மலர்மன்னன்
ஆக, நானும் இணைய தள இதழ்களைத்தான் தஞ்சமடைய வேண்டியுள்ளது, எனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட. வெளிப்படையாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டமைக்குத் தமிழ்ப் பத்திரிகையுலகமும், பொதுவாக பாரதத்தின் ஆங்கில மீடியாவும் எனக்குத் தந்துள்ள வெகுமதி இது.
‘திண்ணை ‘யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும் மெயில்கள் வந்துகொண்டிருப்பதாலும், கோ. ராஜாராம் கூட அவ்வாறே விரும்புவதாகத் தெரிவித்திருப்பதாலும் தொடர்ந்து எழுதும் சபலந்தட்டியுள்ளது என ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பரவலாகப் போய்ச் சேரவேண்டும் என நான் கருதும் சில விஷயங்களை அதிக வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள காகித வடிவிலான பிரபல பத்திரிகைகளில் எழுதவே விரும்புகிறேன். பெயர் பிரபலமாக வேண்டுமே என்ற ஆசையினால் அல்ல. ஏனெனில், விகடன், கல்கி, தினமணி முதலான தமிழில் வெளிவரும் எல்லா முக்கிய இதழ்களிலும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களாகவே கேட்டு எழுதி வெளியிடும் அளவுக்கு எழுதிக் கொண்டிருந்தவன்தான்.
அவ்வளவு ஏன், மாணவப் பருவத்தில் அண்ணாவே சொல்லி, அவரது ‘திராவிட நாடு ‘ இதழிலுங் கூட எழுதியவன்தான்! அவரது கட்சிக் கொள்கைக்குத் தொடர்பில்லாதவாறு! சிதம்பரத்தில் அப்போது, மாலை வேளையில் நண்பர்கள் கும்பலாக என்னை அழைத்துக் கொண்டு செல்கையில், இன்றைய தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் அவர்களின் தந்தையார் கலியாண சுந்தர முதலியார் அவர்கள் தம் வீட்டிலேயே வைட்டிருந்த பத்திரிகைக் கடையில் திராவிட நாடு இதழை ஆளுக்கொரு பிரதி வாங்குவார்கள். கலியாண சுந்தரம் அவர்களும், ‘இந்த வாரம் என்ன, உங்கள் ‘அண்ணா ‘ எழுதியது வந்திருக்கிறதா ? ‘ என்று சிரித்துக் கொண்டே பிரதிகளைக் கொடுப்பார்கள்(1957, 58, 59 ஆண்டுகளில் வெளிவந்த திராவிட நாடு தொகுப்பு யாரிடமாவது இருந்தால் சரிபார்த்துக் கொள்ளலாம்).
தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகைகளில் நான் எழுதாத பத்திரிகை என ஒன்று இருக்குமானால் அது ‘குமுதம் ‘ தான்(ராணி, தேவி வகையறாக்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை).
சீராகப் போய்க் கொண்டிருந்த தமிழர்களின் பத்திரிகை வாசிப்பு ருசியை வக்கிரமாக்கியது குமுதம்தான் என்பது என் கருத்து. ஏனெனில், கல்கியும் விகடனும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் படிக்கத் தந்தவை தரமானவையாகவே இருந்தன. உ.வே.சா., சி.வி. கோபாலரத்தினம், எஸ். வி.வி., மஹாலிங்க சாஸ்திரி எனப் பல உயர்தர எழுத்துகளை விகடனில் வாசிக்க முடிந்தது. கல்கியில் டி.கே.சி., போன்றவர்களைப் படிக்க முடிந்தது. பத்திரிகைக் கதை, பத்திரிகை எழுத்து (மாகஸீன் ஸ்டோரி, மாகஸீன் ரைட்டிங்) என்று அன்று ஜனரஞ்சகமாகக் கருதப்பட்டவையும் இன்று மறு வாசிப்பில் நன்றாகவே உள்ளன. உச்சிக் குடுமியும், பஞ்ச கச்சமும் நெற்றியில் பட்டை, பட்டையாய் விபூதியுமாகக் காட்சிதந்தவரான கி.வா. ஜ. ஆசிரியராக இருந்த கலைமகளில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., தி. ஜானகிராமன் ஆகியோரின் சிறுகதைகளைப் படிக்க முடிந்தது. இவ்வளவுக்கும் புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஏன் தி.ஜாவுங் கூட அன்றைய சமூகச் சூழலில் ‘இப்படியெல்லாங்கூடவா எழுதுவது ‘ என்று கருதப்பட்ட கருவமைந்த கதைகளைக் கலைமகளில் எழுத முடிந்தது.
இவ்வாறு சீராகச் சென்றுகொண்திருந்த பத்திரிகை வாசிப்புப் பழக்கத்தைச் சீரழித்தது குமுதம்தான் என்பது என் கருத்து. சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் பெங்களூர் படிகள் அமைப்பு, சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில் ‘எழுபதுகளில் தமிழ் இதழ்கள் ‘ என்ற தலைப்பில் ஆய்வுரை செய்யும் பொறுப்பு எனக்கு அளிக்கப் பட்டிரு ந்தது. அந்த உரையின்போது குமுதத்தை மிகக் கடுமையாக நான் விமரிசனம் செய்ததை அன்று அதிகம் பெயர் எடுக்காத சக எழுத்தாளர்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஆனால் அவர்களே பிற்பாடு வாய்ப்புக் கிட்டியபோது குமுதத்தில் எழுதத் தவறவில்லை!
அவ்வளவு ஏன், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் குமுதம் சில முக்கிய எழுத்தாளர்களுக்கு வைர மோதிரம் தருவதாகக் கூறி சிறுகதை எழுதுமாறு கேட்டது. அந்தச் சமயத்தில் நான் விகடனில் தொடர்கதை, அடிக்கடி சிறுகதைகள் என எழுதிக் கொண்டிருந்தேன்.
கி. ராஜேந்திரன் கல்கி தீபாவளி மலருக்கும், சிறப்பு இதழ்கள் என முக்கியமான தருணங்களிலும் என்னிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனவே என் பெயர் ஓரளவுக்குத் தெரிந்த பெயராகிவிட்டிருந்ததால் என்னிடமும் வைர மோதிரம் தருவதாகவும் சிறுகதை எழுதித் தருமாறும் எஸ்.ஏ.பி. தகவல் சொல்லி அனுப்பினார். தகவல் கொண்டு வந்தவர் பால்யூ என நினைக்கிறேன். தமிழர்களின் சீரான வாசிப்புப் பழக்கத்தைக் கெடுத்த பத்திரிகை என குமுதத்தை நான் கருதுவதால் அதற்கு எழுதும் விருப்பமில்லை என்று பதமாகவே பதில் சொன்னேன். ஆனால் பிறகு பார்த்தால் குமுதம் பற்றி ஏற்கனவே தனிப் பேச்சுகளில் நான் தெரிவித்து வந்த கருத்தைப் பாரட்டியவர்களும் ஆளாளுக்குச் சிறுகதை எழுதிக் கொடுத்துவிட்டு, விரலில் வைர மோதிரம் ஜொலிக்க நடமாடிக் கொண்டிருந்தார்கள்! எம். வி. வெங்கட்ராமுக்கும் வைர மோதிர வாய்ப்புக் கிட்டியது. அவருக்கும் எஸ்.ஏ.பி. வைர மோதிரம் கொடுத்துவிட்டார். ஆனால் எம்.வி.வி. எழுதிய சிறுகதையைப் பிரசுரிக்கவில்லை! எம். வி. வி. ஒரு சரித்திரக் கதையை எழுதிக் கொடுத்ததாக ஞாபகம். கணையாழியில் பிற்பாடு அவர் எழுதிய ‘பெட்கி ‘ என்ற சவுராஷ்ட்டிர வகுப்பினர் தொடர்பான கதையை எழுதிக் கொடுத்திருந்தால் ஒருவேளை குமுதம் பிரசுரித்திருக்கக் கூடும்!
ஒரு காலத்தில், ‘நீங்கள் எங்கள் பத்திரிகையில் எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டன போலிருக்கிறதே ? எழுதுங்களேன் ‘ என்று கடிதம் எழுதிக் கேட்ட பிரபல பத்திரிகைகளுங் கூட இப்போது நானாகவே எழுதி அனுப்பினாலும் வெளியிட விரும்புவதில்லை!
(பத்திரிகை அலுவகங்களிலிருந்து எழுதச்சொல்லி முன்பெல்லாம் வந்த கடிதங்களைப் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்; ‘போயும் போயும் இவனிடமாவது நாங்கள் எழுதச் சொல்லிக் கேட்டதாவது ‘ என்று எந்தப் பத்திரிகையாவது சொன்னால் எனக்குக் காண்பிக்க ருசு வேண்டும் அல்லவா ?)
‘துக்ளக் ‘காவது முன்பெல்லாம் நான் எழுதும் கட்டுரைகளை வெளியிடும். இப்போதெல்லாம் அதுவும் வெளியிட விரும்புவதில்லை. காரணம், நான் அறிந்தவரை ஒருமுறை சோவையே நான் விமர்சித்து துக்ளக்கிற்கு எழுதிவிட்டதுதான்!
வாசகர் ஒருவர், முகமதியருக்கு ஹஜ் பயணம் செல்ல அரசு மானியம் வழங்குவதன் நியாயம் பற்றிக் கேட்டிருந்த கேள்விக்கு சோ அதை நியாயப்படுத்தும் விதமாகப் பதில் எழுதியிருந்தார். விவரம் அறிந்தவரான சோ தகுந்த காரணம் காட்டியேகூட அதனை நியாயப் படுத்தியிருக்க முடியும். ஆனால் கவனக் குறைவினாலோ என்னவோ பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லிவிட்டார். அதனை நான் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதினேன். அது முதல் துக்ளக்கும் நான் எழுதுவதை வெளியிடுவதில்லை! ஆனால் இதனால்தான் அவர்கள் வெளியிடுவதில்லை எனக் கூறுவதற்கு என்னிடம் ஆதாரமில்லை. பத்திரிகையே எழுதிக் கேட்டால்கூட ஒருவர் எழுதியனுப்பியதை வெளியிட மறுக்கும் உரிமைதான் பத்திரிகைகளுக்கு உண்டே!
அனுசரித்துக் கொண்டு போகும் எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து பத்திரிகைகளில் நீடிக்கமுடியும் என்பதை என் வாயால் சொல்லவேண்டுமா(நான் சோவுக்கு அப்படி என்ன எழுதிவிட்டேன் என்கிறீர்களா ? கும்பமேளாவுக்கு அரசு போலிஸ் பந்தோபஸ்து கொடுப்பதை நாம் எப்படிக் கேள்வி கேட்கமுடியாதோ அப்படித்தான் ஹஜ் பயணத்திற்கு மானியம் கொடுப்பதையும் கேட்க முடியாது என்று பதில் கொடுத்திருந்தார், சோ. அதற்கு நான், ‘ மக்கள் எங்கு கூடினாலும், அது அரசியல் பொதுக் கூட்டமேயானாலும் திருவிழாவானாலும் போதிய பந்தோபஸ்துக் கொடுப்பது சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படி அரசின் கடமை. இதனை எப்படி ஹஜ் பயணத்திற்கான மானியத்துடன் ஒப்பிடமுடியும் ? மெத்த விவரம் தெரிந்தவர் என்று அறியப்படும் சோவே இவ்வாறு பொருத்தமில்லாத காரணம் காட்டி மானியத்தை நியாயப் படுத்தலாமா ? ‘ என்று கேட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதனை துக்ளக் வெளியிடவில்லை. மட்டுமல்ல, அதன் பிறகு நான் எதைப்பற்றி எழுதினாலும் வெளியிடுவதில்லை! விதிவிலக்காக சமீபத்தில் நான் எழுதிய ஒரு பாராட்டுக் கடிதத்தை மட்டும் முக்கியமான பகுதி என நான் கருதும் பகுதியை வெட்டிவிட்டுப் பிரசுரம் செய்திருப்பது வேறு விஷயம்! சக்கரியா காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரை பற்றி நான் எழுதியதை எதற்கும் பார்ப்போம் என்று துக்ளக்கிற்கும் அனுப்பியிருக்கிறேன். வந்தால் மகிழ்ச்சி!
சரி, நான் மரியாதை காட்டிய பிரபல பத்திரிகைகள் திடாரென என்னை தீண்டத் தகாதவனாக்கிவிட்டதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் ?
மீனாட்சிபுரம், புளியங்குடி ஆகிய இடங்களில் தலித்துகளிடம் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம், பண உதவி என்றெல்லாம் ஆசை காட்டி முகமதியர் மத மாற்றம் செய்யமுற்பட்டதைக் கண்டித்தும், மண்டைக்காடில் கிறிஸ்துவர் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டித்தும் நான் பேசியும் எழுதியும் வந்ததோடு களத்தில் இறங்கி வேலையும் செய்யத் தொடங்கியதும் பல வாசல்கள் எனக்கு மூடப்பட்டுவிட்டன.
முகமதியர்கள் என்ன ஏது என்று ஆராயாமலே நேரடியான வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். அதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுவிடுகிறது என்பதே வாசல்கள் எனக்கு மூடப்பட்டமைக்குக் காரணம் என்றுதான் நானாகவே சமாதானம் சொல்லிக் கொள்ளவேண்டும்.
ஹிந்துக்களுக்கென்று உள்ள புனிதத் தலங்கள் ஏழு. இவ்வேழு தலங்கள் மீது முகமதியருக்கு எவ்விதப் புனிதத் தன்மையும் இல்லை. ஆனால் இங்கெல்லாம் ஹிந்துக்களைச் சிறுமைப் படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம் காரணமாக , குறிப்பாக இப்புனிதத் தலங்களின் பிரதான இடத்திலேயே பிரமாண்டமான மசூதிகள் கட்டப் பட்டுள்ளன. முகமதியருக்கு ‘ரியல் எஸ்டேட் வேல்யு ‘ என்பதற்குமேல் இம்மசூதிகள் மீது எவ்விதப் புனிதத் தன்மையும் இல்லை. எனவே ‘ஹிந்துக்களுடன் தாயாப் புள்ளயாப் பழகி வரோம். இந்த ஆர். எஸ். எஸ். காரங்கதான் அதைக் கெடுக்கறானுங்க ‘ என்று முகமதியர் துக்கப்படுவது நெஞ்சார உண்மையெனில், குறைந்த பட்சம் ஹிந்துக்களின் இவ்வேழு புனிதத் தலங்களிலிருந்தாவது அவர்கள் தங்கள் மசூதிகளை அவர்களாகவே அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வரத் தொடங்கியதன் விளைவாகவே எனக்கு பத்திரிகைகளின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன என்பது என் அனுமானம். ஏனெனில் திடாரென என் எழுத்து பிரசுரிக்கத் தகுதியில்லாததாகப் போவானேன் ?
ஹிந்துக்களான எமக்கு ஹிந்துஸ்தானத்தில் மட்டுமே பாரம்பரியமான புனித ஸ்தலங்கள் உண்டு.
எமது ஏழு மிகப் புராதன புனிதத் தலங்களுள் அயோத்தியும் ஒன்று. ஸ்ரீ ராமபிரான் தோன்றுமுன்னரே எம்மால் புனிதத் தலமாகக் கருதப்பட்டு வந்த தலம் அது. 1526ல் நடந்த முதலாம் பானிப்பட்டு யுத்தம் சொல்லப் போனால் பாபர் என்ற அந்நிய முகமதியருக்கும் இப்ராஹிம் லோடி என்கிற, இதற்குள் பாரதத்தில் காலூன்றிவிட்ட முகமதியருக்கும் இடையே நடந்ததுதான். இதில் ஹிந்துக்களின் புனிதத் தலமான அயோத்தியில் பாபர் நினைவாக முகமதிய பாணியில் ஒரு மண்டபம் எழுப்பப்படுமானால் அதனை நம் பாரத தேசத்து முகமதியர் கொண்டாடுதல் என்ன நியாயம் ? ஹிந்துக்கள் அந்த மண்டப வெளி வாயிலில் குழந்தை ஸ்ரீ ராமன் நினைவாக வழிபாட்டுத் தலம் அமைத்த பிறகே முகமதியர் வம்புக்காகவும் வீம்புக்காகவும் பாபர் நினைவு மண்டபத்தைத் தங்கள் வழிபாட்டுத் தலமாக்கிக் கொண்டனர். மற்றபடி முகமதியர் வழிபாட்டுத் தலத்திற்கு இன்றியமையாத நாற்புறங்களிலிருந்தும் வழிபாட்டுக்கு ஓங்கிக் குரல் கொடுத்து அழைப்பதற்கான கோபுரங் கள் அங்கு கிடையாது!
பாபர் நினைவு மண்டபம் இருந்த பகுதி பழைய ஆவணங்களில் ஜன்மஸ்தான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குள்ள அஞ்சலகமும் ஜன்மஸ்தான் கிளை அஞ்சலகம் என்ற பெயருடன்தான் இருந்து வருகிறது. இது ஹிந்து அமைப்புகள் சூட்டிய பெயர் அல்ல. காலங் காலமாக அறியப்பட்டு வருவது. அயோத்தியில் ஒரு பகுதிக்கு ஜன்மஸ்தான் என்று பெயர் இருக்குமானால் அது யாருடைய ஜன்மஸ்தானமாக இருக்கக் கூடும் ? நிச்சயமாக பாபருடையது அல்லதானே ?
அயோத்தியும் பைஸாபாதும் இரட்டை நகரங்கள். நம் பக்கத்தில் உள்ள நெல்லையும் பாளையும் போல. ஹைதராபாதும் செகந்தராபாதும் போல. பைஸாபாத் முகமதியர் பெருமளவில் உள்ள பகுதி. அங்கு மசூதிகளும் ஏராளம். அயோத்தியில் பாரத நாட்டினரின் சுய மரியாதைக்கே தலைக் குனிவு ஏற்படுமாறு அமைந்திருந்த பாபர் நினைவிடம் அகற்றப் பட்ட அன்று, அவ்வாறு அகற்றியவர்களுக்கு உண்மையிலேயே மத வெறி என்பதாக ஒன்று இருந்திருக்குமானால் அண்டையிலேயே இருந்த பைஸாபாதிலுங் கூட முகமதியரின் வழிபாட்டுத் தலங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடக்க முடிந்திருக்கும். அந்த அளவுக்கு அன்று அங்கு ஆவேசமும் பெருந்திரளான ஜன சக்தியும் இருந்ததை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றவன் நான். ஆகவே அயோத்தியில் பாபர் நினைவிடம் அகற்றப் பட்டமைக்கு ஹிந்துக்களின் மதாபிமானம் என்பதைவிட முகமதியர் உள்ளிட்ட பாரதியர்கள் அனைவரின் சுய மரியாதையே காரணம் என்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தையும் நான் உரத்த குரலில் வெளிப்படையாகப் பேசலானதும் பத்திரிகையுலகிற்கு நான் வேண்டாதவனாகிவிடக் காரணமாகியிருக்கலாம்.
சொல்லப் போனால் அன்று அயோத்தியில் அகற்றப் பட்ட மண்டபம் எமது மரியாதைக்குரிய புருஷோத்தமனான (மர்யாதா புருஷோத்தம்) குழந்தை ஸ்ரீ ராமனின் வழிபாட்டுத் தலமாக இருந்ததேயன்றி முகமதியரின் வழிபாட்டுத்தலமாக இருக்கவில்லை. ஆக, எமது குழந்தை ஸ்ரீ ராமானுக்காகப் புதியதோர் கோயில் அமைக்கப் பாழ்பட்டுப் போன கட்டிடத்தைத்தான் அகற்ற வேண்டியதாயிற்று என்றுகூட வாதாட முடியும். இதனை ஒருமுறை நான் நமது தற்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்குக் கடித வாயிலாகத் தெரிவித்திருந்தேன்(கவுடா பிரதமராயிருந்த சமயம்!). சிதம்பரத்தின் கவனத்திற்கு அது போயிருக்க வேண்டும். மேலும் சிதம்பரம் என் நீண்ட கால நண்பர்தான். எனவே என்னிடமிருந்து கிடைத்த கடிதத்தைப் படித்திருப்பார் என்றே நம்பலாம். பா.ஜ.க. வினரை மடக்குவதற்காக ஒருமுறை அவர் பாராளுமன்றத்தில் இதே வாதத்தை எடுத்துவைத்தார்! அந்தக் கடிதத்தில் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ரங்கராஜன் குமாரமங்கலம் போலவே பா.ஜ.க.தான் என்றும் எழுதியிருந்தேன். ரங்க ராஜனும் என் நண்பராக இருந்த, என் மதிப்பிற்குரியவரே!
நம் பத்திரிகை உலகம் எம் தரப்பு நியாயத்தைப் பேச இடமளிப்பதில்லை என்பதற்காக அதனைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவை இன்று ஒரு பெரிய தொழிலாக நடை பெறுபவை. பலர் வேலை பார்க்குமிடங்களாக இருப்பவை. பல விலை உயர்ந்த சாதனங்கள் நிறுவப்பட்டிருப்பவை. முரட்டுத்தனமான வன்முறைத் தாக்குதல், குண்டு வீச்சு ஆகியவற்றுக்கு இலக்காக அவை விரும்பாததை எப்படிக் குறைகாண முடியும், என்னதான் காப்பீடு உத்தரவாதங்கள் அவற்றுக்கு இருந்தாலும் ?
எனக்கு நன்றாக நினைவுள்ளது. 198485 வாக்கில் பெங்களூரிலிருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பிலொரு சிறுகதை வந்திருந்தது. டெக்கான் ஹெரால்டின் போதாத காலம், அச் சிறுகதையில் முகமதியரின் வணக்கத்திற்குரிய இறைத் தூதரின் பெயரால், கவனியுங்கள், வெறும் பெயரால் மட்டுமே அமைந்த ஒரு கதா பாத்திரம் முட்டாளாகச் சித்திரிக்கப் பட்டிருந்தது. அது தம் இறைத் தூதருக்கே இழிவு எனக் குற்றம் சாட்டி ஒரு பெரும் கூட்டம் டெக்கான் ஹேரால்டு அலுவலகத்தை துவம்சம் செய்துவிட்டது. பத்திரிகை மீதான இம்முறையற்ற தாக்குதலைக் கண்டித்துச் சென்னையில் பத்திரிகையாளர்களைத் திரட்டி ஒரு கூட்டம் நடத்த முனைந்து எவருக்கும் பங்கேற்கும் துணிவு இல்லாததால் அம் முயற்சியில் தோல்வியடைந்தேன். சரி, மிகப் பிரபலமான எழுத்தாளர் எவரிடமாவது இதனைக் கண்டித்துப் பெரிய பத்திரிகை எதிலாவது எழுத வைக்க முற்பட்டேன்(என்னைத்தான் ப்ரஷ்டம் செய்துவிட்டார்களே!).
