இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

அமெரிக்க உளவுத் துறை


(அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 9 , 1971-ல் அமெரிக்க உளவுத்துறை அனுப்பிய கடிதம் இது .)

1. டிசம்பர் 7, 1971 தேதியிட்ட உளவுத்துறை அறிக்கை – நம்பகமான வட்டாரங்களிலிருந்து பெற்றது – இந்திரா காந்தியின் யுத்தத்தின் நோக்கங்களாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது.

அ. வங்கதேசத்தின் விடுதலை

ஆ. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது

இ. பாகிஸ்தானின் காலாட்படையையும், விமானப்படையயும் அழிப்பது. இதனால் பாகிஸ்தான் இனிமேல் போரிட மிரட்டல் விடுக்காத நிலை ஏற்படும்.

கீழ்க்கண்ட அறிக்கையில் இந்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டால் , இந்தியத் துணைக்கண்டத்திலும், பிற சக்திகளுக்கும் என்ன பின்விளைவுகள் ஏற்படும் எனப்து பற்றி விவாதிக்கிறோம்.

போருக்குப் பிந்திய பொதுவான நிலைகள் :

2. இந்தியா துணைக்கண்டத்தில் மேலாண்மை கொண்ட சக்தியாக விளங்கும். ஆனால் அதன் பொருளாதாரப் பிரசினைகள் யுத்தத்தினால் பெருகும். இதனால் வெளி நாட்டு உதவியை நாடவேண்டிய அவசியம் ஏற்படும். பாகிஸ்தானின் ராணுவ பலம் சிதைவுற்று கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் பிரசினைகள் இந்தியாவிற்கும் பரவும்.

3. வங்கதேசம் இந்தியாவின் குடைக்கீழ் வரும். இந்தியா செல்வாக்குச் செலுத்த எண்ணுகிறது. ஆனால் முழு அதிகாரத்தையும் வங்கதேசம் மீது செலுத்த இந்தியா விரும்பவில்லை. ஏழ்மையும், ஜனத்தொகைப் பெருக்கமும், ஏற்கனவே வங்கதேசத்தின் பிரசினைகள். யுத்தத்தினால் பொருளாதார, சமூகப் பிரசினைகள் பெருகும். இந்தியாவின் இந்து பெரும்பான்மை மேற்கு வங்கத்தில் , வங்காளிகள் கொண்டுள்ள தீவிரவாதம், வன்முறை முஸ்லிம் வங்கதேசத்திலும் விரைவில் பரவும். புதிய நாட்டில் உள்ள பிரசினைகள் மேற்கு வங்கத்தின் மீதும் பிரசினைகளைச் சுமத்தும். ஆனால் வங்காளி தேசியம் இந்தியாவில் தோன்றி , மேற்கு வங்கப் பிர்வினைக்கு வழி கோலும் என்று நாம் நம்பவில்லை. இந்து-முஸ்லிம் முரண்பாடுகள் மிகத் தீவிரமாய் இன்னமும் உள்ளன. இந்திய ராணுவபலமும் இதை அனுமதிக்காது. ஆனால் இரு வங்கங்களும் புது தில்லிக்குப் பிரசினைகளை உண்டு பண்ணும்.

4. இப்போதுள்ள நிலையில் மேற்கு பாகிஸ்தானும் ஸ்திரமற்ற எதிர்காலத்தை நோக்கியுள்ளது. வெற்றிக்குப் பிறகு இந்திய ராணுவம் பின்வாங்கிவிடும் என்றாலும், இந்தப் பகுதி யுத்தத்தினால் பெரும் சேதம் அடையும். தெர்பேலா, மங்லா போன்ற கராச்சி பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையம், தொழிற்சாலைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பொறுத்து எதிர்காலப் பிரசினைகள் அமையும்.

