சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

வாஸந்தி


இன்றைய சூழலில் அரசியல் தாக்கமில்லாத வாழ்வை ஒரு தனி நபரும் வாழமுடியாது.

‘The Personal is political ‘ 1960 களின் பெண்ணிய கோஷம்.

ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்…பல்வேறு மையங்களில் உருவாகும் பல்லாயிரக்கணக்கான அத்தகைய சக்தி மிக்க குமிழ்கள் ஒரு மாபெரும் சுழலை உருவாக்கும்- சர்வாதிகாரச் சுவர்களைத் தகர்க்கும் வலிமைகொண்டதாக. –ராபர்ட் கென்னடி

‘இனிமேல் அரசியல் கட்டுரைகள் எழுதாதீர்கள் ‘ என்று அண்மையில் ஒரு நெருங்கிய நண்பர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.இன்றைய அரசியலைக்கண்டு வெறுத்துப் போன ஆதங்கம் அவரது பேச்சில் தொனித்தது.

‘நீங்கள் காரசாரமாக என்ன எழுதினாலும் எந்த அரசியல் வாதியும் திருந்தப் போறதில்லே! நம்ம நாட்டு அரசியலும் உருப்படப் போறதில்லே! நீங்களும் நானும் ஏன் இவர்களைப்பற்றிப் பேசியும் எழுதியும் நேரத்தை வீணடிக்கவேண்டும் ? நமக்கு அரசியலே வேண்டாம். உபயோகமான எத்தனையோ விஷயங்கள் உலகத்திலே இருக்கு. ‘

நண்பர் இதைச் சொல்ல சென்னையிலிருந்து நான் இப்பொழுது வசிக்கும் பெங்களூருக்கு

தொலைபேசியில் தொடர்புகொண்டார். நான் அந்த வாரம் எழுதிய பத்தியைப் படித்துவிட்டு மனிதர் துவண்டிருந்தார். ‘இனிமேல் அரசியல் வேண்டாம் ‘ என்றதும் என்னுள் ஒரு மறை கழண்டதுபோல ஆடிப்போனேன். நீங்கள் இத்தனை நாட்களாக எழுதி என்ன சாதிக்க முடிந்தது என்ற அவரது அடுத்த கேள்வி என்னை நிலைகுலையவைத்தது. ‘எதுவும் இல்லை ‘ என்று ஒப்புக்கொண்டேன். ‘நிறைய விரோதிகளை சம்பாதித்ததைத் தவிர ‘ என்றேன். இடது சாரிகளைத் தவிர எல்லா கட்சித் தலைவர்களும்[சில நடிகர் ரசிகர் மன்றங்களும் அடக்கம்]என்னை அவர்களது எதிரியாகப் பார்க்கிறார்கள். என் கட்டுரையைப் படித்ததும் அவரவரது பாணியில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களிடமிருந்து அரசு முத்திரையுடன் கடிதம் வரும்.நல்ல பரிச்சயமுள்ள தலைவர்கள் ஃபோனில் கூப்பிட்டு எப்படி இப்படி எழுதப் போச்சு என்பார்கள். சிலர் தங்கள் கட்சி நாளிதழில் கேலிச்சித்திரம் வரைவார்கள்.உறுப்பினரைக் கொண்டு கண்டனக் கடிதம் எழுதச் சொல்வார்கள். சிலர் பொது மேடைகளில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்கிறார் நண்பர். அரசியலையே தொடாதீர்கள் என்கிறார் அக்கறையுடன்.

அரசியலை நான் தொடாமல் இருந்தாலும் என் தனி நபர் வாழ்வுடன் அரசியல் பிணைந்திருக்கிறதே, அதிலிருந்து விடுபடுவது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.அரசியல் சார்பில்லை என்ற

நிலையிலும் அரசியல் தொடர்பற்ற வாழ்வு வாழ்வது சாத்தியமில்லை என்று அறிவார்த்தமாக முதலில்

கோஷமெழுப்பிய பெருமை சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் பெண்ணியக்க வாதிகளைச் சேரும்.

‘எங்களது பிரச்னைகள் தனி நபர் பிரச்னைகள் அல்ல. திட்டமிட்ட ஒடுக்குமுறை அரசியலால் விளைந்த

இனப் பிரச்னை. ‘The Personal is Political ‘ என்றார்கள். போருக்கு எதிராகவும்,ஸிவில் உரிமைக்காகவும்

குரலெழுப்பிய பல்வேறு பெண் குழுக்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டன.பல்வேறு இனம் ,மொழி, வர்க்கம் , மதம் ,நாடு என்று வித்தியாசப்பட்டாலும், திருமணம், குழந்தை வளர்ப்பு, ஸெக்ஸ்,வேலை, கலாச்சாரம் ஆகிய நிலைகளில், அவர்களது பிரச்னைகள் பொதுவானவையாக இருப்பதையும் அவர்களது துன்பத்திற்கு அவர்கள் காரணமில்லை என்பதும், காரணம் வலுவான தந்தைவழி சமுதாய அமைப்பே என்பதையும் உணர்ந்தார்கள். எல்லாரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களுக்குத் தீர்வு காண சேர்ந்து போராடுவது என்று முடிவெடுத்தார்கள். இந்த கோஷம் எல்லாவித ஒடுக்குமுறைக்கும் பொருந்தியது.ஒடுக்கப் பட்ட எல்லா வர்கத்தினரும் , இனத்தவரும் துன்பப்பட்டது அவர்களது இயலாமையால் ,தகுதிக் குறைவால் அல்ல, ஸ்தாபனங்களின் திட்டமிட்ட அரசியலால் என்ற வாதம் வலுப்பெற்றது.

ஏழ்மையும் பசியும் தனி நபரின் தேர்வினால் அல்ல ,[அவர்களது தலை எழுத்தால் நிச்சயம் அல்ல] அவர்களது தேர்வுக்கு எதிராக இயங்கும் ஸ்தாபனக்களின் செயல்பாட்டினால் என்று சோஷலிஸ்டுகள் சொன்னார்கள். போரை எதிர்க்கும் இயக்கங்கள்

உலகில் மூளும் எல்லா [சென்ற நூற்றாண்டிலிருந்து] போர்களுக்கும் பொதுவான பூர்வாங்க ஆதாரமாக இருப்பது அமெரிக்க வெளி உறவுக் கொள்கை என்று விவரித்தார்கள். இன்றைய தனி நபர் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள், மனித உறவுகள், தனி நபரைப்பற்றின மதிப்பீடுகள் எல்லாமே ஜனித்த நேரத்திலிருந்து அரசியலுடன் பிணைக்கப் பட்டிருப்பவை.என் இனம் ,எனது ஜாதி, மொழி, வர்க்கம் எல்லாமே என்னைப் பற்றின மதிப்பீடுகளை நிர்ணயம் செய்கின்றன. எனது சொந்த வாழ்வில் நான் செய்யும் தேர்வுகள்,அவை அரசியல் சார்பற்றவை என்று நான் கருதினாலும், அரசியல் பரிமாணம் பெருகின்றன. பச்சை நிறப் புடவை அணிவதும், மஞ்சள் சால்வை போர்த்துவதும், டி.வி.சானல் பொறுக்குவதும், ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவதும், சினிமாவை விமர்சிப்பதும், தனி நபர் விருப்பம் மட்டுமல்ல, அரசியலும் கூட.

‘Personal is political ‘ என்பதற்கு எதிர்வினையும் உண்டு.அரசியல் அரங்கில் நடப்பவை எல்லாம்

தனி நபர் தேர்வுகளின் ஒட்டுமொத்த பரிமாணமாக மையம் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலேயே பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள்,விளைவைப் பற்றி பயப்படாமல், தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள் என்பதில்

சந்தேகமில்லை. அரசியல் பருவத்துக்குத் தகுந்தபடி, ‘செல்வாக்குள்ளவர் ‘களுக்கு ஏற்கும்படியாகப் பேசும் [politically correct] போக்கு அதிகரித்துவரும் காலகட்டத்தில், குரல் எழுப்புவர்கள் சிறுபான்மியனராக இருந்தாலும் அவர்கள் எழுப்பும் சிறு நீர் குமிழ்கள் எங்காவது மையம் கண்டு பெரும் சுழலாக உருவாகலாம்.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தில்லியில் சீக்கியருக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின்போது, என் சீக்கிய சினேகிதி அதிர்ச்சியுடன் சொன்னாள். ‘என் வீட்டினுள் அரசியல் புகுந்துவிட்டது ‘.நம் எல்லோர் வீட்டிலும் புகுந்துவிட்டது. அதைத்தவிர்க்க முடியாததாலேயே அதனுடன் போராடியாகவேண்டும்.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி