மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழில்: சந்துஷ்


குன்ரர் கிறாசின் ‘நாக்கைக் காட்டு ‘ என்ற அவரது ஆறுமாத கால கல்கத்தா வசிப்பினையொட்டி எழுதப்பட்ட நூலின் மீது எனது விமர்சனத்தை நான் குவிக்கக் காரணம் அது வழமைக்கு மாறாக தோல்வியடைந்த நூலென நான் நினைப்பதால் மட்டுமன்று. மேற்குலகின் பயண எழுத்துக்களில் பொதுவில் காணப்படும் பாரம்பரியத்தை இது கொண்டிருப்பதாலும், இடதுசாரி முற்போக்கு புத்திஜீவிகளின் எழுத்துக்களிலும் இந்தத்தன்மை மாறாமல் இருப்பதனாலும்தான். குறும் புத்தி படைத்த கிறுக்கர்ளின் இனவாதமும் அழுத்தமான மேலாதிக்கவுணர்வும் ஏற்கனவே அறியப்பட்டுள்ளதுடன் அது ஆவணப்படுத்தப்பட்டுமுள்ளது. ஆனால் எதையும் ஆழமாக நோக்கக் கூடிய குன்ரர் கிறாஸ் போன்றவர்களின் எழுத்துக்களைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு பரந்துபட்ட, பல்வகைப்பட்ட பயண எழுத்துக்களின் வாசிப்பிற்குள்ளாகவே எனது விவாதங்களை முன்வைக்கின்றேன். ஆனால் விரிவஞ்சி நான் குன்ரர் கிறாசையும், திரைப்பட இயக்குனரும் மேற்கைரோப்பிய எழுத்தாளர்களிடையே ஒரு மாக்ஸிஸ்டாக அறியப்பட்டவரும,; ‘இந்தியாவின் சுவாசம் ‘ ( டு ‘ழழனசந னநடட ஐனெயை – வூந டாசநயவா ழக ஐனெயை) என்ற நூலை எழுதியவருமான ப்பிய பாலே பசலோனியையும் மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.

பொதுவாகச் சொன்னால் மூன்றாவது உலக நாடுகள் என்று சொல்லப்படுகின்ற நாடுகள் பற்றிய சமகாலப் பயணக் கட்டுரைகள் மூன்று அடிப்படை அம்சங்களைக் கையாள்கின்றன. இந்த அம்சங்களை முற்கற்பிதம் வல்லுனர்தன்மை மேலாண்மை என நான் அழைத்துக் கொள்ளுகிறேன்.

முற்கற்பிதம்

பழையகாலத்தில் உலக வரைபடத்தின் வெற்றிடங்கள் யாவும் புராண விலங்குகளாலும், நரமாமிச பட்சணிகளாலும், ஒட்டகங்களினாலும், சனாடுவின் கோபுரங்களாலும், எல்டொராடோவின் பொக்கிசங்களாலும் நிரப்பப்பட்டன. பின்னர் 18ம் நூற்றாண்டில் இந்தக் குழப்ப நிலையானது கால்லோஸ் லினாயூசின் இயற்கை அமைப்புக்கள் பற்றிய தகவல்களிற்கமைய உலகவரைபடத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஐதீகங்கள் முதலில் கரையோரப் பகுதிகளில் உடைந்து வீழ்ந்த பின்னர் அடி மேல் இரத்த அடியாக உள் பிரதேசங்கள் பற்றிய தரிசனங்களையும் தெரிந்து கொண்டனர். இறுதியாகப் பேராசை கொண்ட இந்த உலக வரைபடங்கள் எல்லாவற்ரையும் உள்ளடக்கிக் கொண்டதுடன், அனைத்தையும் திட்டமிடவும், விளங்கிக் கொள்ளவும் முடிந்தவர்கள் தாம் தானெனவும,; தமது சொந்த ரசனைக்கும் எதிர் பார்ப்புகளிற்குமேற்ப ‘தங்கள் கால் படா நிலங்களை ‘ இன்னும் வரைய முடியுமெனவும் இந்த வரை படங்களை வரைந்தவர்களே நம்பத் தொடங்கினர். காலனியாதிக்கத்திற்கு முந்திய 18, 19 நூற்றாண்டுகளின் பயணிகள் தாம் சென்ற இடங்களின் அழகையும், செல்வத்தையும் வளத்தையும், தூய்மையையும் கண்ட அதே வேளையில் காலனியாதிக்கத்திற்குப் பிந்திய தற்காலப் பயணி அசிங்கம், ஒழுங்கின்மை, தாழ்ந்த தன்மை போன்றவற்றின் மீது விரைவாகத் தன் பார்வையைக் குவிக்கின்றான்.