5. இதில்லாமல், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாகவும் சிதைவுபெற வாய்ப்புள்ளது. பிராந்திய வெறுப்புகள் மண்டிய இந்தப் பகுதி , பிரசினைகள் தீவிரம் பெற்றால் மூன்று அல்லது நான்கு பகுதிகளாய்ப் பிரியும் சாத்தியம் உள்ளது. (பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், மேற்கு எல்லைப் பகுதி என்ற நான்கு பகுதிகள். பாகிஸ்தானின் ஐந்தரைக் கோடி மக்களில் 66 சதவீதம் பஞ்சாபிகள், 13 சதவீதம் சிந்திகள், 10 சதவீதம் பஷ்தூன்கள், மீதி உருது பேசும் இந்திய அகதிகள்.) இந்த நான்கு பகுதியினரில் பஞ்சாபிகள் ராணுவத்தில் பெரும்பான்மையாய் உள்ளனர். ராணுவம் வலுவிழந்தால், பிற தேசிய இனங்கள் பிரிய எண்ணலாம்.

6. பாகிஸ்தான் பிளவுபடும் என்ற இந்தக் கணிப்பு , பாகிஸ்தான் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மேற்கிலும் கிழக்கிலும் சுத்தமாய்த் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்ற அனுமானத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்திரா காந்தியின் குறிக்கோள்கள் எப்படி இருந்த போதிலும் அப்படிப்பட்ட முழுத்தோல்வியை பாகிஸ்தான் மீது இந்தியா திணிக்குமா, திணிக்கமுடியுமா என்பது சந்தேகமே. போர் நிறுத்தம் கிழக்கில் நிகழும்போது, மேற்கில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் பிளவு சக்திகளை அடக்கக்கூடும் தான். யாஹ்யாவும் அவர் கூட்டாளிகளும் ராணுவதோல்வியால் பின்னுக்குத் தள்ளப்பட்டால், வேறொருவர் அரசை வழிநடத்தக் கூடும். இது நடந்தாலும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கு பாகிஸ்தானை ஒருமிக்க வைத்திருக்கும். ஆனாலும் தீவிரவாதிகளின் அழுத்தம் புதிய அரசின் மீது இருக்கும் ஆதலால், ராணுவத்திற்கு எதிராக இந்த தீவிரவாத சக்திகள் தம்மை முன்னிறுத்தி அரசில் அதிகாரம் கோரும்.

வெளி சக்திகள்

7. இந்தியாவுடன் நல்லுறவு மூலமே தெற்காசியாவில் தன் நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்பதில் மாஸ்கோ குறியாக இருக்கிறது. சோவியத் யூனியன், புது தில்லியின் ‘பாகிஸ்தான் மீது அழுத்தம் ‘ தருகிற கொள்கையை – இந்த சச்சரவிற்கு முன்பே- ஆதரித்து வந்திருக்கிறது . ஐ நாவிலும் இந்தியாவை மிகவும் ஆதரித்திருக்கிறது. இந்த யுத்தம் நின்றவுடன் சோவியத் யூனியன் தெற்காசியாவில் மிகுந்த செல்வாக்கு உள்ள சக்தியாக முன்ன்னுக்கு வரும். இதன் பலனாக இந்தியாவும், வங்கதேசமும் சோவியத் யூனியனிடம் பொருளாதார உதவியையும், ராணுவ உதவிகளையும் கோரி நிற்கும். ஆனால் இப்படி உதவிகள் செய்தாலும் சோவியத் யூனியனின் கோரிக்கைகள் தெற்காசிய சக்திகளால் நிறைவேற்றப் படும் என்று சொல்ல முடியாது. பாகிஸ்தான் ராணுவம் வலுவிழந்துவிடின், இந்தியாவிற்கு சோவியத் யூனியன் உதவி தேவைப்படாது. இந்தியா எப்போதைக்கும் நன்றி பாராட்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

8. சோவியத்-இந்தியா நல்லுறவு இந்தியாவின் நெருக்கத்தின் அளவு, எதிர்காலத்தில் சீனாவும், அமெரிக்காவும் இந்தியாவிடம் எப்படி நஎடந்து கொள்வார்கள் என்பதைப் பொருத்தது. இந்திய- அமெரிக்க உறவு சீர்படுத்தப்படாவிடில், அமெரிக்க பொருளாதார உதவி துண்டிக்கப் பட்டால் இந்தியா சோவியத் யூனியனையே பெருமளவு நம்ப வேண்டி வரும். இது நடந்தால், சோவியத் யூனியன் கடற்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவை நம்பும். ஆனால் சீனா புதிய திருப்பங்களைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் உறவைச் சீர் செய்யத் தொடங்கினால், இந்தியா சோவியத் யூனியன் மீது தான் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலக ஒரு வாய்ப்பாக இதை வரவேற்கும்.

9. இந்தியாவின் நோக்கங்கள் நிறைவேறுவது சீனாவிற்குக் கவலை அளிக்கிற விஷயம். சீனா தன் நெடுங்கால நண்பனுக்கு (பாகிஸ்தானுக்கு ) ஆதரவாக ஈடுபாட்டுடன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், உலக நாடுகளிடையே செல்வாக்கை இழக்கும். சோவியத்துடன் தன் போட்டிக்கு நிகழ்ந்த இந்த பாதிப்பு தான் பீகிங்கை இன்னமும் கவலை கொள்ளச் செய்ய வேண்டும்.

10. ஐ நாவில் பேசும்போதும், பீகிங் வானொலியில் பேசும்போதும் இரண்டு நிலைபாடுகளை சீனா மேற்கொண்டது : சோவியத் யூனியன், இந்தியாவின் பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதலுக்கு அரண் அளித்துள்ளது, இதன் மூலம் இந்துமகாசமுத்திரத்தையும், இந்தியத் துணைக் கண்டத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கிறது. இரண்டாவதாக சோவியத் துணையுடன் இந்தியா , தற்காப்பு என்ற பெயரில் , பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கப் பட்டால், சுற்றியுள்ள மற்ற நாடுகளின் நிலையும் அஞ்சத் தக்கதே.

12. இந்த இரண்டு நிலையுமே, சோவியத் யூனியனைச் சங்கடப்படுத்த வேண்டி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள். இதன் தொடர்ச்சியாக சீனா தன்னை மூன்றாவது உலகின் ‘கொள்கைப் பிடிப்புள்ள ‘ காவலனாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. ஆனால் சீனாவின் நியாயமான பயமும் இதில் உள்ளது. சீனாவைச் ‘சுற்றி வளைக்க ‘ சோவியத் யூனியன் முயலலாம், இதனால் சீனாவைச் சுற்றிலும், தெற்காசியாவிலும், இது மகா சமுத்திரத்திலும், சோவியத் யூனியன் செல்வாக்குக் கொள்ளும் அளவிற்கு அரசியல், ராணுவ தளங்கள் உருவாகலாம் என்பது சீனாவின் கவலை.

12. இந்தியாவின் போருக்கான காரணங்களை சீனா ஒப்புக் கொண்டால் கூட சீனாவின் நீண்டகாலக் கவலைகள் இருக்கத்தான் செய்யும். சோவியத்-இந்தியா ஒத்துழைப்பைக் கட்டுப் படுத்தவும், குலைக்கவும் நீண்டகாலத் திட்டம் தீட்டியாக வேண்டிய நிலையில் சீனா இருக்கிறது. அடிப்ப்டையில் மேற்கு பாகிஸ்தானின் ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவும், இந்தியவிற்குள் உள்நாட்டு சக்திகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும், இந்தியாவை பலவீனப்படுத்துவது ஒரு நோக்கம் ஆகலாம். அல்லது சோவியத் யூனியன் இடத்தில் இந்தியாவுடன் தன்னை நிறுத்தலாம். சோவியத் யூனியனைக் காட்டிலும் சீனாவை இந்தியா தழுவிக் கொள்ள விரும்பலாம்.

