அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

ஜோதிர்லதா கிரிஜா


முன் குறிப்பு –

அண்மையில் துக்ளக் வார இதழில் ஓர் அன்பர் ‘பெண்களால் உருவாகியுள்ள ச்மூகப் பிரச்சினை’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதற்கு நாம் அனுப்பிய பதில் கட்டுரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டு, ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் துக்ளக்- இல் வெளிவந்தது. பத்திரிகைளுக்கே உரிய இடப் பற்றாக்குறை ஒருகால் அதற்குக் காரணமாக இருக்கலாம். இசகு பிசகான பகுதிகளையும் கேள்விகளையும் தவிர்ப்பதற்காக அப்பகுதிகளை நீக்கியதாக நாம் ஏன் தப்பாக நினைக்க வேண்டும் ? முழு எண்ணங்களையும் திண்ணை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, அதன் அசல் வடிவம் கீழே வருகிறது.

. . . . . . . . .

எல்லாவற்றுக்கும் பெண்கள் மீதே பழி போடும் ஆண்களின் போக்குக்கு, “பெண்களால் உருவாகியுள்ள சமூகப் பிரச்னை” (துக்ளக் – 6.4.2005) கட்டுரையாளர் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும் ?

ஆதிகாலம் தொட்டு இன்றளவும் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய முக்கியமான மூன்று துறைகளிலும் ஆட்சி செய்து வந்துள்ளவர்கள் ஆண்கள்தானே ? பெண்களை நேர்மையாகவும், மனிதாபிமானத்துடனும் நடத்தும் பண்பும் இம்முன்று துறைகளையும் முறையாக நடத்தும் நாணயமும் ஆண்களுக்கு இருந்திருந்தால், இன்று உலகத்தில் காணப்படும் எந்தப் பிரச்னையுமே இருக்க வாய்ப்பில்லையே!

ஒரு குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை _ ஆணோ பெண்ணோ – அதை அதன் தாய் பிரியக் கூடாது என்பதே நமது கொள்கை. குழந்தையின் உடல், உள்ளம், அறிவு சார்ந்த வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தந்தையின் அரவணைப்பும் முக்கியமே யானாலும், தாயினுடையது அதனினும் அதிக முக்கியமானது.

ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. (தகாத ஆசைகளாலும், தப்பான வாழ்க்கை முறைகளாலும் நாம் மாறிவிட்டு, உலகம் மாறி விட்டது, காலம் மாறி விட்டது என்று பழி போடுவதுதானே நமது வாடிக்கை!)

பெண்களை ஆண்கள் ஒழுங்காக நடத்தி யிருந்தால், படி யிறங்கிச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு நேர்ந்திராது. எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மிகச் சில இலட்சியப் பெண்களைத் தவிர, பெண்களில் பெரும்பாலோர் குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளியே செல்ல மாட்டார்கள். இது பொது விதி. (இவர்களில் சிலர் இரட்டைக் குதிரைச் சவாரி செய்வது சரியாக வருமோ வராதோ என்னும் அச்சத்தால் திருமணம் செய்துகொள்ளுவதில்லை!) எனவே, பொழுது போக்குக்காக வேலைக்குப் போகும் பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். (தவிர, ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பொழுது போதாதே தவிர, பொழுது போகாது எனும் பேச்சுக்கே இடம் இல்லை. குடும்பப் பணிகள் பற்றிப் பெரும்பாலான ஆண்களுக்கு என்ன தெரியும் ?) பணக்காரப் பெண்களில் சிலர் வேண்டுமானால் அவ்வாறு செய்யக்கூடும். அப்படிப் பார்த்தால், பணக்கார ஆண்களில் பலரும் “உத்தியோகம் புருஷ லட்சணம்” என்று சொல்லிக்கொண்டு தேவையற்று வேலைக்குப் போகிறார்கள். இவர்கள் சொந்தக் காரில் தான் வருவார்கள், போவார்கள்.

