உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

K ரவி ஸ்ரீநிவாஸ்


அரசு உதவி பெறாத் தனியார் கல்லூரிகள்/உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம், இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கொடுத்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது(1). முந்தைய தீர்ப்புகளில் (T.M.A Pai Foundation V. State of Karnatka (2002) 8 SCC 481, Islamic Academy of Education &Anr.V. State of Karnataka & Ors. 2003 6 SCC 697 ) கூறப்பட்டவைகளுக்கு விளக்கம் தரும் இத்தீர்ப்பு தனியார் கல்வியின் மீதான அரசின் உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. இது ஒரு விரிவான அலசலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தீர்ப்பு. இத்தீர்ப்புடன் உச்சநீதிமன்றத்தின் வேறு சில தீர்ப்புகளையும் , குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் தலித்களில் உட்பிரிவு ரீதியாக இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு, சேர்த்து படித்தால் நீதிபதிகளின் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். (2)

தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவதை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புபடுத்தியிருக்கும் இத்தீர்ப்பு அரசு மாணவர் சேர்க்கையில் எந்த அளவு தலையிடமுடியும் என்பதை தெளிவாக்கியிருக்கிறது. .அரசு நிர்வாகங்களிடம் தான் நிரப்புவதெற்கென்று ஒரு இடத்தைக் கூட இதன் கோரமுடியாது.மாணவர் சேர்க்கை குறித்தும், கல்விக்கட்டணம் குறித்தும் குழுக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தலாம். ஆனால் குழுக்களின் பணி குறித்தும் இத்தீர்ப்பும், பிற தீர்ப்புகளும் வரையரைகளைக் குறிப்பிட்டுள்ளன. இக்குழுக்களின் பரிந்துரைகளை எதிர்த்து நிர்வாகங்கள் முறையீடு செய்ய முடியும். அரசின் உரிமைகளைக் குறுக்கி, நிர்வாகங்களின் உரிமைகளை அங்கீகரித்திருக்கும் இத்தீர்ப்பு கல்வி இன்னும் அதிகமாக வணிகமயமாவதற்கு உதவும்.

இதுநாள் வரை கல்வியில் தனியார் மயம் குறித்து கவலைப்படாமல் இட ஒதுக்கீடு என்பதை வைத்து அரசியல் நடத்தியவர்களுக்கு இத்தீர்ப்பு பல சங்கடங்களைத் தோற்றுவித்துள்ளது. இப்போது கூக்குரல் எழுப்பும் கட்சிகள் இதற்கு முந்தைய தீர்ப்புகள் வெளியான போதே மத்திய அரசு ஒரு சட்டம் மூலம் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரி அதை சாதித்திருக்க வேண்டும். முந்தைய தீர்ப்பு(கள்) வந்த போது ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகள் (பா.ம.க, தி.மு.க, ம.தி.மு.க) அக்கறை காட்டி ஒரு சட்டத்தினை நிறைவேற்றியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது குறைந்தபட்சம் அரசு சட்டத்தின் கீழ் நாடெங்கும் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியுள்ளது என்ற வாதத்தினையாவது முன் வைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இப்போது கூக்குரலிட்டு பயனில்லை. 2002 ல் கூறப்பட்ட தீர்ப்பிலேயே இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தன் கருத்துக்களை கூறியிருக்கிறது . அப்போதெல்லாம் இது குறித்து விவாதிக்காமல், இப்போது சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுவது வேடிக்கை. ஆனால் இது போன்ற ஒன்றை நான் எதிர்பார்த்தேன்.

கடந்த ஆண்டி டிசம்பர் 1ம் தேதி என் வலைப்பதிவில் நான் இட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ?

