இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(14.1.2004 துக்ளக் இதழில் குருமூர்த்தி அவர்கள் எழுதி யிருந்த கட்டுரையின் தாக்கம்.)

சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் “வழங்கப்படுவதற்கு” எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நம் சாஸ்திரங்களில் அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளதாய்ச் சொல்லி இப்படி ஒரு சட்டத்துக்குத் தேவையே இல்லை என்று கூறிச் சப்பைக்கட்டுக் கட்டிவரும் பல அறிவுஜீவி ஆண்களுக்கு நம் அன்புக்குரிய குருமூர்த்தியும் விதிவிலக்கு அல்லர் என்பது இக்கட்டுரையில் வெளியாகிறது.

பெண்களுக்கு அதிகாரம் “அளித்தால்”தான் அவர்களுக்குச் சுதந்திரமும் சம உரிமையும் கிடைக்கும் என்கிற அடிப்படையில் இக்கருத்துப் பரப்பப்பட்டு வருவதாய் அவர் கூறுகிறார். இவ்வாறு பரப்பப்பட்ட கருத்தே இன்று பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவாக உருவெடுத்துள்ளதாகவும் கூறும் இவர் இதற்கு ஆதரவான மசோதா நிறைவேறாததற்குக் காரணமே தங்கள் எண்ணிக்கை குறையுமே என்கிற ஆண்களின் ஆற்றாமையின் விளைவுதான் என்பதைப் புரிந்து கொள்ளாதது உலக மகா ஆச்சரியமே!

இந்த மசோதா இல்லாமலேயே நம் நாட்டில் அரசியலில் உயர் பதவி வகித்துள்ள – இன்றும் வகித்து வரும் – பெண்மணிகளின் பட்டியலை இவர் அடுக்குகிறார். அவர்களில் பலரின் அரசியல், சமூக, பொருளாதார, குடும்பப் பின்னணிகளைப் பார்க்கத் தவறும் இவரது அணுகுமுறையைப் பற்றி என்ன சொல்ல! அட, (க்) கடவுளே!

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பதற்கு எதிரான கருத்து நம் நாட்டில் வெகுஜனக் கருத்தாகவோ பொதுக்கருத்தாகவோ அமையவில்லை என்று இப் பெண்மணிகளின் உதாரணங்களின் வாயிலாக இவர் மெய்ப்பிக்க முயல்கிறார். அப்படியானால், நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மகானுபாவர்கள் மக்களின் பிரதிநிதிகளாய்ச் செயல்பட்டு இம்மசோதா நிறைவேறுதற்கு ஆதரவன்றோ அளித்திருக்க வேண்டும் ? எனவே, இவர்கள் ஆண் மக்களின் பிரதிநிதிகள் என்பது மட்டுமே உண்மை என்று தோன்றுகிறது! அதனால்தான், சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தங்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடுமே என்கிற ஆற்றாமையில் அதைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரி. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பதற்கு எதிரான கருத்து நம் நாட்டில் வெகுஜனக் கருத்தாகவோ, அல்லது பொதுக் கருத்தாகவோ அமையவில்லை என்கிற இவரது கூற்று உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுவோம். அதைச் சட்ட பூர்வமாக்குவதில் குருமூர்த்திக்கு என்ன கஷ்டம் ? எதற்கு ஆட்சேபணை ? அதனால் நாட்டில் புதிதாக என்ன கேடு நேர்ந்துவிடப் போகிறதாம் ? நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபசாரம், போதை மருந்து நடமாட்டம் ஆகியவை இருக்கக் கூடா வென்பதே மக்களின் ஏகோபித்த கருத்து. ஆனால், வெறும் பொதுக் கருத்து மட்டுமே செயல்பாட்டுக்கு முழுக்க முழுக்க அடிகோலிவிடுமா ? சட்டங்களும், அவற்றைச் செயல்படுத்த அதிகாரிகளும், காவல் நிலையங்களும் தேவைப்படுகின்றன அல்லவா ? அது போன்றதே இதுவும்.