13. ஆனால் சீனா தன் ஆதரவைத் தற்போது மாற்றிக்கொள்ளாது. நல்ல காலத்தில் மட்டும் நண்பனாய் இருப்பதாய்த் தன்னைப் பற்றிய பார்வை உருவாகும் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. இந்தியாவை மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறது சீனா. இந்தியாவை சீனாவுக்குப் பிடிக்கவும் இல்லை. சீன இந்திய உறவின் வளர்ச்சி இந்தியாவிற்கு வெளி உதவிகளைத் தருவதற்கு வாய்ப்பளிக்கும். இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், ராணுவ வளர்ச்சியும் உருவாகும். இது சீனாவிற்குப் பிடிக்காது. இந்தக் காரணங்களால் சீன-இந்திய உறவு சீரடைவது தாமதப்படும்.

14. பிராந்திய சக்திகளில் ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் ஈரான் இந்திய-பாகிஸ்தான் சச்சரவில் ஈடுபாடு கொண்டுள்ளது. (ஈரானின்) ஷா பாகிஸ்தானுக்கு எண்ணெய். ராணுவ தளவாடங்கள், பணம் அளிக்கக் கூடும். பாகிஸ்தானிடம் செல்வாக்குப் பெறுவதற்கு முயலலாம் என்றாலும் , உடனடியாக இதற்கு ஷா செலவழிப்பார் என்று தோன்றவில்லை. பொதுவாக பாகிஸ்தான் பிளவுபட்டால் ஈரான் இந்தப்பகுதியில் செல்வாக்கு மண்டலத்தை அதிகரிக்கும். அதனால் ஈரான் பிராந்திய அளவில் வலுமிக்க நாடாக உருவாகும் என்று ஷா எண்ணலாம்.

பரந்த பாதிப்புகள்

15. இந்தியாவின் நோக்கங்கள் நிறைவேறினால், துணைக் கண்டத்தில் பலப்பரீட்சையின் சமனிலை வேறு திசைகளில் போகும். சோவியத் துணையுடன் இது நிகழ்த்தப்பட்டதால், சோவியத் நோக்கம் நிறைவேறியது என்பதும், சோவியத் வலுவாய் உள்ளது என்பதும் இங்கு மனதில் பதிந்துபோகும். சோவியத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவின் பலவீனமாக இது எடுத்துக் கொள்ளப்பட்டு , பிராந்திய நாடுகள், அமெரிக்க-சோவியத் வலிமையைக் கணக்கில் கொண்டு, தம் உறவுகளை மறு பரிசீலனை செய்யத் தொடங்கும்.

16. இந்த எண்ணம் வெகுநாட்களுக்கு நீடிக்காது என்றாலும், சோவியத் பலம் நாளுக்கு நாள் கூடிவருகிறது என்ற எண்ணம் வலுப்பெறும். ஆனால் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள நாடுகள் இந்த நிகழ்விலிருந்து என்ன கொள்கை மறு ஆய்வு செய்து, தம் செயல்களை மாற்றிக் கொள்வது என்பது வேறு. எகிப்து சோவியத் யூனியன் எகிப்தின் சார்பாக பெரும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிச்சயம் எதிர்பார்க்காது. அப்படி கெய்ரோ எண்ணினால், சோவியத்தே அந்த எண்ணம் தவறு என்று கூறிவிடும். அமெரிக்கா வெளியேறவேண்டும் என்று எண்ணும் தெற்காசிய நாடுகள் சோவியத் யூனியனுக்குச் செவி சாய்க்கக்கூடும் என்றாலும், கொள்கையில் பெரும் மாற்றங்கள் ஏதும் இராது.

17. சோவியத்துக்கு இந்த நிகழ்வுகள் எப்படி அர்த்தப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். தன் பலம் அதிரித்துள்ளது என்று எண்ணி சோவியத் வேறு இடங்களில் தன் செல்வாக்கை அதிகரிக்க முயலலாம். ஆனால் மிக கவனமாகப் பரிசீலிக்கும் அவர்கள் இப்போதும் அதேபோல்தான் கவனம் மேற்கொள்வார்கள். பொதுவாகவே சமரசம், பேச்சுவார்த்தை என்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் அவர்கள், இப்போது அதனைக் கைவிடமாட்டார்கள். அதுவும் சீனாவுடன் சோவியத் யூனியனின் சச்சரவு இந்த யுத்தத்தினால் அதிகப்பட்டுவிட்டதால் அவர்கள் எச்சரிக்கையாய்த்தான் இருப்பார்கள்.

