கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கற்பக விநாயகம்


எமது முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த ‘ஜான் பிரிட்டோ ‘ பற்றிய வரலாற்றுக் குறிப்பை இங்கு தர விரும்புகிறேன்.

‘ராணி மங்கம்மாள் ‘ காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு கெட்டுப்போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். மறவர் சீமையிலே பிரச்சாரம் செய்து வந்த ஜான் பிரிட்டோ (இவர் லிஸ்பனில் பிறந்து மதப்பிரச்சாரம் செய்ய தென் தமிழ் நாட்டுக்கு வந்த ஐரோப்பியத்துறவி) வேற்றிடங்களுக்கு சென்றுவிட்டு 1691ல் திரும்பவும் மறவர் சீர்மைக்கே வந்து சேர்ந்தார். அவரை வெளியேறச் சொன்னார் சேதுபதி. காரணம் பிரிட்டோவால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்ததே. அவர்களில் முதன்மையானவர் ‘தடியத் தேவன் ‘. அவரே நியாயப்படி அச்சீமையின் தலைமையை ஏற்க வேண்டியவர். சில பல குழப்பங்களால் கிழவன் சேதுபதி அப்பதவியைக் கைப்பற்றி வைத்திருந்தார். எங்கே தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.

கிறிஸ்துவனாகும் முன்பே தடியத்தேவன் இல்லற வாழ்வில் நுழைந்து விட்டார். அவருக்கு எண்ணற்ற மனைவியர் இருந்தனர். கிறிஸ்தவம் பலதாரமணத்தை ஆதரிக்காததால், தனது முதல் மனைவியைத்தவிர ஏனையோரை அறுத்து விட எண்ணினார். (மறவர் சாதியில் அறுத்துக்கட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளதுதான். மனைவியோ, கணவனோ சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போய் தமக்குப் பிடித்த இணையுடன் மறுமணம் செய்து வாழலாம். நிறைய தமிழ்சாதிகளில் இவ்வழக்கம் உண்டு. அவற்றை எட்கர் தர்ஸ்டன் தனது ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் ‘ நூலில் விஸ்தாரமாய் எழுதி உள்ளார்.)

அவ்வாறு கழற்றி விடப்பட்ட பெண்களில் ‘கதலி ‘ என்பவளும் ஒருவள். இவள், கிழவன் சேதுபதியின் மருமகள் ஆவாள். தடியத்தேவன் தன்னைக் கைவிட்டதைக் கண்ணீரும் கம்பலையுமாக சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு காரணம், அந்த மதம் என்றும் அதற்கு மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது. தடியத்தேவனை அழைத்து மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பி நிறைய மனைவியரோடு வாழ ஆசை காட்டினார். தடியத்தேவன் தமது புதிய மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் சினமடைந்த சேதுபதி பிரிட்டோவை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.

முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8ம்தேதி பிற்பகலில் கைது செய்யப்பட்டார். அவர் மனதில் அரசனை இதன் மூலம் சந்தித்து அவரை மனம் மாற்றிவிடலாம் என்று தோன்றியது. அவருடன் 3 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் மதுரை சீமையை சேர்ந்தவராதலால் அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னார்கள். அவர் மறுக்கவே அவரும் கைதானார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். சாட்டை அடி வாங்கி துணிகள் கிழிந்து தொங்க உடம்பெல்லாம் ரத்தக் காயங்களுடன் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

ஹனுமந்தக்குடி எனும் ஊரை அன்றிரவு சென்றடந்தனர். அவ்விரவில் அந்தக் கிராமத்தின் சிவன் கோவில் தேரிலே பிரிட்டோவைக் கட்டினர்.சிவ நாமத்தை ஜெபிக்கச் சொல்லி வற்புறுத்தினர். அவர் மறுக்கவே அவர் மயக்கமடைந்து கீழே விழும் வரை சவுக்கடி வாங்கினார். 11 ஆம் நாள் ராம நாதபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கைதியாய் இருக்கும்போது சேதுபதி அவரை சந்திக்கவில்லை. சடையத்தேவன் சேதுபதியிடம் கெஞ்சிப்பார்த்தார். சேதுபதி மசியவில்லை.

பிரிட்டோவை நாடு கடத்த – ப்ரஷ்டம் – உத்தரவாகி சேதுபதியின் தம்பி உறையூர் தேவனிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். வெளிப்படையாய் சொல்லப்பட்டதென்னவென்றால், அவரை நாட்டு எல்லைக்கப்பால் கொண்டு போய் விட்டு விடுவதாக. ஆனால் ரகசியமாய் அவரின் தலையைத் துண்டித்து விடச் சொல்லி உறையூர் தேவனுக்கு சொல்லப்பட்டது.

ஜனவரி 31ம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் 1693 பிப்ரவரி 3ம் தேதி அவர் எழுதிய கடிதம் ‘ ஜனவரி 28 ல் என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது… கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்து வந்த வேலைக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்து விட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது முடியாது… ‘.

உறையூரிலும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. உறையூர் தேவனின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரிட்டோ தன் கணவன் கையால் கொல்லப்படுவதை அவள் விரும்பவில்லை. தேவனுக்கு மந்திரியாயிருந்த முருகப்ப பிள்ளை என்பவனுக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே ஆகாது. அவர்தான் பிப்ரவரி 4 ல் தண்டனையை நிறைவேற்றிட ஆணையிட்டான்.

‘கிறிஸ்தவ மதத்தலைவனான இவன், நம் தெய்வ வழிபாட்டைத் தடுப்பதாலும், இவன் பிரச்சாரம் செய்து வரும் மதத்தினர், நாட்டிலே நாளுக்கு நாள் பெருவாரியாகப் பெருகி வருவதாலும், அரசனின் பெயரால் இவனது தலையை வாங்கி விடுமாறு நான் உத்தரவிடுகிறேன். ‘

கொலையாளிகள் பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்று தலையைத் துண்டித்தனர். உடல் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கழுகுக்கு இரையாக்கப்பட்டது. தலையும் கால்களும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக சிறிது காலம் கட்டித் தொங்க விட்டிருந்தனர்.

பிரிட்டோ ஆதரவாளர்களுக்கு, அவரின் உடல் அடக்கம் செய்யப்பட அரசன் அனுமதி தரவில்லை. எத்தனையோ பிரயாசைக்குப் பின்னரே அவருடைய ஒன்றிரண்டு எலும்புகளை மட்டும் சேகரிக்க முடிந்தது.

(ஆதாரம்: – எஸ் ராம நாதன் பிரசுரித்த ‘ராணி மங்கம்மாள் ‘ நூல்)

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்