ஏதோ ஆண்கள் அனைவருமே தங்கள் சம்பாத்தியத்தைப் பொறுப்புடன் குடும்பத்துக்காகச் செலவிடுவது போல் பேச வேண்டாம். அவர்கள் குடும்பத்தை ஒழுங்காய்க் கவனித்தால் பெரும்பாலான பெண்கள் வேலை செய்து சம்பாதிக்க மாட்டார்கள்! கீழ் மட்டத்துப் பெண்களின் வேலைச் சுமைக்கும் அவர்களுடைய குடிகாரக் கணவர்களே காரணம்.

வாய் தவறி (கை தவறி ?) இந்த நண்பர் பெண்கள் “பொறுப்பானவர்களாக” இருப்பது அவர்களுக்கு எளிதில் வேலை கிடைப்பதற்கு ஒரு காரணம் எனும் உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அத்துடன் ஆண்களை விடவும் அதிகச் சிறப்புடன் பெண்கள் தேர்ச்சி பெறுவதையும் இவர் கவனிக்கட்டும்.

பெண்கள் வேலைக்கு வருவதற்கான காரணங்களில் சில –

1. குடும்பத் தலைவன் குடிகாரனாகவோ, வேறு மட்டமான நடவடிக்கைகள் உள்ளவனாகவோ இருந்து, குடும்பத்தைக் கவனித்துச் சோறு போடாதிருத்தல். (அண்மையில் கூட, சுனாமி நிதியைப் பல ஆண்கள் குடும்பத்துக்குச் செலவவழிக்காமல் குடித்துத் தீர்த்தார்களே!)

2. திருமணச் செலவுக்காகவும் வரதட்சிணைக்காகவும் காசு சேர்க்க வேண்டியுள்ள நிலை. (படுப்பதற்குப் படுக்கை கூட மாமனார் வாங்கித் தர வேண்டியுள்ள அசிங்கத்தை எங்கே பொய்ச் சொல்லி யழ ? அல்லது சிரிக்க!)

3. சம்பாதிக்கிற கணவன் திடாரென்று இறந்து போனால், அவருடைய மனைவி மக்கள் நடுத் தெருவுக்கு வரும் நிலை இன்று பல நடுத்தரக் குடும்பங்களில் நிலவுகிறது. அதனின்று தற்காத்துக் கொள்ளுவதற்கான முன்னெச்சரிக்கையாகப் பெண்கள் வேலைக்குப் போக நேர்கிறது. 35, 45 வயது ஆகிவிட்ட பெண்ணுக்கு யார் வேலை கொடுப்பார்கள் ? நல்ல சம்பளத்தில், கவுரவமான வேலை கிடைக்குமா ? (கைம்பெண்களுக்கு உடனே வேலை என்று சட்டம் இருப்பின், கணிசமான பெண்கள் அப்படி நேர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடும்.)

பெண்கள் போட்டிக்கு வருவதால்தான் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பும் ஆண்களில் பெரும்பாலோர் “வேலை பார்க்கும் மனைவிதான் வேண்டும்” என்று அலைவது என்ன நியாயம் ? அதிலும், வங்கியில் வேலை பார்க்கும் பெண்தான் வேண்டுமாம்! இது வாதத்துக்கு ஒத்துவர வில்லையே ? (அதாவது logic இடிக்கிறதே, நண்பரே!)

பெற்றோர் இருவருமே வேலைக்குப் போவதால், குழந்தைகள் சரிவர கவனிக்கப் படாமல், பல வழிகளிலும் கெட்டுப் போகிறார்கள் என்பது ஒரு துயரமான உண்மைதான். இதைத் தடுக்க, ஒட்டுமொத்தமான சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, அன்றைய சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தரப்பட்டு வந்த சிறப்பு வசதிகளையும் சலுகைகளையும் இங்கும் தர வேண்டியதுதான். (தன் மனைவிக்கு இவை யெல்லாம் வேண்டும், ஆனால் பிற பெண்ககளுக்குத் தரக் கூடாது என்று நினைக்கும் பெரும்பாலான ஆண்கள் இதை ஏற்பார்களா ? சொல்லுங்கள்.)

