கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

சின்னக்கருப்பன்


உழைக்கும் நடிகைகள் கூலி கேட்டால், அவர்களை விபச்சாரிகள் என்று தங்கர் பச்சான் சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு உட்பட்ட நடிகைகள் கேட்காமல் இருந்திருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலுறவு கொள்கிறார்கள், அதில் தப்பில்லை. ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். இதிலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கோரியதாலேயே மன்னிப்பு கேட்டார்.

தங்கர் பச்சானுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் நின்றிருக்கின்றன என்பது தெளிவு. அதனாலேயே குஷ்பு சொன்னதை பிடித்துக்கொண்டு அவர்மீது பாய்ந்தன என்பதும் தெளிவு. சினிமா என்ற கலையே நம் அரசியலை நிர்ணயிக்கிறது என்று ஆதங்கமெல்லாம் இல்லை எனக்கு. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.

கலாச்சாரம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. சமூக நீதிகள் என்பவையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தின் சமூக நீதிகள் அடுத்த காலத்தின் சமூக நீதிகளாக இருக்காது. அதனை உணர்ந்து கொண்டிருப்பது இந்து சமூகம். பல தெய்வீக விக்கிரகங்களை சுற்றி ஒரு அரைவட்ட வேலைப்பாடு இருக்கும். அதனைப் பற்றி ஒரு சில்பி எனக்கு விளக்கினார். உருவமற்ற சிதிலமான நிலையிலிருந்து மெல்ல மெல்ல ஒழுங்கை நோக்கி உச்சத்தை நோக்கி செல்கிறது சமூகம், உயிர் ஆகியவை. அது பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல சிதிலமாகி ஒழுங்கற்ற உருவமடைந்து அழிந்து மறைகிறது என்று சொன்னார். இதன் பின்னால் இறைவனின் திருத்தாண்டவம் இருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து மாறும் சமூக நீதிகளை சொல்லவந்த ஆச்சார்யன், ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மனு என்று சொல்கிறான். மனுநீதியின் இறுதிப்பகுதியிலும், மனுநீதி விதிகளை சேர்க்கவோ, நீக்கவோ மாற்றவோ வழிமுறைகளை சொல்லும் இடத்தில், அறம் கற்றறிந்த நல்லோர் கூடி அதனைச் செய்ய கோருகிறது. அறம் எனும் தர்மம் எது என்பது திருக்குறளிலிருந்து பாரதம் என்று பல புத்தகங்களில் வலியுறுத்தப்படுவது, ‘மக்களின் செழுமையான நல்வாழ்வுக்கு எது வழியோ அது ‘ என்று இயம்பப்படுகிறது.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்கள் பார்வையிலும் ஒரு சமூகத்தின் கலாச்சார பரிமாணங்களை பார்க்க முடியும். எந்த சமூக விதிகள் அந்த சமூகம் தொடர்ந்து நீடித்திருக்க உதவுகின்றனவோ அவை தங்கும். எந்த சமூக விதிகள், ஒழுங்குகள் அந்த சமூகத்தை அழிக்கின்றனவோ. அந்த சமூகத்தோடு அவையும் அழியும்.

இன்றைய சமூக விதிகள் பரிணாமத்தின்பால் நம்மிடம் வந்தவை. அவைகள் நம்மிடம் இருக்க சமூக ரீதியான, வரலாறு ரீதியான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை இன்றைய கலாச்சார புரட்சியாளர்களோ, அல்லது கலாச்சார காவலர்களோ முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. வெற்று கோஷங்களாலும், பண்டைய வாழ்வின் மீதான பாசங்களாலும், தனிமனித ஆர்வங்களாலும் நிலைப்பாடு எடுக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இன்று நிலைப்பாடுகள் எடுப்பதையும் பரிணாம இயங்கியலின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன்.

உதாரணம் மூலம் விளக்க முயல்கிறேன்.

