(இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

இரா முருகன்


சாயந்திர நேரத்தில், வக்கீல் வேதாந்தம் ஐயங்காரரின் வீட்டுப் படியேறிக் கொண்டிருந்தார் சுப்பையா கான்ஸ்டபிள். இது நடந்து முப்பது வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டாலும், சுப்பையா கான்ஸ்டபிள் இன்னும் ஐயங்கார் வீட்டுப் படியோடு தான் மனதில் வருகிறார். அந்தக்கால மலையாள நகைச்சுவை நடிகர் பகதூர் மாதிரி கெச்சலான தேகம் சுப்பையாவுக்கு. காக்கி நிஜார், கூம்புத் தொப்பி, மட்கார்ட் இல்லாத ெ ?ர்குலிஸ் சைக்கிள், பின்னால் துருப்பிடித்த காரியரில் சடம்பு போட்டுக் கட்டிவைத்த லாட்டிக் கம்பு, மூக்குப்பொடி வாடை என்று அறுபதுகளின் அடையாள கான்ஸ்டபிள்.

அரண்மனை மாதிரி ஐந்து படி ஐயங்கார் வீட்டுக்கு. ஐந்தும் ஒரு தொகுதியாக வீட்டோடு தொக்கிக் கொண்டு நிற்கும். படிவரி கட்டாததால் பஞ்சாயத்து போர்ட் சிப்பந்திகள் இடித்து அப்புறம் ஐயங்கார் மேல் பரிதாபப்பட்டோ என்னமோ அப்படியே விட்டுவிட்டுப் போனது. மேல்படியிலிருந்து கொஞ்சமாக எம்பிக் குதித்தால் வீட்டுத் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்.

முந்திய ரெண்டு தலைமுறையில் பிரசித்தமான வக்கீல்களாக இருந்த சீனியர் ஐயங்கார்கள் பிரம்மாண்டமாக எழுப்பின வீடு, செங்கலும் காரையும் பெயர்ந்து, வேதாந்தம் ஐயங்காரின் ‘எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்குப் போறார்’ பிராக்டிஸ் போல் லொடலொடத்துக் கிடக்கிறது. வீட்டுக்குப் பின்னால் தென்னை, வாழைமரம். மாடியில் குடிவைத்த நாலைந்து பிரம்மச்சாரி என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்கள். ஐயங்காரின் ஜீவனோபாயத்துக்கு பெருமாள் விதித்த வழி இது.

நிழல் மாதிரி அவருக்கு சதா ஒத்தாசையாக இருக்க ஸ்மார்த்தன் அம்பியை அனுப்பினது சிவபெருமான். சாப்பிடுவதையும், தலையில் வைத்துத் தூக்கிப்போய் பஜார் தேங்காய்க் கடையில் வீட்டு மரத்துத் தேங்காயும், வாழைக்காயும் அவ்வப்போது டெலிவரி செய்துவிட்டு எண்ணிப் பார்க்கத் தெரியாமல் காசை அப்படியே சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வருவதையும், மிச்ச நேரத்தில் திண்ணையில் படுத்து நித்திரை போவதையும் தவிர அம்பிக்கு வேறே எதுவும் தெரியாது.

சமயங்களில் விடிகாலையில் ஐயங்கார் வீட்டுத் திண்ணையில் மூத்திரச் சண்டை அமர்க்களப்படும். மாடி போர்ஷன் என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்கள் நடுராத்திரியில் படியிறங்கி தோட்டத்துக்குப் போகச் சோம்பல்பட்டு, பக்கத்து ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் நாயுடு வீட்டுக் கைப்பிடிச் சுவரை லகுவாகக் கடந்து அவருடைய மொட்டை மாடியில் குத்தவைத்ததாக நாயுடுவின் குற்றச்சாட்டு.

குடிக்க மண்கூஜாவிலே வச்சிருந்த மீதி தண்ணியைக் கொட்டும்போது அங்கே கொஞ்சம் பட்டுடுத்து என்று என்.ஜி.ஓக்கள் கட்சி கட்டி நிற்பார்கள். அம்பி, அங்கே போய் மோந்து பாத்துட்டு வாடா என்று ஐயங்கார் அடுத்த வீட்டு மொட்டை மாடி ஈரத் தரையில் மோப்பம் பிடித்துப் புலன்விசாரணை செய்ய அனுப்புவது அம்பியைத்தான்.

நம்ம சுப்பையா கான்ஸ்டபிள் தலையைப் பார்த்த ஐயங்கார் அம்பியைத்தான் கூப்பிட்டார்.

திருப்பாச்சி அருவாளைத் தூக்கிண்டு வாடா அம்பி என்று பிராமணசங்க காலத்துக்கு முற்பட்ட தீர்க்கதரிசனமான அந்த முழக்கத்தைத் தொடர்ந்து. அம்பியானவன் அரிவாளும், தோட்டத்து இளநீருமாக வந்து சேர்ந்தான்.