பெண்கள் என்று வரும் போது அனைத்துலக அளவிலும் அவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்க்கும் போக்கே ஆண்களிடம் அடிப்படையாய்க் காணப்பட்டு வருகிறது – அது மேல் நாடோ, கீழ் நாடோ! எதிர்க்கின்ற விஷயங்கள், எதிர்ப்பின் தன்மை, அதன் தீவிரம் ஆகியவற்றில் வேண்டுமானால் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கலாம். பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்கள் கூன்டுப் பறவைகளாக வீட்டிலேயே தங்கித் தங்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றித் தொண்டு செய்து திருப்திபடுத்த இருபத்துநான்கு மணி நேரமும் விரல் சொடுக்கினால் வந்து நிற்கும் சேவகியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே! இதை ஒப்புக்கொள்ள ஆண்கள் மறுத்தால், அது தங்களைக் குறுகிய உள்ளம் படைத்தவர்களாய்க் காட்டுமே என்னும் ஒரே காரணத்துக்காகத்தான் இருக்க முடியும். மிகவும் கசப்பான உண்மை இதுதான்! இந்த அடிப்படைப் பரம்பரைப் பிறவிக் கோளாறு ஒருபுறம். தங்கள் எண்ணிக்கை குறையுமே என்னும் பொறாமை மறு புறம். இவையே பெண்களின் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறாமைக்குக் காரணங்களாகும்!

முழுக்க முழுக்கப் பெண்களே சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் கூட நம் நாட்டு ஆண் அதிமேதாவிகள் பெண்களைக் கலந்து கொள்ளாமலேயே சட்டங்களை இயற்றி வந்துள்ளனர். பெரும்பாலான சட்டங்களும் நடத்தைக் கோட்பாடுகளும் ஒருதலைப் பட்சமானவையே. பெண்களின் உணர்வுகளைத் துளியும் மதிக்காதவையே. ஆண்களுக்கு மட்டும் வசதியானவையே. இன்னமும் அவற்றின் மிச்ச சொச்சங்கள் மிகப் பெரிய அளவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு எதிராய்க் குரல் கொடுக்கக் கணிசமான அளவில் சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் பெண் உறுப்பினர்கள் இருப்பதுதான் நியாயமானது.

அப்படி இல்லாததன் விளைவே ஆண் நீதிபதிகள் ‘அந்தப் பெண் ஒரு விலைமகள். எனவே அவளை நாலைந்து பேர் கூட்டாகக் கற்பழித்ததில் எந்தத் தப்பும் இல்லை’ என்றெல்லாம் காட்டு,மிராண்டித்தனமான தீர்ப்புகளை வழங்குவது! இன்னொரு பெண் விஷயத்தில், ‘அவள் எதிர்ப்புக் காட்டியதற்கான அடையாளங்கள் அவள் உடலில் இல்லாததால், அவளது விருப்பத்துக்கு எதிராய் வந்நுகர்வு நடந்ததாய்ச் சொல்லமுடியாது’ என்று அறிவித்துக் குற்றவாளிகளை ஒரு நடுவர் விடுவித்ததும் ஆகும்! வீடுகளுக்குள் தடாலடியாய்ப் புகுந்து கத்தியையோ துப்பாக்கியையோ காட்டி அச்சுறுத்தி அங்குள்ள ஆண்களையே வாயடைக்கச் செய்து கொள்ளை யடித்துச் செல்லும் நிகழ்வுகளில், ‘ஆண்கள் எதிர்ப்புக் காட்டாததால் அவர்களின் சம்மதத்தோடுதான் கொள்ளை நடந்தது’ என்று ‘நீதி’ வழங்கி ஒரு வழக்கைத் தள்ளி, குற்றவாளிகளைத் தப்ப விடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ? இப்படி யெல்லாம் வாதிட்டுச் சட்டங்களில் உள்ள ஓரவஞ்சனைத்தனமான ஓட்டைகளை அடைக்கக் கணிசமான எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டியது அவசியமே அல்லவா ? பாரதியாரை அடிக்கடி உச்சரிக்கும் இவர்களுக்கு, ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று அவர் பாடியது மட்டும் கண்ணுக்குத் தெரிவதில்லை! சட்டசபைக்குள் நுழையாமல் சட்டங்கள் செய்வது சாத்தியமா என்ன!

