ஒரு மொழிபெயர்ப்பின் கதை

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

குமரி மைந்தன்


‘தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி ‘ என்ற திரு, தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03,07,1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது, அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார், ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்,

பொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது, எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான ‘பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது, பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி ‘பொறியியல் கதிர் ‘ என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம், இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் ‘பொறியியல் கதிரில் ‘ வெளியிட ஒப்புக் கொண்டார், எனவே நூலின் முதலதிகாரத்தை மொழி பெயர்த்து அனுப்பினேன், ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார், ராயல் அளவு எனப்படும் பெரிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும், எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது, அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப்

புலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன, எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்,

சில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார், (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை), இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது, சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்,

தமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார், அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார், அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார், இந்தத் ‘தமிழ் வாணிகத்தை ‘ நான் விரும்பவில்லை, பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை,

இதற்கிடையில் 1972டூஇல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது, இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு, பி, இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன், அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்குப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர், அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார், (எண் வேலை ஐஐ-1,96787,78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார், (எண் 3,29699,81-1 நாள் 20.11.81)

வந்தது வினை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர், தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர், (ந,க,எண் இ3,1793,081 நாள் 29.03.91), அத்துடன் தங்கள் ‘தொழிலில் ‘ கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர், இறுதியில் போகிற போக்கில் ‘மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப் ‘ பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்,

இதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு,பி, இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார், புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர், நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை,

1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு, ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் ‘பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி ‘ (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்,

சில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ,சுப, மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன், தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார், தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்,

1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ,அய், சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன், மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து. ‘நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள் ‘ என்று அவர் கூறினார், அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை, ஆனால் ‘பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி ‘ இதழில் இம்மொழிப் பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார், அதற்குப் பயனேதும் இல்லை, எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது,

முதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும், இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது, இவ்விரண்டின் தலைவர்களும். சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர், இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் ‘ஒற்றுமையாகச் ‘ செயற்பட்டு முறியடிப்பர், (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்),

இது போன்ற ‘சாதி ‘ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன, ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர், இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே டூ மருத்துவர்களும். வழக்கறிஞர்களும், மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்,

இந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர், அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர், அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன், சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் ‘தெரிந்து கொள்ளவில்லை, ‘ சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார், மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் ‘ஓ…. ‘ என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் ‘ஏம்பா இது குறித்து ஏதோ *பேப்பர்* வந்தது போலிருக்கே ‘ என்று கேட்டார், எனக்குப் புரிந்தது, ‘இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை ‘ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்,

இது ஒரு தன் புராணமல்ல, ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது,

பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன, மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல,க, இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ,டு, Sulphur- சுற்பொறை. phospherous– பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் ‘தென்மொழி ‘ இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார், காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார், ‘கடைசல் பொறிகள் ‘ என்ற பெயரில் ‘லேத் ‘களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார், பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ‘தினமணி ‘க் கட்டுரையாளர்கள் திரு,கே,என், இராமச்சந்திரன். நெல்லை சு, முத்து போன்றேhர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர், நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ,மு, சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகராதியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார், அவர் தமிழப்புலவர் அல்லர், (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணி

யை அவருக்கு அளித்தது), இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்,

ஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர் ‘ அரசு உருவாக்கிய ‘தமிழ் வளர்ச்சி ‘ அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர், அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர், தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர், வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்,

நமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள். சலுகைகள். மானியங்கள். கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் ‘பணப்பட்டுவாடா ‘ செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது, அது போலவே ‘தமிழ் வளர்ச்சி ‘ அமைப்புகளிலும் ‘பணப்பட்டுவாடா ‘ உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது, அதற்கிசைய வெளியிலுள்ள ‘தமிழ்த் தொண்டு ‘ அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன, இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் ‘புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று,

அறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை. உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை, அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள் தாம், இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ ‘தமிழ்ப்பணி ‘ ஆற்றியவர்களல்ல, வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்,

அந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக. பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது, அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது, ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு, அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு. சம்பளமும் குறைவு. மதிப்பும் குறைவு[, அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் ‘தென்மொழி ‘ இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர், ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர், தமிழே அவர்களது ‘வாழ்வாகி ‘ விட்டது,

பாவாணர். மற்றும் ‘தென்மொழி ‘ மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம். கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் தமிழை ‘வளர்க்கும் பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை,

என் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார், முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார், பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளpவாகவே வெளிப்படும், இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர், ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள். தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்களிடமிருந்தே வருகிறது,

தமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை. பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும், அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது ‘பணப்பட்டுவாடா ‘ உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்,

குமரிமைந்தன்.

பொறியாளர்.

‘தமிழ்க்குடில் ‘

குமரிமாவட்டம் – 629501,

பேசி ‘ 04952 – 251881,

(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது, தென்மொழி இதழில் வெளிவந்தது, “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்,)

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்