மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

இர்ஃபான் ஹுசேன்


மார்ச் 16ஆம் தேதி, இஸ்லாமாபாத் மசூதியிலிருந்து ஒரு இமாம் தனது மாணவர்களை அழைத்துக்கொண்டு அருகாமையிலிருந்த சர்ச்சுக்குச் சென்று அங்கிருந்த கிரிஸ்துவ வழிபாட்டாளர்களை தாக்கியது, நாம் எவ்வாறு நமது சிறுபான்மையினரை கொடுமைக்குள்ளாக்குகிறோம் என்பதன் இன்னொரு உதாரணம்.

பல வருடங்களாக ஷியாக்களும் சுன்னிகளும் அந்தந்த மசூதிகளிலேயே வன்முறை தாக்குதலில் ஈடுபடுவது நடந்து வந்தாலும், அவ்வப்போது நடக்கும் கொடூரங்களைத் தவிர கிரிஸ்துவர்கள் மீது அதிகம் தாக்குதல்கள் நிஅகழ்ந்ததில்லை. எந்த வித தூண்டுதலும் இல்லாத இந்த தாக்குதல், எந்த அளவு மோசமான நிலையில் முஸ்லீமல்லாதவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டுகிறது.

சகிப்புத்தன்மையற்றவர்களாக இருப்பதில் நாம் மட்டுமே தனித்திருக்கவில்லை என்பது ஒரு ஆறுதல்தான். ஆனால் வரலாறு ரீதியாக திம்மிகள் (முஸ்லீமல்லாதவர்கள்) முஸ்லீம் சமூகங்களில் தனியாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சட்டங்களும் விதிமுறைகளும், முஸ்லீமல்லாதவர்கள் வசிக்க கட்டுப்பாடுகளும் கடமைகளும் தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது விதிக்கப்பட்டே வந்திருக்கின்றன.

முஸ்லிம் அரசர்களின் கீழ் திம்மிகள் சகிப்புத்தன்மையுட நடத்தப் பட்டார்கள் என்று நாம் பெருமை கொண்டாலும், பாட் யோர் (Bat Y ‘eor) என்ற வரலாற்றாசிரியர் ( எகிப்து நாட்டைப் பூர்விகமாய்க் கொண்ட பிரிட்டிஷ் வரலாற்று அறிஞர்) மாறுபட்ட வரலாற்றைச் சொல்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘யூரேபியா – ஐரோப்பிய-அரபு கூட்டணி ‘ ( ‘Eurabia: the Euro-Arab axis ‘) என்ற புத்தகத்தை எழுதிய (செல்வி) யோர் ஃப்ரெஞ்ச் வார இதழ் ‘லே பாய்ண்ட் ‘ -இல் பேட்டி அளித்துள்ளார். அவர் சொல்வதன்படி, ஐரோப்பா எந்த போராட்டமும் இல்லாமல் இஸ்லாமிடம் சரண் அடைந்துவிட்டது.

அவர் இஸ்லாமிய வரலாற்றில் திம்மிகளின் (முஸ்லிம் அல்லாதாரின்) சமூக நிலை பற்றி வாழ்நாள் முழுதும் ஆய்வு செய்து வந்திருக்கிறார். ‘ திம்மி என்ற கோட்பாடு இஸ்லாமின் அடிப்படைக் கருத்தாகும்; ஜிகாத் போன்றே இஸ்லாமின் அடிப்படைகளிலிருந்து பிரிக்க முடியாதது… இதன் படி மனித குலமே இரு பெரும் பிரிவுகளில் அடங்கி விடுகிறது. முஸ்லிம்கள் அமைதி உலகைச் சேர்ந்தவர்கள். இஸ்லாத்தை நம்பாதவர்கள் அல்-ஹர்ப் என்ற யுத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். குரானையிம், ஹடித்தையும் ( இவை இரண்டும் இஸ்லாமியச் சட்டங்களின் தூண்கள் ) பின்பற்றி, முஸ்லிம் அல்லாதாரை வென்றெடுத்து முஸ்லிம்கள் ஆக்கும் கடமை எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளது. ஜிகாத் அமைதி வழியில் – இஸ்லாம் அல்லாதார் நாட்டில் குடியேற்றம், மதமாற்றம் என்று- செய்யப்படலாம். ஆல்து யுத்தம் மூலம் செய்யலாம். இஸ்லாமை வளர்க்கும் எல்லா வழிகளும் நியாயமே.

‘ திம்மி இஸ்லாமை நம்பாதவர். இஸ்லாமிய நாட்டில் வாழும்போது சண்டை போடாமல், இஸ்லாமின் மேலாண்மையை ஒப்புக் கொண்டு, தன் வாழ்வையும், சொத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சிற்சில உரிமைகள் மட்டும் உண்டு. இதற்காக, பிணைக்கைதிகள் போல ஜசியா வரி செலுத்தவேண்டும். (குரான் 9,29).

‘திம்மியை இழிவுபடுத்துவதில் இந்த வரி முக்கிய அங்கம் வகிக்கிறது. ஜசியா வரிகொடாமல் இருப்பது, கிளர்ச்சிஅயிக் குறிக்கும், பாதுகாப்பு அகற்றப்பட்டு உடனே யுத்தம் ஆரம்பிக்கப்படும். ‘

பாட் யோர் இதனை இஸ்லாமின் முற்கால வரலாற்றில் காண்கிறார்; திம்மிக்களுக்கு இடப்பட்ட கட்டுப்பாடுகள் : அவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது; அவர்களின் கோவில்களை அவர்கள் செப்பனிடக் கூடாது. புதிதாகக் கோவில்கள் கட்டக்கூடாது. முஸ்லிம் அல்லாதார் என்று தம்மை அடையாளம் காட்டுமாறு வண்ணப்பட்டி அணியவேண்டும். முஸ்லிம்கள் முன்னால் நிமிர்ந்து பார்க்காமல் இடது பக்கமாக நடக்க வேண்டும். அவர்கள் பூசைகள் எந்த சத்தமும் இல்லாமல் நிகழ்த்தப் படவேண்டும். ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை. ‘ திம்மி முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலோ, இஸ்லாமை விமர்சனம் செய்தாலோ மரண தண்டனை தான். ‘

யோர் சொல்வதன்படி லட்சக்கணக்கான முஸ்லிமல்லாதார் பல நூற்றாண்டுகளாக இபப்டி இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் எலோருமே முஸ்லிம் சமூகத்தில் திம்மிகளாகத் தான் நடத்தப் பட்டிருக்கிறார்கள். இவர் சொல்வது ‘ .. வன்முறை, அடிமைத்தனம் ,பெண்களின் மீதான பலாத்காரம், நாடுகடத்தல், இழிவி செய்தல் என்று வரலாறு நீள்கிறது.. ‘

லே பாய்ண்-இல் மாலிக் சாபல் என்பவரிடம் யோரின் இந்த வரலாறு பற்றிய கருத்துகளைக் கேட்டுள்ளனர். இவர் ‘ மறுமலர்ச்சி இஸ்லாமின் அறிக்கை ‘ என்ற நூலின் ஆசிரியர். சாபெல் சொல்வது : ‘ .. 19ம் நூற்றாண்டிலிருந்து யூத அறிஞர்கள் – இக்னேசியஸ் கோல்ட்சிஹர், ஜார்ஜஸ் வாஜ்தா, சாமுவல் மங், பெர்னார்ட் லூயிஸ், மாக்ஸிம் ராபர்ட்ஸன் போன்றவர்கள் சொல்படி முஸ்லிம் நாடுகளில் பேரழிவிற்கு யூதர்கள் ஆளானதில்லை, பெருமளவில் நாடு கடத்தப்பட்டதில்லை , என்று சொல்கிறார்கள். ‘

‘ ஐரோப்பாவில் நிகழ்ந்தது போல பேரழிவு நடக்கவில்லை, ஒதுக்கப்படவில்லை , பெருமை மிக்க , மறுமலர்ச்சியுற்ற இஸ்லாத்தின் கீழ் பல முக்கிய பதவிகளையும் வகித்தார்கள் ‘ என்று சாலெப் தெரிவிக்கிறார்.

இது பற்றிய விவாதம் ஐரோப்பாவில் மையமாக அமையும். தம்முடைய மதச்சார்பின்மையும், சகிப்புத்தன்மையும் கொண்ட சமூகத்தில் , இறுகிப்போன நம்பிக்கைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு கோடிப் பேர் இருப்பது இந்த விவாதத்தில் இடம்பெறும்.

