பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

மலர் மன்னன்


ஹிந்து சமூகம் காலங்காலமாகப் பிளவுபட்டுக் கிடப்பது புதிய செய்தி அல்ல. அப்படிப் பிளவுண்டு கிடப்பதால் அது மேலும் பிளவுபட்டுச் சிதறவேண்டும் என எவரேனும் விரும்புவார்களேயானால் அது துவேஷத்தின் அடிப்படையில் எழும் ஆசையாகத்தான் இருக்கமுடியும். விவேகம் அற்ற வெறும் துவேஷத்துடன் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்குப் பதில் கூறுவது காலவிரையமேயன்றி, அறிவுடைமை அல்ல. எனினும் மற்றவர்களுக்கு விளக்கம் தருவது அவசியமாகிவிடுகிறது.

ஹிந்து சமூகத்தில் எப்படி மாவீரர்களுக்கும் மகத்தான தியாகிகளுக்கும் பஞ்சமில்லையோ அதேபோலக் கடைந்தெடுத்த துரோகிகளுக்கும் பஞ்சமேயில்லைதான். ஹிந்து சமூகம் பிளவுபடாத கட்டமைப்பாக இருந்திருக்குமானால் வேற்று கலாசாரங்கள் உள்ளே நுழைந்து குட்டை குழப்புவதற்கே இடமிருந்திருக்காதே!

இப்பிளவைக் களைவதற்கான முயற்சிகளும் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதி சங்கரர் ஷண்மத நம்பிக்கைகளையும் இணைத்தது இதற்காகத்தான். ராமானுஜரின் முயற்சிகளும் இதனை ஒட்டியே. பாரதம் முழுவதும் பரவிய பக்தி இயக்கத்தின் அடிப்படையும் பிளவினை அகற்றுவதுதான்.

ஜாதி என்கிற அமைப்பு உடைந்துவிட்டால் ஹிந்து தர்மமோ ஹிந்து சமூகமோ அழிந்துவிடும் என்பது தவறான கணிப்பு. மாறாக அவை செழித்து வளரும். இன்று ஹிந்து சமயம் சார்ந்த ஆன்மிக அமைப்புகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. ராமகிருஷ்ண மிஷனில் தொடங்கி இஸ்கான் வரை இவை ஏராளமான உறுப்பினர்களைப் பெற்றுள்ளன. இவ்வமைப்புகளில் ஜாதி என்கிற பிரக்ஞையே இல்லை. ஆர்.எஸ்.எஸ். போன்ற கலாசார அமைப்புகளில் யார் எந்த ஜாதி என்பதே தெரியாது.

எனக்குத் தெரிந்து தி.மு.கழகத்திலும் 1967க்குப் பிறகுதான் யார் எந்த ஜாதி என்பது தெரியவந்தது. உதாரணமாக அரங்கண்ணல் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். 1967 தேர்தலில் அவர் மயிலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க யாதவர் சங்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பு முன்வந்தது. அப்போதுதான் அவர் யாதவர் என்பது எனக்குத் தெரிய வந்தது! இதேபோல் யார் யார் எந்த எந்த ஜாதி என்பது சிறிது சிறிதாகத் தெரியலாயிற்று! நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி என ஒரு சிலரின் ஜாதி மட்டுமே விதிவிலக்காக முன்கூட்டியே அறியப்பட்டிருந்தது.

1966ல் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நான் தமிழகம் திரும்பியிருந்தேன். சென்னையில் மயிலை மாங்கொல்லையில் அரங்கண்ணலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பேச வந்திருந்தார். அச் சமயம் நான் நீண்ட தாடியுடன் இருந்தேன். அண்ணா என்னை அடையாளம் கண்டுகொள்கிறாரா பார்க்கலாம் என்று கூட்டம் முடியும் தறுவாயில் மேடையின் கீழே நெருங்கி நின்றேன். மேடையிலிருந்து இறங்கி வந்த அண்ணா என்னைக் கண்டதும் ஒரு கணம் நின்று, ‘வேர் வெர் யூ ஆல் தீஸ் டேஸ்ஹ ‘ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் (அண்ணாவும், மதியழகனும் ஏன் எம்ஜிஆரும் கூட அதென்னவோ பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் என்னிடம் பேசுவார்கள்! ). பக்கத்தில்தான் செயல்வீரர் கூட்டம் என்று வைத்திருக்கிறார்கள்; வந்துவிடு, போய்விடாதே, வேறு எங்கும் எனக் கூறிவிட்டு தம்பிமார் புடைசூழ விரைந்தார். பின்தொடர்ந்து வந்த அரங்கண்ணலும் என்னை அடையாளம் கண்டுகொண்டு அழைத்துச் சென்றார். அண்ணாவுடனான எனது இரண்டாவது தொடர்பு அந்தக் கணம் முதல் ஆரம்பித்தது. 1969 பிப்ரவரி 3ந் தேதி வரை அது நீடித்தது.