இளநீரை வெட்டிக் கொடுத்து, திண்ணை பெஞ்சில் உட்கார்ந்திருந்த சுப்பையா கான்ஸ்டபிளுக்கு உபசாரம். கீழ்ப்படியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு சின்னக் கூட்டம். தொளதொள நிஜாரை இழுத்துப் பிடித்துக்கொண்ட சின்னப் பயலாக, இதை எழுதுகிறவனும் அதில் அடக்கம்.

சுப்பையா கான்ஸ்டபிள் யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி அவ்வப்போது வாசலைப் பார்த்தார். ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு ெ ?ர்குலிஸ் சைக்கிள் வாசலில் வந்து நின்றது. போஸ்ட் ஆபீசில் தந்தி அடிக்கிற குமாஸ்தா. மனிதருக்கு முகம் முழுக்க கலவரம். இனம் தெரியாத பயம்.

ஐயங்கார் சாமிகளே, ரகோத்தமன்னு உங்க வீட்டுலே யாராவது இருக்காங்களா ?

சுப்பையா கான்ஸ்டபிள் விசாரணையை ஆரம்பித்தார்.

ஆமா, மாடியிலே குடியிருக்கிற பிள்ளாண்டான். பி.டபுள்யூ.டியிலே டென் – ஏ- ஒன் கிளார்க்கா இருக்கான். அப்பப்ப ஊஸ்ட் பண்ணி வேலையிலே சேர்த்துப்பா.

ஐயங்கார் ஏதோ புரியாத மொழியில் பேசிவிட்டு, அந்தப் பையன் தப்புத்தண்டாவுக்கு எல்லாம் போறவன் இல்லையே என்று முடித்தார்.

சுப்பையா கான்ஸ்டபிள் தந்தி குமாஸ்தாவைப் பார்க்க, அவர் சட்டைப் பையில் நாலாக மடித்து வைத்திருந்த காகிதத்தை கான்ஸ்டபிளிடம் நீட்டுகிறார்.

அந்த ரகோத்தமன் இப்ப எங்கே சாமி ?

ஆபீஸ் முடிஞ்சு வர்ற நேரந்தான். ஆனந்தபவான்லே காப்பி குடிச்சிண்டிருபான்.

ஐயங்கார் முடிக்கும்முன், இன்னும் நாலைந்து ெ ?ர்குலிஸ் சைக்கிள்கள் – அந்தக் கால உலகம் ெ ?ர்குலிஸ் சைக்கிள்களால் ஆனது. ரகோத்தமனும் மற்ற என்.ஜி.ஓ பிள்ளையாண்டான்களும் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

உன்னைத் தேடிட்டு வந்திருக்கார்’பா என்று ஐயங்கார் ரகோத்தமனை கான்ஸ்டபிளிடம் கைகாட்டினார்.

சுப்பையா கான்ஸ்டபிள் நேரடியாக விஷயத்துக்கு வந்து விட்டார்.

நீர்தான் ரகோத்தமனா ?

ஆமா, அதுக்கென்ன ?

ஒண்ணும் இல்லை. காலையிலே போஸ்ட் ஆபீசுக்குத் தந்தி கொடுக்கப் போனீரா ?

ஆமாம் போனேன்.

என்ன தந்தி கொடுத்தீர் ?

தந்தி குமாஸ்தா கான்ஸ்டபிள் கையிலிருந்த காகிதத்தைத் திரும்ப வாங்கி, சாய்வாகப் பிடித்துப் படித்தார் – “One more free bird caught in the net. Congratulations”.

இதுதான் நீர் அனுப்பின தந்தியா ?

ஆமா, அதுக்கென்ன ?

யாருக்குப் போக வேண்டியது இது ?

என் சிநேகிதன். மெட்ராசிலே இருக்கான்.

என்ன விஷயமாத் தந்தி ?

இதுக்கு அவசியம் பதில் சொல்லணுமா ?

என்.ஜி.ஓ ரகோத்தமன் கொஞ்சம் கோபத்தோடு எகிற, வேதாந்தம் ஐயங்கார் திகிலோடு பார்த்தார்.

போலீஸ்காரனை முறைத்துக் கொள்கிறான் இந்தப் பிள்ளை. பெண் கவிஞரை தூஷித்த எழுத்தாளர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி இழுப்பதுபோல், தரதரவென்று இழுத்துப்போய், ஸ்டேஷனில் வெளவால் மாதிரித் தலைகீழாகத் தொங்கவிட்டு விடுவார்கள். (சும்மா, பேச்சுக்குச் சொன்னது இது அந்தக் காலத்தில் காப்பி இருந்தது. கவிஞர்கள் இருந்தார்கள். துப்பட்டா இல்லை.)

போலீஸ்காரன் கேட்டா, பதில் சொல்லித்தான் ஆகணும். கான்ஸ்டபிள் விரைப்பாகச் சொன்னார்.

