யமுனா ராஜேந்திரன்
துரோகம் என்பது மூலத் தீவிணை அல்ல
தமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும்
மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம்.
Roberto Gonzalaz Echeverria
Introduction to
Neruda’s Canto General
1.
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மகாகவி பாப்லோ நெருதா பிறந்த நுாற்றாண்டு. நெருதா நுாறறாண்டில் அவர் குறித்த பல்வகை விவாதங்களைத் துாண்டிய ஆதம் பின்ஸ்டானின் ீPablo Neruda: A Passion for Life ‘ எனும் வாழ்க்கை வரலாற்றுநுால் வெளியாகியிருக்கிறது. The Essential Neruda : Selected Poems எனும் பெயருடன் பல மொழிபெயர்ப்பாளர்கள் மொழியாக்கம் செய்த ஆங்கிலத் தொகுதியொன்றினை அமெரிக்காவின் ஸிட்டிலைட் பதிப்பகத்திற்காக தொகுத்திருக்கும், மாக்ஸ் ஈஸ்னர் நெருதாவின் வாழ்வு குறித்து Pablo Neruda Present என ஒரு விவரணப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்,. நெருதாவின் நுாற்றாண்டையொட்டி பற்பல மறுவாசிப்புகளும், முன்வைக்கப்படுகின்றன. பெண்நிலைவாத வாசிப்புகளும் நெருதாவின் ஸ்டாலினிய அரசியல் குறித்த கேள்விகளும் சர்வதேசிய இலக்கிய வெளியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. நெருதா இருபதாம் நுாற்றாண்டின் மகத்தான கவி எனக் குறிப்பிட்டிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோவின் நண்பரும் இலத்திீனமெரிக்க நாவலாசிரியரும், ஆன கார்ஸியா மார்க்வெஸ். இலத்தீனமெரிக்க அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் விரிவாக எழுதியிருக்கும் கவியும் மனித உரிமையாளரும் ஆன ஆரியல் டோப்மேன், பயங்கரவாத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்தின் பயங்கரத்தை முன்வைத்து, கொடுங்கோன்மைக்கு எதிரான நெருதாவின காலம் மீறிய குரலை மறுபடியும் சமகாலநோக்கில் வலியுறுத்தியிருக்கிறார். நெருதாவின் ஸ்டாலினியம் குறித்த கேள்விகளை பிரித்தானிய அரசுக் கவியான ஆன்த்ரு மோசனும் அமெரிக்க இலக்கிய விமர்சகரான ஸ்டாபன் ஸ்குவாரட்சும் எழுப்பியிருக்கிறார்கள். ஸடாபன் ஸ்குவார்ட்ஸ் நெருதா ஒரு மோசமான மனிதன் மட்டுமல்ல, ஒரு மோசமான கவி எனவும் தீரப்பு வழங்கியிருக்கிறார். ஆன்ட்ரு மோசன் ஒரு கவியாக நெருதாவின், மானுடநேயத்தை உயர்த்திப் பிடிப்பதுடன் நின்று, நெருதாவின் வாழக்கை வரலாற்றாசிரியர் ஆதம் பின்ஸ்டான் போலவே, நெருதா குறித்த மதிப்பீட்டுருவாக்கத்தை வாசிப்பவர்களிடமே விட்டுவிடுகிறார். நெருதாவின் ஸ்டாலினியமும் அவரது பாலறுவு வேட்கையின் அரசியலும், குறித்து உலக மொழிகள் போலவே, தமிழிலும் நெருதாவின் படைப்புகள் மீதான பன்முக வாசிப்புகளின் அவசியம் பற்பல நோக்குள்ள படைப்பாளிகளால் கோரப்படுகிறது.
நெருதாவின் ஆளுமையின் மீது மட்டுமல்ல ஜெர்மானியக் கவியும் நாடகாசிரியனுமான பெர்ட்டோல்ட் பிரெகட் மீதும், போர்த்துகீசிய நாவலாசியரும் இன்றளவும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான நோபல் பரிசாளர் ஸரமாகோவின் மீதும்,, பிடல் காஸ்ட்ரோவின் நண்பராக இருப்பதாலும் காஸ்ட்ரோவின் அரசியல் குறித்து விமர்சிக்காததாலும் கார்ஸியா மார்க்வஸ் மீதும், இத்தகைய விமர்சனங்கள் இருக்கின்றன. முத்தாய்ப்பாக இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பவர் இலத்தீனமெரிக்கப் புரட்சியாளரான சேகுவேரா. முதலில் இந்த விமர்சனங்கள் எந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகின்றன எனப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். எழுத்தாளர்களின் மீதான ஸ்டாலினிய கலாச்சார அடக்குமுறை குறித்த விவாதங்கள் அன்னா அக்மதோவா, ஒசிப் மென்டல்ஸ்டாம், சால்செனித்சன் போன்றவர்களிலிருந்து துவங்குகிறது. ஸ்டாலினிய அரசியல் பரிமாணம் தொடர்பான விமர்சனங்கள் டிராட்ஸ்கியர்களால்தான் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. ஸ்டாலினியத்தையும் இலக்கியவாதிகளையும் சம்பந்தப்படுத்திய விவாதங்களை இன்று டிராட்ஸ்கியர்கள் அழுத்தம் கொடுத்துப் பேசுவதில்லை எனும் உண்மை இன்று மிக முக்கியமானதாகும். ஏனெனில் ஸ்டாலினிய எதிர்ப்பின் பெயரில் இன்று அமெரிக்க ஐரோப்பிய இலக்கியவாதிகள் முன்வைப்பது மார்க்சிய எதிரப்பு அரசியல் என்பதனை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியில் டிராட்ஸ்க்கியர்கள் சேகுவேரா, நெருதா, காஸ்ட்ரோ, டேனியல் ஒர்ட்டேகா, தோமஸ் போர்ஹே போன்ற அனைத்து இலத்தீன் அமெரிக்கப் புரட்சியாளர்களையும் ஸ்டாலினிஸ்ட்டுகள் என்றுதான் மதிப்பீடு செய்கிறார்கள். கியூப அரசைக் கூட டிராட்ஸ்க்கியர்கள், ஸ்டாலினிய வழியிலான அமைப்பு எனவே வரையறை செய்கிறார்கள். பிரித்தானியப் பேராசிரியரும் இலத்தீனமெரிக்க இலக்கிய அரசியல் ஆய்வாளருமான மைக் கொன்சலாசின் கியூபா அரசு குறித்த, சேகுவேராவின் வாழ்வு குறித்த எழுத்துக்கள் (che guevera and the Cuban revolution: mike gonzalez : bookmarks : 2004) இவ்வகையில் வாசிக்கத்தக்கதாகும். குவேராவின் ஸ்டாலினிய மரபுார்ந்த அரசியல் நிலைபாடுகளை விமரசத்துக் கொண்டே செல்லும் கொன்சலாஸ், குவேராவினது புரட்சிகர அறவியலின் முக்கியத்தவத்தை மறுதலித்துவிட முயல்வதில்லை.