மாலையில், அம்மா திரும்பி வரும் வரை வாசற்படியில் தவமிருக்கும் சிறுவர் சிறுமியரைப் பார்க்கும் போது மனம் பதைத்துத்தான் போகிறது. இதற்கு ஒன்று செய்யலாம். குடும்ப நலனும், குழந்தையும் அதிக முக்கியம் என்று நினைக்கும் பெண்கள் பாதி நாள் வேலை, பாதிச் சம்பளம் எனும் ஏற்பாட்டுடன் பணியில் அமரலாம். இதை ஏற்கும் பெண்களை மட்டுமே இப்படி நியமிக்கலாம். எல்லாப் பெண்களுக்கும் இதைப் பொருத்திச் சட்டம் இயற்ற முடியாது. (இதனால் 1000 பெண்களுக்கு அரை வேலையும், 500 அதிகப்படியான ஆண்களுக்கு முழு வேலையும் கிடைக்கும். ஆக, காலிப் பணியிடங்கள் 1000 இருந்தால், 1500 பேருக்கு வேலை கிடைக்கும்.)

அது சரி, “வாராக் கடன், வாராக் கடன்” என்று கொஞ்ச நாள்களாய் ஒரு சொல் அடி படுகிறதே, அதென்ன, சார், ‘வாரா”க் கடன் ? இப்படி ஓர் அநியாயச் சொல்லைக் கண்டு பிடித்து வங்கிகளின் புழக்கத்தில் விட்ட குற்றவாளி யார் ? கோடிக் கணக்கில் கடன் வாங்கியவர்களைச் சும்மா விட்டு விட்டு இட்டிலி சுட்டு விற்கும் இருசம்மாளையும், அப்பளம் விற்கும் அம்புலு மாமியையும், கறிகாய் விற்கும் கந்தசாமியையும் காய்த்து வருத்தும் வங்கி அதிகாரிகள் இவ் ‘வாரா’க் கடன்களை வசூலிக்க அவ்வப்போது சட்டப்படி நடவடிக்கை எடுதிருப்பின், நதி நீர் இணைப்புக்குப் பணம் இல்லாது போகுமா ? இத்திட்டத்தை அமல் படுத்தினால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் ? இன்னும் எத்தனையோ திட்டங்கள் வாயிலாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த இயலுமே ? இப்போதும் கூட வசூல் செய்ய முடியுமே ? இந்தநாட்டின் நிதித் துறையை இத்தனை நாளும் யார் நிர்வகித்தது ? ஆண்கள்தானே ? பெண்களிடம் இருந்தால் மட்டும் என்ன கிழிப்பார்கள் என்று கேட்காதீர்கள். இந்திய வாங்கிகளுள் மிகப் பெரிய வங்கி ஒன்று மிக மோசமான நிலையில் இருந்த போது அதை ஒரு பெண்மணிதான் தூக்கி நிறுத்தினார் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

வேலை யில்லாமையால் தீவிரவாதம் வளர்வது உண்மையே யானாலும், (ஆண்களின்) வேலையில்லாப் பிரச்னைக்கு ஆண்களே பொறுப்பு என்று மேற்சொன்ன காரணாங்கள் மெய்ப்பிப்பதால், இதற்கும் பெண்களை இழுக்காதீர்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்கள் புரிந்துள்ள – இன்னும் புரிந்துகொண்டு வரும் – அக்கிரமங்களால் பெண்கள் அவர்களுக்கு எதிரான தீவிரவாதிகளாக மாறாமல் பொறுமையாக இருந்து வருகிறார்களே என்பதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.

ஜோதிர்லதா கிரிஜா

சென்னை

jothigirija@vsnl.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா