தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

தமிழவன்


இன்று ஒரு பிரச்சனை வந்துள்ளது: தமிழ்த் திரைப்படத்திற்குத் தலைப்பு வைப்பதில் பிறமொழி கலக்கலாமா ? ஞானக்கூத்தன் போன்ற நுட்பமான கவிஞர்கள் கூட பிறமொழி தலைப்பு வைக்கலாம் என்கிறார்கள்.தன் கவிதைகளில் ஆங்கில மொழி கலக்காதவர்,தன் கவிதைகளுக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்காதவர் இவர்.இவரது தொகுப்பு எதுவும் இதுவரை ஆங்கிலத்தலைப்பில் வந்ததில்லை.இவர் கமலகாசன் படத்துக்கு ஆங்கிலத்தலைப்பு வைப்பது தவறில்லை என்கி றார். ‘எலக்றிக் ட்றீம் ‘ என்று எழுதலாமாம். (பார்க்க:தீராநதி, 1-04-005).

தமிழ் மொழியில் இன்று இருவகை மொழிவெளிபாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, அதிநுட்பமான இலக்கிய மொழிவெளிப்பாடு; இன்னொன்று பொது மொழிவெளிப்பாடு.

திரைப்படத்துக்குப் பெயர் வைப்பது ,தினத்தாளில் எழுதும் மொழியில் உள்ள தமிழ், கடைகளில் பெயர்ப் பலகையில் எழுதும் தமிழ் போன்றன பொது மொழிவெளிப்பாடு. இந்தப் பொதுமொழி வெளிப்பாட்டில் இயங்கும் உள்மொழித் தளம் தூய தமிழ் சார்ந்தது. இது தமிழ் ஒழுங்கு முறையின் ஓர்மையிலிருந்து வருவதாகும்.ஒரு முறை ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மலையாளத் தில் பத்திரிகைத் தலைப்பு ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருப்பதுபோல் தமிழில் வருவதில்லை என்றார். ‘இன்று ஸ்ட்றைக் ‘என்று தமிழ்ப் பத்திரிகையில் தலைப்பு வராது என்றார்.அதாவது அப்படி எழுதுவதை தமிழின் விதி ஏற்காது.இது ஒரு மிக நல்ல அவதானம். அதாவது தமிழுக்குள் ஒரு சுய மொழி ஒழுங்கு உள்ளது, பிறமொழியைத் தமிழ் ஏற்பது இல்லை என்பதே இக்கூற்றின் சாரமாகும்.

முதலில் நான் சொன்ன இலக்கியத் தமிழில் செயல் படும் மொழி வேறொரு தர்க்கம் சார்ந்தது.நாவல்,சிறுகதை,நாடகம், திறனாய்வு என்றால் ஆங்கிலம் நுட்பத்துக்கும் தெளிவுக்கும் வேண்டிக் கலக்கும் தேவை சில சமயம் உண்டு.அதற்கும் சிலவரையறைகள் உண்டு.

ஆனால் திரைப்படத் தலைப்புப் பொதுமொழித் தளத்தைச் சேர்ந்தது.அக்கிராசனர், தலைவர் என்றும்,அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றும், பைல் என்பது கோப்பு என்றும் மாறியது போன்றது இது.தமிழ்த்திரைப்படத்துறை -ஒன்றிரண்டு படங்களைத் தவிர- வியாபாரத்தைச் சார்ந்த துறை.அழகியல் துறையின் நுட்பம் சார்ந்தது அல்ல. ஒரு சத்தியஜித் ராயோ, மணிகெளலோ இன்னும் தோன்றிவிட வழி இல்லாத ஒரு கதம்பம் அது.எனவே நாம் மொழிப்பயன் பாட்டையும் அவ்வூடகத்தின் மொழிசார் மனயியங்கு முறையையும் கணக்கில் எடுத்தால் அது ஒரு பொதுமொழி சார்ந்த துறை.எனவே பொதுமொழி சார்ந்தது என்றே திரைப்படத் தலைப்பைக் கருதவேண்டும்.அதன் உற்பத்தியில் மார்வாடி மூலதனம் உள்ளது. எனவே திரைப்படத் தலைப்பு நல்ல தமிழில் வைக்கபட வேண்டும் என்று வாதாடுவதில் எந்தப் பிழையும் இல்லை.

ஒருகாலத்தில் நெடுஞ்செழியன், என்றும் மலர்விழி என்றும் பெயர் வைப்பது கவர்ச்சி என்று கருதினார்கள். பின்பு இப்போக்கு மாறியது.நாராயணசாமி என்ற பெயர் நெடுஞ்செழியன் என்று மாறுவது கவர்ச்சி என்ற மனோநிலையை உற்பத்தி செய்தது அப்போதிருந்த ஒரு மொழி விழிப்புணர்வு இயக்கத்தின் செயல்.மொழியின் மீது பற்று ஏற்படுத்துவது தறானது அல்ல.தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துங்களென்று ஒரு அரசியல் கட்சி கூறினால் நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.அரசியலை விட மொழியின் மீது கவலைப் படுகிறார்களே என்று.

ஆனால் தனித்தமிழ் போல, இவர்கள் செய்யும் காரியம், மறு எல்லைக்குப் போகக் கூடாது.எல்லாவற்றையும் தனித்தமிழில் தான் எழுத வேண்டும் என்று கூறமுடியாது. சிலர் தனித் தமிழ் விரும்பிகளிடம் வாதிடுவது போல் திரைப்படத்துக்குத் தமிழில் பெயர் வைப்பதை எதிர்த்து வாதிடுகிறார்கள். தமிழில் சமஸ்கிருதம் கலந்துள்ளது என்கிறார்கள்.இது நமக்குத் தெரிந்தது தான்.தனித்தமிழ் வாதிகளிடம் பேசுவது வேறு, திரைப்படத்துக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்று கூறுகிறவர்களிடம் பேசுவது வேறு.கன்னடிகர்கள் இன்று கன்னட எண்களைச் சாலை வாகனங்களில் வைத்துக்கொண்டு போகத்தான் வேண்டும் என்று கூறுவது போல தமிழர்கள் தமிழ் எண்களை வாகனங்களில் வைத்துக் கொண்டு போக வேண்டுமென்று கேட்கவில்லை.எத்தனை தமிழர்களுக்கு, பெங்களூரில் வாகன எண்ணாக யாருக்கும் புரியாத கன்னட எண்ணை கன்னடிகர்கள் இன்று பயன்படுத்தும் செய்தி தெரியும் ? நான் திரைப்படத்துக்குப் பெயர் வைக்கக் கோருபவர்களைத் தமிழ் மொழி விழிப்புணர்வாளர்களாகப் பார்க்கிறேன். இப்போது வந்து கொண்டிருக்கிற புது அலை தமிழ்ப் பற்று அவர்களின் தூண்டுகோலாலும் வருவதாகப் பார்க்கிறேன்.

தமிழ் மொழியை வெளிநாட்டார்களுக்குக் கற்பிக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பார்க்கும்போது தமிழர்கள் வரலாறு நெடுக தம் மொழி மீது அக்கரை காட்டாதவர்களாக இருந்துள்ளது தெரிகிறது. வைத்தியனாத தேசிகர் சமஸ்கிருத மொழியே தமிழின் அடிப்படை என்று இலக்கணம் எழுதுமளவு போனது நான் கூறும் இந்தக் கூற்றை நிரூபிக்கும்.இந்த நூற்றாண்டில் அவ்வப்போது தமிழின் தூய்மைக்காகக் குரல் வருவதை எண்ணி யாரும் எப்போதும் தமிழர்கள் தமிழுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள் என்று எண்ணவேண்டாம்.

துருக்கிய மொழியைப் பற்றிக் கூறும்போது ஒவ்வொரு சொல்லும் தாயக் கட்டையில் உள்ள கட்டைகள் இயங்குவது போல அவ்வளவு நேராக அமைந்துள்ளன என்பார்கள்.நம் மொழி காட்டு மரக்கிளை போல எங்கெங்கோ வளைந்தும் நெளிந்தும் செல்லுகிறது.இதனால் சீக்கிரம் படிக்க முடியாத மொழிகளில் ஒன்று தமிழ் என்று வெளிநாடுகளில் ஒரு பெயர் உள்ளது.இதனாலேயே பல நேரங்களில் வெளிநாட்டார் தமிழைப் படிப்பதைத் தவிர்க்கிறார்கள். இன்று இந்தி மொழி கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்தால் பல நாடுகளில் பரப்பப் படுகிறது. இந்தியல்லாத பிற மொழியினரின் ஏமாளித்தனத்தோடு அந்த மொழியின் எளிய அமைப்பும் இதற்குக் காரணமாகும்.இந்தியாவுக்குள் சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு மொழிக் காலனியாதிக்கம் தொடங்கியுள்ளது.யாரும் கவனிக்காதது இது.

பிரஞ்சு அரசாங்கத்தில் ஒரு துறை மொழிக்காக உள்ளது.நம் துரதிருஷ்டம் நம் தமிழர்களின் வாக்கைக் கொண்டு ஆட்சி அமைத்தவர்கள் தமிழுக்கு எதிராகக் குரல் எழுப்புவது.

இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் கூறவேண்டும். பேச்சசுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள தூரம் தமிழில் அகன்று கோண்டே போவது பற்றி.போலிஷ் மொழிபோல், உலகிலுள்ள பல மொழிகளில் எழுதுவது போல பேசுகிறார்கள்.கி.ராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வரவேண்டுமென்று வினோதமாகவெல்லாம் தமிழை எழுதுகிறார்கள். பயல் என்ற சொல்லைப் பய என்று எழுதலாம். ஏனெனில் பேச்சில் கடைசி ‘ல் ‘ கெடும். எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழாக மாறும் போது அதற்கும் ஒரு விதி உண்டு. ஆனால் கி.ரா. ‘பெய ‘ என்றெழுதுகிறார்.பேச்சுத் தமிழ் என்றால் எழுத முடியாதது என்று பொருள்,பேச்சில் மட்டும் இருப்பது என்று பொருள்.அதற்கு வரிவடிவம் கொடுக்கும் போது உத்தேசமாகத்தான் கொடுக்க முடியும். அதனாலேயே ‘பய ‘ என்று எல்லோரும் எழுதும் பாணியைப் பின்பற்றுவதே போதும்.கி. ரா. இது போல் ஆயிரக்கணக்கான சொற்களைப் பயன் படுத்துகிறார்.இல்லை எனக்கு அது நான் ஒலிப்பது போல் சரியாக இல்லை என்று அவர் கூறமுடியாது.படைப்பு எழுத்தாளர்களுக்குச் சுதந்திரம் முக்கியம்.ஆனால் மொழி என்று வரும்போது விதிகள் தவிர்க்க இயலாதன ஆகும். இது பண்டிதக் குரல் அல்ல.

—-

carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்