ஒருவன் ‘பரந்த மனதுடையவனாக ‘ தன்னுடைய மனைவியை சுதந்திரமாக அனுப்பி யாரிடமிருந்து வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள் என்று அனுப்புகிறான்.

மற்றவன், ‘குறுகிய மனதுடையவனாக ‘ தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.

யாருடைய சந்ததி வாழும் ? எவன் ‘குறுகிய மனதுடையவனாக ‘ இருக்கிறானோ அவனது சந்ததிதான் வாழும். ‘பரந்த மனது ‘ ஜீன் அவனோடு அழிந்துவிடும். அடுத்த தலைமுறையில் ‘குறுகிய மனதுடையவர்களின் ‘ கூட்டமே அதிகரித்திருக்கும்.

மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.

இது நம்மிடம் இன்னும் இல்லை ? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள் ? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன. சமூகத்தின் விதிகளுக்கும் ஜீன்களின் கட்டளைகளுக்கும் நடுவே சிக்கி, ஒரு சிலர் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.

ஜீன் செய் என்று சொல்லும் விஷயங்களை ஏன் சமூகம் செய்யாதே என்று சொல்கிறது ? ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து. ஆனால், மனிதர்கள் சமூகம் என்று இணையும்போது, அந்த சமூக விதிகள் நமக்கு மற்றொரு வகையில் உதவுகின்றன. உழைப்பு பங்கீடு, ஒன்றுபட்ட சமூகம் ஆகியவை நமக்கு நம் சந்ததிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட உழைப்பு பங்கீடு, ஒன்று பட்ட சமூகம் ஆகிய கோரிக்கைகள் நம்மை ஒரு சில சமூக விதிகளை ஒப்புக்கொள்ள கோருகின்றன. தனியொரு மனிதனாக இருக்கும்போது உன் ஜீன் கோரிய படி நடந்தது போல இப்போது நடக்க முடியாது.

கட்டற்ற பாலுறவு வேட்கை, அடுத்தவனை கொலை செய்தாவது தன் வாழ்வுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வது ஆகியவை விலங்காக இருக்கும்போது உயிர்கள் தங்கள் சந்ததியை அதிகரிக்க உதவியிருக்கும். ஆனால், அதே விதிகளை ஏற்றுக்கொள்வது சமூக விலங்காக ஆகும்போது அந்த சமூகத்தை குலைத்துவிடுகின்றன. ஆகவே புதிய சமூக விதிகள், கடமைகளையும் உரிமைகளையும் தனித்தனியே பங்கிடுகின்றன.

எப்படிவேண்டுமானாலும் தனது ஜீன்-தொகுப்பை அடுத்த சந்ததிக்கு அனுப்பி வைக்கலாம் என்பது விலங்கின ஒழுங்கு.

அதன் பல்வேறு கூறுகள் நிச்சயம் மனிதர்களிடம் இருக்கின்றன. அவற்றை ஒதுக்கிவிடுவது நமக்கே நாம் எழுதும் மரண சாசனம்.

சமூக விலங்காக மனிதன் ஆகும்போது, மனிதனுக்கு தன் சந்ததியை பாதுகாப்பாக எதிர்காலத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே சமூகங்களின் தோற்ற காலத்தில் பல்வேறு முறைகள் இருந்திருக்கின்றன. சமூகத்தின் உற்பத்தி வழிமுறைகளும், உணவு கிடைக்கும் சூழலும் மாற மாற சமூக விதிமுறைகளும் மாறிக்கொண்டே போகின்றன.

கால் பார்க்கக்கூடாது, தன்னுடைய உடலை தானே பார்க்ககூடாது என்ற அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாகவும் சனாதனமாகவும் இருந்த ஐரோப்பா, உணவும் இருப்பிடமும், சமூக செல்வமும் அதிகரித்துவிட்டபின்னர் உடலுக்கு கொடுத்துவந்த புனித உணர்வையும், பாவ உணர்வையும் ஒரு சேர இழந்தது.

