வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

அரவிந்தன் நீலகண்டன்



ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல் வரை – மட்க வைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு மண்ணிற்கு வளமளிக்கிறது. சிந்தியுங்கள். மும்பை பிரபாதேவி கோவிலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமைகளில் அது 200,000 ஆக அதிகரிக்கிறது. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஒரு நாளைக்கு சராசரி 120 கிலோ நிர்மால்யத்தினை உருவாக்குகிறது. செவ்வாய்கிழமை இது 200 கிலோ ஆகிறது. ஒரு மாதத்தில் 1000 கிலோ இயற்கை உரம் தயார். இறையருளுக்கு பாத்தியதையான மலர்களிலிருந்து கிடைக்கும்
இவ்வுரங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கிலோ உரம் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமோகமாக இவை விற்று அவை வந்த நாள் மதியமே தீர்ந்து விடுகின்றனவாம்.

இத்தனியார் திருக்கோவில்களின் டிரஸ்டிகளில் ஒருவரான சஞ்சய் பகவத் முந்தைய நாட்களை நினைவுகூர்கிறார். “அப்போதெல்லாம் முந்தைய நாட்களில் சுவாமிக்கு சார்த்திய மலரணிகள் (நிர்மால்யம்) அப்படியே குவியும். நகராட்சி குப்பை வண்டிகள் குப்பைக் கிடங்குகளில் தள்ளும். அது ஒன்றுதான் அவற்றினை நீக்கிடும் ஒரே வழி.” 2005 மே மாதத்தில் ‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ எனும் தன்னார்வ அமைப்பு கோவில் டிரஸ்டினை அணுகியது. “முதலில் டிரஸ்டிகள் மத உணர்வுகள், இடப்பற்றாக்குறை என்றெல்லாம் தயங்கினர், என்றாலும் நாங்கள் விளக்கிய போது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இப்போது இது மிக சுமுகமாக நடக்கிறது.” என்கிறார். இத்தன்னார்வ அமைப்பினைச் சார்ந்த பிரதிபா பேல்வல்கர். இப்போது நிர்மால்யா என்பதே இந்த இயற்கை உரத்தின் பெயர். பாக்டீரியங்கள் உள்ள மட்கிய உரக்கலவை இது. பூக்களிலுள்ள ஈரப்பதம் போக மரத்தூள் சேர்க்கப்படுகிறது. இந்த உயிரிக்கலவையின் உயிரிக்கூட்டம் ஆக்ஸிஜனுடன் 7-8 நாட்கள் வரை வினைபுரிகிறது. லிச்சேட் உருவாக்கத்தை தடுக்க தொடர்ந்து இது கலக்கப்பட வேண்டும். இது பின்னர் சூரிய ஒளியில் 1-2 நாட்கள் உலரவைக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. 35 நாட்களில் தரமான உரம் தயாராகிவிடும்.

ஏற்கனவே 2002 இல் மும்பை கிரஹக் பஞ்சாயத், பர்லேஸ்வர் திருக்கோவிலில் நிர்மால்யத்தினை உரமாக்கும் திருப்பணியில் பேல்வல்கர் வெற்றி அடைந்துள்ளார். எனவே சித்தி விநாயகர் கோவில் அதிகாரிகளை சம்மதிக்க வைப்பதில் அவருக்கு அத்தனை பிரச்சனை இல்லை என்றுதான் கூறவேணும். மும்பை எக்ஸல் தொழிற்சாலை நிர்மால்ய கொள்ளவினைக் குறைத்திட ஒரு இயந்திரத்தை வடிவமைத்து பர்லேஸ்வர் திருக்கோவிலுக்கு கொடுத்தது.கொள்ளவு குறைப்பு மூலம் மட்கும் நேரத்தினைக் குறைத்திட முடியும். சித்தி விநாயகர் கோவில் இதனை விலைக்கொடுத்தே வாங்கிக்கொண்டது. 15 நிமிட இயக்கம் மூலம் 60 சதவிகித கொள்ளவினைக் குறைத்திட இயலும். இது முழு நேரத்தினையும் குறைக்கிறது. 35 நாட்கள் ஆகிற நேரம் இங்கு 15 நாட்கள் ஆகிறது. திருப்பதி, ஷீரடி ஆகிய கோவில்களுக்கும் இந்நிர்மால்ய உர உற்பத்தியை விரிவாக்க பேல்வல்கர் திட்டமிடுகிறார்.

நம் ஊர் கோவில்களிலும் இவ்வாறு கோவிலுக்கு ஒரு உர உற்பத்தி மையம் தொடங்கினால் என்ன?

[நன்றி: ‘Down to Earth’ நவம்பர்-30,2005 மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் : டிசம்பர் 14-2005]
———————-

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்