ஸ்டாலினியம,, அதிகாரம், இலக்கியவாதிகள் தொடர்பான விவாதங்கள் இன்றளவும் காலப் பொறுத்தமுள்ள, விவாதிக்கத்தக்க பிரச்சினையாகவே இருக்கிறது. ஈழ தேசிய இனப் போரட்டத்தின் போக்கிலும் இத்தகைய பிரச்சினைகள் எதிர்காலத்திலும் விவாதிக்கத்தக்கதாகவே இருக்கப் போகிறது. பிடல் காஸ்ட்ரோவையும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும், கியூப எழுத்தாளர்கள் மீதான காஸ்ட்ரோவின் நடவடிக்கைகயையும் நாவலாசிரியர் கார்ஸியா மார்க்வெஸ் கண்டிக்கப் போவதில்லை. ஐம்பதுகளில் ஸ்டாலின் தொடர்பாக பாப்லோ நெருதாவும் பெர்ட்டோல்ட் பிரெக்டும் இவ்வாறான நிலைபாடுகளைத்தான் மேற்கொண்டார்கள். அவர்களுக்கு சோசலிசம் எனும் கனவு மெய்யப்படவேணடும் எனும் வேட்கையிருந்தது. அதுதான் கொடுங்கொன்மையான உலகிற்கான மாற்று என அவர்கள், கண்டார்கள். ஸ்டாலின், அந்தக் கனவின் காவலன் என அவர்கள் கண்டார்கள். ஸ்டாலினை வெளிப்படையாகக் கண்டிப்பதோ, அவருக்கு எதிரான வெளிப்படையான நிலைபாடு எடுப்பதோ எதிரிகளின் முகாமில் தம்மைக் கொண்டு நிறுத்திவிடும் என அவர்கள் நினைத்தார்கள். பிரெக்டும் சரி நெருதாவும் சரி ஸ்டாலின் இலக்கிய விருதை இதனால்தான் ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர் போராட்டத்தைக் கிழக்கு ஜெர்மன் ஆட்சியாளர்கள் ஓடுக்கிய போது அரசை விமர்சித்த பெர்டோலட் பிரெக்ட் பிற்பாடு அத்தகைய வேலைநிறுத்தம் எதிரப்புரட்சியாளர்களுக்குப் பயன்பட்டுவிடும் என்பதால் அவர்களை வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளுமாறு கோரினார்.
ஸ்டாலின் இலக்கிய விருதைக் கடுமையாக விமர்சித்தவர்களாக டிராட்ஸ்கியும் சர்ரியலிசக் கோ,பாட்டாளரான ஆந்த்ரே பிரிட்டனும் இருந்த போதும், நெருதாவும் பிரெக்டும், ஸ்டாலின் விருதினை ஏற்றவர்களாவே இருந்தார்கள். முரண்நகையாக பெர்டோல்ட் பிரெக்ட் முன்வைத்த அன்னியமாதல் எனும் கலைக்கோட்பாடு சோசலிச யதார்த்தவாதத்திற்கு எதிரானதாகவும், பிக்காஸோவின் ஓவியங்கள் மனநிலை பிறழ்ந்தவனின் ஓவியங்கள் என ஸ்டாலினியவாதிகளால் மதிப்பீடு செய்யப்பட்டனவாகவும் இருந்தன. இலத்தீனமெரிக்காவில் பெரும்பாலுமான புரட்சியாளர்களும் இலக்கியவாதிகளும் ஸ்டாலினால் ஆகர்சிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். டிராட்ஸ்க்கியோடு காதல் கொண்டிருந்த மெக்சிக்கப் பெண் ஓவியரான பிரைடா காலோ, டிராட்ஸ்க்கியைக் கொல்வதற்கு ஸ்டாலினிஸ்டுகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டு உண்டு. அதற்காக அவர் கை செய்யப்பட்டு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். நெருதா ஸ்டாலின் குறித்து கவிதை எழுதியதைப் போல, ஸ்டாலின் உருவாப்படத்தைத் தீட்டினார் பிரைடா காலோ. ஸ்டாலின் உருவப்படத்தைத் தீட்டிய மற்றொருவர் ஸ்பானியரான பாப்லோ பிக்காஸோ.
2
பாப்லோ நெருதா நுாற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்து வகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களைக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. பிரித்தானிய கத்தோலிக்கக் கிறித்தவ அறவியலாளரும் வலதுசாரி வரலாற்றசிரியருமான போல் ஜான்சின் புரட்சியாளர்களதும் மார்க்சியர்களதும் பாலுறவு மற்றும் வன்முறை குறித்து விரிவான நுாலை எழுதயிருப்பதன் பின்னணியை நாம் பரிந்து கொண்டால், நெருதா தொடர்பாக அவரது நுாற்றாண்டில் கட்டப்படும் இத்தகைய விவாதங்களின் பின்னணியையும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் மாரக்ஸ், சே குவேரா, ஸார்த்தர், மாவோ என எவரும் தப்பவில்லை. இவ்வகையில் மிகவிரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கலைஞுரது வாழ்வு பாப்லோ பிச்காசோவினுடையதாகும். பாப்லே பிச்சாசோவோடு உறவு கொண்டிருந்த பற்பல பெண்களின் புத்தகங்கள் தறபோது வெளியாகிவிட்டது. அதில் புகழ்பெற்ற நுால் பிக்காசோவின் மனைவியான பிராங்காய்ஸ், ஜில்லெட்டினுடையது. கத்தோலிக்க ஒழுக்கப் பார்வையிலிருந்து பிக்காஸோவின், பாலுறவு, வன்முறை குறித்து அரியானா ஹபிங்டன் ஸ்டாசினோபெலஸ் எழுதிய Creater and Destroyer என்றொரு வாழ்ககை வரலாற்று நுால் கூட வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய வலதுசாரிக் கோட்பாட்டளார் ரோஜர் ஸ்குருட்டன் அந்நுாலை விதந்து பாராட்டியவர்களில் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பாப்லோ நெருதாவோடு உறவு கொண்டிருந்த பெண்களால் எழதப்பப்பட்ட அப்படியான நுால்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. நெருதாவுக்கும் பிக்காஸோவுக்கும் பல வகைகளில் ஒற்றமையுண்டு. தம்மோடு உறவு கொண்டிருந்த பெண்கள் குறித்து தமது படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவர்கள் அவர்கள். பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர்கள் அவர்கள். அவர்கள் இருவரது வாழ்விலும் மிகவெளிப்படையான ஓப்புமையுள்ள பொறுத்தஙுகள் உண்டு. முதல் மனைவியரை அடுத்து அவரோடு உறவு கொண்டவர்கள் அனைவரும், இவர்களது முதல் மனைவியர் குறித்தும் இவர்களது பல பெண்களுடனான தொடர்பு குறித்தும் அறிந்தவர்கள்தான். அதனைத் தெரிந்து கொண்டே இவர்கள் தம்மை இந்த ஆளுமைகளோடு பிணைத்துக் கொள்கிறார்கள். வயது ரீதியில் ஒப்பிடுகிறபோது சமூக அங்கீகாரம், புகழ் போன்றவற்றறோடு, பற்பல அரசியல் சமூகக் காரணங்களாலேயே இத்தகைய மனிதர்களோடு வாழ அப்பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்ட ஆணின் மீது மட்டுமே கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதிலுள்ள் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே மிகைப்படுத்துப்படும் ஆப்த்தும் இதில் உள்ளது.