செப்டம்பர் 11 -ல் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பின் இந்த விவாதம் மிகவும் முன்னணிக்கு வந்து விட்டது. அதில்லாமல் 7 கோடி முஸ்லிம் துருக்கியர்கள் கொண்ட துருக்கி நாடு ஐரோப்பிய யூனியனில் பங்கு பெறுவது, துருக்கியின் மக்கள் ஐரோப்பாவில் எங்கும் சென்று வாழலாம் என்ற நிலை ஏற்படுவது பல ஐரோப்பியர்களுக்கு சங்கடம் அளிக்கிறது.

மேலை நாடுகளில் இஸ்லாம் பின்பற்றுவர்களுக்கும், மேலை நாட்டு மதிப்பீடுகளுக்கும் உள்ள முரண்பாடு பெண்களை எப்படி நடத்துவது என்பதில் வெளிப்படுகிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பெண்களின் உரிமைக்கான தொடர்ந்த போராட்டம் நிகழ்ந்திருக்கிறது. இப்படிப் போராடி உரிமை பெற்ற பெண்களுக்கு கட்டாயக் கல்யாணம், கெளரவக் கொலைகள், முழு உடலை மறைக்கும் புர்கா போன்றவை வெறுக்கத் தக்கனவாய் உள்ளன.

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஐரோப்பாவிலும் (மற்ற நாடுகளிலும்) முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்று சொந்தக் கலாசாரம் அழிந்து விடுமோ என்று உண்மையில் அஞ்சுகிறார்கள் .

லெ பாய்ண்ட் எழுதும் தலையங்கத்திலிருந்து : ‘தனிமனித சுதந்திரம் என்பது தான் இஸ்லாத்திற்கும், புத்தகத்தை அடிப்படையாய்க் கொண்ட மற்றமதங்களுக்கும் உள்ள வேறுபாடு. மதச்சார்பின்மையை இஸ்லாமிய நாடுகள் கடைப்பிடிக்க முடியுமா ? ஆன்மிகத்திற்கும், லெளகீகத்திற்கும் வேறுபாடு காணாத இஸ்லாம், ஐரோப்பாவில் , தன்னை மாற்றிக் கொள்ள தயாரா ? இது நிகழ வேண்டுமானால், இஸ்லாத்திற்குள் ஒரு கலாசாரப் புரட்சி நிகழ வேண்டும். ஆனால் சவூதி அரேபியாவில் வளர்க்கப்பட்டு வரும் வஹாபிசம் , இஸ்லாத்தின் பிற்போக்குத்தனமான பகுதிகளை முன்னிலைப் படுத்தி, புனித நூல்களின் வரிகளை அப்படியே அர்த்தப் படுத்திக் கொண்டு பழங்காலத்திற்கு திரும்ப முனைகிறது. பல தன்னடையாளம் தேடும் முஸ்லிம் இளைஞர்கள் இதைத்தான் பின்பற்றுகிறார்கள்.. ‘

ஒவ்வொரு மேல் நாடும் இந்தப் பிரசினைகளுக்குத் தன் வழியில் தீர்வு காண முயல்கிறது. முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் பார்வையை எதிர்த்து முஸ்லிம்கள் கேள்வி எழுப்பும்போது, முஸ்லிம்களை நோக்கிக் கேட்கப் படும் கேள்வி இது தான் : மேலை நாடுகளில் தாம் கோரும் உரிமையையும், சகிப்புத் தன்மையையும் ஏன் முஸ்லிம் நாடுகள் மற்ற பிரிவினருக்கு அளிப்பதில்லை ?

அவர்கள் கேட்பது இது தான். சவூதி அரேபியா மேலை நாடுகளில் மசூதிகள் கட்டப் பண உதவி செய்கிறது, ஆனால் தன் நாட்டில் சர்ச் கட்ட அனுமதிப்பதில்லை. ஏன் அப்படி ? பாகிஸ்தானின் தலைநகரில், சர்ச்சில் கிறுஸ்து வழிபாட்டாளர்கள் ஏன் படுகொலை செய்யப்படுகிறார்கள் ?

—-

பாகிஸ்தான் நாளிதழ் ‘டான் ‘-இல் வெளிவந்தது

Series Navigation

இர்ஃபான் ஹுசேன்

இர்ஃபான் ஹுசேன்