ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

அக்னிப்புத்திரன்


ஒருசில பத்திரிக்கைகளும் சரி ஒருசில அரசியல்வாதிகளும் சரி, ஸ்டாலினை தமிழக முதல்வர் பதவிக்கு முன்ன்னிறுத்தவே கூடாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது என்னவோ ஒரு மாபெரும் குற்றமாகவும் குறையாகவும் மக்களின் முன் சித்தரித்துக்காட்ட முயல்கிறார்கள். குறிப்பாக தினமலர் நாளேடும் துக்ளக் வார இதழும் முழுமூச்சாக இச்செயலில் இறங்கி அடிக்கடி இப்படிப்பட்ட செய்தியை வலிந்து திணித்து ஏதோ ஸ்டாலின முதல்வர் பதவிக்கே தகுதியில்லாதது போலவும் அவர் அப்பதவிக்கு வருவது மாபெரும் பாதகம் எனபது போலவும் செய்திகள் வெளியிட்டு மக்களைக் குழப்பி வருகின்றன. கலைஞருக்கு மகனாக இருப்பதால் அவர் அப்பதவிக்கு வரவே கூடாதா ? அவருக்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தும் ஏன் இப்படி இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர் ?

முன்பு இப்படித்தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரா ? அவருக்கு எப்படி மந்திரிப்பதவி தரலாம் என்று எழுதியும் பேசியும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். தற்போது தயாநிதிமாறனின் அற்புதமான செயல்பாட்டிற்காக இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளும் அவரைப் பாராட்டுகின்றன. ஒருசில மாதங்களாக முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் பதுங்கிய இவர்கள் இப்போது ஸ்டாலினைக் குறி வைத்துச் செயல்படத் துவங்கியுள்ளனர்.

நேற்று வரை இதமான கதகதப்பில் சூடும் சுகமும் கண்ட விஜயகாந்த் முதல்வர் பதவிக்குப் போட்டிப்போடலாம். அதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். முப்பது ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றிய ஸ்டாலினை மட்டும் இந்தக் காமாலைகண்களுக்குச் சொந்தக்காரர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

சரி, வைகோபாலசாமி கூட இவர்கள் கண்களுக்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவராகத் தெரிகிறார். மூச்சை பிடித்துக்கொண்டு மூன்ன்று மணி நேரம் மேடையில் முக்கிக்கொண்டு முழங்கிவிட்டால் போதுமா ? கொஞ்சமாவது கொள்கை கோட்பாடு தேவையில்லையா ? தமிழரின் இலட்சியக் கனவான சேதுசமுத்திரம் திட்டமே என்னால்தான் வந்தது என்று நீட்டி முழங்கியவர் . அத்திட்டமே வேண்டாம், வீண்திட்டம் என்று கூறி, மீனவர்களைத் தூண்டிவிட்டு எதிர்த்தவர்களிடம், ஒருசில சீட்டுக்காகச் சரணாகதி அடைந்தவர்தான் வாய்ச்சவடால் வீரர். இலங்கைத்தமிழர் பிரச்சினையில் கொள்கை குன்று போல காட்டிக்கொண்டஇவர்! இன்று போயஸ் தோட்டத்தில் கைகட்டி வாய்பொத்தி நின்று, அம்மா, அம்மா, புரட்சித்தலைவி அம்மா எனனைப் பொடாவில் போட்டு புரட்சி செய்த அம்மா என்ன்று புளகாங்கிதம் அடைந்து புகழ்கீதம் இசைக்கிறார். இவரைப் போன்று நேரத்திற்கு ஒரு வேஷம் போடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் நேர்மை, நாணயமற்றவர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு போட்டியிடலாம் இவர்கள் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவும் மாட்டார்கள், எழுதவும் மாட்டார்கள்.

ஜெயலலிதாவிற்கு முதல்வர் பதவிக்கு வருவதற்கு எனன பெரிய சிறப்புத் தகுதி இருந்தது அல்லது இருக்கிறது ? கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா ? கொள்கையற்ற அரசியல் கோமாளிகள், முன்னாள் நடிகைகள், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவிக்கு வரலாம். ஆனால் ஸ்டாலின் மட்டும் வரக்கூடாது!

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு சிறைச்சாலைகளில் அடிப்பட்டு, உதைப்பட்டுக் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாக ஏற்றுக்கொண்டு, கொடுக்கும் பணிகளைச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பொறுமையுடனும் சிந்தித்துச் செயல்பட்டுவரும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வருவதை மட்டும் ஏன் இவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை ? அதற்கு என்னதான் காரணம் ?

தமிழனும் தமிழும் உயர்பதவிக்கு வருவதை இவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவே முடியாது! அதுதான் உண்மையான காரணம்.!

-அக்னிப்புத்திரன்

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்