இலத்தீனமெரிக்க கலாச்சாரத்திலும், மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஆண் பெண் உறவு தொடர்பான பார்வை என்பது கிழக்கத்திய சமூகங்களின் பார்வை போன்றதல்ல. ஸார்த்தர் எனும் எழத்தாளரதும் ரிவைரோ எனும் ஓவியரதும், வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், திருமணம் மீறிய நிறைய உறவுகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். இவர்களோடு சமகாலத்தில் வாழந்த ஸீமன் தீி பூவாவும் பிரைடா கோலாவும் அதேகாலத்தில் பற்பல ஆண்பால் உறவுகளை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஓருத்தி, துரோகம், திருமணம் போன்ற கருத்தாக்கங்கள் இவர்களது வாழ்வில் எந்தவிதமன புனித அர்த்தமும் பெறுவதில்லை. இன்று இவ்வகையிலான விவாதங்களை கத்தோலிக்கக் கிறித்,தவக் கருத்தியல் ஆதிக்கத்துக்குள்பட்ட அமெரிக்க இலக்கியவாதிகளும,, பழமைவாதக் கருத்துருவப் பாதிப்பு அதிகமள்ள பிரித்தானிய இலக்கிய விமர்சகர்களுமே முன்னிலைப்படுத்துகிறார்கள். வைதீக இந்திய மரபுகளில் ஊறிப்போனவர்களாக இருக்கும் இந்திய எழுத்தாளர்களும் இவ்வகையிலேயே இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள். பாப்லோ பிகாஸோ போலவே, பாப்லோ நெருதா குறித்த பெண்நிலைவாத வாசிப்புகளும் அவரது கலைஆளுமையில் எந்தவிதமான புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சிவிடப் போவதில்லை. இரட்டை நிலைப்பாடும், சுரண்டலும், சுயநலமும் கொண்டவர்களாக ஆண்கள் மட்டுமே இல்லை. பிராங்காய்ஸ் ஜில்லெட்டினதும் பிரைடா கோலாவினதும் ஸீமன் தி புவாவின் வாழ்வுண்மைகளும் இதனையே தெளிவுபடுத்துகின்றன. பாப்லோ பிக்காஸோவையும் நெருதாவையும் மாரக்ஸைப் போல, குவேராவைப் போல மனிதர்களாக விட்டுவிடுவதே நல்லது.
பெண்நிலைவாத அடிப்படையிலான சரியான அரசியல் இந்தக் கலைஞுர்,களின் வாழ்வில் செல்லுபடியாகாது. புிரக்ைஞுபூர்வமான ஆண் பெண் உறவுகளில் மூன்றாவது மனிதனாக நின்று தீரப்பு வழங்குவதற்கு ஒரு இலக்கிய விமர்சகனக்குரிய தகைமை மிகுந்த கேள்விக்கிடமானது. நெருதாவோ பிக்காஸோவோ யாரையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியிருந்தாலோ, அல்லது கள்ளங்கபடறியா சிறுமியரது அறியாமையைத் தமது பாலியல் சுரண்டலுக்குப் பலியாக்கி இருந்தாலோதான், இன்று அவர்களது உறவுகள் மீதான தார்மீகக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியும். இந்தோனேிசியாவில் நெருதா மரியா அன்டோனியட்டா ஹேக்னரை மணந்து கொண்டதும், அதன் பின்பு அவர் சிலிக்கும் ஸ்பெயினுக்கும் நகர்ந்தபோது வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததற்குமான காரணங்களாக அவரது தீவிரமான பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ் ஆதரவு அரசியல் ஈடுபாட்டையும், கவிதை மனிதனது எதிர்ப்பரின் அங்கமாகவும் அரசியல் தன்மை கொண்டதாகவும் ஆகவேண்டும் எனும் நெருதாவின் கவிதை ஈடுபாட்டையுமே பிரதானமாகக் காண்கிறார் அய்டா பிகுரோ இன்வுன்சா எனும் நெருதாவின் நண்பர். நெருதாவிற்கு முன்பு ஒரு கேள்வி எழந்தது. தனது கவிதைக்குப் பொறுப்பாகவிருபபதா அல்லது தனது பெண் உறவுக்குப் பொறுப்பாக இருப்பதுவா என்பதுதான் அந்தக் கேள்வி. தனது கவிதைக்குப் பொறுப்பாகவிருப்பது என நெருதா முடிவு செய்தார் என்கிறார் அய்டா பிகுரோ இன்வுன்சா.
தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல்வாதிகளதும் கலை இலக்கியவாதிகளதும் படைப்புகள், நடவடிக்கைகள் குறித்த பெண்ணிலைவாத வாசிபபுபகளை தாம் வாழ நேர்நத சூழலில், மொழியில் துவங்கி வைப்பதுதான், நெருதா மீதான பெண்ணிய வாசிப்பைக் கோருகிறவர்கள்,, செய்ய வேண்டிய முக்கியமான பணியாகும். அவ்வாறான வாசிப்புகள் மேற்கொள்ளப்படுகிறபோது மகத்தான படைப்பாளிகளின் படைப்புகள் மற்றும் வாழ்வின் மீதான பெண்ணிலைவாத வாசிப்புகள் என்பது பொய்த்துப் போவதை இவர்கள் காணவியலும். ஏனெனில் மனித உறவுகள் கருத்தியல் வரையறைகளுக்கு அகப்படாமல் நழுவுவதை இவர்கள் அப்போது காணமுடியும்.
இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா, ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு,ஸ்டாலினது அத்துமீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பதாக இருக்கிறது. நெருதாவின் ஸ்டாலினிய ஆதரவு நடவடிக்கைகளால்தான் 1947 ஆம் ஆண்டு நெருதாவின் மீதான சிலி அரசின் நடவடிக்கை தொடங்கியதென்றும், அதனாலேயே அவர் சிலியிலிருந்து ரகசியமாகத் தப்பி ஐரோப்பாவுக்குச் சென்றார் என்றும் நெருதாவின் மீதான குற்றப்பட்டியல், விரிகிறது. ஸ்டாலினிஸ்ட்டாக நெருதா, ஸ்டாலினுடைய அரசியல் எதிரியான டிராட்ஸ்க்கியைக் கொலை செய்வதற்கு உதவினார் என நெருா மீது குற்றம் சுமத்துகிறார் அமெரிக்க இலக்கிய விமர்சகரான ஸ்டாபன் குவார்ட்ஸ். 1940 ஆம் அண்டு நெருதா சிலிநாட்டுத் துாதராக இருந்தபோது டிராட்ஸ்கியைக் கொல்வதற்காக மெக்சிககோவுக்குச், செல்லவிருந்த ஓருகுழுவுக்கு கள்ளமாக சிலி பர்ஸ்போரட்டுகளை நெருதா வழங்கினார். டிராட்ஸ்கி அந்தத் தாக்குதலில் தப்பினாலும் பிற்பாடு அவர் கொல்லப்பட்டார். இதைப் போலவே டிராட்ஸ்கியின் மீதான தாக்குதலில் பங்குபற்றிய மெக்ஸிக்க ஓவியரான டேவிட் கிக்வியராஸ் பினையில் தங்கியிருந்த வேளை, அவர் மெக்ஸிக்கோவிலிருந்தும் வழக்கிலிருந்தும் தப்ப நெருதா சிலி பாஸ்,போரட் வழங்கினார் எனக் குறிப்பிடுகிறார் ஸ்டாபன் குவார்ட்ஸ்.
நெருதாவின் ஸ்பானியக் காலகட்டம், சிலி காலகட்டம் என நெருதாவினது அரசியல, படைப்பு நடவடிக்கைகளை நாம் முதலில் புரிந்து கொள்வது நல்லது. 1904 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பாரல் எனுமிடத்தில் ரிக்கார்டோ பொசால்தோவாகப் பிறந்த ஆண் மகவு, 1920 ஆம் அண்டு கவிதை எழுதுவதற்காக நெருதா எனும் பெயரை ஏற்றது. செக்கோஸ்லாவாக்கிய எழுததாளர் ஜோன் நெருதாவின் பெயரினால் உந்தப்பெற்றே இப்பெயரினை ஏற்றார் பாப்லோ நெருதா,. 1924 ஆம் ஆண்டு அவர் வெளியட்ட காதல் கவிதைகள் அவருக்கு முழு ஸ்பானிய மொழிப்பரப்பிலும் ரசிகர்களைக் கொண்டு வந்தது. 1927 ஆம் ஆண்டு சிலியின் துாதராக அவர் ரங்கூனுக்குச் சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும் சிங்கப்பூரிலும் ரங்கூனிலும் அவர் துாதராகப் பணியாற்றினார். இநத ஆறு ஆண்டுகளில்தான், நெருதா ஆங்கில மொழிப் படைப்பாளர்களைப் படிக்கிறார். பிராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வாலட்விட்மின், ஸர்ரியலிஸ்ட்டுகள் போன்றோரை நெருதா படிக்கிறார். 1930 ஆம் அண்டு ஜாவாவில் மரியா அன்டோனியட்டா ஹேக்னர் என்னும் பெண்ணை மணந்துகொள்கிறார். அவருக்கு நோய்வாய்ப்பட்ட ஒரு மகளும் பிறக்கிறார். அவர்களது திருமணம் 1936 ஆம் ஆண்டு முறிவடைகிறது. 1932 ஆம் அண்டு சிலிநாட்டின துாதராக அர்ஜன்டானா செல்கிறார்.1936 ஆம் ஆண்டு அர்ஜன்டானாவில் டெலியா டெல் காரில் எனும் பெண்ணோடு அவருக்கு உறவு ஏற்படுகிறது.
1932 இல் அர்ஜன்டானாவுக்கு வரும் ஸபானியக் கவி கார்சியா லோர்க்காவுடன் நெருதாவுக்கு உறவு ஏற்படுகிறது. 1934 ஆம் ஆண்டு ஸ்பெயின் துதாராகி பார்சிலோனா செல்லும் நெருதா, விரைவில் மேட்ரிட்டுக்க மர்றிச் செல்கிறார். 1936 ஆம் ஆண்டு சர்வாதிகாரி பிராங்கோவின் தலைமையில் வலதுசாரி ராணுவம், கவிழ்ப்பு நடவடிக்கையில் ஸ்பெயினைக் கைப்பற்றுகிறது. இந்தச் சம்பவம் நெருதாவின் வாழ்வுத், திசையையே மாற்றுகிறது. அரசியல் அவரது படைப்பிலிருந்தும் வாழ்வினின்றும் பிரிக்கவியலாததாக ஆகிறது. அவரது பிராங்கோ எதிரப்பு அரசியல் காரணத்தினால் சிலி அரசு அவரை ஸ்தானிகர் பொறுப்பிலிருந்து வெளியேற்றுகிறது. பாசிசத்துக்கு எதிரான கலைஞுர்களின் கூட்டமைப்பை ஸ்பெயினில் கட்டுகிறார் நெருதா. 1937 ஆம் ஆண்டு அக்டோபரில் நெருதா நாடு திரும்பி பாசிசத்திற்கு எதிரான அணியை சிலியிலும் அமைக்கிறார்.
ஸ்பெயினில் பாசிசம் வெற்றி பெற்றதனையடுத்து ஸ்பெயினிலிருந்து, வெளியேறிய குடியரசுவாதிகளை, இலத்திீனமெரிக்காவுக்குக் குடியேற்றும் திட்டத்திற்குப் பொறுப்பாக சிலி நாட்டின் சார்பில் 1939 ஆம் ஆண்டு பாரிஸ் வந்து சேர்கிறார், நெருதா. 1939 இறுதியில் சிலி திரும்பும் நெருதா, 1940 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் சிலி துாதராகப், பொறுப்பேற்கிறார். ஸ்பெயினிலிருந்து தப்பிய பல கலைஞுர்களும் இலக்கியவாதிகளும் மெக்சிக்கோவில், குடியுரிமை பெறுகிறாா,கள். இவர்களில் பெரும்பாலுமான கலைஞுர்கள் நெருதாவின் ஸ்பெயின் நாட்களின் நண்பர்கள். 1943 ஆம் அண்டு நெருதா மறுபடியம் சிலி திரும்புகிறார். 1944 ஆம் ஆண்டு சிலி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிறார. செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்படும் நெருதா கட்சி ஆதரித்த காரணத்திற்காக, கேப்ரியல் கொன்சலாஸ் விடோவுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் ஈடுபடுகிறார். ஜனாதிபதியாக பெறறி பெறும் கொன்சலாஸ் தனது வாக்குறுதிகளை மீறி கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்கிறார்.
1947 ஆம் ஆண்டு நெருதா கொன்சலாசுக்கு எதிராக ஒரு திறந்த கடிதம் எழுதுகிறார். நெருதாவின் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படுிகறது. நெருதா பிடிபட்டு கொல்லப்பட்டுவிட்டார் என்று கொன்சலாஸ், அரசு அறிக்கை வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனையின் பெயரில் தலைமறைவாகும் நெருதா, தனது புகழ்வாய்,ந்த நெடுங்கவிதையான காண்டோ ஜெனரலை எழுதிய காலம் இதுதான். குதிரையின் மேலேறி ஆண்டஸ் மலையினைக் கடந்து அர்ஜன்டானாவுக்குள் வரும் நெருதா, தனது குவாதமலா நண்பரான நாவலாசிரியர் மிகுவல் ஏஞ்சல் அஸ்துரியாஸ் பெயரிலான போலி பாஸ்போரட்டுடன், பாரிஸ் வந்து சேர்கிறார் 1950 ஆம் ஆண்டு மறுபடி மெக்ஸிக்கோ திரும்பும் நெருதா, அங்கு தனது கான்டோ ஜெனரல் கவிதை நுாலை வெளியிடுகிறார்.
கொன்சலாசுக்கு எதிரானதாகத் துவங்கிய கான்டோ ஜெனரல், முழு இலத்தினமெரிக்க மக்களின் எதிர்குரலாகி, காலனியாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதற்கும் எதிரானதாகி, சோவியத் கனவு, ஸ்டாலின் எனும் மாமனிதன் மீதான பெருமிதம் என்பதாக முடிகிறது. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும நெருதா, கம்யூனிஸ்ட் கட்சியின் துாதுவனாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் கியூபாவுக்கும் விஜயங்கள் மேற்கொள்கிறார். 1971 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் தனது நண்பரான அலண்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுகபட்டதையடுத்து சிலிநாட்டின் அதிகாரபூர்வத் துதராக ஐரோப்பா திரு,ர்புகிறார், நெருதா. இந்த ஆண்டு நெருதாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கிறது. புற்று நோயினால் பாதிக்கப்படும் நெருதா, அமெரிக்க ஆதரவுடனான சிலி ராணுவக் கவிழ்ப்பினால் தனது நண்பன் அலண்டே கொலை செய்யப்பட்ட பின்னணியில், 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி பினோசேவின் ராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் மரணமுறுகிறார்.
பாசிச எதிர்ப்பில் கலைஞுர்களை ஒன்றுபடுத்துவது, ஸ்பெயினில் பாசிசத்தினால் பாதிப்புப் பெற்ற படைப்பாளிகளையும் கலைஞுர்களையும் சாத்தியமான இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குடியேற்றுவது என்பதுதான் துாதரக அதிகாரியாக நெருதாவின் பொறுப்பாகவிருந்ததே அல்லாமல், அந்தக் காரணத்தாலெயே பாஸ்போர்ட வழங்குிற பொறுப்பில் நெருதா இருந்தாரே அல்லாமல், டிராட்ட்ஸ்க்கியைக் கொல்வதற்காகவே நெருதா திட்,டமிட்டுச் செயல்பட்டார் என்பதில், கிஞ்சிற்றும் உண்ணமயில்லை. டிராட்ஸ்க்கி மெக்ஸிக்கோவில், வந்து தங்கியிருந்ததால், ஸ்பானிய மொழிபேசும், உலகெங்கிலும் ஸ்டாலின்- டிராட்ஸ்க்கி பிரச்சினையில் நிலைபாடு எடுக்க வேண்டிய நிலையில் அங்கு வாழும் கம்யூனிஸ்டு,கள் விட்டு வைக்கப்பட்டிருந்தனர். இதில் சிலர் டிராட்ஸ்க்கியைக் கொல்வதை தமது பாசிச எதிரப்பு நடவடிக்கையின் அங்கமாகவும் கருதினர். ஸ்பெயினிலிருந்து குடியேறிய கலைஞுர்களில் சிலரும் இந்த நிலைபாட்டினால் பாதிப்புற்றிருந்தனர். அந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் சிலர் நெருதாவினால் பாஸ்போர்ட், தரப்பட்ட சிலராகவும் இருந்தது யதேச்சையானதே அல்லாது, நெருதாவின் நேரடி நடிவடிக்கையின் கீழ் டிராட்ஸ்க்கி கொலை திட்டமிடப்பட்து என்பது வெறுமனே அவதுாறு அன்றி வேறில்லை.
3
ஸ்டாலின் குறித்த ஐரோப்பிய மதிப்பீடுகளுக்கும்,, ஐரோபியரல்லாத பிற நாடுகளின் மார்க்சியரது அணுகுமுறைகளுக்கும் புரிதல்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஸ்டாலினது கடுமையான போக்கை ஐரோப்பியரல்லாத பிறர் தமது நாடுகளில் நிலவும் அமைப்புக்கு ஒப்பவே புரிந்து கொள்ளவும், வியாக்யானப்படுத்தவும் விளைகிறார்கள். இலத்தீனமெரிக்க யதார்த்தம் என்பது பற்பல அழுத்தமான தனித்தன்மைகள் கொண்டதாகும். ஸ்டாலின் குறித்த விமர்சனத்தை, குறிப்பாக ஸ்டாலின் இட்லரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை பிடல் காஸ்ட்ரோ கண்டனம் செய்திருக்கிறார். ஆனால் குவேரா பரவசத்துடனான தனது ஸ்டாலினிய ஆராதனையை இரண்டு சந்தரப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 1953 ஆம் ஆண்டு குவேரா எழுதிய கடிதமொன்றில,, எமது தலைவர் ஸ்டாலினது படத்தின் முன்பாக பிரதிக்ைஞு மேற்கொள்கிறென் என எழுதும் அவர், பிற்பாடு தனது உறவினப் பெண் ஒருவருக்கு எழுதிய கடிதமொன்றில், தான் இரண்டாவது ஸ்டாலின் எனக் கையொப்பமிடுவதன், மூலம் தனது ஸ்டாலின் அபிமானத்தினைத் தெரிவிக்கிறார்.
கிழக்கு ஐரோப்பா போல, இரண்டாம் உலகப் போரையடுத்த பாசறைக் கம்யூனிசத்தினால் உருவானவையாக இலத்தீனமெரிக்க நாடுகளின் விடுதலை இயககங்கள் இல்லை. இனக்கொலைச் சிந்தாந்தமான பாசிசதத்திற்கு எதிரான ஜனநாயக வேட்கை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் கொழுந்துவிட்டு எரிந்ததைப் போல இலத்தீனமெரிக்க நாடுகளின் சமூகக் கொந்தளிப்புகள் அமையவில்லை. 500 ஆண்டுகால மேற்கத்திய காலனியாதிக்கத்தின் அனுபவங்களுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் மேற்கத்திய நாடுகளதும் அனுசரணையுடன் ஆண்ட ராணுவச் சர்வாதிகாரிகளதும் ஆட்சியின் கீழ்தான் முழு இலத்தீனமெரிக்க மக்களும் வாழ்ந்து வந்தார்கள். ராணுவத்தின் கொடூரமான ஆயுத அடக்குமுறையின் கீழ் வாழ்ந்தவர்கள், அதே அளவு கடுமையான போக்குடன் கூடிய ஆயுத விடுதலை இயக்கங்களையே உருவாக்க வேண்டியிருந்தது.
யோசெ மார்த்தி, ஜபாட்டா, காஸ்ட்ரோ, குவேரா, அபிமல் குஸ்மான், டேனியல் ஒர்ட்டேகா, கமான்டன்ட் மார்க்கோஸ் போன்றவர்களை, அவர்களது எதிரியின் பாலான கடுமையான நடவடிக்கைகளை இவ்வாறு மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கடந்த அரைநுாற்றாண்டாக சகலவிதமான சர்வதேச நெறிமுறைகளையும் மீறியபடி கியூபாவின் மீது அமெரிக்க எனும் பகாசுர நாடு விதித்துவரும் பொருளியல், கலாச்சாரத் தடைகளின் பின்னணியில்தான் பிடல் காஸ்ட்ரோவின் கடுமையான போக்கை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். கியூபாவின் மாற்றுக் கருத்தாளர்களை ஆதரிக்காத எழுத்தாளரான கார்சியா மாரக்வசின் அரசியலையும் இவ்வாறு மட்டுமே நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு தீவிர அயுதப் போராட்ட கம்யூனிஸமாகவே இலத்தீனமெரிக்க கம்யூனிஸம் 1990 கள் வரையிலும் இருந்து வந்திருக்கிறது. தொண்ணுாறுகள் வரையிலும் கூட, தான் எதிரிகள் என வரையறுத்துக் கொண்டவர்களின் பாலான ஸ்டாலினது கருணையற்ற நடைமுறைகள் இவ்வாறுதான் இலத்தீனமெரிககப் புரட்சியாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான அத்துமீறலாகத் தோன்றவில்லை. 1953 இல் குவேரா ஸ்டாலினை வழிபடவும் அதுவே காரணம்.
1956 ஆம ஆண்டு இருபதாவது கட்சி காங்கிரஸில் குருச்சேவ், ஸ்டாலினது அத்துமீறல்கள் குறித்து முன்வைக்காத வரையிலும் மேற்கில் டிராட்ஸ்க்கியவாதிகள் அல்லாது, மேற்கல்லாத நாடுகளில் ஸ்டாலினியம் குறித்து பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் எவற்றிலும் ஸ்டாலின் குறித்த விவாதங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லை. இன்றளவிலும் மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற எதிர் ஸ்டாலினிய விமர்சனம் என்பது உலகின் பிறபாகங்களில் நடைபெறவில்லை. காரணமாக மதபாசிசமும் ராணுவச் சர்வாதிகளாரிகளும் மலிந்த எமது நாடுகளில் தொலைதுார மேற்கில் நடந்த பிரச்சிைனைகளை¢ எமது அனுபவத்துடன், வைத்துப் பார்க்க, மூலாதாரமாக வைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இந்த நாடுகளின் புரட்சிகர இயக்கங்களுக்குத் தோன்றவில்லை. ஸ்டாலினது கடும்போக்கும் மாவோவினது கலாச்சாரப் புரட்சி போன்ற கருத்தாக்கங்களும் அவைகள் தோன்றிய நாடுகளில் நிராகரிக்கப்பட்ட பின்னும் பிற நிலப்பரப்புகளில் அக்கருத்துக்கள் பலமுடன் இருப்பதற்கு அந்தந்த நாடுகளின் யதார்த்த நிலையே காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் இட்லரையும் பாசித்தையும் ஆதரிக்கிற இந்துத்துவவாதிகள், ஸ்டாலின் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறபோது, பாசிச எதிரப்பு நடவடிக்கையாளனாக மாரக்சியர்கள் ஸ்டாலினை முன்நிறுத்த வேண்டிய அவசியம் என்றைக்கும் பொறுத்தமுடையதுதான். ஸ்டாலின் குறித்த விமர்சனத்தை மாரக்சியர்கள் அல்லாதவர்கள் மேற்கொள்வதற்கும் மார்க்சியர்கள் மேற்கொள்வதற்கும் இடையில் நிறைய அணுகுமுறை வித்தியாசங்கள் இருக்கிறது. ஸ்டாலினியத்தை வரலாற்று ரீதியிலும் கூட்டுப் பெறுப்பேற்றல் எங்கே தவறியது எனும் அடிப்படையிலுமே மாரக்சியர்கள் அணுகுகிறார்கள். தொழிலாளி வர்க்கத் தலைமையில் அமைய வேண்டிய அரசு ஒரு சர்வாதிகாரியின், அரசாக எவ்வாறு மாறியது என்பது குறித்ததாக அவர்களது விமர்சனம் அமைகிறது. மககள்திரள் அரசியல் மேலிருந்து சோசலிசத்தைக் கட்டுதல் இரண்டுக்கமான முரண்கள் குறித்ததாக அவர்களது விமர்சனம் அமைகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனது மூலதன விரிவாக்கமும் வரைமுறையற்று வளர்ந்து வரும் சூழலில், மாரக்சியப் புத்தாக்கத்திற்குத் தடையாக ஸ்டாலினியம் இருப்பதையறிகிற மார்க்சியர்கள், ரோஸா லக்ஸம்பர்க், கிராம்ஸி, லெனின் வழியிலான ஒரு மாற்றை, ஸ்டாலினிய விமர்சனத்தின் மூலம் எட்ட நினைக்கிறார்கள். மாரக்சியர்கள் அல்லாதவர்கள் மாரக்சித்தினுள், உறைந்திருக்கும் புரட்சிகர மாற்றை மறுப்பவர்களாக, ஸ்டாலினியத்தை மார்க்சியத்தடன் சமப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஸ்டாலினில் துவங்குகிற இவர்கள் அறுதியில் இன்று இயங்கும் அனைத்து மாரக்சிய இயக்கங்களுக்கு எதிராகவும் வந்து நிற்கிறார்கள். ஸ்டாலினை விமரசிக்கப் புகுந்த அனா அரந்த,, மார்க்சின் விடுதலைத் தேட்டத்தின் முன் தோற்றுப் போவதை இந்த ஸ்டாலினிய எதிர்ப்பாளர்கள் நிராகரித்து விடுகிறார்கள்.