19ம் நூற்றாண்டில் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் செல்வமானது பாராட்டப்பட்டது. இன்று நாகரிகத்தின் வளர்ச்சியின்மையுடன் கூடிய ஒழுங்கற்ற, எதற்கும் தயாரற்ற மூன்றாமுலகு என ஏளனத்துடன் அணுகப்படுகிறது.

இநத மனோபாவமானது கொள்ளையடிப்பிலிருந்து நிராகரிப்பாகவும், ஆதரவிலிருந்து வெறுப்பாகவும் உருமாறிவிட்டது.

‘உங்கள் நாக்கைக் காட்டுங்கள் ‘ நூலின் ஆரம்பத்திலிருந்தே இந்தியா குனரர்கிறாசிற்கு ஏமாற்றமளித்திருப்பதையே அறிய முடிகிறது. இந்தியா அவரது எதிர்பார்ப்பிற்கமைய இல்லாதிருந்தமையால் கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

அந்த நாட்டுப் பிரஜைகள், அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தில் நடக்காத பட்சத்தில் அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளுகின்றனர். நூல் ஆசிரியர் தனது முற்கற்பிதத்தை சாட்சியாய் வைத்து அதற்கொவ்வாத அனைத்தையும் சாடும் ஒரு இரக்கமற்ற குற்றம் சாட்டுபவராகிறார். அயல் வீட்டுக்காரனின் வாத்துக் கூட ‘விக்கல் சிரிப்பை ‘ப் போன்ற அதன் குவாக் குவாக் ஓசைக்காக சாட்சிக் கூண்டிற்கு அழைக்கப் படுகிறது.

மிக்க கவனத்துடன் இவர் அசிங்கங்களைச் சேகரிக்கின்றார். இறைச்சிக் கடையில் பிறக்காத ஒரு கருப்;பிண்டத்தை (அது ஆடோ பிள்ளையோ) நாயொன்று விழுங்க முயற்சிக்கின்றது, வெட்டுண்ட தலைகள் போல தேங்காய்கள், கொல்கொத்தாவில் மண்டையோட்டுக் குவியல் போல பழங்கள். பின்பு பழங்கள் மீது காகங்கள், ஆகாயத்திலிருந்து மேலும் காகங்கள். மலிந்த கிடக்கும் கருமை. ஆற்றங்கரையில் இளைஞர்கள் ஒரு பெண்ணின் பிரேதத்தைத் தூக்கிக் கெண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகிறார்கள். மும்பாயில்; வழக்கமாக் காணக் கூடிய காட்சியிது. சாவின் பகிரங்கப் பிரசன்னம். உயிர்க்கும் வீதிகளீனு}டாக சோக ஊர்வலம். இறந்தவர் உலகத்திற்குப் பிரியாவிடை சொல்வது போலவும் உலகம் அவருக்குப் பிரியாவிடை கொடுப்பது போலவும். என்னைப் பொறுத்த வரையில ஒரு அழகான விம்பம். ஏனெனில் ஜேர்மனியில் ஒரு விலக்கப்பட்ட காட்சியாகிவிட்ட மரணத்துடன் இது மிகவும் முரண்பட்டு நிற்கும் விம்பம்.

கிராஸ் தனது விமர்சனத்தைத் தொடர்கிறார்.

‘ஒவ்வொரு இளைஞனும் மின்னும் கைக்கடிகாரங்களைக் கட்டியிருந்தனர்- காசிற்கு வாங்கிய சந்தோஷங்கள் ‘

இந்தியாவின் அன்றாட வாழ்கையில் குன்ரர் கிறாசை ஒரே கணத்தில் மலைக்கவும் வெறுக்கவும் செய்த விடயம் எங்கும் வியாபித்திருக்கும் மலம்;. நூற்றுக்கும் சற்றே குறைந்த பக்கங்களில், சில மனிதர்கள் தம் வாழ் நாள் முழுவதிலும் காண முடியாதளவு மலத்தைபு;பற்றி விபரிக்கின்றார். அனைத்தும் மலத்தினால் மூடப்பட்டிருக்கிறது. சேரிகள், புகையிரத நிலையங்கள், அவரது இராப் போசனத்திற்குப் பின்னான நடையின் பொது அஜீரணத்தை ஏற்படுத்தும் வகையில் கடற்கரைகளில், எல்லா இடங்களிலும் மலம்தான். மலம் பற்றிய ஒரு விவரணையே தருகிறார்.

இந்தியா என்பது ஒரு மலக்குழியா அல்லது இது ஆசிரியரின் அடிப்படை நோக்கினால் எழும் பார்வைப் பிசகா ? தமது பின்புறங்களை கையால் கழுவுபவர்களுக்கும் ‘ரொய்லட் ‘ பேப்பரினால் துடைப்பவர்களுக்குமிடையில் கலாச்சார வித்தியாசங்கள் உள்ளனவா ?

தனிப்பட்ட மற்றும் பொது மலசல கூட வசதிகள் எந்த நிலையில் இருக்கின்றன ? இத்தகைய கேள்விகள் கிறாசிடம் இருந்து எழவில்லை. முடிவற்ற மலத்தையே அவர் கண்டு பிடிக்கிறார்.

முடிவுகளற்ற அழுக்குகளின் விபரிப்பில ஒரு முறையேனும் அங்குள்ள மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் சுத்தம் பற்றி குறிப்பிடுதல் அவசியமென அவர் என:தவிடத்திலும் நினைக்கவேயில்லை. நன்கு தோய்த்து ஸ்திரிக்கையிட்ட சட்டை கால்சட்டைகளுடன் தம் வீடுகளிலிருந்து புறப்படும் சேரி வாழ் மனிதர்களைப் பற்றி அவர் சொல்லவில்லை. அவர் வரைய விரும்பும் ஏமாற்றம் தரும் சித்திரத்தை அது மங்கச் செய்திருக்கும்.

வல்லுனர்தனமும் தகுதியும்

இவரது வக்கிரமான மறுப்பின் பின்புலத்தில் எவ்வித ஆய்வுகளும் இல்லை. வாசகர்களிடம் பேச, உள்ளூர்வாசிகளுக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை. எனினும் ஆசிரியர் முழுத்தகமையும் தனக்கே இருப்பதாக நினைக்கின்றார். ஆசிரியரின் இந்தத்தகமைக்கு எவ்வித ஆதாரமும் காட்டப்படவில்லை. கிறாஸ் கண்டவை மாத்திரமே அங்கு காணக்கிடைக்கிறது என்று வாசகனை நம்பச் சொல்லுகிறார். இந்தியாவின் யதார்த்தம் இதுதான் என்று தவறு செய்யாத ஒரு விதக் கடவுள் நிலையில் இருந்து கொண்டு அவர் விவரணம் தருகிறார். அவர் வரைந்த சித்திரம் வாசகரின் முன் ஒரு நிதர்சன உண்மையாகத் தொங்குகின்றது. இது மேரி லூசி பாரோட் கூறுவது போல ‘நானே எல்லாவற்றிற்கும் ராஜா ‘ என்ற தன்மையையே காட்டுகிறது.

இதை நாய்போலின் ‘இந்தியா- ஓராயிரம் கிளர்ச்சிகள் இப்போது ‘ என்ற நூலுடன் ஒப்பிடுகையில், அவர் தன்னுடைய சேரிக் காட்சியை ஒரு சேரிவாசி தன் சூழலைப்பார்க்கும் பார்வையிலிருந்து காட்டுகிறார். சேரிகளைப் பற்றிய மேற்கத்திய கற்பனையைத்தவிர்த்து பன்முகத்தன்மையை இது தருகிறது.

கிராமங்களினு}டாக சொகுசான அம்பஸிடர் டாக்சியில் பயணிக்கும் கிறாஸ் அதற்குள் இருந்தவாறே விளக்கம் தருகிறார்.

‘விறகு பொறுக்கும் சிறுவர்கள ;…. மூக்குத்தி அணிந்த பெண்கள் …. ஒரு குடும்பத்தில் ஒன்றோ இரண்டு பேர் இப்படிப் பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியுள்ளது ‘ அதாவது பல குழந்தைகள் இப்படி நடப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘இதனால்தான் காடுகள் அழிகின்றன. அதுதான் அங்கு எதுவுமே வளர்வதில்லை, பிள்ளைகளைத் தவிர ‘.

எவ்வளவு சுலபத்தில் சனத் தொகைப் பெருக்கத்திற்கும் சுற்றுச் சூழல் அழிவிற்கும் இரண்டு வசனங்களில் விளக்கம் தருகிறார். இந்தியாவின் பொதுவான முக்கியத்துவம் பற்றி ஒரு புறத்தில் வேறு குறிப்பிடுகிறார்.

இந்த ‘சொல்லப்படுகிறது ‘ என்ற வாக்கியத்தைக் கவனியுங்கள். இது கிறாஸ் தனது டாக்ஸியிலிருந்து இறங்கி வந்து அதிலொரு பெண்ணிடம் ‘ ஒரு நாளில் எத்தனை கி;லோ மீட்டர் விறகு தேடி நடக்கிறாய் ‘ எனக் கேட்கும் அவசியத்தை இல்லாமல் செய்து விடுகிறது. இந்தியாவில் பல மாதங்கள் செலவழித்த பின் இந்தியா பற்றிய ஒரு பொதுவான பார்வையை உருவாக்குகின்றார்.

பசலோனி எழுதுகிறார் ‘கஜீராகோ தான் இந்தியாவில் அழகானதும் மேன்மையானதுமாகும். …. இந்தியர்கள் சமயப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டாதவர்கள் ‘ என்கிறார். இவர்களின் இந்த மேலாண்மைப் போக்கு கண்டங்களைப்பற்றிப் பொதுமையாகப் பேச வைப்பதை இந்தக் கடைசி கூறு;றுக்கள் காட்டுகிறது. இப்படிப் பொதுமைப் படுத்தும் எழுத்தாளர்கள் தமது சொந்த நாடுகளின் மாகாணங்களைக்கூட பொதுமைப் படுத்திப் பேசுவதில்லை.

‘டென்மார்க் ‘ இந்தியாவைவிட புதிர்கள் நிறைந்த நாடென்கிறார் கிறாஸ். ‘ஆழங்காண முடியாதது எனச் சொல்லப்படுகிற இவர்களுடைய மதம் வெறும் ரசனையற்ற மூடநம்பிக்கைதான் ‘ என்கிறார்.

‘இந்தியர்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை ‘ எனச் சொல்லும் பசலோனி ‘அவர்கள் அடிக்கடி புன்னகைக்கிறார்கள் – அது அவர்களின் மென்மையான தன்மையால் ஏற்படுகிறதே அன்றி மகிழ்ச்சியினால் அல்ல ‘ என்றும், தொடர்ந்து ‘அவர்களது மதமென்பதே இந்த ஒரு அசைவுதான் ‘ என்கிறார். பின்பு ‘ஒவ்வொரு இந்தியனும் ஒரு பிச்சைக்காரன் ‘ என்கிறார்.

சிரிப்பிற்கிடமாக இன்னுமொன்றையும் சொல்லுகிறார் – அதுதான் ‘ இந்தியர்கள் தமது இசையைத் தவிர வேறெதையும் ரசிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் ‘ என்பது.

தலைக்கனம்

கிறாசும் பசலோனியும் ஒரு நாட்டில் பல மாதங்களைக் கழித்த பின்னரும் அறிவுபூர்வமாக ஒருவருடனும் பேசாமலிருந்து கொண்டே இந்தியப் புத்திஜீவிகள் பற்றிய மட்டமான மதிப்பீடுகளையே வைத்திருப்பதுடன் அவர்களுடன் எந்த உரையாடலையும் மேற்கொள்ளவில்லை.

கலைஞர்களுடனான ஒரு சந்திப்பை கிறாஸ் ‘ சுவாரசி;யமற்ற அரட்டை ‘ என்று விபரிக்கிறார்.

பசலோனி சொல்லுகிறார் ‘ ஒரே சக்திவாய்ந்த குரல் டொம் மொறாயசிணுடையதுதான் ‘ என்று!

70களின் மத்தியில் கல்கத்தாவிற்கு சென்ற கிறாசை இலக்கிய அமர்விற்கு அழைத்த உள்ளூர் கவிஞர்களை ‘ஆத்திரத்தையும் கோபத்தையும் உருவாக்கும் நகரில் கவிதைகள் எழுதுவது பொருத்தமற்றது ‘ என்று திட்டினார் அவர்.

இந்தியக் கலைஞர்களால் உருவாக்கப்பட ே;வண்டும் என்று கிறாஸ் எதிர்பார்க்கும் துயரம், வறுமை, கஷ்டம் என்பவை பற்றிய விமர்சனத்துடன் கூடிய தத்வரூபமான படங்களை, சத்தியஜிதரே, மிருணாள் சென் போன்ற இயக்குனர்கள் தம் வாழ்நாளைச் செலவழித்து தந்திருக்கின்ற போதிலும் வங்காளத் திரைப்படங்களைப்பற்றி மூன்று வசனங்களையே கிறாஸ் எழுதுகிறார்.

ஆளுமை செலுத்தலும் விலகிநிற்றலும்

கருத்து வித்தியாசங்களின் சந்திப்பு பன்மையான கருத்துக்களாக பரிணாமம் பெறும் பிரதேசத்திற்கு கிறாஸ் ஒரு போதும் நுழைவதில்லை. மாறாக வெறுப்பும் தோழமையும் கலந்த அதிகார மொழியையே கிறாஸ் பிரயோகிக்கிறார். அதிருப்;தி தூண்டப்பட்டு எரியவிடப்படுகிறது.

கல்கத்தாவில் கடும் மழைக்குப் பின் எழுதுகிறார ; ‘தாழ்ந்த நிலங்களில் இருக்கும் சேரிகளை நினைத்தாலே எனக்கு கோபம் வருகிறது ‘. மனச்சாட்சி உறுத்தலைச் சாந்தப்படுத்தச் செய்யப்படும் அதிருப்தியல்வா இது ? வாசகனுக்கு இது எப்படி உதவுகின்றது. சேரிவாசிக்கு எப்படி உதவுகிறது ?

‘எமது நுகர்ச்சி ஜனநாயகவாதிகள் எல்லாம் இரு இரவுகளை இந்தச் சேரிகளில் கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு அவர்களின் நாசமாய்ப்போன செல்வங்களில் வெறுப்பு வரும். ‘ என்கிறார் கிறாஸ். நுகர்;வுச்சமூகத்தினால் சலிப்படைந்த எழுத்தாளனின் கற்பனா அனுபவிப்பு ஆசை! ஆனால் இந்தக் கற்பனை ஒரு சேரிவாசியினுடைய விருப்பங்களிடமிருந்து பல ஒளி வருடங்களால் வித்தியாசப்படுகிறது. அவன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க பணம் சேமிக்கின்றான். தான் அடைய விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வுப் பொருட்களையும் அதனை அனுபவிப்பவர்களையும் அதில் பார்க்க விரும்புகின்றான்.

கிறாஸ் தனக்குப் புறம்பான ஒரு உலகத்திற்குள் செல்லும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகிறார். வெறுப்புடன் கூடிய கோபம் அவரைத் தடுக்கின்றது. ஆறு மாதங்களுக்குப் பின் அவர் எந்த அனுபவத்தையும் பெறவில்லை. அவரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு, அறிந்த அறியாத தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர் சிந்திக்கவில்லை. பாதுகாப்பற்ற நிச்சயமற்ற புதிய பரிமாணங்களுக்குள் அவர் தன்னையிழக்க விரும்பவில்லை. ஒரு விடயத்துடன் எந்தவித உறவையும் ஏற்படுத்தாமல் அதை விபரிக்க முற்படுகின்றார். அது அவர் தானறியாத ஒரு மனிதனை விபரிப்பது போல இருக்கிறது. இதன் காரணமாக அவன் ஒரு பாதிக்கப்பட்டவனாக, விபரிக்கப்படாத ஒரு அமைப்பில் பிடிபட்டிருக்கும் ஒரு துணிச்சலற்ற மனிதனாக, சித்தரிக்கப் படுகிறான்.அந்த அமைப்பின் விளைவுகள்தான் அழுக்கு, மலம,; மற்றும் மூடநம்பிக்கைகள், ஆனால் அதற்கான காரணங்களைக் கூறாமல் விடுகிறார். பசலோனியின் வார்த்தைகளைக் கவனியுங்கள ; ‘கருமையும் இருளும் சேர்ந்த நம்பிக்கையற்ற பட்டினிக் குவியல்கள். ‘

கிறாசும் பசலோனியும் மேறகயிரோப்பிய இடதுசாரிகளுக்கு வெளிச்ச்ம் கொடுப்பவர்கள் பல தசாப்தங்களாக ஜேர்மனியிலும் இத்தாலியிலும் இவர்களின் அரசியல் விவாதங்களுக்கு வழிகாட்டிகளாக பேச்சாளர்களாக இருந்தவர்கள். இதன் உச்சக்கட்டமே சென்ற வருடம் குண்ரர் கிறாஸிற்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசாகும். கலானித்துவ கோட்பாடுகளையும் நோக்கங்களையும் தாம் களையவில்லை என்பதை இருவரும் நிச்சயம் மறுப்பார்கள். அவர்கள் உணராமல் இருந்தாலும் கூட, அவர்களுடைய ஆதிக்கம் செலுத்தும் இலக்கியம் முதலாவது உலகத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தைப்; பிரதிபலித்துக் கொண்டே அதை விமர்சிக்கின்றது. முற்போக்கு நோக்கும், ஏகாதிபத்திய நோக்கும் கைகோர்த்துச் செல்லுகின்றன. ஏகாதிபத்திய அரசியலின் பெரும் விமர்சகர்கள், ஏகாதிபத்திய பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

( நன்றி : இந்து. இதை எழுதியவர் தற்பொழுது மும்பாயில் வசிக்கும் ஜேர்மானிய நாவலாசிரியர் )

நன்றி: அசை

Series Navigation

சந்துஷ்

சந்துஷ்