சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கற்பக விநாயகம்


அய்யா மலர் மன்னன் கோல்வல்கர் பற்றி எழுதியதன் மூலம் அவரின் சில பரிணாமங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

கோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து சமூகம் எப்படிப்பட்டது என்பதை இலை மறை காயாய் சொல்கிறார்.

‘தென்னிந்தியாவில் ஒரு ஐரோப்பியருடன் நான் சென்று கொண்டிருந்தேன். அங்கே அரசாங்க அலுவலகத்தில் தாசில்தார் வேலை பார்க்கும் பஞ்சமர் ஒருவர், தன் அலுவலகத்தில் பியூனாக இருக்கும் நாயுடுகாரரைப் பார்த்தார். உடனே பியூனின் காலைத் தொட்டு இந்த தாசில்தார் வணங்கினார். ஐரோப்பியருக்கோ ஆச்சரியம். இதென்ன என்றார். நான் பெருமையுடன் கூறிக்கொண்டேன் – இதுதான் பழம்பெருமை வாய்ந்த பாரதத்தின் கலாச்சாரம் ‘.

பெரியாரையும் அம்பேத்கரையும் ஏகாதிபத்திய தாசர்கள் என்று ஏசும் நபர்கள் பின் வரும் கோல்வல்கரின் கருத்தை மனதில் கொண்டால் யார் ஏகாதிபத்தியத்து ஏவல் அடிமைகளாய் இருந்தார்கள் என்பது விளங்கும்.

‘பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதே தேசபக்தியாகவும், தேசீயமாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பிற்போக்குத் தனமான பார்வை பல்வேறு அழிவை நோக்கிய விளைவுகளுக்கு வித்திட்டது ‘. (சிந்தனைக் கொத்து – பக்கம் 143)

இதே கோல்வல்கர் குழுவினர்தான் 1942 ஆகஸ்ட் புரட்சியைக் காட்டிக் கொடுத்து கீழறுப்பு வேலை செய்தனர்.

மேலும் பம்பாய், கராச்சி துறைமுகங்களில் தல்வார் போர்ப்படைக் கப்பலில் பற்றிய ராணுவப் புரட்சியையும் அங்கீகரிக்க மறுத்தனர். (அதில் காங்கிரசும் குற்றவாளியே).

இவரை காந்தி கொலை வழக்கில் குற்றவாளி எனத்தீர்மானிக்க ஆதாரம் இல்லை என நீதி மன்றம் சொன்னது. (தொழில் நுட்பரீதியில் குறைபாடுடைய சாட்சியங்களின் அடிப்படையில்). ஆனால் மரண தண்டனை பெற்ற கோட்சே இந்த நபரின் காலைத்தொட்டு ஆசி பெற்றான் நீதி மன்றத்திலேயே. கோட்சேயின் கடைசி விருப்பமே கோல்வல்கரை சந்திக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் மறுத்து விட்டார். (ஏனென்றால் காந்தியின் கொலையைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் க்கு தடை நீக்கம் செய்ய அப்போது மைய அரசுடன் திரை மறைவு பேரம் பட்டேல் உதவியுடன் நடந்து கொண்டிருந்தது)

எனது போராட்டம் (மெயின் காம்ப்) எழுதியபோதே ஹிட்லரின் இனவெறி அகிலமெங்கும் வெளிப்பட்டு விட்டது. நாசிசத்தை காந்தி, நேரு மற்றும் இடதுசாரிகள் எதிர்த்தபோது ஆதரவுக்குரல் கோல்வல்கரிடம் இருந்து வெளிப்பட்டது. மெயின் காம்பில் ஹிட்லர் கூறும் சுத்த ஆரிய இன எழுச்சியையும், யூத இன வெறுப்பையும் அப்படியே இங்கு இந்து ஆரிய, முஸ்லிம்கட்குப் பொருத்திப் பார்த்தவர் கோல்வல்கர். பாசிசம் இத்தாலியை முசோலினி வடிவில் ஆட்டிப்படைத்தபோது கோல்வல்கரின் சகாவான மூஞ்சே இத்தாலி சென்று முசோலினியின் நல்லாசி பெற்று வந்திருக்கிறார்.

கோல்வல்கரை ஆதரித்த ஒரே தலைவர் அப்போது யார் தெரியுமா ?

முத்து ராமலிங்கத்தேவர்தான் அவர்.

முதுகுளத்தூர் கலகத்தில் தேவரைப் பிடித்து சிறையிலடைக்கக் கோரி தலையங்கம் எழுதிய ஒரே நபர் பெரியார். பெரியார் இறந்தபோது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாத ரெண்டே ரெண்டு அமைப்புகள் பார்வர்டு பிளாக்கும், காஞ்சி சங்கர மடமும்.

தேவரின் பார்வர்டு பிளாக்கில் இருந்த கந்தசாமித்தேவர் 1972இல் பெரியாரின் கூட்டத்தில் ஆட்களை விட்டுக் கல்லெறியச் செய்தவர். பெரியாரை அன்று மதுரை முத்து (திமுக) காப்பாற்றினார். பின்னாளில் கந்தசாமித்தேவர் இந்து முன்னணியின் கூட்டமொன்றில் இதனைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சமீப காலத்தில் திரிசூலம் வினியோகம் செய்து வந்த டொகாடியா பசும்பொன்னுக்கு விஜயம் செய்ய முனைந்ததின் பாசம் இப்போது விளங்கும் என எண்ணுகிறேன்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்