அண்ணா என்னை நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்த்து மகிழ்ந்ததோடு ஒதுங்கிக் கொண்டேன். அவராகவே அழைக்கும் சமயங்களில் மட்டுமே சந்தித்து வந்தேன். செய்தி நிறுவனம் ஒன்றில் சேர்ந்துவிட்டிருந்ததால் பத்திரிகையாளர் சந்திப்புகளின்போது பார்ப்பதோடு நின்றுகொள்வேன். ஆனால் அண்ணா இறுதியாக அடையாறு புற்று நோய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது செய்தியாளன் என்கிற முறையில் மட்டுமின்றி அவருடைய அபிமானியாகவும் இரவு பகல், ஊண், உறக்கமின்றி அங்கு பழி கிடந்தேன்.

அண்ணா, மதியழகன், ஆகியோருக்கு ஜாதி உணர்வே இருந்ததில்லை. எந்தவொரு ஜாதியின் மீதும் அவர்களுக்கு துவேஷமும் இருந்ததில்லை. எனக்குத் தெரிந்தவரை ஹிந்து சமூகம் அழிந்தொழிந்து போகவேண்டும் என்கிற எண்ணம் அண்ணாவுக்கு இருந்ததில்லை. ஹிந்து சமயத்திலும் சமூகத்திலும் தனிமனித வாழ்க்கையில் மதத்தின் தலையீடு இல்லாத சுதந்திரம் இருப்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ஆரிய மாயை, கம்ப ரசம் என்றெல்லாம் எழுதிக்கொண்டும் தீ பரவட்டும் என்று பேசிக்கொண்டும் இருந்த அண்ணாதுரை வேறு, பிற்காலத்தில் அனைவரையுமே நேசித்த அண்ணா வேறு என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்ததிலிருந்தே அவரிடம் சிறுகச் சிறுக மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. வி.பி. ராமன் போன்ற பிராமணர் பலரும் அண்ணாவின்பால் ஈர்க்கப்பட்டு, தி.மு.கழகத்தில் உறுப்பினராக முடிந்தது அதனால்தான்.

ஜாதி என்கிற அமைப்பும் வர்ணாசிரம தர்மமும் ஒன்று என்ற எண்ணம் இருப்பதால்தான் ஹிந்து தர்மம் வர்ணாசிரம தர்மத்தைப் பேசுவதால் ஜாதி அமைப்பு உடைந்துவிட்டால் ஹிந்து தர்மம் அழிந்துவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஈ.. வே.ரா. தமக்கு ஆள் பலம் வேண்டும் என்பதற்காக பிராமணர்களை ஒருபக்கம் ஒதுக்கிவைத்து மற்றவர்களையெல்லாம் சூத்திரர் என்று முத்திரையிட்டுத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டதால் விளைந்த கோளாறுகளில் இதுவும் ஒன்று. க்ஷத்திரியர், வைசியர் என்கிற பிரிவுகளையெல்லாம் அவர் மறைத்துவிட்டபோதிலும் சமுதாயத்தில் அப்பிரிவுகள் இல்லாமல் போய்விடவில்லை. தொழில் செய்து வாழ்வோர் அனைவரும் வைசியர் என்ற பிரிவில் அடங்குவர். உட லுழைப்பைத் தருவோரே சூத்திரர் ஆவர். ஜாதிகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவ்வாறு இருக்குமானால் ஒரு ஜாதியிலேயே பல பிரிவுகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜாதி என்பது பல்வேறு ஜனக்கட்டுகள்தான் என்பது மானிடவியலாளர் கருத்து. எனவே ஹிந்து சமூகம் ஜாதி என்ற அஸ்திவாரத்தின் மீது நிற்பதாக நினைப்பது தவறான அனுமானமேயாகும். ஜாதிகள் இல்லாவிடினும் ஹிந்து சமூகம் தழைத்து வளரும் என்பதற்கு ஆரிய சமாஜமும் ஒரு எடுத்துக்காட்டு.

