செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

நாக.இளங்கோவன்


இவ்வருடத்திய சுவடுகளைப் பார்க்கும் போது, ஏறத்தாழ மாதம் ஒரு பரபரப்பான சங்கதி மக்களைப் பேச வைக்கிறது.

மே/சூனில் பாராளுமன்றத்தேர்தலும் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளும், சூலை மாதம் கும்பகோணம், ஆகட்டு மாதம் தனஞ்செய், வீரசவர்க்கர் போன்ற கலவையான பரபரப்புகள், செப்டம்பர் மாதம் செயலட்சுமி, அக்டோபர் மாதம் வீரப்பன், நவம்பர் மாதம் செயேந்திரர் என்று இது தொடர்கிறது. இப்படி ஏதும் இல்லாவிடில் நமக்கும் பொழுது போகமாட்டேன்கிறது.

செயேந்திரர் கைது அவரின் ஆதரவாளர்களுக்கு ஒரு விதமான அதிர்வையும்,அவரின் ஆதரவாளர் அல்லாதவர்களுக்கு ஒரு விதமான அதிர்வையும் ஏற்படுத்தி ஒரு கலவையான பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது சற்று மாறுபட்டதாகும்.

சங்கரர் ஆன்மீகவாதியா ?

செயேந்திரரை ஆன்மீக வாதியாகக் கண்டவர்கள் கைது செய்யப்பட்டதும் துடித்துத்தான் போயினர். செயேந்திரர் குற்றவாளிதான் என்று இன்னும் கூறப்படவில்லை. ஆனால், கடுமையான குற்றச்சாட்டோடு குற்றவாளிக் கூண்டிலே நிற்கவைக்கப் பட்டிருக்கிறார்.

அதையே அவரை நம்பியோராலும் இன்னும் நம்புவோராலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பலர் தாங்கிக் கொண்டது போல் காட்டிக் கொள்கின்றனர்.

வழக்கமாக தீபாவளிகள் தீமையும் கெடுதியும் (நரகன்) தொலைந்த நாளாக கொண்டாடப் படும். இந்தத் தீபாவளி ஒரு கெடுதியையும் தீமையையும் கண்டு பிடித்துக் கைது செய்திருக்கிறது என்ற எண்ணத்தைத் தருவது போல செயேந்திரர் கைது அமைந்திருக்கிறது. கருப்பு சட்டை போடும் தி.க காரர்கள் கூட இனி தீபாவளியைக் கொண்டாடினால் வியப்பதற்கில்லை என்று சொல்லுமளவிற்கு செயேந்திரர் கைது அமைந்திருக்கிறது.

அவர் ஒரு துறவி – மக்களுக்காக உழைக்கிறார்; அவரைப் போய் கைது செய்யலாமா என்ற கேள்வியை பலர் எழுப்பினர். அவர்களில் பலர் அப்பாவியாகக் கூட இருக்கக் கூடும்.

எனினும் ஒரு துறவியாகக் காட்சியளித்த செயேந்திரர் துறவியாகவே வாழ்ந்தாரா

என்பதை யாரும் ஒத்துக் கொள்ளத் தயங்குவர்.

சங்கரமடம் என்பது ஒரு அறப்பணி நிறுவனம். ஆனால், அது சாதி சார்புடையதாகவே இருந்தது. செயேந்திரர் தலைமையில் அந்த சாதீயம் பெருகியது. அந்த சாதீயத்திற்கு இந்து மத வேதங்களும், கொள்கைகளும் துணையாக இழுத்துக் கொள்ளப் பட்டன.

செயேந்திரரின் தலைமையில் சங்கரமடம் பெரும் செல்வமும், சொத்துக்களும், நிறுவனங்களும் நிறைந்த இடமாக ஆகியது.

சங்கர மடத்தின் செல்வாக்கு என்பது மிகப் பெரியது. இந்தியாவின் முதற்குடிமகன் முதற்கொண்டு உயர் அதிகாரங்கள் கொண்ட அனைவரும் செயேந்திரர் காலில் விழுவது வாடிக்கை. அறிஞரும் விஞ்ஞானியும் மனித நேயரும் ஆன அப்துல் கலாமும் கை கட்டி அவரிடம் நின்றிருக்கிறார்.

சங்கர மடம் ஒரு அரசியல் சக்தி. பாபர் மசூதி தீர்வுக்கு செயேந்திரர் ‘ஒரு மூட்டை உமியை அள்ளிக் கொண்டுபோய் இசுலாமியரிடம் கொட்டி, கொட்டுங்கள் ஒரு மூட்டை அரிசி – அனைவரும் ஊதி ஊதி சாப்பிடலாம் ‘ என்று சொன்னது இந்தியா முழுக்க அறியப் பட்ட ஒன்று. மத மாற்ற சட்டத்தை ஆதரித்து சென்னையில் அரசியல் கட்சிகள் போல ஊர்வலம் நடத்தி மெரீனாக் கடற்கரையில் மாநாடு நடத்தி முழங்கினார் செயேந்திரர். (அதுதான் மெரீனாவில் நடந்த கடைசி அரசியல் பாணியிலான கூட்டம். அதற்குப் பின்னர் செயலலிதா மெரீனாவில் யாரும் கூட்டம் நடத்தக் கூடாது என்று தடையே போட்டு விட்டார் . )

இப்படி, அரசியல், சொத்து நிர்வாகம், மதப் பணிகள் என்ற அனைத்தையும் செய்து கொண்டிருந்த செயேந்திரர் அவ்வப்போது கட்டைப் பஞ்சாயத்துகளும் செய்து தன் மதிப்பை உயர்த்திக் கொண்டிருந்தார். குறிப்பாக மாலி நாடகப் பிரச்சினை, இராதாகிருட்டிணன் தாக்கப் பட்டது போன்ற பிரச்சினைகளில் அவரின் செயல்பாடு ஒரு தரக்குறைவான கட்டைப் பஞ்சாயத்து அளவிலே பேசப்பட்டது.

துறவியான அவருக்குக் கிடைத்த செல்வாக்கு, முக்கியத்துவம், மரியாதை எல்லாமே செல்வத்தால் வந்தது. காஞ்சி மடத்தில் செல்வக் குவியல் இல்லாதிருப்பின் அங்கே அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வேலையே இல்லை. ஆக, இந்த பலம் செயேந்திரருக்கு மேலும் மேலும் ஆணவத்தையும் போதையையும் கொடுக்க, கடைசியில் ‘கூலிக் காலிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தார் ‘ என்று சொல்லப்படுமளவுக்கு ஆகிவிட்டார். தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தின் உச்சமாக அவர் அம்மாதிரி நிலைக்கு, கூலிப்படையால் சுட்டிக் காட்டப் படும் அளவிற்கு ஆகிப் போனார்.

இறுதியில் ஆண்டவன் பெயரால் பல பூசைகள் செய்யும் செயேந்திரர் பூசையின் போதே (மூவுலகு பூசை) கைது செய்யப் பட்டிருக்கிறார்.

‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுள

புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்

பொக்க மிக்கவர் பூவுநீருங் கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே ‘

— தேவாரத்தில் சுந்தரர்

நெக்குருகி இறைவனைப் பற்றுபவர்களின் உள்ளத்தில் புகுந்துறையும் இறைவன், பொய்மையாளர்களின் பூசைகள், நீராட்டு போன்றவற்றைக் கண்டு நாணி, அவர்களைப் பார்த்து நகைப்பாராம். அதுபோல, இறைவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இறுதியில் இவர் செய்யும் பொய்யான பூசை வேண்டாம் என்று ஆணையிட்டாரோ என்று எண்ணுமளவுக்கு இவரின் பூசை நேரக் கைது அமைந்திருக்கிறது.

சங்கரமடத்தின் சொத்து 1000 கோடி என்கிறார் சிலர். 5000 கோடி என்கின்றன சில ஏடுகள். அது 1000 கோடி என்றாலும், 1000 கோடி அளவு வணிகம் செய்யும் ஒரு தொழிலதிபரின் திறமையினை செயேந்திரர் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அதோடு அரசியல், மதம், கோயில் பணிகள், வடமொழிப் பணிகள், தொழிலதிபர்களின்

நிறுவனங்களைத் திறந்து வைப்பது, கோயில் குடமுழுக்கிற்கு நாள் குறித்துக் கொடுப்பது, நேபாள மன்னர் போன்றோரின் குடும்பவிழாக்களை நடத்திக் கொடுப்பது போன்ற எல்லாப் பணிகளையும் இவர் பார்த்திருக்கிறார்.

இவ்வளவையும் செய்பவர் துறவியாக இருக்க முடியுமா ? எதனையெல்லாம் துறப்பது சிறந்தது என்று துறவு அறம் கூறுகிறதோ அதில் முக்கியமான பலவற்றை இவர் துறக்க வேயில்லை.

இவருக்கு ஆன்மீகப்பணி செய்ய எங்கே நேரம் இருந்திருக்கும் ? தூய ஆன்மீகம் என்பது அரசியல் செய்யாது. குறைந்தது மதவெறியையும் சாதிவெறியையும் தூண்டாது. காசு பண பேரம் செய்யாது. அப்படியெல்லாம் செயேந்திரர் இருந்திருந்தால் பல பேர் அவரை எதிர்த்திருக்கக் கூட மாட்டார்கள்.

செயேந்திரர் ஒரு வேளை தவறாகக் கூட கைது செய்யப் பட்டிருக்கலாம் அல்லது தண்டிக்கப் படவும் கூடும். அதனை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், செயேந்திரர் ஒரு துறவி, ஆன்மீக வாதி என்ற நம்பிக்கையில் இருந்ததாக அல்லது இருப்பதாகக் கூறும் இவரின் சீட கோடிகளும் பக்த கோடிகளும்தான் செயேந்திரரை விட மிகப்பெரிய மோசடிக் காரர்கள்.

செயேந்திரர் முழுக்க முழுக்க ஆன்மீகக் கருத்துகளைச் சொல்லி (வாரியாரைப் போல) அவரை நம்பிய மக்களுக்கு ஆன்மீக பலம் கிட்டச் செய்யவில்லை. மாறாக, பக்தர்கள் சங்கரமடத்தின் செல்வத்தாலும் செல்வாக்காலும் கிடைக்கக் கூடிய பலன்களுக்காக மட்டுமே சங்கராச்சாரியார் மேல் நம்பிக்கையும் மதிப்பையும் வைத்தவர்கள்.

செயேந்திரரை, அவர் செய்த, தடாலடி அரசியல், மத மற்றும் குமுக விளையாட்டுகளையெல்லாம் ஆதரித்து, அவரை மேலும் மேலும் ஆணவம் மிக்கவராக ஆக்கி, ஒரு பெரிய ‘தாதா ‘ என்ற நிலைக்குத் தள்ளிவிட்டவர்கள் அவரின் சீட மற்றும் பக்த கோடிகள்தான்.

இந்த சீட/பக்த கோடிகளுக்கு, செயேந்திரர்,

– சாதீயம் செய்தபோது அவருக்கு கைதட்டத் தோன்றியது

– சூடான அரசியல் செய்தபோது கைதட்டத் தோன்றியது

– மதவெறிக்கு நீரூட்டிய போது கைகுலுக்கவே தோன்றியது

– செல்வங்கள வாரிக் குவித்தபோது நாக்கு சப்பு கொட்டியது

– திராவிட, தமிழ் இயக்கங்களை எதிர்த்து ‘முனகிய ‘ போது அது போர் முரசாகவே கேட்டது

– கோவிலில் தமிழ் மந்திரங்கள் ஓதுவது தவறு என்று சொன்னபோது காதிலே தேன் வந்து பாய்ந்தது

– 50 ஆண்டுகள் பணி செய்து விட்டேன் என்று விழா எடுத்து அந்த சாக்கில் வசூல்ராசாவானபோது துள்ளிக் குதிக்கத் தோன்றியது

இப்படி எல்லாவகையிலும் அவர் ஆன்மீக வழி தவறிப் போகும்போதெல்லாம் ஆனந்தக் களிப்பில் இருந்து விட்டு, இன்று கைது செய்யப்பட்ட பின்னர்

+ ஒரு ஆன்மீக முதியவரைக் கைது செய்யலாமா ?

+ இப்படி ஒரு கொலையை அவர் பண்ணத் துணிவாரா ?

+ அய்யோ, சங்கர மடத்தின் மானம் போச்சே!

+ இது அரசியல் சதி!

+ இது மாற்று மதத்தினரின் சதி!

+ இது சங்கரரைப் பிடிக்காதவர்களின் சதி!,

+ காவல்துறையின் அட்டகாசம்

+ செயலலிதாவின் சதி அல்லது தவறு என்று புலம்புவதும்,

+ சட்டம் என்றால் எல்லோருக்கும் சமம் – அதனால் தண்டிக்கப் பட்டால் படவேண்டியதுதான்

+ இப்படிக் கொலை பண்ணும் அளவிற்கு அவர் துணிவார் என்று எதிர் பார்க்கவில்லை

+ இவர் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்

+ இவரால் துறவிகள் என்றாலே மரியாதை இல்லாமல் போய்விடும்

+ இந்து மதத்திற்கு இழிவைத் தேடித் தந்துவிட்டார்

என்று செயேந்திரரைப் பழி கூறுவதும், எந்த வகையில் ஞாயமும் நேர்மையுமானது ?

செயேந்திரர் பல்வேறு துறைகளில் மூக்கை நுழைத்து, சாதீய, மதச் சார்புடன் பல அட்டகாசங்களை கடந்த 50 ஆண்டுகளில் செய்ய வைத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக கட்டைப் பஞ்சாயத்து, அடிதடி என்றளவிற்குப் போய் இறுதியில் கொலை என்ற அளவிற்குப் போகும்வரை, அவருக்குப் பாலூட்டி, கனியூட்டி வளர்த்து விட்டு இன்று குமுறும் பக்தர்களுக்கும், செயேந்திரரைக் குறைகூறும் பக்த, சீட கோடிகளுக்கும் ஏதேனும் நாணம் இருக்கிறதா ?

செயேந்திரர் மேல் விழுந்திருக்கும் இன்றைய கொலைக் குற்றச்சாட்டு அவரின் ஒருவர் மேல் விழுந்ததில்லை. அதற்கு அவரின் ஒட்டு மொத்த பக்த/சீட கோடிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள்தான் அவரை ஆன்மீகப் போர்வையில் ஆட விட்டும் அழிய வ்ிட்டும் நாடகமாடியவர்கள் அல்லது வேடிக்கை பார்த்தவர்கள்.

எப்பொழுதும் பக்கவாத்தியமாக இருந்து விட்டு, இவர்கள் இன்று அவரைத் திட்டுகிறார்கள்! இதற்கு கருப்பு சட்டை போட்ட தி.க காரர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரே நிலையில் திட்டுகிறார்கள்.

நள்ளிரவில் கைது, மனித உரிமை மீறல், பொய்க் குற்றச் சாட்டு என்று வந்தபோதெல்லாம் செயேந்திர பக்தர்கள் அண்மைக்காலங்களில் அதைப் பொருட்படுத்தியதேயில்லை. அவர்களுக்கு, காவலில் இருந்த/இல்லாத கைதிகள்/குற்றம் சுமத்தப்பட்டோர் பலர் சுடப்பட்டு

இறந்த போதும் சரி, அரசூழியர்கள் நள்ளிரவில் காவல் துறையால் கைது செய்யப் பட்டு இழுத்துச் செல்லப் பட்ட போதும் சரி, பல அரசியல் தொடர்புடைய தலைவர்கள் கடுஞ்சிறை செலுத்தப் பட்ட போதும் சரி, வயதுக்கு வராத சிறுவர்கள் பொடாவில் போடப்பட்ட போதும் சரி, அவர்களுக்கு மனித உரிமைகளும் நேயங்களும் தேவைப்பட்டதே இல்லை. ஆனால் இன்றைக்கு அவர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

தங்களுக்குத் தகுந்த, தங்கள் வசதி வாய்ப்புகளுக்கு பயன் தரும் மற்றொரு சங்கர மடத் தலைவர் வரும் வரை, நிலைப்படுத்தப் படும்வரை இவர்கள் இதையெல்லாம் பேசுவார்கள். அது நடந்தவுடன் செயேந்திரரின் படத்தைக் கூட சங்கர மடம் சம்பந்தப் பட்ட இடங்களில் இருந்து அகற்றி விடுவார்கள்.

ஏனெனில், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை ‘ என்று வள்ளுவம் சொல்வது போல், பற்றற்றானை பற்றுவது அல்ல இவர்கள் நோக்கம். வளங்களையும் நலங்களையும் பற்றுவது மட்டுமே நோக்கம்.

சங்கர மடம் என்பது

‘சாதீயச் செல்வர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் சரணாலயம்! ‘

‘தலைவர் மாறலாமே ஒழிய அதன் தடம் மாறும் என்று எண்ண வாய்ப்பேயில்லை ‘.

அன்புடன்

நாக.இளங்கோவன்

—-

nelan@rediffmail.com

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்