அந்தச் சமயத்தில் ஜெயகாந்தன் குமுதத்தில் தொடர்ந்து ஒரு பக்கம் எழுதிவந்தார். அவர்தான் துணிச்சல் மிக்கவர் எனப் பெயர் எடுத்தவராயிற்றே, மேலும் நியாயமான விஷயங் களுக்காக விட்டுக் கொடுக்காதவராயிற்றே என்று ஒரு மாலைப் போதில் அவரது ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்குப் போனேன் (அந்தக் காலத்தில் அவர் தினந்தோறும் வந்து தமது அபிமானிகளுடன் சல்லாபிக்கும் மாடியறையை அவருள்பட அனைவரும் மடம் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்!). ஜெயகாந்தன் நான் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘அப்படியா, நானே அப்படி எழுதுகிறேன். என்ன ஆகிறது பார்க்கலாம் ‘ என்றார். அவரது துணிவினை வியந்தவாறு விடைபெற்றேன். நான் அவரிடம் எதிர்பார்த்தது பத்திரிகைச் சுதந்திரத்தை வலியுறுத்தும் கண்டனத்தைத்தான். ஆனால் அவரோ, ‘நானே அதேமாதிரி எழுதுகிறேன் ‘ என்கிறாரே! ஜெயகாந்தன் துணிச்சல் மிக்கவர் என்று ஊரும் உலகமும் சொல்வது சரிதான் என எண்ணிக்கொண்டேன். அடுத்த வாரமே குமுதத்தில் ஜெயகாந்தன் தாம் வாக்களித்தபடியே ஒரு பக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் தலைப்பு ‘முட்டாள் சங்கரன்! ‘ ஆக, அவரது துணிச்சலுங் கூட யாரிடம் செல்லுபடியாகிறது என்று தெரிகிறபோது, பாவம், முதல் போட்டுப் பெருந்தொழில் செய்யும் நம் பத்திரிகைகளை நோவது சரியில்லைதானே!
நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது மகளிர் நலம் மற்றும் உரிமை ஆகியன பற்றியும், சிறுவர்களுக்கான பயனுள்ள ஸ்கிட்களும் எழுத எனக்கு அதே டெக்கான் ஹெரால்டு இடம் அளித்தது (சன்மானம் ஆயிரக்கணக்கில்!). ஒருமுறை சிறிது எல்லை தாண்டி, ‘ஒய் பாகிஸ்தான் ஈஸ் எ றோக் ஸ்டேட் ‘ என்று ஆதாரப் பூர்வமாக ஒரு சிறு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது முன் எச்சரிக்கையுடன் சுருக்கப்பட்டுக் கடிதம் போல வெளியிடப்பட்டது. போனால் போகிறது, கொடுக்கிற மருந்தில் முக்காலும் சீரணிக்கத் தெம்பின்றி கழிவாக வெளியேறிப் போனாலும் கொஞ்சமாவது தக்குகிறதே என்று அடுத்து அயோத்தி குறித்து ஆதாரப் பூர்வமான எமது நியாயத்தைக் கூறுவதாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். ஏற்கனவே சூடுபட்டுக் கொண்ட அனுபவத்தாலோ என்னவோ, டெக்கான் ஹெரால்டு அக் கட்டுரையைப் புறக்கணித்ததோடு, அதன் பின் நான் என்ன எழுதினாலும் எதற்கு வம்பு, இடையில் எதையாவது செருகியிருப்பேனோ என்னவோ என்று என்ணி முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது.
இதெல்லாம் ஏதோ எனக்கு ஏற்பட்ட இழப்பால் பீறிட்டெழும் எனது அங்கலாய்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாகாது. நம் அரசியல் சாசனம் மிகத் தெளிவாக உத்தரவாதம் அளித்திருந்தும் தமக்குள்ள சுதந்திரத்தை நமது பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்வதற்குத் தயங்கும்படியான ஒரு சோகம் எப்படி நேர்ந்தது, யார் இதற்குப் பொறுப்பு என்று படிக்கிறவர்கள் யோசிக்கவேண்டும் என்பதற்காகவே வேலை மெனக்கெட்டு இவ்வளவும் எழுதித் தீர்த்தேன்.
—-
malarmannan97@yahoo.co.uk
- கடிதம் கை சேரும் கணம்
- திண்ணை
- பாரதியை தியானிப்போம்
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- உண்மை நின்றிட வேண்டும்!
- கடிதம்
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- சொன்னார்கள்
- மொபைல் புராணம்
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- கவிதையோடு கரைதல்..!
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- கனவு மெய்ப்படுமா ?
- வாளி
- இரு கவிதைகள்
- நான் உன் ரசிகன் அல்ல..
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- மறதி
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எடின்பரோ குறிப்புகள் – 3
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- எல்லை
- வண்டிக் குதிரைகள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சிக்குவும் மழையும்….