பா.ம.க தலைவர ராமதாஸ் இட ஒதுக்கிட்டிற்கு ஆபத்து என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில்உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புகள் பொறியியல் கல்லூரிகள் உட்பட தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் எந்த அளவு தலையிட முடியும் என்பதை தெளிவு படுத்தியுள்ளன. இருப்பினும் இதில் குழப்பம் நிலவுகிறது, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில். இந்த தீர்ப்புகள் வெளிவந்த போது மத்தியில் அரசாண்ட தே.ஜ.கூ வில் உறுப்பினராக இருந்த பா.ம.க இத்தீர்ப்புகளின் விளைவு குறித்து கவலைப்பட்டதாகவோ அல்லது இட ஒதுக்கீட்டிற்கு இடையூறு வரா வண்ணம் அரசுஎன்ன செய்ய வேண்டுமென்பது குறித்து அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. பா.ம.க மட்டுமல்ல பிறகட்சிகள், இடதுசாரிகட்சிகள் நீங்கலாக, கல்வியில் தனியார்மயத்தினை ஒரு பிரச்சினையாகவே கருதியதில்லை. பா.ம.க, தி.க அவ்வப்போது இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று அறிக்கை விடுவார்கள், கூட்டம், மாநாடு நடத்துவார்கள்.இவர்கள் யாரும் உயர்கல்வியில் தனியார்மயத்தின் விளைவுகள் குறித்து அக்கறை காட்டியதில்லை. இடதுசாரிகள் ஒரளவிற்கு இதில் அக்கறை காட்டியதுடன், கேரளாவில் ஆட்சியில் இருக்கும் வரை தனியார்மயத்தினை எதிர்த்தே செயல்பட்டனர்.

உச்ச நீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் வழக்கில் கொடுத்த தீர்ப்பினை நிராகரித்து கொடுத்த தீர்ப்பில்தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு தலையீடு குறித்து சிலவற்றை தெளிவுபடுத்தியது.

அது போல்சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் பங்கு எது என்பதையும்தெளிவுபடுத்தியது. இப்போது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலைப்பாடு உச்ச நீதிமன்றம்கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே உள்ளது. மேலும் அரசு நிதி உதவி அல்லது மான்யம் அல்லது வேறு உதவி தராத போது முழுக்க முழுக்க தனியார் முதலீட்டில் நிறுவப்படும் கல்வி நிலையங்கள் பிற வணிக,தொழிற்சாலைகள் போன்றவைதான். மாணவர் சேர்க்கை, பல்கலைகழக அங்கீகாரம் போன்றவை குறித்து அரசு சில விதிகளை வகுக்ககலாம். ஆனால் இட ஒதுக்கீட்டினை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என்று வலியுறுத்த முடியாது.

எனவே ராமதாஸ் இப்படி கூறியிருப்பது இன்னொரு அரசியல் ஸ்டண்ட் என்றுதான் சொல்வேன்.

இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பு ஏற்கனவே கூறப்பட்டுள்ள தீர்ப்புகள் குறித்து சில தெளிவுகளைத் தருகிறது. இதில் உள்ள பல கருத்துக்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளவை. இத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள், குழப்பங்கள் காரணமாக ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பினை இப்போது கொடுத்துள்ளது. நானும் கிட்டதட்ட இத்தகைய தீர்ப்பினைத்தான் எதிர்பார்த்தேன். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றால், அதற்கான அடிப்படை முந்தைய தீர்ப்புகளில் இருக்கிறது. இதுதான் உண்மை. இருப்பினும் இன்னும் விடை காண வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டு துவங்கும் முன் இவற்றில் முக்கியமானவற்றிற்கு தீர்வு காணப்படுமானால் தேவையற்ற குழப்பங்கள்

தவிர்க்கப்படலாம்.