முகமதிய சமயத்திலிருந்தும் கிறிஸ்தவ சமயத்திலிருந்தும் தாய் மதமான ஹிந்து சமயத்திற்குத் திரும்ப விழைவோருக்கு ‘சுத்தி சமஸ்காரம் ‘ என்ற பெயரில் ஆரிய சமாஜம் சடங்கு நடத்தி அவர்களை ஹிந்து சமயத்தினராக ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு தாய் மதம் திரும்புவோரை எந்த ஜாதியில் சேர்ப்பது ? அவர்களை ஜாதியென்ற சிறு வளையத்திற்குள் சிக்கவிடாமல் ஆரிய சமாஜிகளாக ஏற்கிறது, ஆரிய சமாஜம். இஸ்கானிலும் இதுதான் நடக்கிறது. ஆகவே ஜாதிகள் நீங்கிவிட்டால் ஹிந்து தர்மம் அழிந்து போகுமென எவரும் கவலைப்பட வேண்டாம்.

ஏற்கனவே பல காரணங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் ஹிந்து சமூகம் மேலும் மேலும் பிளவுபடுவதும் நிரந்தரமாகப் பிளவுபட்டுக் கிடப்பதும் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் கம்யூனல் ஜி ஓ எதிர்க்கப்பட்டது. எனவே கம்யூனல் ஜி ஓ வுக்கு முன் ஹிந்து சமூகம் பிளவுபடாமலா இருந்தது எனக் கேட்பது சரியாக இருக்காது. ஹிந்து சமூகத்தை ஒன்றுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகையில் கம்யூனல் ஜி ஓ வைக் கொண்டு வந்து அந்த முயற்சிக்குக் குழிபறிக்கலாகாது என்ற நல்லெண்ணம் காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிராமணர் தவிரப் பிறர் முன்னேறிவிடலாகாது என்ற சுய நலம்தான் எதிர்ப்புக்குக் காரணம் என எண்ணுவதற்கு ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்று பிற்பட்ட, மிகப் பிற்பட்ட என்கிற பிரிவுகளில் வருவோர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரும், ஊக்கம் இருப்பின் கல்வி கேள்விகளில் சிறந்தும் உயர்பதவிகளை வகித்தும் மேன்மையுறுவது ஹிந்து சமூகத்தில் கம்யூனல் ஜி ஓ இல்லாத காலத்திலேயே சாத்தியமாகியுள்ளது. அமைச்சுப் பணிகளில் இருந்தோர், கல்வியிற் சிறந்த சான்றோர் எனப் பல்வேறு ஜாதிகளிலிருந்தும் பெயர்களைத் தரமுடியும். அவ்வளவு ஏன், பாராட்டப்பெற்ற பண்டைய புலவர் பெருமக்களும், வணங்கி உபசரிக்கப்பட்ட ரிஷிகளும் பல்வேறு ஜாதியினர்தாம்!

ஹிந்து சமூகத்தில் கீழ் ஜாதியினருக்குக் காடன் மாடன் என்கிற கடவுள்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும், மேல் ஜாதியினர் அக்கடவுளரை வணங்குவதில்லை என்றும் சிலர் கருதுவதாகத் தெரிகிறது. இதற்கும் ஆதாரமில்லை. பாரதியாரின் மகள் தங்கம்மா தனது நூலில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். தமது தாய் வழியில் தங்களது குல தெய்வம் மாடன் என்று அவர் தரும் தகவல், பிராமணரும் காடனையும் மாடனையும் தெய்வங்களாக ஏற்றுள்ளனர் என்பதை உறுதி செய்கிறது.

ஹிந்து சமயமும் சமூகமும் அழிந்து ஒழிந்துபோய், இந்த மண்ணில் வேற்று சமயங்களும் கலாசாரங்களும் வேர் பிடிக்க வேண்டும், புராதன நாகரிகங்கள் பலவும் அழிந்து போனதுபோல் ஹிந்து நாகரிகமும் அழிந்து போய்விட வேண்டும் என விரும்புபவர்களுடன் விவாதித்துப் பயனில்லை.

இன்றைக்கு நம்மைச் சூழ்ந்துள்ள பேராபத்துகள் பற்றிய பிரக்ஞையின்றி எல்லாம் சரியாக இருப்பதுபோல் எண்ணிக்கொண்டிருப்பவர்களை எச்சரிப்பதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி வெட்டித்தனமாக அரட்டையடிப்பதல்ல.

—-

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்