பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

பரிமளம்


மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை.

இவை மனித வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் எதிரானவை. ஆன்மீகத் தேவையுள்ள தனிமனிதர்களுக்கு இவை நன்மையளிப்பனவாக இருக்கலாம். ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கோ, நாடுகளுக்கோ அவை உதவுவதில்லை. எனவே மதமும் அரசும் பிரிந்திருப்பது நல்லது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் கூடிவாழும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பிரிவினை இன்னும் கூடுதல் கவனத்துடன் பின்பற்றப்படவேண்டியது அவசியமாகும். பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது இந்தப் பிரிவினையைப் பலப்படுத்துவதற்கு எடுத்துவைக்கும் முதல் அடியாகும். தனி மனிதரின் வழிபாட்டுக்கு மட்டுமே மதம், மற்றவற்றுக்கு அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தனிமனிதரே ஒரு நாட்டின் அடிப்படை அலகு. குடும்பமோ, மதமோ, இனமோ அல்ல. தனிமனிதருக்கும் நாட்டுக்கும் இடையில்தான் கடமைகளும் உரிமைகளும் பற்றிய ஒப்பந்தம் உள்ளது. இந்தக் கடமைகளும் உரிமைகளும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானவை; சமமானவை. முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இவற்றில் வேறுபாடு காட்டுவது தவறு.

ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பெண்ணின் கணவர் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்துகொள்கிறார். இதில் அப்பெண்ணுக்கு உடன்பாடு இல்லை. அவர் யாரிடம் முறையிடுவது ? இந்திய அரசு “நீ ஷரியா சட்டத்துக்குட்பட்டே இயங்கமுடியும்” என்று கைவிரித்தால், ஒரு நாட்டுக் குடிமகளைக் கைவிடும் ஒரு குற்றத்தை இந்த நாடு இழைத்ததாக ஆகிறதே! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது என்ன ஆயிற்று ? ஷரியா சட்டத்துக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கும் வேறுபாடு இல்லை. இந்துக்களின் கட்டப்பஞ்சாயத்துக்குத் தடைவிதிக்கும் அரசு முஸ்லீம்களின் கட்டப்பஞ்சாயத்திடம் அப்பெண்ணைத் தள்ளிவிடுவது எந்த வகையில் நீதி ?

குழந்தை மணம், சதி, தீண்டாமை போன்ற வழக்கங்கள் இந்துக்களின் பாரம்பரியங்கள் என்பதால் அவற்றைத் தடை செய்வதற்கு இந்துச் சமயவாதிகளின் ஒப்புதலை எதிர்பார்த்திருந்தால் அது சரியாகாது என்பது போலவே பலதார மணம், தலாக், மணவிலக்கான பெண்களுக்கான பேணற்தொகை போன்ற விடயங்களில் இஸ்லாமிய சமயக் குருக்களின் ஆலோசனைகளை வேண்டுவதும் கண்டிப்பாகச் சரியாகாது. தவறுகள் எங்கிருந்தாலும் களைய வேண்டியது அரசின் கடமை. பொதுச்சிவில் சட்டம் கொண்டுவராதவரை இந்திய அரசு கடமை தவறுகிறது என்றே பொருளாகும்.

ஒரு சில நாடுகளில் ஷரியா சட்டங்கள் குடிமக்களின் விருப்பத்திற்கேற்ப விடப்பட்டுள்ளன. அவை கட்டாயமல்ல. ஷரியா சட்டங்களை அறவே விரும்பாத முஸ்லிம்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்கின் ஷரியா தீர்ப்பை ஏற்காத முஸ்லிம்கள் பொதுச்சிவில் சட்டத்தை நாடுவதற்கு அந்நாடுகளில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகூட இந்தியாவில் இல்லை. (பொதுச்சிவில் சட்டங்களைத் தவிர மற்றவையெல்லாம் புறந்தள்ளப்படவேண்டும் என்பது என் கருத்து)

***

பொதுச் சிவில் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமைகள் (அதாவது முஸ்லிம்களின் உரிமைகள்) பறிக்கப்படும் என்று இடதுசாரிகளும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களும் கூட கருதுவது புதிராக உள்ளது. பறிபோகும் உரிமைகள் எவை என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லை என்பது புரியும். இந்துப் பாரம்பரியங்களை ஏற்காதவர்களாகவும் ஏற்காதவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முற்போக்குவாதிகள் முஸ்லீம் பாரம்பரியங்களை ஏற்க விரும்பாதவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பிற்போக்குச் சமயக்குரவர்களுக்கு ஆதரவான ஒரு நிலையை மேற்கொள்வது வியப்பையே ஏற்படுத்துகிறது.

***

மதத்துக்கும் அரசுக்கும் இடையில் உள்ள பிரிவினை இந்தியாவில் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அனைவரும் அரசுச் செலவில் பயணம் செய்து கோவில்களுக்குப் போவதும், சாமியாரின் காலைத் தலைகளில் தாங்குவதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானவை. அரசு அலுவலகங்களில் சமய விழாக்களைக் கொண்டாடுவதும் சட்டப்படி தவறு.

எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்பது பொதுச்சிவில் சட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

***

பிரெஞ்சு அரசைப் போல இந்திய அரசும் அரசுப் பள்ளிகளிலும் அரசின் நிதியுதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் சமயச் சின்னங்கள், முக்காடு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும். சீக்கியர்களுக்கும் இதில் விலக்கு கூடாது.

கிறித்துவ மதப் போதனைகளில் ஈடுபடும் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும். நிதியுதவி வேண்டுமானால் சமயப்போதனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்னும் கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும்.

—-

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்