ஸ்டாலின் பாலான அனுசரனையான பார்வை கொண்டவர்களாக அன்று உலகெங்கிலும் நிறைய கலைஞுர்கள் இருந்திருக்காறகள். பால் எலுவார்ட், பிக்காஸோ, ஸரமாகோ, நெருதா, பிரெக்ட், கைபி ஆஸ்மி போன்றவர்களொடு தமிழகத்தைச் சேரந்த கம்யூனிஸ்ட்டான ஜீவா கூட ஸ்டாலினால் ஆகர்சிக்கபட்டவராகவே இருந்திருக்கிறார். ஸ்டாலின் என்ற பெயர் ஐரோப்பாவில் அல்லாமல் பிற இடங்களில் இன்னும் அவப்பெயராகவோ கெட்ட சொல்லாகவோ கருதப்படுவதில்லை என்பதைச் சொல்ல தமிழக திராவிட அரசியல் யதாரத்ததே போதும்.
4
நெருதா அன்று ஸ்டாலினை ஆதரித்து நிற்க இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக ராணுவச் சர்வாதிகாரங்களால் அடக்குமுறைக்கு உளளாகிவந்த இலத்தீனமெரிக்க யதாரத்தத்தில் ஸ்டாலினது கடும்போக்கு ஒரு இலத்தீனமெரிக்க கம்யூனிஸ்டாக நெருதாவுக்கு உவப்பானதாக இருந்தது. இரண்டாவதாக ஸ்பெயினில் பாசிசத்துக்கு எதிராக கவி லோரக்கவின் மரணம் சார்ந்து அவர் பெற்ற அரசியல் அனுபவங்களும், பாசிச எதிரப்பாளனாக ஸ்டாலின் மீதான அபரிமிதமான ஈடுபாட்டை அவருக்குக் கொண்டு வந்தது. நெருதாவின் அரசியல் பிரக்ைஞு என்பது இநதக் காலகட்டத்திலேயெ உச்சமடைகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முப்பதுகளிலிருந்து அறுபதுகள் வரையிலுமான முப்பது ஆண்கள் நெருதாவின் வாழ்வில் அவர் பெற்ற அனுபவங்களே அவரது ஸ்டாலின் பாலான ஈடுபாட்டை உருவாக்கப் போதுமானதாகவிருந்தன. ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு மாரச் மாதம் மரணமுற்றபோது நெருதா ஸ்டாலினுக்காக ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார். அக்கவிதை ஸ்டாலினை உண்மையில் விதந்தோதும் கவிதைதான் என்பதில் அதனை வாசிப்,போர் சந்தேகப்பட நியாயமில்லை. ஸ்டாலின் மரணம் குறித்து நெருதா சொல்கிறார்:
அனைவரும் சேர்ந்து அங்கு நோக்கி படகுவலிப்போம்
துாரத்துக் கப்பல் தலைவனுக்கு கவி ஒரு செம்படவன் அதனோடு கடல்
தலைவன் மரணமுறும்போது அனைத்து மக்களுக்கும்
அவனொரு மரபை விட்டுச் செல்கிறான், அவன் வாழ்வு
மனிதர்களாயிருங்கள!,
அதுதான் ஸ்டாலினியச் சட்டம்
ஸ்டாலினிடமிருந்து நாம் கற்றுக் கொள்வோம்
அவரது நேர்மையான ஒருமை
அவரது இறுக்கமான தெளிவு
ஸ ஸ்டாலின் தான் நிலவு
மனிதனதும் மக்களினதும் ஆன முதிர்ச்சி
ஸ்டாலினிஸ்ட்டுகளே-
இந்தப் பெயரை நாம் பெருமிதத்துடன் ஏற்போம்
ஸ்டாலினிஸ்ட் பாட்டாளிகளே
எழுத்தர்களே பெண்களே
இந்த நாளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்!
ஓளி மறைந்துவிடவில்லை
நெருப்பு அணைந்துவிடவில்லை
மறையவொணா ஸ்டாலினிய யுகத்தில
ஒளி ரொட்டி தழல் நம்பிக்கை போன்றவற்றின்
பெருக்கம் மட்டுமேயுண்டு
சமீப ஆண்டுகளில் அந்தப் புறா, சமாதானம்
துன்புற்று அலைந்த அந்த ரோஜா
அவரது தோளில் இடம் பிடித்தது
ஸ்டாலின், அந்த மகத்தான மனிதன்
தனது நெற்றியின் உயரத்துக்கு அதனை எடுத்துச் சென்றான்
ஸ கடற்கரைப் பாறைகளில் ஒரு அலை மோதுகிறது
மாலன்க்கோவ் அவரது பணியைத் தொடர்வார்ஸ
என்று எதிர்வு கூறிய நெருதா, ஸ்டாலின் ஆராதனைக் கவிதை அன்றி பிற்பாடு ஸ்டாலின் பிரச்சினை குறித்து தனது நினைவுக் குறிப்புகளிலும் தனது நிலபாட்டை தெளிவாகப் பதிந்துமிருக்கிறார் :
பல்வேறு மனிதர்கள் நான் ஒரு கடுமையான ஸ்டாலினிஸ்ட் என நினைக்கிறார்கள். பாசிஸ்ட்டுகளும் எதிர்ப் புரட்சியாளர்களும் என்னை ஸ்டாலினது கவிதா வியாக்யானக்காரன் எனவும் விவரிக்கிறார்கள். இதனால் எல்லாம் நான் கேவலப்பட்டு, அழிந்துவிடப் போவதில்லை. பெரிய அளவில் குழம்பிப் போயிருக்கிற ஒரு காலத்தில் எந்தவிதமான முடிவுகளுக்கு வருவதும் சாத்தியம்தான்.
கம்யூனிஸ்டுகளான எமக்கு ஒரு சொந்தச் சோகம் என்னவெனில், நாங்கள் இதனை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். ஸ்டாலினியப் பிரச்சினையில் உள்ள பல்வேறு அம்சங்கள், எதிரி சொல்வது போல சரியானதுதான். அந்த உண்மைகள், எமைத் தள்ளாடும் நிைமைக்குத் தள்ளிவிடக்கூடியது. எம்மை ஒரு வலிமிக்க மனநிலைக்கு ஆட்படுத்தியிருக்கிறது. தாம் ஏமாற்றபட்டு வந்திருப்பதாகப் பலர், உணர்கிறார்கள். தவிர்க்கவியலாமல், எதிரியின் காரணத்தை அவர்கள் ஒப்புக் கொண்டு எதிரியின் பக்கம் போய்விடுகிறார்கள். மற்றும் சிலர், இருபதாவது கட்சி காங்கிரசின் போது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட இந்தக் கொடுரமான தகவுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருமையினை நீரூபித்திருக்கிறது எனவும், அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது எனவும் நம்புகிறார்கள். இதன் வழி இந்த வரலாற்று ரீதியிலான உண்மையை உலகம் பார்க்கட்டும் எனவும், இதற்கான தமது சொந்தப் பொறுப்பையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
நாம் நமது பொறுப்பைப் பகிர்ந்து கொள்வது உண்மையானால், இந்தக் குற்றங்களை மறுப்பதானது நம்மைக் குறித்த சுயவிமர்சனத்திற்கும் பகுப்பாய்வுக்கும் இட்டுச் செல்லும், நமது கருத்தியலோடு சாராம்சத்தில் பிளவுபடாத பகுதி இது. மீண்டும் இம்மாதிரியிலான கொடுமைகள் நிகழாது தடுப்பதற்கான கருவிதான் இது. இதுதான் என்னுடய நிலைபாடு : இருளுக்கு அப்பால்,நானறியாத ஸ்டாலின், யுகத்திற்கு அப்பால், ஸ்டாலின் எனது கண்களுக்கு முன் எழுந்தார், இலட்சியங்கள், கொண்ட ஒரு நல்ல குணமள்ள மனிதராக எழுந்தார். ஒரு சாதுவைப் போன்ற பொறுமையுடன், ரஷ்யப் புரட்சியின் மகத்தான பாதுகாவலனாக அவர் எழுந்தார். பெரிய மீசைகள் கொண்ட இந்தச் சின்னஞ்சிறு மனிதன் போர்க்காலத்தில் ஒரு மாபெரும் மனிதனாக இருந்தார். அவரது பெயரை உதடுகளில் உச்சரித்தபடி, செஞ்சேனை இட்லர் எனும் பூதத்தினது அதிகாரத்தை மோதி அழித்தது.
என்னுடைய ஒரே ஒரு கவிதையைத்தான் இந்த சக்திமிக்க ஆளுமைக்கு நான் சமர்ப்பித்திருக்கிறேன். அவருடைய மரணத்தின் போது அதனை நான் எழுதினேன். எனது முழுமையான கவிதைத் தொகுப்பு எதிலும் இதனை எவரும் பார்க்கலாம். கிரெம்ளினது நெற்றிக்கண் அரக்கனின் (Cyclops) மரணம் உலகெங்கிலும் தாக்கத்தை எற்படுத்தியது. மனித வனாந்தரம் குலுங்கியது, அந்த நிலநடுக்கத்தின் அதி,ர்வுகளை என கவிதை பற்றிப் பிடித்திருக்கிறது.
என நெருதா சொல்கிறபோது, விமர்சனத்தடன் ஸ்டாலின் செயல்களுக்கு கூட்டுப் பொறுப்பேற்கும், ஒரு கம்யூனிஸ்டினுடைய நம்பிக்கையின் குரலாகவே நெருதாவினது மார்க்சியம், இருக்கிறது.
எந்தவொரு படைப்பாளியும் விமர்சகனும் தாம் வாழும் சூழலிருந்து தப்ப முடியாது. அதைப் போலவே எந்த அரசியல் சமூகச் சூழல் இத்தகைய விமர்சனங்களைத் துாண்டுகிறது எனும் காரணங்களில் இருந்தும் ஒருவர் தப்ப முடியாது. ஈராக்கில், ஒரு லட்சம் பேர்கள் அமெரிக்கக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டுள்ளார்கள் என அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கொல்லபட்டவர்களில் ஐம்பதினாயரம் பேர் பெண்களும் குழந்தைகளும், என்கிறது புள்ளி விவரங்கள். இரண்டாம் உலகப் போர்க் காலத்தின் இறுதி நாட்களில், அமெரிக்க பிரித்தானியப் பிரெஞ்சுப் படையினர் ஆயிரக்கணக்கில் போர்ககைதிகளை வரைமுறையற்று சட்டுக்கொன்றார்கள் என பிரித்தானியாவில் வெளியாகிருக்கும் புத்தகமொன்று தெரிவிக்கிறது. ஜனநாயகத்,தையும் சுதந்திரத்தையும் தமது தாராளவாத ஏகாதிபத்தியம் ( liberal imperialism ) எனும் கருத்தாக்கத்தை நியாயப்படுத்துவதின் வழி வன்முறை கொண்டு நடைமுறைப்படுத்த மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது அமெரிக்க பிரி,த்தானிய அரசுகள். ஸ்டாலின், கால ரஷ்யா, கொமேனி கால ஈரான் போல, புஸ்சின் அமெரிக்கா படைப்பாளிகளை கட்டுப்படுத்தகிறது என இலக்கிய விமர்சகர் பால் புல்மேன், எழுதும் சூழலில், ஸ்டாலினியம் குறித்த கேள்விகளை கிளிப்பிள்ளை போலச் சிலர் முன்னிறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன ?
புிரதானமாக ஸ்டாலினியம் என்பதுதான் என்ன ? கட்சியமைப்பில் தனிநபரை முன்னிலைப்படுத்தும், போக்கு, அரசியல் பொருளியல் அதிகாரங்களை தன் வசம் குவித்துக்கொள்ளும் போக்கு, வெகுமக்களுக்கு கருத்தியல் பொய்மையை முகபடாமாக்கி அவர்கர்ளைத் தலைமையை வழிபட வைக்கும் போக்கு, எதிரிகளை அழித்தல் போன்றவையே ஸ்டாலினியத்தின் அரசியல் அம்சங்களாகும். குறிப்பிட்ட குணங்கள் பொருந்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக, அந்தந்தச் சூழலில் வாழுகிற இலக்கிய விமர்சகர்கள், அது ஆந்த்ரே மோசன் ஆனாலும், ஸ்டாபன் குவார்டஸே¢ ஆனாலும் எவ்வாறு எதிர்விணை செய்கிறார்கள் என்பது இப்போது முக்கியம். ஈராக் யுத்,தத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பு குறித்து பிரித்தானியாவின் அரச கவியான ஆந்த்ரே மோசன் என்ன சொல்கிறார ? சகல அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துக்கொண்டு செயல்படும் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் குறித்து ஆந்தரே மோசன் என்ன சொல்கிறார் ? இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்தும் எந்தவிதமான காத்திரமான அல்லது தெளிவான நிலைபாடுகளும் அவர் எடுக்கவில்லை. ஆனால் நெருதாவின் ஸ்டாலினியம் குறித்து அவரால் குறிப்பிட முடிகிறது. நெருதா ஒரு மோசமான கவி என, டிராட்ஸ்க்கியின் கொலையில் பங்கு பற்றியவர், என அவதுாறு வசைபாடுகிற ஸ்டாபன்குவார்டஸ் அமெரிக்க ஜனாதிபதியின் ஈராக் யுத்தக் கொலைகள் பற்றி என்ன சொல்கிறார் ? முற்றமுழுதாக புஸ் அரசு ஆதரவு நிலைபாட்டை மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாபன் ஸ்குவார்ட்ஸ். இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கப் பெற்ற கம்யூனிசச் சார்புள்ள இலக்கியவாதிகள் அனைவரும், அமெரிக்க எதிர்ப்புக் காரணங்களுக்காகவே நோபல் பரிசு வழங்கப் பெற்றார்கள் என ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழதிக் குவித்துக்கொண்டிருப்பவர் ஸ்டாபன் குவார்ட்ஸ். அவர் நெருதாவை மோசமான கவி, மோசமான மனிதன் என அவதுாறு செய்வதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. அமெரிக்காவாயினும் இந்தியாவாயினும் தமிழகமாயினும், ஸ்டாலினியம் குறித்த விமர்சனங்களை நெருதா மீது வைக்கிறவர்கள் தம்மைச் சுற்றிலுமுள்ள அதிகாரங்கள் குறித்து, தாம் இயங்க நேர்ந்திருக்கும் நிறுவன அமைப்புகளிலுள்ள வெகுமக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்,து என்ன விதமான விரலசைவுகளை மேற்கொள்கிறார்கள் என்பதும், கொலைகாரர்களாகவே நடமாடும் இந்துத்துவவாதிகள் குறித்து இவர்கள் என்ன நிலைபாடு மேற்கொள்கிறார்கள் என்பதும் வரலாற்றுரீதியில் மிக முக்கியமான கேள்விகளாகும்.