இந்த தீர்ப்பின்படி மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு குறித்த ஒரு புரிதலுக்கு ஒரு உதாரணம் தரலாம். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 70,000 மாணவர்களைச் சேர்க்க முடியும் என்றால் அரசு கல்லூரிகள், அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்ய இயலும் கல்லூரிகள் போன்றவற்றில் 7,000 இடங்கள் இருக்கின்றன என்று கொண்டால் . இத்தீர்ப்பின்படி 63,000 (அதாவது 70,000 – 7000) இடங்களில் அரசு எந்த இட ஒதுக்கீட்டினையும் செய்ய முடியாது. 7,000 இடங்களில் அரசு இட ஒதுக்கீட்டினை செய்யலாம். இதுவும் உச்சநீதி மன்றம் 69% இட ஒதுக்கீடு குறித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில்தான் செய்ய முடியும். 63,000 இடங்களை நிரப்ப தனியார் கல்லூரி நிர்வாகங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீட்டினையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மாணவர் சேர்க்கையில் தகுதிக்கு முதலிடம் தரத்தக்க வகையில் நுழைவுத்தேர்வு அல்லது வேறுவிதங்களில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

இத்தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் பெரிதாக பயன் இராது. ஏனெனில் 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பினை தெளிவுபடுத்தியிருக்கும் இந்த தீர்ப்பு ஏகமனதாகக் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி உட்பட ஏழு பேர் கொண்ட பெஞ்ச் தந்துள்ள தீர்ப்பு. மேல்முறையீட்டில் இதற்கு நேர்மாறான தீர்ப்பு வர வாய்ப்பே இல்லை என்று கூறலாம். மேல் முறையீட்டில் இன்னும் சில அம்சங்கள் தெளிவுபடுத்தப்படலாம், ஆனால் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அப்படியே நீடிக்கும் என்றே கருதுகிறேன்.

மத்திய அரசு இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை குறித்து ஒரு புதிய ஒருங்கிணைந்த சட்டத்தினைக் கொண்டு வரலாம். ஆனால் அதுவும் நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்கின் மூலம் கேள்விக்குட்படுத்தப்படலாம். அப்போது இட ஒதுக்கீட்டினை நீதிமன்றம் ஏற்கும் என்று உத்தரவாதமில்லை.இத்தீர்ப்பு சில வரைநெறிகளை முன் வைத்துள்ளது. அதற்கு முரணாக இருக்கும் சட்டப்பிரிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.. மாறாக இத்தீர்ப்பினை வழிகாட்டியாகக் கொண்டு மாணவர் சேர்க்கை குறித்து அரசு சட்டம் இயற்ற முடியும், ஆனால் அதில் இட ஒதுக்கீட்டிற்கு இடமிருக்க முடியாது. அப்படியே இடம் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தினை அமுல் செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கினை விசாரிக்கலாம். எனவே இட ஒதுக்கீட்டினை சட்டம் மூலம் எந்த அளவு பாதுகாக்க முடியும் என்பது கேள்விக்குறிதான். அது போல் ஒரு சட்டம் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு அப்பாற்பட்டது என்ற பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஏனெனில் அப்படிச் செய்வதையே கேள்விக்குள்ளக்க முடியும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிலவற்றை

தெளிவுபடுத்தும் போது அரசு அதில் உள்ளவற்றிற்கு முரணாக தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும் சட்டத்தினைக் கொண்டு வந்து அதை நீதிமன்றங்களின் பரீசலனைக்கு

அப்பாற்பட்டது என்று செய்ய முனைந்தால் அதை உச்ச நீதி மன்றத்தின் முன் கேள்விக்குட்படுத்த முடியும்.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து பலவேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசு ஒரு சட்டத்தினை கொண்டு வர முயல்கிறது. இத்தீர்ப்பு, அதில் கூறப்பட்டுள்ள சில

கருத்துக்கள், மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எழுதும் எண்ணமுண்டு. (இப்போது எழுத இயலாது.) உதாரணமாக இத்தீர்ப்பு உன்னி கிருஷ்ணன் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பினை நிராகரித்து, அதில் ஆரம்பக் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதை மட்டும் ஏற்கிறது. அதே சமயம் உயர்கல்வியைப் பொறுத்த வரை இத்தீர்ப்பில் It is well established all over the world that those who seek professional education must pay for it என்று கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றால் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களால் கட்டணம் கட்ட இயலாது என்றால் அவர்கள் அத்தகைய கல்வியை தகுதி அற்றவர்கள் என்றால் அவர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இத்தீர்ப்பின் படி ஆரம்பக்கல்வியைத்தான் அடிப்படை உரிமை என்று கோர முடியும். அப்படியானால் அரசிற்கு ஏழைகள் உயர் கல்வி பெறுவதில் என்ன பங்கு அல்லது பொறுப்பருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். அரசு எந்த அளவிற்கு இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு உதவுவதில் கல்வி நிறுவனங்களுக்கு என்ன பங்கிருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும். இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை எழுப்பும் போது உயர் கல்வியில் அரசின் பங்கு, மான்யம் போன்றவை குறித்தும் கேள்விகள் எழும். கடந்த காலத்திலும், இப்போதும் அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகைகள் போதுமானவையா ? ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்றால் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்றக் குறிக்கோள் எப்போது நிறைவேறும். அரசு ஆரம்பக் கல்வி, பள்ளிக்க்கல்வியில் மட்டும் அதிக கவனம் செலுத்தி உயர்கல்வியில் தொழில் நுட்ப, தொழில்சார்ந்த கல்வியை பெருமளவுக்கு தனியார்,சந்தைச் சக்திகள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா, அப்படி விட்டுவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன-

இப்படி பலவற்றை விவாதிக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. இட ஒதுக்கீடு குறித்து கூச்சல்கள் இருக்கின்றன. எழுப்பபட வேண்டிய கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

உயர்கல்வி அடிப்படை உரிமை இல்லையா, இந்தியா போன்ற சமூகங்களில் அதை ஏழைக்களுக்கு கிடைக்கச் செய்வது அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டாமா என்பதை விவாதிப்பதற்குப் பதிலாக தீர்ப்பில் இட ஒதுக்கீடு குறித்து கூறப்பட்டுள்ளதே முக்கியத்துவம் பெறுகிறது. இடஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியாக குறுக்கப்பட்டதன் விளைவு இது. ஆனால் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை பொருளாதார ரீதியாக பிற்பட்டோருக்கு எதிரானதாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அரசுகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை மேலும் இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினால் யார் அதிகம் பலன் பெறுகிறார்கள், உண்மையிலேயே பிற்பட்டவர்கள் இதனால் பெரும் பயனடைகிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை இடதுசாரிகள் கூட முன் வைப்பதில்லை. உண்மையிலேயே இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுதான், ஒட்டு வங்கி அரசியலில் காமதேனுதான்.

உயர் கல்வியில் இன்று அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் குறைவு, தனியார் நடத்தும் கல்வி நிலையங்களில் இருக்கும் இடங்கள் அதிகம். மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். capitation fee போன்றவை தடுக்கப்பட வேண்டும். ஏழை என்பதாலேயே தகுதி உடைய மாணவர்கள், மாணவிகளுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாக

இருக்கக் கூடாது. உயர் கல்வி வணிக நோக்கில் மட்டும் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி, இட ஒதுக்கீடு அல்ல.

இக்கருத்தினை முன் வைத்து கட்சிகள் பேசுவதில்லை, இட ஒதுக்கீட்டினை மட்டுமே பெரிய பிரச்சினையாகச் சித்தரிக்கின்றனர். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இவ்விஷயத்தில் ஒரு முழுமையான கண்ணோட்டம் வேண்டும். இட ஒதுக்கீடு உறுதிச் செய்யப்பட்டாலும் பிற பிரச்சினைகள் நீடிக்கும். அவை ஏற்கனவே இருந்தவைதான். அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் இட

ஒதுக்கீட்டிற்கு மட்டும் வழி செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. மத்திய மாநில அரசுகளும், கட்சிகளும் உச்ச நீதி மன்றம் தீர்ப்புக் கூறுமுன்னரே

1990களிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாண முயன்றிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதைப் பற்றி இப்போது பேசி பயனில்லை என்றாலும் இப்போதும் பிரச்சினையை

முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு என்ற ஒன்றே பிரதானப்படுத்தப்படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்ப்படப் போவதில்லை. 69% இட ஒதுக்கீடு குறித்த இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

என்னுடைய கருத்து என்னவெனில் இட ஒதுக்கீட்டினை அரசு கோருவதற்குப் பதிலாக தனியார் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி பெற உதவும் திட்டங்களை வகுக்கலாம். கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கலாம். இது போன்ற பலவற்றைச் செய்யல்லாம். உதாரணமாக தகுதி அடிப்படையில் அரசு தனியார் உயர் கல்வி நிலையங்களில் உள்ள பொருளாதார ரீதியாக வறிய நிலையில் கல்விக்கட்டணங்கள் செலுத்த இயலாத நிலையில்,இதர செலவுகளை ஏற்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களில்

20% – 25% த்தினருக்கான செலவினை முழுமையாக ஏற்கலாம்

25% த்தினருக்கு ஆகும் செலவில் 50% முதல் 70% வரை அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மான்யமாகவும் ,

மீதியை திருப்பிததர வேண்டிய கடனாகவும் தரலாம்

50% த்தினருக்கு 40% முதல் 50% த்தினை மானியமாகத் தரலாம், மீதி 60% முதல் 50% த்தினை அவர்கள் வங்கிக் கடன் மூலம் பெற உதவலாம் அல்லது அரசே

திருப்பித்தர வேண்டிய கடனாகத் தரலாம்.

இங்கு ஜாதி,மதப் பாகுபாடுகள் காட்டப்படக்கூடாது.பொருளாதார நிலையே முக்கியத்துவம் பெற வேண்டும். இது போன்றவற்றை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால்

உயர்கல்வியில் அரசு செலவிடும் தொகையில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரவீன் ஜா எழுதுகிறார்

‘ Compression of public expenditure on higher education has been quite sharp, if we look at the trend in per student expenditure, from the early 1990s onwards, at constant

(1993-94) prices the magnitude of decline between 1990-91 and 2001-02 was almost 25% and such a drastic fall has affected almost every aspect of the educational

infrastructure. ‘ (3)

அரசுகள் பணம் செலவழிக்க விரும்பாமால் இட ஒதுக்கீடு என்பதை முன் வைக்கின்றன. இந்த மோசடியைப் மக்கள் புரிந்து கொள்ளா வண்ணம் அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள சில உண்மைகளை அறிய வேண்டும், அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் தொகை போதுமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். ஜாவின் கட்டுரை சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. உயர்கல்வியில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை விவாதிக்காமல் இட ஒதுக்கீட்டினை மட்டும் முன் வைப்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒருபுறம் தனியார் கல்வி நிலையங்களைத் துவங்க அனுமதித்துவிட்டு அவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும், capitation fee போன்றவற்றைத் தடுக்கவும் போதுமான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாததால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளே முக்கிய வழி காட்டும் நெறிகளாக இருக்கின்ற நிலை, இன்னொரு புறம் உயர்கல்வியில் அரசு போதுமான முதலீட்டினை செய்யாதது. இதன் விளைவாக உயர்கல்வியில் தனியாரே தீர்மானகரமான சக்திகள் என்ற நிலை உருவாவது. இதற்கு யார் பொறுப்பு. அரசுகள் தங்கள் கடமைகளை செய்தனவா. உச்ச நீதிமன்ற பெஞ்ச கூறுகிறது

It is for the Central Government, or for the State Governments, in the absence of a Central legislation, to come out with a detailed well thought out legislation on the subject. Such a legislation is long awaited. States must act towards this direction. Judicial wing of the State is called upon to act when the other two wings, the Legislature and the Executive, do not act. ( emphasis added)

