சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


பேரா. அ.காபெருமாளின் நூலுக்கான முன்னுரையில் திரு.ஜெயமோகன் குறிப்பிட்டிருந்த நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் இன்றைக்கு காட்டுக்குள் இல்லை. ஆனால் இன்று அதனைக் காணும் எவர்க்கும் ஜெயமோகன் கூறத்தவறிய ஒரு மனச்சித்திரம் புலனாகலாம். அக்கோவிலுக்கு நீங்கள் போவதாக இருந்தால் அச்சாலையில் அடிக்கொரு சுவிசேஷ வசனத்தை நீங்கள் தரிசிக்க முடியும். ‘அவராலேயன்றி எவராலும் மீட்பில்லை ‘ என்பதில் தொடங்கி ‘நீயும் உனது வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் ‘ என்பது வரையிலாக வசனங்கள் உயர் தர பெயிண்ட் கலவைகளால் பலவர்ண வேலைப்பாடுகளுடன் அம்மன் கோவிலுக்குச் செல்லும் உங்களை வரவேற்கும். இது நீங்கள் வடக்கு சாலை வழியாக வந்தால். உபயம் லண்டன் மிஷன் சர்ச்சும், ‘இளைஞர்களுக்காக இயேசு ‘ எனும் மோகன் சி லாசரஸின் அமைப்பும். சிறிதே கிழக்கு நோக்கி நகர்வீர்களெனில் கங்கார்டியா இறையியல் கல்லூரி மற்றும் மிஷன் அமைப்பினரின் தேவாலயமும் பிரார்த்தனைகளும் உங்கள் செவிகளுக்கு கர்த்தரின் இரத்தத்தை அருந்துவததால் கிடைக்கும் ரட்சிப்பைக் குறித்து பிரசங்கிக்கும். அம்மன் ஆலயத்தை தெற்கிலிருக்கும் ராணித்தோட்டம் பணிமனை சாலை வழியாக வந்தடைய நீங்கள் விரும்பினால் கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரின் கோட்டை போன்ற ஆயர் இல்லம் அதன் தேவாலயம் அதன் அமைப்புகளை கடந்து நீங்கள் வரவேண்டியிருக்கும். ஒரு எதிரியின் கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிட்டு நிற்கும் தோற்றம் நடுக்காட்டு இசக்கியம்மன் ஆலயத்தை நாற்புறங்களிலும் சூழ்ந்து நிற்கும் இந்த பெரும் கட்டிடங்களும் பிரச்சார அமைப்புகளும் தரும். இந்நிலையில் நடுக்காட்டு இசக்கி அம்மன் ஆலயம் என்னவாகலாம் ?

ஒரு சமுதாயம் தமது மேல்நிலையில் இருக்கும் மக்களின் கலாச்சாரக் கூறுகளை தாம் ஏற்பதன் மூலம் சமுதாய அமைப்பில் மேல்நோக்கி நகர்வதை பேராசிரியர் எம்.என்.சீனிவாஸ் சமஸ்கிருதமயமாதல் (sanksritisation) என்கிறார். சமஸ்கிருதமயமாதல் என்பது ஒரு சமுதாய அளவில் நடைபெறும் நிகழ்வாகும். இதற்கு பேராசிரியர் எம்.என்.சீனிவாஸ் அவர்களே முன்வைத்த ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தில் ஸ்ரீ நாராயண குருதேவரால் நடைபெற்ற ஈழவ விடுதலை இயக்கம். இது ஒரு சமுதாய நிகழ்வின் ஒரு பரிமாணத்தை மட்டும் காட்டும் பதமாகும். இப்பதத்தை பயன்படுத்தும் பல பேராசிரியர்கள் அதனை ஒரு சாதி தனது தனக்கே உரிய கூறுகளை இழந்து தமக்கு மேலிருக்கும் சாதியினரின் பண்பாட்டுத்தன்மையை ‘காப்பியடிக்கும் ‘ தன்மை கொண்டதாகக் காட்டியுள்ளனர். உதாரணமாக, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் வாசிக்கப்பட்ட ஒரு ஆய்வுத்தாள் இம்மேநிலையாக்கம் நாட்டார் கலைகளை அழிப்பது குறித்தும், அதன் அரசியல் தன்மைகுறித்தும் கூறியிருந்தது. விவேகானந்த கேந்திரம் கிராமங்களில் நடத்தும் திருவிளக்கு பூஜை கூட அதில் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது. ஆனால் சமஸ்கிருதமயமாதல் எனும் இப்பதமும் சரி அதனை விரும்பா நிகழ்வாக அழிவியக்கமாக காட்ட விரும்பும் பேராசிரியர்களும் சரி அதன் ஒரே இயக்கமுடுக்கியாக காட்டவிரும்புவது சமுதாயத்தில் ஒரு ‘கீழ்நிலை ‘ சாதி மேல்நிலை தன்மை பெற விழைதல் என்பதே.

டைனோசார்களின் எலும்புகளும் முட்டைகளும் புதையுண்டிருக்கும் ஒரு குன்றினை நகராட்சி புல்டோஸர் அழிக்கும் பட்சத்தில் ஒரு தொல்-பழங்கால உயிரெச்சத்தினை பாதுகாக்க ஒரு palentologist எவ்வளவு அக்கறை எடுத்து எதிர்ப்பானோ அது போலவே நம் நாட்டாரியல் மற்றும் சமூகவியல் பேராசிரியர்கள் கூக்குரலிடுகின்றனர் – சமஸ்கிருதமயமாதலுக்கு எதிராக. தமது பல்கலைக்கழக கண்காட்சியில் நாட்டார் தெய்வங்கள் வகைப்படுத்தப்பட்டு உறைந்திருக்க அது குறித்து அனைத்து தரவுகளும் ஆவணப்படுத்தப்பட்டு கிறிஸ்தவ இறையியல் முதல் மார்க்சியம் ஊடாக, பின் நவீனத்துவம் வரையிலாக அனைத்து கருவிகளாலும் ஆய்வு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவ்வப்போது சொள்ளமாட சுவாமி முன் ஆடிய ஆட்டத்தை DA-TA+ஊதியத்துடன் ஒரு நாட்டார் கலைஞர், பல்கலைக்கழக வளாகத்தில் பின்னர் பிஷப் ஹவுஸ் மைதானத்தில் பின்னர் கலை இலக்கிய பெருமன்றத்தில் ஆடித் திரும்ப நம் நாட்டார் கலையியல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிற வளர்ச்சி கண்ணேறு படாமல் விளங்குவதாக. துரதிர்ஷ்டவசமாக, இப்பேராசிரியர்களும் இவர்கள் பின்னின்று ஊக்கமளிக்கும் ஆற்றல்களும், பின் இவ்வுள்-வட்ட சிந்தனையை சமுதாயத்தில் பரப்பும் அறிவுஜீவி ‘pop ‘ எழுத்தாளர்களும் மறக்கும் ஒரு விஷயம் ஹிந்து சமுதாயம் உறைநிலையிலிருக்கும் தொல்பழங்கால உயிரெச்சம் அல்ல. ஆனால் நமது பேராசிரியர்கள் அவ்வாறே அதனைக் காண விரும்புகின்றனர். ஆனால் இன்றைய சமுதாய சூழலில் இந்நாட்டார் கலைகள் விளங்கும் சமுதாயங்களில் இவற்றிற்கு இக்கலைகள் மற்றும் சடங்குகளின் பரமவைரியாக அவற்றின் ஜீவத்துடிப்பை அடங்க வைக்கும் தீர்மானத்துடன் களமிறங்கி உள்ளதோர் மகத்தான சக்தியின் முன் இந்நாட்டார் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் கலைகள் தம்மை தம் ஆதாரம் இழக்காமல் வாழ்விக்க எவ்வித தகவமைப்பை மேற்கொள்கின்றன என்பதனை அறிய ஒரு சிறு முயற்சியேனும் நடக்குமெனில் அப்போது இந்த so-called சமஸ்கிருதமயமாதல் அல்லது மேல்நிலையாக்கம் என்பது எவ்வாறு முக்கிய நாட்டார் கூறுகளை தக்கவைத்து முன்னகரும் உயிர் துடிப்புள்ள பரிணாம இயக்கம் என்பதையும் அது வெறும் ‘மேல்நிலை ‘ மக்களின் கூறுகளை கண்மூடி பின்பற்றும் இயக்கமல்ல என்பதும் தெரியவரும். ஸ்ரீ நாராயண குருவும், ஐய்யன் காளியும், ஐயா வைகுண்டரும் நடத்திய இயக்கங்களின் பண்பாட்டுக் கூறுகளை சமஸ்கிருதமயமாக்கல் எனும் ஒற்றைப்பார்வையில் மட்டுமே தேர்வதும், அப்பார்வையில் அவை குறித்த ஒரு கதையாடலை(narrative) உருவாக்கி அதனை நிலைபெறுத்துவதும் மார்க்சிய மற்றும் கிறிஸ்தவ இறையியல் ஆகியவற்றிற்கு முக்கியமான தேவைகள்தாம். அதன் மற்றனைத்து கூறுகளையும் ஒதுக்கிவிட்டு இந்நிலைபாடு எடுப்பதன் மூலம் ஒரு தலித் தம் சுய-ஆற்றல் பெறுதலை பாரத மரபுடன் இணைத்து வளர்க்காமல் மார்க்சியம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றுடன் இணைத்துவிட வைக்கும் அதிகார-வேட்கை விளையாடலின் முதல் கட்டமே அது.

மிகவும் வக்கிரமாக, மட-அடியாகவும் கூட இப்பதம் பயன்படுத்தமுடியும். உதாரணமாக, திரு,ஞாநி, இசைஞானி இளையராஜா அவர்களைக் குறித்து கூறியிருக்கும் வார்த்தைகளை படித்துப் பார்க்கலாம், ‘ … (சமஸ்கிருதமயமாகல்) முயற்சியின் தோல்வியின் அடையாளமாக இளையராஜாவைக் கருதலாம். எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றும் இளையராஜாவால் ராஜப்பைய்யர் ஆக முடியவில்லை. ‘ முழு ஈடுபாட்டுடன் இளையராஜா ராஜப்பைய்யர் ஆக முயன்றும் முடியவில்லை எனக் கூறுவதற்கு ஆதாரம் என்ன ? ஒரு துறவியை அல்லது பீடாதிபதியை காண்பதாலேயே அல்லது பணிவதாலேயே இளையராஜா ராஜப்பைய்யர் ஆக முயல்கிறார் என்கிறாரா திரு.ஞாநி ? அல்லது பகவான் ரமணரை ஸ்ரீ அரவிந்த அன்னையை பாடியதாலேயே ? அல்லது அவரது ஒன்றிற்கும் மேற்பட்ட நூல்களில் அவர் இசையை ஆன்மிக சாதனையாக காண்பதினாலேயே ? இைளையராஜா அவர்களும் சரி எம்.எஸ் அவர்களும் சரி தனிமனிதர்கள். இளையராஜா வாழ்வது நகரிய சமுதாயத்தில். அவருக்கு இரசிகர்கள் தவிர அவர் பின்னால் அவர் சாதி சமுதாய மக்கள் அணி திரளவில்லை. அவர் தமது ஆன்மிக நாட்டத்தை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றவுமில்லை. இந்நிலையில் அவரது தனிவாழ்க்கை எழுச்சிகளை ஒரு சமுதாய நிகழ்விற்கான பதத்தால் குறிப்பது எத்தனை மடத்தனம்! எனில், நிருபர் ஒருவர் பிஸ்மில்லா கானிடம் அவர் ஏன் பாகிஸ்தான் போகவேண்டுமென வினவியதற்கு கங்கயையும் காசி ஆலயத்தையும் விட்டுவிட்டு நான் எப்படி போகமுடியும் எனக் கேட்டதையும், ஷேக் சின்ன மெளலானாவையும் திரு.ஞாநியின் அறிதல் எவ்வாறு உள்வாங்கும் என்பதை நினைக்கையில் திரு.ஞாநியிடம் உண்மையிலேயே பரிதாபம் ஏற்படுகிறது. (பிஸ்மில்லாகான் இத்தனை விழுக்காடு ஹிந்து இத்தனை விழுக்காடு முஸ்லீம், ஷேக் சின்ன மெளலானா இத்தனை விழுக்காடு, அப்துல் கலாம் அவர்களுக்கு ஏற்கனவே ஞாநியால் கொடுக்கப்பட்ட விழுக்காட்டளவுகள் அனைவருக்கும் தெரியும். இனி இதில் யார் தேர்ச்சி பெற்றார்கள் பெறவில்லை என்பதையும் திரு.ஞாநி கூறலாம்.) ஒரு பேச்சுக்கு இளையராஜா பகவான் ரமணரைப் பாடுவது ‘ராஜப்பையர் ஆக முயலும் ‘ சமஸ்கிருதமயமாகல் முயற்சியின் ஒரு பகுதி எனக் கொள்வோம். எனில் பகவான் ரமணரை இதே சமூகவியல் ஆய்வுக்கருவியால் பகுப்பாய, அவர் எவ்விதம் தேறுவார் எனப்பார்க்கலாம். பூணூல் களைந்து, நாதஸ்வரக் கலைஞரிடம் பிரசாதத்தை தம் முதல் பிச்சையாகப் பெற்ற பகவான் ரமணரை சமஸ்கிருதமயமாகல் எனும் சட்டகத்தில் எவ்விதம் அடைக்கலாம் ? அதே பகவான் ரமணரைப் பாடும் இசைஞானியின் பக்தியும் ஏக்கமுமோ ராஜப்பைய்யர் ஆக முயலும் முயற்சியாகிவிடுகிறது. வாழ்க ஞாநப்பார்வை!

எங்கெங்கோ சுற்றியாறிற்று. இனி நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலுக்கே போகலாம். ‘விக்கிர ஆராதனையாளருக்கு ஐயோ கேடு ‘ என கோவில் வீதியிலேயே துண்டுபிரசுரம் கொடுக்கும் அந்த பெந்தகோஸ்தே பிரச்சாரகரை கடந்து கோவில் அம்பலத்தில் இளைப்பாறலாம் என தூணில் சரிந்து மேலே நோக்கினால் அட இதென்ன! புதுப்பிக்கப்பட்ட அம்மன் கோவில் கோபுர பொம்மைகளில், அண்ட சராசரங்களின் அன்னையை பூனையில் கண்டு உணவளிக்கும் அந்த எழுத்தறிவில்லா காளிகோவில் பூசாரியும் வாலையும் தலையையும் உயர்த்தி அவரைப் பார்க்கும் பூனையும்!

பேராசிரியரே, என்ன சொன்னீர்கள், சமஸ்கிருதமயமாகலா ?

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

(இந்தக் கடிதம் சென்ற வாரம் கிடைத்தது. பிரசுரிக்க விடுபட்டதற்கு வருந்துகிறோம் – திண்ணை குழு)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்