. மகாதேவ் தேசாய், பாகம்-5 பக்.111-112
26. மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49
27. டிசம்பர் 1922 இல் எழுதிய கடிதம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 12)
28. அதே நூல் அதே அத்தியாயம்.
29. பாகிஸ்தானிய இணைய தளம்: www.storyofpakistan.com/person.asp?perid=P038
30. இக்வான் அமீர் எழுதிய கட்டுரை: ‘பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்’ திண்ணைக்காக ஹமீது ஜா·பர் (www.thinnai.com)
31. பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 12)
————————————————————————–

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்