குருமூர்த்தி மேல் நாடுகளில் பெண்களின்பால் ஆண்களுக்கு உள்ள மனப் பான்மையை நம் நாட்டு ஆண்களின் மனப் பான்மையோடு ஒப்பிட்டு நம் நாட்டு ஆண்கள் பெண்களுக்குச் சுதந்திரம் “அளிப்பதில்” தாராள மனம் படைத்தவர்கள் என்று திருப்திப் பட்டுக் கொள்ளுகிறார். ஏதோ, இந்திய ஆண்களெல்லாரும் பிறப்பிலேயே பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்பது போல! கிடையவே கிடையாது. சில பெண்கள் ஓரளவு முன்னேறியதற்கும், பெண்களுக்குத் தாங்கள் இழைத்து வந்த அநீதிகள் (சில) ஆண்களுக்குப் புரிந்ததற்கும் காரணம் மகாத்மா காந்தி என்னும் மாமனிதரே யாவார்! நாடு தழுவிய அளவில் சமுதாய மேம்பாட்டுக் கருத்துகள் உருவாகக் காந்தி அடிகள் காரணர் என்றால், அன்று ராஜதானி என்னும் பெயர்பெற்ற பல மாகாணங்களைப் பொறுத்த வரையில், ஆங்காங்கு பிறந்து இந்த விஷயத்தில் மக்களின் கருத்தை மாற்ற முயன்ற பல்வேறு அவதார புருஷர்கள் காரணர்கள்! (இவர்கள் அனைவரும் ஆண்களே என்பதைப் பெண்ணுரிமைவாதிகள் நன்றியோடு கருத்தில் கொள்ளுவார்களாக.)

மிக, மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்த – விரல்விட்டு எண்ணக்கூடிய – மிக, மிக, மிகச் சில பெண்களை உதாரணங்களாய்க் காட்டி ஒட்டுமொத்தக் கணிப்புக்கு வருவது தப்பு என்பது கூட நம் குருமூர்த்திக்குத் தோன்றவில்லை என்பதை நம்ப முடியவில்லை. தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்ததையும், அவ்வினத்தினரில் பலர் அமைச்சர்களாக இருந்ததையும், இன்று இருப்பதையும் மட்டும் வைத்துத் தீண்டாமை ஒழிந்துவிட்டது, அரிஜனங்கள் முன்னேறிவிட்டார்கள் என்பது அபத்தமல்லவா! பெண்கள் பற்றிய விஷயங்கள் என்று வந்தாலே பரம்பரைத்தனமான சிந்தனைத் தேக்கத்துக்கு ஆளாகிற பெரும்பான்மை ஆண்களின் பட்டியலில்தான் குருமூர்த்தியும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

பெண்களின் சுதந்திரம் பற்றி மத நூல்கள் என்ன சொல்லுகின்றன என்பதைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட மத நூல் நியாயமான சுதந்திரத்தைப் பெண்களுக்கு அளித்திருக்குமாயின் அந்தச் சுதந்திரம் நடைமுறையில் எந்த அளவில் (லட்சணத்தில்) கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும், அது பெண்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுவதில் ஆண்கள் எந்த அளவுக்கு அராஜகம் செய்து வந்துள்ளார்கள் என்பதுமே நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களாகும். எல்லாம் ஏட்டில் இருந்தால் ஆயிற்றா ?

தீண்டாமை கூடத்தான் நம் ஆதார மத நூல்களில் இல்லை என்று ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் கூறி ஒரு சங்கர மடாதிபதியை வாதுக்கு அழைத்தார். (அவரது சவால் ஏற்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ) உடனே, நம் சாஸ்திரம் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்துவிட்டு நாம் குளிர்காயப் போய்விடலாமா ? நடை முறையில் என்ன நடக்கிறது ? அதைத்தானே பார்க்க வேண்டும் ? ஆவன செய்யவும் வேண்டும் ? இதே போன்றதுதான் நம் குருமூர்த்தி சொல்லும் பெண்கள் சார்ந்த சாஸ்திர, சம்பிரதாயங்களும். இன்னும் சொல்லப் போனால், நம் வேறு சில சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் (திவச மந்திரங்கள் போன்றவை) பெண்களை எந்த அளவுக்குக் கேவலப் படுத்தி வைத்துள்ளன என்பதைப் பார்த்தால், நாம் (இந்துக்கள்) வெட்கித் தலை குனிய வேண்டியது வரும். (பெண்களை இழிவு படுத்தும் இது போன்றவையும் இன்னும் சில அநியாயச் சட்டங்களும் இடைச்செருகல்கள் என்பது காந்தியடிகளின் கருத்தாகும்.) இது பிராமணர்களின் வேலை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பெண் சுதந்திரம் என்பது மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை ‘செக்ஸ் சுதந்திரம்’ என்பது வரை விகாரப் பட்டுவிட்டது என்று குருமூர்த்தி அங்கலாய்ப்பதில் உள்ள வேதனையும் மனத்தாங்கலும் நமக்குப் புரிகின்றன. ‘சுதந்திரம்’ என்பதன் பெயரால் இதுகாறும் ஆண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் அதே தவறான செக்ஸ் சுதந்திரத்தைப் பெண்களும் ‘சம உரிமை’ என்கிற பெயரால் அனுபவிக்கக் கூடாது என்பதே நமது கருத்தும் ஆகும். தாய்மை என்பது கடவுள் பெண்களுக்கு அளித்துள்ள அருட்கொடையாகும். உடல், மன நோயற்ற குழந்தைகள் பிறப்பதற்கு ஒரு பெண் நன்னடத்தையுடையவளாக இருத்தல் மிகவும் அவசியமானதும் ஆகும். எனவே, சம உரிமை என்பதன் பெயரால் ஆண்கள் புரிந்துவரும் அட்டூழியங்களைப் பெண்களாகிய நாமும் புரிதல் தாய்மைப் பேற்றை நமக்கு அளித்துள்ள ஆண்டவனை அவமதிப்பதாகும். மனித குலத் துரோகமாகும். நம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்ளுவதும் ஆகும்.