ஏ
ஸ்டாலின் மரணமடைந்து 51 ஆண்டுகளின் பின், நெருதா மரணமுற்று 32 ஆண்டுகளின் பின், சோவியத் யூனியன் வீழ்ந்து பதினைந்து ஆண்டுகளின் பின், நெருதாவின் ஸ்டாலினியம் தொடர்பான விவாதங்களுக்கு எழுத்தாளர்கள் இன்னும் ஆட்படுகிறார்கள். மார்க்சியத்தினுள் வளமான ஸ்டாலினிய எதிர்மரபு ஒன்று தளைத்து வந்திருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க, கிராம்ஸி, ஸார்த்தர், பிரெக்ட், டெரி ஈகிள்டன், என விரியும் வளமான மரபு இது. நெருதாவில் ஸ்டாலினைப் புதிதாகக் கண்டுபிடிக்கும் எழுத்தாளர்கள், இந்த ஸ்டாலினிய எதிர் மரபைக் கண்டுபிடித்து முன்வைப்பதில்லை. இவ்வாறான தேடலுக்கு வெறுமனே இலக்கியப் படிப்பு மட்டும் போதாது. ரசனை சார்ந்த மதிப்பீடுகள், அறவியல் விசாரணைகள் மட்டும் போதாது. வுரலாற்றுப் படிப்பும் கருத்தியல் குறித்த விசாரணைகளின் மீதான படிப்பும் இதற்கு மிகவும் முக்கியமானது. உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒற்றைச் சுரண்டல் சக்தியாகப் பரிமாணம் பெற்றவரும் இவ்வேளையில் ஸ்டாலினியம் குறித்த விமர்சனம் மேற்கொள்கிறவர்கள் தம்மைச் சுற்றிலும் உள்ள சூழலில் தாம் எவ்வாறு இயங்குகிறோம் என்பதனையும், அத்தகைய ஸ்டாலினியக் குணாம்சங்களுக்கு எதிராக தம் சொந்த வாழ்வில் என்ன எதிர்விணையை செய்கிறோம் என்பதனையும் சேர்த்துப் பார்ப்பது மட்டுமே ஸ்டாலினியத்தின் சகல தளைகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும் தன்மை கொண்டதாகவிருக்கும்.
தாந்தே தனது மகத்தான கிறித்தவக் கனவை Inferno வில் எழுதினான். கிறத்தவக் காலனியாதிக்கத்தின் கொலைகளை மட்டுமே மனதில் கொண்டு எவரும் தாந்தேவின் கவிக் கனவை அணுகுவதில்லை. நெருதா தனது Canto General இல் ஒரு எதிர்காலக் கனவைக் கண்டார். பன்னுாறாண்டு காலக் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இலத்தீனமெரிக்க மக்கள் சோவியத் யுனியனதும் ஸ்டாலினதும் வழிகாட்டுதலின் கீழ், ஒரு விடுதலை பெற்ற சமூகத்தை அடைவார்கள் எனும் காவியக் கனவை அவர் கான்ட்டோ ஜெனரல் புத்தகத்தில் முன்,வைத்தார்.பின்சோவியத் யுகத்தில் அக்கனவு ஒரு துர்க்கனவாகி விட்டது என்பதில் சந்தேகமில்லை. நெருதா முன் வைத்த கனவு ஒரு துரோகம் போலத்தான் தோன்றும் என்கிறார் இலக்கிய விமர்சகரான ரோபர்ட் கொன்சலாஸ். அவரது கான்டோ ஜெனரல் ஓரு கவிதா துரோகம் ( the poetics of betrayal) எனவும் அவர் எழுதுகிறார., கிறித்தவ அறவியலால் உந்தப்பட்ட தாந்தேவின் கனவு ஒரு துரோகமாகும் எனில், சோவியத் யூனியனால், உந்தப்பட்ட நெருதாவின் புரட்சிகர அறவியல்சார் கனவும் ஒரு துரோகம்தான். நெருதாவினது ஸ்டாலினிய ஈடுபாடும் சந்தேகமில்லாமல் ஒரு துரோகம்தான். ஆனால் நெருதா முன்வைத்த, சகல மானுடருக்கும் விடுதலையெனும் நெடுங்கனவில் அவருக்கு இருந்த ஈடுபாடும், ஒரு ஆத்மார்த்தமான கம்யூனிஸ்ட்டாக சுயவிமர்சனத்தில் நெருதாவுக்கு இருந்த ஈடுபாடும் அவரது துரோகத்தை வரலாற்றின் மீது சுமத்திவிட்டு தன் மீதான விலங்குகளை உதறிவிடுகிறது.
—-
ஆதாரங்கள்:
1.Words That Pulse Among Madrid ‘s Dead
Ariel Dorfman
Los Angeles Times
March 21, 2004
2.Bad Poet, Bad Man
A hundred years of Pablo Neruda
Stephen Schwartz
The Weekly Standard
July 26, 2004
3.And where are the lilacs ?
Andrew Motion
The Guardian
July 31, 2004
4.Neruda on stalin:
Rudimentary research from Neruda ‘s Memoirs
translated into English
Hardie St. Martin
joyrideswithoutmaps.net/archive
April 07 2004
5.Let the Rail Splitter Awake and
Other Poems
Pablo Neruda
International publishers Newyork
1988
6.Canto General
Pablo Neruda
Translated Jack Schmitt
Introduction Roberto Gonzalaz Echeverria
University of California Press
Fiftieth anniversary paperback edition
2000
—-
நன்றி : உயிர்மை : பிப்ரவரி 2005
- நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-4
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
- கவிதை….
- எழுநிலை மாடம்
- சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘
- விஷ்வதுளசி -இணையாத உறவுகள்
- வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்
- பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு
- ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2
- கடிதம் – ஏப்ரல் 1, 2005
- பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)
- பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்
- புஷ்பராஜன் நூல் வெளியீடு
- சடச்சான்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
- விடியலை நோக்கி
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
- வலி
- யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்
- ‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு
- பாப்லோ நெருதாவின் துரோகம்
- அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)
- அகத்தின் அழகு
- மா..மு..லி
- விடுதலை
- வேஷங்கள்
- தேன்கூடு
- து ணை -பகுதி 8 / குறுநாவல்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்
- முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
- குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…
- உயிரே
- பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்
- கவிதைகள்
- கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
- நிழல்களைத் தேடி …. (2)
- வம்ச விலக்கு
- றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்
- அதீத வாழ்வு
- ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை
- தொலைக் கடத்தி