பின்னிணைப்பு

மேற்கு பாகிஸ்தானில் பிரிவினைக்கான சக்திகள்

1. எண்பது லட்சம் சிந்திக்கள். மேற்கு பாகிஸ்தானின் தென் பகுதியில் வசிப்பவர்கள். கராச்சி, ஹைதராபாத்தைச் சுற்றி வசிப்பவர்கள். பஞ்சாபிகளுடன் முரண்பாடு கொண்டவர்கள். இவர்கள் விடுதலை கோரலாம். மேற்கு பாகிஸ்தானின் பிரதான அரசியல் பிரமுகர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ ஒரு சிந்தி தான். 1970-ல் வெகு ஜன ஆதரவுடன் அமோகமாக வெற்றி பெற்றாலும் பஞ்சாப் ராணுவத்தினால் அரசாங்கம் அமைக்க அனுமதிக்கப் படாதவர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் சிறு தேசத்தின் தலைவர் ஆகிவிடலாம் என்ற உணர்வுடன் விடுதலை கோரலாம்.

2. வடமேற்குப் பகுதியின் மலைவாசிகள் உலக அளவில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். காபுல் எப்போதுமே பஷ்தூன்கள் எல்லோரும் இணைந்தே இருக்க வேண்டும் என்று கருதி வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான் எல்லைக் கோடு பிரிட்டிஷ் வரைந்தபோது தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றே காபுல் கருதி வந்திருக்கிறது. இந்தப் பகுதிக்கு அவர்கள் உரிமை கொண்டாடி பாகிஸ்தானுடன் பெரிய அளவில் மோதியதும் உண்டு. பாகிஸ்தான் பிளவுபடத் தொடங்கினால் ஆப்கானிஸ்தான் இந்தப் பிளவிற்கு உதவுவார்கள். வடமேற்குப் பகுதியைப் பிரித்து தம்முடன் சேர்த்துக் கொள்ள முனைவார்கள்.

3. பலூசிஸ்தானின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. தனிமைப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் தனி நாடு கேட்கவில்லை. அதனால், பஞ்சாபுடன் இணைந்து இருக்கத் தீர்மானிக்கலாம்.ஆப்கானிஸ்தான் அல்லது ஈரான் இதனைத் தன்னுடன் இணைக்கவும் முயலலாம். இதனால், கடற்கரை இல்லாத இந்த நாடுகளுக்கு கடல் வாணிபம் சாத்தியமாகலாம். இரண்டு நாடுகளிலுமே பலூச் மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

4. முஸ்லிம் பஞ்சாப் லாகூரைத் தலைநகராய்க் கொண்டு இயங்கலாம். 3 கோடி மக்கள் உள்ள நாடாக அது இருக்கும். மிகுந்த போர்ச்சேதம் இல்லையென்றால் மிக விரைவில் சாமானிய நிலைக்குத் திரும்பக்கூடும். இந்தப் பகுதியில் இந்து எதிர்ப்பும், இந்திய எதிர்ப்பும் கொழுந்து விட்டு எரியும். ஆனால் இந்திரா காந்தியின் நோக்கங்கள் நிறைவேறிவிட்டால், இந்தியாவிற்கு முஸ்லிம் பஞ்சாபினால் தொல்லை ஏதும் நிகழாது. ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்கு இருக்கும் உலக மதிப்பும் இந்த பஞ்சாபுக்கு இருக்க வழியில்லை. ஒரு வலுவற்ற சிறு நாடாகத் தான் காட்சியளிக்கும்.

****

Series Navigation

அமெரிக்க உளவுத் துறை

அமெரிக்க உளவுத் துறை