அப்படியானால் ஆண்கள் மட்டும் எப்படி வேண்டுமானும் நடக்கலாமா, அது குழந்தைகளைப் பாதிக்காதா என்னும் கேள்வியை ஒரு படித்த பென் நிச்சயம் எழுப்பத்தான் செய்வாள். பாதிக்கும்தான். (பெண்களுக்கு எய்ட்ஸைத் தருவதே ஆண்கள்தானே ?) இதற்கு நாமென்ன செய்ய வேண்டும் ?

குருமூர்த்தி போன்றவர்கள் நம் நாட்டு மேதைகளும் அதிமேதாவிகளும் பெண்களுக்கு மட்டுமே சொல்லிவந்துள்ள அறிவுரைகளையும், நன்னடத்தைக் கோட்பாடுகளையும் ஆண்களுக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். பெண்களைத் தவறு செய்யத் தூண்டுவதே, அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ள நிலையும், ‘நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். ஏனென்றால், நான் ஆண் பிள்ளை. நீ மட்டும் சரியாக இரு. ஏனென்றால், நீ (கேவலம்) ஒரு பெண்!’ என்னும் ஆணவத்துடன் ஆண்கள் நடந்துவரும் நிலையுமே என்பதைக் குருமூர்த்தி போன்றவர்கள் உணராவிட்டால் வேறு எவரால் உணர முடியும் ?

‘ஆண்களே liberated men ஆக இருந்து தொலைக்கட்டும். அந்த liberation நமக்கு வேண்டவே வேண்டாம்’ என்று சொல்லும் பெண்ணே பகுத்தறிவுவாதி. நமது உயர்ந்த மட்டத்துக்கு ஆண்களை மேலே இழுக்கப் பெண்களாகிய நாம் – நியாய உணர்வு உள்ள ஆண்களின் துணையுடன் – முயல வேண்டுமே தவிர, அவர்களோடு போட்டி போட்டு, அவர்களது மட்டத்துக்கு நாமும் கீழே இறங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளக் கூடாது. என்பதே நமது கருத்தாகும். இதைப் பெண்கள் உணர்வது குருமூர்த்தி போன்றவர்கள் நடு நின்று, பரம்பரைத்தனமான, பிறவியோடு வருகிற எதிர்ச்சார்பைப் ( inborn prejudice) புறந்தள்ளி, ஓரவஞ்சனைக் கோட்பாடுகளை நிந்தித்தும் நியாயமான முறையில் சிந்தித்தும் செயல்படுவதில்தான் இருக்கிறது.

இந்த நாட்டுப் பெண்ணுரிமை வாதிகளைப் பற்றிய குருமூர்த்தியின் கருத்தும் கணிப்பும் தவறானவை. அப்படியே தவறுசெய்பவர்களாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே ஆவர். ‘ஆங்கிலம் படித்த வர்க்கத்திற்கு வெளிநாட்டுப் பாரம்பரியத்தில் பெண்கள் மீது இருக்கும் ஓர் இறுக்கம் நம் நாட்டின் பாரம்பரியத்தில் இல்லை என்பதே தெரியாத நிலை உள்ளது’ என்று குருமூர்த்தி அங்கலாய்க்கிறார். நாம் ஏற்கெனவே சொன்னது போல் பாரம்பரியத்தை விடவும் நடப்பில் என்ன நிலை உள்ளது என்பதே நியாயவான்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஏற்கெனவே சீர்கெடத் தொடங்கியுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகமாகாதிருப்பது குருமூர்த்தி போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது.