உயர் கல்வியில், குறிப்பாக தொழில் நுட்ப, மருத்துவக் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும், அரசு நிதி உதவி பெறாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது 1980களில் மத்தியில் துவங்கியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பபின்னும் இவற்றில் மாணவர் சேர்க்கை, கட்டணம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த அகில இந்திய அளவில் ஒரு சட்டம் இல்லை, பல மாநிலங்களில் சட்டங்கள் இல்லை, மாறாக உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படியில் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன, விதிகள் வகுக்கப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ஏன் இருபதாண்டுகளுக்குப் பின்னும் ஒரு தெளிவான நடைமுறைப் படுத்தக்தக்க கொள்கையோ அல்லது சட்டங்கள், விதிகள் இல்லை. இத்தகைய நிலைக்கு யார் பொறுப்பு. உண்மை கசப்பானது, இதை மூடி மறைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. கனம் கோர்ட்டார் அவர்களே என்று கேட்கும் முன் கேட்க்கப்பட வேண்டிய கேள்விகள் பல. (4) இவற்றைக் கேட்காமாலும், பிரச்சினையின் பல பரிமாணங்களைக் புரிந்து கொள்ளாமலும் நீதி மன்றத் தீர்ப்பு ஏதோ சமூக நீதிக்கு எதிரானது என்று பேசுவதும், எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மையை விளக்கி எழுத வேண்டிய அறிவு ஜீவிகளும் கூட இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

அரசின் இட ஒதுக்கீட்டினை எதிர்க்கும் தனியார் கல்வி நிலையங்களில் மிகப் பெரும்பான்மையானவை சிறுபான்மையோர் மற்றும் பிறபடுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருப்பவர்கள் அல்லது ஜாதி சங்கங்கள் அல்லது மத அமைப்புகள் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள், அறக்கட்டளைகள் நடத்துபவை. இவற்றை எதிர்த்து அரசியல் கட்சிகள் எதுவும் பேசுவதில்லை. ஏன் நீங்கள் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. யார் வழக்குத் தொடந்தது, யார் இட ஒதுக்கீடு கூடாது, மாணவர் சேர்க்கையை நாங்களே தீர்மானிக்கும் முழு உரிமை வேண்டும் என்று வாதிட்டது. ஏன் இந்தக் கல்வி நிலையங்களின் நிர்வாகங்களை அரசியல் கட்சிகள் கண்டிக்காமல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது என்று பேசுகின்றன. உண்மை என்ன – சிறுபான்மையோர், பிற்படுத்தப்படுத்தோர் என்ற ஒட்டு வங்கியைய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவற்றில் கல்வி நிலையங்கள் நடத்துவோரை நேரடியாக விமர்சிக்கக் கூடாது அதே சமயம் சமூக நீதி என்றப் போலிக்கண்ணீரும் வடிக்க வேண்டும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு ஆபத்தானது என்ற பிரச்சாரத்தினை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

அரசு நிதி உதவி 100% இருந்தாலும் சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசு அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு தீர்மானிக்க முடியாது. ஆசிரியர் நியமனம் போன்றவற்றில்

அரசு அங்கு செலுத்தக்கூடிய அதிகாரம் குறைவானது, பலவற்றில் அரசுக்கு அதிகாரமே இல்லை என்றுதான் கூற வேண்டும். நிலைமை இப்படி இருக்க அரசு நிதி உதவி அல்லது வேறு உதவி

பெறாத கல்வி நிறுவனங்களில் அரசு எப்படி தனக்கென்று மாணவர் சேர்க்கையில் இத்தனை சதவீதம் வேண்டும், இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவேன், அதை

அவை ஏற்க வேண்டும் என்று ஒரு உரிமையைக் கோர முடியும். சட்ட ரீதியாக இக்கோரிக்கைக்கு அடிப்படை இல்லை. இத்தீர்ப்பு இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. அப்படி ஒரு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட அரசியல் சட்டத்தில் அதற்கு இடமளிக்கும் விதிகளும் இல்லை. இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது, ஆனால் அந்த அங்கீகாரம் வரையறைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை ஒரு அடிப்படை உரிமையாகக் கோர முடியாது, அவ்வாறு கோர அரசியல் சட்டத்தில் இடமில்லை.

எனவே இத்தீர்ப்பு குறித்த பல கருத்துக்கள் போதுமான புரிதல் இன்றி வெறும் உணர்ச்சி பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பது என் கருத்து.

சில உண்மைகள் கசப்பானவை. அவற்றை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பதாலேயே அவை இல்லாதவை என்று ஆகி விடாது. இட ஒதுக்கீடு மட்டுமே தகுதியானவர் அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்து விடாது. இட ஒதுக்கீடு ஒரு பரந்த குறிக்கோளினை நிறைவேற்ற பயன்படுததக்கூடிய ஒரு கருவி அல்லது வழி. அதுவே போதும் என்றோ அல்லது அது இருந்தால் அக்குறிக்கோள் நிறைவேறிவிடும் என்றோ கருதிவிட முடியாது. இட ஒதுக்கீட்டினை அனுபவிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிட்டு உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோர் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அது போல் குடும்பச் சூழல், வறுமைக் காரணமாக உயர் நிலைப்பள்ளிக்கு மேல் தொடர முடியாமல் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவதில்லை.

இவர்களின் பிரச்சினைகளுக்கு இட ஒதுக்கீடு எப்படித் தீர்வாகும். இங்கு தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுபவர்களும் இருக்கிறார்கள், பயன் பெறாதவர்களும்

இருக்கிறார்கள். இது தவிர இட ஒதுக்கீட்டின் கீழ் வராத ஏழைகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதி என்பதாக சித்தரிப்பது மோசடியன்றி

வேறென்ன. இதில் உச்ச நீதிமன்றம் முன் வைத்த creamy layer என்பதை ஏற்காத அரசியல் கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு

கோருகின்றன. பிற்படுத்தப்படுத்தவர்களில் பணக்காரர்கள், முன்னேறியவர்கள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது, அனைவருக்கும் சலுகை வேண்டும் என்றால், பெண்களில் மட்டும் ஏன்

பாகுபாடு காட்ட வேண்டும், அனைத்துப் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும். இது போன்ற கேள்விகளை ‘பகுத்தறிவாளர்கள் ‘ கேட்பதில்லை,

பிறர் கேட்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு என்ற சொல்லாடலை கட்டுடைக்காத வரை, அதற்கு ஜே என்று கோஷம் எழுப்பும் வரை

நீங்கள் முற்போக்கானவர், கட்டுடைத்தால் நீங்கள் பிற்போக்காளர் என்று முத்திரைக் குத்தப்படுவீர்கள் என்ற நிலைதான் இங்கு இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்த

பல கருத்துக்கள் ஏன் இட ஒதுக்கீட்டினை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்பதற்கான விடையை இப்போது கண்டுபிடிப்பது எளிது.

இத்தீர்ப்பினை அரசுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , இட ஒதுக்கீடு என்பதை மட்டும் உறுதி செய்ய

முய்ன்றுவிட்டு பிறவற்றில் அரசுகள் போதுமான அக்கறை காட்டாமல் தங்கள் கடமையைச் செய்து விட்டோம் என்ற நிலையை ஏற்படுத்த முயலும். ஆனால் தீர்வு காண்பது அவ்வளவு

எளிதல்ல.

1, http://www.hindu.com/thehindu/nic/scorder.htm

2, Justice for Dalits among Dalits : All the Ghosts Resurface – K.Balagopal – EPW- July 16,2005 www.epw.org.in

3, Withering Committments and Weakening Progress : State and Education in the Ear of Neoliberal Reforms – Praveen Jha-

EPW August 13 2005 www.epw.org.in

—-

ravisrinivas@rediffmail.com

Series Navigation