என் பிரண்டுக்கு நாளைக்குக் கல்யாணம். வாழ்த்து அனுப்பினேன்.

வாழ்த்தா ? பேர்ட்னு எதோ போட்டிருக்கீர். அது பட்சி இல்லியா ? கல்யாணத்துக்கும் பட்சிக்கும் என்னய்யா சம்பந்தம் ?

அது மட்டுமில்லே. பட்சி வலையிலே பிடிபட்டாச்சுன்னு வேறே இருக்கு.

தந்தி குமாஸ்தா குரல் நடுங்கச் சொன்னார்.

கான்ஸ்டபிள் தொப்பியை மடியில் வைத்துக் கொண்டு ரகோத்தமனைப் பார்த்த பார்வை சிநேகிதமாக இல்லை.

கல்யாண வாழ்த்துலே என்னத்துக்கய்யா பட்சியை வலையிலே பிடிச்சேன்னு சொல்லணும் ? இது ஏதோ கள்ளக் கடத்தல்காரன் சரக்கு வந்தாச்சுன்னு முதலாளிக்கு அனுப்பற தகவல் மாதிரி இல்லே இருக்கு ?

ஆமா, போஸ்ட் மாஸ்டர் இதை அனுப்பக் கூடாதுன்னு சொல்லிட்டார். அவர் சொல்லித்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கம்ப்ளெயின் செஞ்சது.

தந்தி குமாஸ்தா விளக்க ஆரம்பிக்க, ரகோத்தமன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

சார், பட்சி மாதிரி சுதந்திரமா இருந்த பிரம்மச்சாரிப் பையனுக்குக் கல்யாணம்னு கால்கட்டு போட்டு வலையிலே மாட்டிவிட்டாங்கன்னு கிண்டல் அது.

கல்யாணத்துக்கு வாழ்த்து அனுப்பறபோது எதுக்கு கிண்டல் ? ஆயிரங்காலத்துப் பயிர்னு பெரியவங்க சொன்ன காரியத்துலே சிரிப்பாணி என்னத்துக்கு ? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. நீர் கீழக்கரை, ராமேஸ்வரம் போனீரா சமீபத்திலே ?

அந்த சாயந்திரம் கான்ஸ்டபிளுக்கு நகைச்சுவை பற்றி விளக்க என்.ஜி.ஓ பிள்ளையாண்டான் ரகோத்தமன் பட்ட கஷ்டம் போன வாரம் சட்டென்று இதை எழுதுகிறவனுக்கு நினைவு வந்தது. சிவகுமார் புத்தக முன்னுரையில் எடின்பரோ டயரிக்காரனை சம்மன் இல்லாமல் ஆஜராக்கி, ‘செயற்கையான விளையாட்டுத் தனமான நடை’க்காகக் கண்டித்த நண்பர் ஜெயமோகன் காரணம்.

நடை என்பது static சமாச்சாரம் இல்லை. எடுத்துக்கொண்ட விஷயத்துக்குத் தகுந்தபடி அது சத்தமில்லாமல் மாறும். தோழர் நாயனாருக்கு இறுதி அஞ்சலி, கொலாட்கர் பற்றிய நாடக விமர்சனம், இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா புத்தக அறிமுகம், பூரணி அம்மாளின் கவிதைத் தொகுதி, மரணத்துள் வாழ்வோம், குந்தவை கதைகள் விமர்சனம், மூன்று விரல், மந்திரவாதியும் தபால் அட்டைகளும், அரசூர் வம்சம், கொலட்கர் கவிதை மொழிபெயர்ப்பு, பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் கட்டுரை, சற்றே நகுக, கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம், ஈராக் போர்நாள் குறிப்பு, வாயு குறுநாவல், வாளி சிறுகதை – எல்லாமே எடின்பரோ குறிப்புக்காரன் இணையத்திலும் பத்திரிகையிலும் எழுதியதுதான். Sub altern, micro history கூறுகளும், காலத்தை இறுக்கி உறைய வைக்கும் புனைவும் கதையாடலும் எல்லாவற்றுக்கும் மேலாக, வாசகனைப் பயமுறுத்தாத நடையுமாக விளங்கும் இவற்றில் பலவும் இன்னும் ஐம்பது வருடம் போனாலும் நிற்கும். Derivative literature சுவடு இல்லாமல் போய்விடும்.

காராபூந்தி சாப்பிடுதல், நகைச்சுவைக் கட்டுரை எழுதுதல் போன்ற விஷயங்களுக்காக இபிகோ – இலக்கிய பிரொசிஜர் கோட் விதிகளின்படி சகலரையும் கூண்டில் ஏற்றித் தண்டிக்க, தலைமுறை தலைமுறையாக இலக்கிய கான்ஸ்டபிள்கள் அலைந்து கொண்டிருப்பது தமிழ் இலக்கிய சூழலை சுவாரசியமாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.

—-

eramurukan@gmail.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்