அண்மைக்காலமாகப் பெண்களிடையே பரவியுள்ளதாய்க் குருமூர்த்தி கூறும் தவறுகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அவரைப் போன்றவர்கள் ஆண்களுக்கும் அறிவுரைகள் கூறுதல் அதிக அவசியமானதாகும். ஏனெனில், பெண்களையும் தவறு செய்யத் தூண்டுவது ஆண்களின் அக்கிரமச் செயல்களே என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

கடைசியாக, பேன்ட் போட்டுக்கொண்டு முடி வெட்டிக்கொள்ளும் இக்காலப் பெண்களின் போக்குக்கும் குருமூர்த்தி ஒரு குட்டு வைத்திருக்கிறார். இக்காலத்துக்குரிய ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளக் கால்சராயே ஒரு பெண்ணுக்கு வசதியானது. ஆறு கெஜப் புடைவை யன்று என்பதைக் குருமூர்த்தி புரிந்து கொள்ளவேண்டும். முடியை வெட்டுதல் என்பது காலத்தின் கட்டாயம். இக்காலப் பெண்களுக்கு நேரம் மதிப்புள்ளதாகிவிட்டது. நீண்ட தலை முடியைப் பேன் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவதும், பராமரிப்பதும், அதைப் பின்னிக் கொள்ளுவதும் நேரமெடுக்கும் வேலைகள். குறிப்பிட்ட நேரத்துக்கு ஆஜராக வேண்டிய ஒரு பெண், ‘தலையை உலர்த்திக் கொண்டு பின்னிக்கொள்ளுவதில் நேரமாகிவிட்டது,’ என்று சால்ஜாப்புச் சொன்னால் அலுவலக அதிகாரி அவளைப் ‘பின்னி எடுத்து’ விடுவார். எனவே சிலர் அப்படி இருக்கிறார்கள்! பாரம்பரியப் படி நீண்ட முடி வளர்த்துக் கொள்ளுவதில்தான் பெண்மை இருக்கிறதா ? அப்படியானால், ஆண்களின் குடுமிப் பாரம்பரியம் என்னவாயிற்று ? அது எங்கே போயிற்று ? ஏன் எல்லாரும் கிராப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் – குருமூர்த்தி உட்பட! பஞ்சகச்சம் என்னவாயிற்று ? அதன் இடத்தில் கால் சராய் ஏன் வந்தது! (இந்த இடத்தில் நாம் ஒன்றை ஒப்புக்கொண்டாக வேண்டும் ஆண்-பெண்கள் நீண்ட முடி வளர்க்க வேண்டும் என்பது ஆரோக்கியத்தின் அடிப்படையில்தான். பின்னந் தலையில் அடி பட்டால் ஆபத்து அதிகம். வெயில் படுவதும் நல்லதன்று. அதனால்தான் ஆண்கள் குடுமி வளர்க்க வேண்டும் என்கிற வழக்கம் இருந்தது. அது இயற்கை அளித்த தலைக் கவசம் – helmet.) பாரம்பரிய நடை யுடைகளை ஆண்கள் துறக்கலாம். ஆனால் பெண்கள் மட்டும் துறக்கக்கூடாது – ஒரு வசதியும் தேவையும் கருதிக்கூட! அடேங்கப்பா! என்னே இவரது நியாயம்! இந்த ஓர் உதாரணம் போதும் இவரது ஒற்றைச்சார்புப் பார்வையை நிரூபிக்க!

இறுதியாக, மேல்நாடுகளில் பெண்களின் நிலையையும் இந்தியாவில் பெண்களின் நிலையையும் ஒப்பீடு செய்து, “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை” என்னும் கேலிக்கு நாம் ஆளாக வேண்டாம்! ‘பெண்சிசுக்கொலை’, ‘வரதட்சிணை’, ‘வரதட்சிணைக்கொலை’, ‘அரிஜனப் பெண்களைத் தேர்ந்தெடுத்து “உயர் ஜாதியினர்” செய்யும் மான பங்கம்’, ‘ராஜஸ்தானில் இன்றும் தொடரும் (கட்டாயப்படுத்தி) உடன்கட்டை ஏற்றும் வழக்கம், அதற்குச் சில சங்கராச்சாரியார்களின் ஈர நெஞ்சற்ற – ஒரு பெண் தானாக உடன்கட்டை ஏறுதல் அவளுக்குப் பெருமை (!), கட்டாயப் படுத்துவதுதான் தப்பு என்னும் (பெருந்தன்மையான) -ஒப்புதல்’, ‘இன்னமும் கோவில்களில் தொடரும் தேவதாசி முறை’ போன்றவற்றைப் பற்றி யெல்லாம் கிண்டல் செய்து மேல்நாட்டார் பதிலடி கொடுத்தால் நாம் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளுவது ?

—-

jothigirija@vsnl.nt

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா