புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

தமிழவன்


சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி நேரடியாகத்தெரியாவிட்டாலும் பத்திரிகைவாயிலாகத் தெரியும் செய்திகள் மகிழ்ச்சியூட்டத்தக்கனவாக உள்ளன.

பொதுவாகச் சிறுபத்திரிகைகள் தமது கருத்துருவத்தை ‘எழுத்து ‘ப் பத்திரிகையின் காங்கிரஸ் அரசியலில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வரித்துவந்துள்ளன. எழுபதுகளில் கொஞ்சம் இடதுசாரி அம்சம் இந்தச் சிறுபத்திரிகையில் வந்து கலந்தது. மிகச் சமீபத்தில் இருந்து வலதுசாரிகளும் வந்து கலந்துகொள்ள முயல்கின்றனர்.இப்போது மீண்டும் ஜெயகாந்தனுக்கு நியாயமாகவே கிடைக்கவேண்டிய பரிசு கிடைத்ததைச் சிலர் பாராட்டும் சந்தர்ப்பத்தில் அவருடைய காங்கிரஸ் அரசியலுடன் விஷயங்களைக் கலப்படம் செய்யப் பார்க்கின்றனர்.இலக்கிய ஜெயகாந்தன் வேறு, அரசியல் ஜெயகாந்தன் வேறு.

இதுநாள்வரை, தமிழ்ப்பற்று அரசியல் திராவிட அரசியலுடன் இணைத்திருந்தது.இப்போது அப்படியல்ல. கடந்த 30 ஆண்டு சிறு பத்திரிகை இலக்கிய முயற்சிகள், திராவிட அரசியலின் தமிழ்ப்பற்றைத் தனியாகப் பிரித்துத் தனதாக்கிக் கொண்டுள்ளது.இந்தத்தமிழ்ப் பற்று வேதநாயகம் பிள்ளை போன்ற இலக்கியவாதிகளிடமிருந்து திராவிட அரசியலுக்கு வந்தது என்பதுதான் சரி.தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் நடந்த இந்த முக்கியமான சம்பவத்தைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும்.தற்சமய தமிழ்ப்பற்றை இடதுசாரிக் குணம் கொண்டதாகவே நாம் கருதவேண்டும்.இன்று இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள மூத்த அரசியல் வாதிகள் என்ன நோக்கத்துடன் கலந்துகொண்டாலும் அதனை நாம் ஆதரிக்கக் கடமையுள்ளது.

காலச்சுவடு என்ற முக்கியமான, தமிழுக்குப் பலவகைகளில் தேவையான, இதழின் மார்ச் மாதத் தலையங்கம் – ‘தமிழ்க்காதல் ‘-இந்த நோக்கில் தவறானது.

இன்றைய புது அலை தமிழ்ப்பற்றின் மூலம் தமிழின் வெளிமுகம் பலப்படத்தான் செய்யும்.வெளிமுகம் என்று நான் கூறுவது பொதுமக்கள் மத்தியில் ஏற்படபோகும் தமிழார்வம்.மொழியில் ஏற்படப் போகிற தூய்மை.இதற்கு மாறான உள்முகம் ஒன்று உள்ளது. அது இன்றைய சிறுபத்திரிகை மூலமான தமிழிலக்கிய வளர்ச்சி.இன்றைய இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட இலக்கியம் என்ற பெயரில் ஒருகாலத்தில் எழுதப்பட்ட,இன்றும் வணிக எழுதுக்களோடு இணைத்தும் இணைக்காமலும் எழுதப்படுகின்ற குப்பைகள் பயன்படாதன.தமிழின் உயர்ந்த மரபுக்கு இவைகள் அவமானம்.இந்த அவமானத்தைத் தமிழாசிரியர்களும் சேர்ந்து செய்துவருகிறார்கள்.இது பற்றிய ஆழ்ந்த அலசல் நமக்குள் நடக்க வேண்டும்.உடனடியாக கவனிக்கவேண்டிய ஒன்று தமிழ்த்துறை மற்றும் புதிய இலக்கியத்திற்கு நடுவில் உள்ள இந்த இடைவெளி.

இன்றைய புது அலை தமிழ்ப்பற்றின் மூலம் இன்றைய தமிழ்க்கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு முரண்பாடும் வெளிப்படுகிறது.அது திரைப்படத்துறைக்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் நடுவில் உள்ள முரண்பாடு.திராவிடப் ‘பண்பாட்டொடு ‘ கலந்த இந்தத் திரைப்படத்துறையின் மாயை சார்ந்த, தேவைக்கதிகமான, பூதாகரமான வளர்ச்சி என்ற ஆபத்தை மருத்துவர் திரு.இராமதாஸ் அவரளவில் புரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.ஆனால் புது அலை தமிழ்ப் பற்று ஒரு தத்துவத்தின் அடிப்படை கொண்டது. அந்தத் தத்துவம் என்ன ?

இதனை எழுதுகிறபோது எனக்குத் தவிர்க்கவியலாமல் ஞானக்கூத்தன் கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.இந்தப் புதுஅலை தமிழ்ப் பற்று அவர் கவிதையுடன் தொடர்புடையது.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர்மேல் அதைவிடமாட்டேன் ‘. புதியஅலை தமிழ்ப்பற்று இக்கவிதையின் கருத்தை உள்வாங்கியதாக இருக்கவேண்டும். இிராசேந்திரசோழன் போன்றவர்கள் இத்தத்துவத்தை உருவாக்க சரியான முன்னோடிகள்.

திராவிடத் தமிழ்ப்பற்றின் உள் ஒருவித இனவாத,பாசிச அம்சங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இத்தமிழ்ப்பற்று கால்ட்வெல்லின் திராவிட இனத்தத்துவத்தின் வேரிலிருந்து ஒரு இழையைப் பெற்றிிருக்கிறது.நாசி அரசியல் அம்சங்கள் கூட இதில் இனம்காணப்படலாம்.பிராமணர்களை முற்றிலும் வெறுப்பதை இந்தத் புதிய அலை தமிழ்ப் பற்று ஏற்காது.ஆகையால் நாம் பழைய தமிழ்ப் பற்றிலிருந்து இந்தப் புதிய அலை தமிழ்ப்பற்றை வேறுபடுத்திப் பார்க்கத் தேவை இருக்கிறது.புதிய அலை தமிழ்ப் பற்று இன்றைய ஈழத் தமிழ்த் துயரத்தின் சாயல் படிந்தது;அனைத்துலகத் தமிழின் பரிமாணம் கொண்டது. மலேசிய, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய தமிழர்களின் வாழ்க்கையினோடு தொடர்பு கொண்டது. தமிழினி 2000 போன்ற கலாச்சார நிகழ்வுகளுடன் தொடர்புடையது.எழுபதுகளுக்குப் பிறகு தோன்றியது.

இதன் தத்துவம் சங்க இலக்கியத்தின் சக்திகோட்பாட்டுடனும், திருக்குறளின் அன்புக் கோட்பாட்டுடனும் உருவாவது.அதாவது நீட்சேயின் அப்பொலொனியன் மற்றும் டைனோசியன் அம்சங்களோடொத்த பண்புகள்.அதாவது புதுமைப் பித்தனின் படைப்பாளுமைக் குணங்கள்.

இதனாலேயே இப்புது அலை தமிழ்ப் பற்று, தமிழகத்தின் காங்கிரஸ், கம்யுனிஸ்ட், பா.ஜ.க போன்ற கட்சிகளின் தமிழ்ப் பற்றற்ற குணத்துக்கு எதிரானது.புதுஅலை தமிழ் இயக்கத்தில் தொடர்புடையவர்கள் இந்த எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும்.

—-

(தமிழவன் வருகை தரு பேராசிரியர்,வார்ஸா பல்கலைக்கழகம்)

Series Navigation

தமிழவன்

தமிழவன்