ஆண்களால் மட்டுமே முடிகின்ற உடலுழைப்பு தேவைப்படும்போது, ஆண் தனது உடலுழைப்புக்கு ஈடாக பெண்ணின் சந்ததி முழுவதும் தனதாக மட்டுமே இருக்க வேண்டுமென்று கேட்கிறான். ‘ஆணாதிக்கம் ‘ என்று இன்று அழைக்கப்படும் பல்வேறு கலாச்சார கூறுகளுக்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. இதுவே பல கணவர் முறை மறைந்து பலதார முறை மத- சமூக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.

பெண்ணால் தனக்குத் தானே சம்பாதித்து உணவு சேர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை வரும்போது, ஆணின் இருப்பு தேவையற்றதாக ஆகிறது. வன்முறையிலிருந்தோ, மற்ற ஆண்களின் பாலுறவு வேட்கையிலிருந்தோ ஒரு பெண் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாம், அல்லது சமூகம் காப்பாற்றுகிறது என்பதும், தனக்குத்தானே உணவு சேர்த்துக்கொள்ளலாம், தன் சந்ததிக்கும் உணவை சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலை வரும்போது ஆணின் இருப்பை அநாவசியமானதாக ஆகிறது.

இங்கு ஆணாதிக்க கூறுகளின் வலு குறைய ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெண் வேலைக்குப் போகலாம், பெண்ணுக்கு ஓட்டு போன்றவைகளுக்கு எதிர்ப்பு வந்ததன் அடிப்படையாக பல மத-சமூக பிற்போக்காளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் பெண்ணுக்கு ஆண் துணை தேவையிருக்காது என்பது பேசப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.

அறிவியல் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆண் துணையில்லாமலேயே பெண் இன்னொரு பெண்ணின் மரபணு கூறுகளோடு தனது மரபணு கூறுகளை இணைத்து இன்னொரு பெண்ணை பிறக்க வைக்க முடியும் என்று வரப்போகிறது. அப்போது பரிமாணவியலின் பார்வையில் ஆணே தேவையற்றவன். Man will be extinct. (ஆனால், அந்த அறிவியல் கொடுத்த உபகரணங்களை மட்டுமே நம்பி ஆணை extinct பண்ணிய பின்னால், அந்த உபகரணங்களின் உற்பத்தி எந்த காரணத்தினாலோ தடைப்பட்டால், மனித இனமே காலி)

ஆனால், இன்று அந்த நிலை வந்துவிடவில்லை. இன்று பெரியாரின் பல்வேறு சமூக ‘புரட்சிகளில் ‘ எந்த புரட்சியை மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று பார்த்தாலே நமக்கு பரிணாமம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரியும். பெண் ஏன் அடிமையானாள் என்ற கட்டுரையை படித்து எல்லோரும் தங்கள் பெண்களை கட்டற்ற வாழ்வு வாழ தூண்டவில்லை. திருமணம் செய்விக்காமல் இல்லை. ஆனால், தங்கள் வாழ்க்கை வசதியின் முன்னேற்றத்துக்கு பிராம்மண எதிர்ப்பு தேவை என்று ஒரு இனத்துவேஷத்தை எடுத்துக்கொண்டார்கள். பார்ப்பனிய விழுமியங்கள் என்று பெரியார் தூற்றிய அத்தனை சமூக விழுமியங்களையும் (இவை பார்ப்பனிய விழுமியங்கள் அல்ல) அரவணைத்துக்கொண்டு, பார்ப்பன ஜாதி வெறுப்பை மட்டுமே முன்னெடுத்து பெரியாரின் வாரிசுகளாக அறிவித்துக்கொண்டார்கள்.

கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் ஒரே ஆட்கள்தான். முன் பக்கம் ஒரு ஆள், பின்பக்கம் மற்றொரு ஆள். ஒரே நாணயத்தின் பிரிக்கமுடியாத இரு பக்கங்கள்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்