ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

மு இராமனாதன்


நிதி, வணிகம் மற்றும் கப்பற் போக்குவரத்தின் உலகத்தரமிக்க மையம் என்றே ஹாங்காங் பொதுவாக அறியப்படுகிறது. இன்னும் சிலருக்கு நெடிதுயர்ந்த நவீனக் கட்டிடங்கள் நிரம்பிய சுற்றுலாத் தலம். இப்போது ஜனநாயகத்தின் வைகறைக் கிரணங்கள் புலப்படத் தொடங்கியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 12 நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலைக் கவனிக்க சர்வதேசப் பார்வையாளர்கள் நகருக்கு வந்தனர். ஹாங்காங் சீனக் குடியரசின் ஒரு பகுதியாய் இருப்பதுதான் பலரின் ஆர்வத்திற்குக் காரணம். சீனாவின் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது, மக்களால் தேர்தல் மூலமாக அல்ல என்பதை நினைவு கூர்ந்தால் அரசியல் நோக்கர்களுக்கு ஹாங்காங் தேர்தலிலுள்ள ஆர்வம் புரியும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர், தேசத்தின் இராணுவத் தலைமை போன்ற பிரதான பொறுப்புகளெல்லாம் கட்சியின் மத்தியக் குழுவாலேயே அங்ககீகரிக்கப்படுகிறது. ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் சீனக் குடியரசின் அரசியலமைப்பு, தேர்தல் ஜனநாயக முறைகளிலிருந்து விலகியிருப்பதால், அதன் ஒரு பகுதியான ஹாங்காங் ஜனநாயகப் பாதையில் எடுத்து வைக்கும் அடிகள் வரலாற்றிற் குறிக்கப்படுகிறது.

தேர்தல் நிகழ்ந்த ஹாங்காங் சட்டப்பேரவையில் மொத்தம் 60 இடங்கள். அனைத்து மக்களும் நேரடியாக வாக்களித்த ‘பூகோளத் தொகுதி ‘கள் (Geographical Constituency) வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோர் 30 உறுப்பினர்கள். மீதமுள்ள 30 இடங்கள் ‘செயல்முறைத் தொகுதி ‘களின் (Functional Constituency) மூலம் நிரப்பப்பட்டது. செயல்முறைத் தொகுதி உறுப்பினர்கள் கல்வி, வேளாண்மை, சட்டம், பொறியியல், மருத்துவம், தொழில், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சமூகநலம், ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹாங்காங்கின் பூகோளத் தொகுதிகள் 5-ஆகப் பிரிக்கப்பட்டன; 5 தொகுதிகளிலுமிருந்து மேற்சொன்ன 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பூகோளத் தொகுதிகளில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை பயன்படுத்தப்படுகிறது.(பார்க்க தனிக் கட்டுரை: ‘ஹாங்காங்கில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் ‘). தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டமியற்றவும் மாநில அரசைக் கண்காணிக்கவும் அதிகாரம் பெற்றவர்களெனினும், உலகின் மற்ற ஜனநாயகக் குடியரசுகள் போல் நேரடியாக ஆட்சி புரிகிறவர்கள் அல்லர்.

ஹாங்காங்கின் கட்சி அரசியல் எண்பதுகளில் துவங்கி மெல்ல முன்னேறுகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும் ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் இரு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.1991-இல் பிரிட்டிஷ் அரசு நடத்திய முதற் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக ஆதரவாளர்களால் 1994-இல் துவங்கப்பட்டது- ஜனநாயகக் கட்சி. அதற்கு முன்பாகவே 1992-இல் பெய்ஜிங் ஆதரவாளர்களால் துவங்கப்பட்டது ஹாங்காங் மேம்பாட்டிற்கான ஜனநாயகக் கூட்டமைப்பு(Democratic Alliance For Betterment of Hong Kong- DAB).வணிக மற்றும் தொழிற் துறைகளின் குரலை ஒலிக்கிற லிபரல் கட்சி 1994-இல் நிறுவப்பட்டது. இன்னும் பல ஜனநாயக ஆதரவு மற்றும் பெய்ஜிங் ஆதரவு அமைப்புகள் அரசியல் அரங்கில் உள்ளன.

இந்தத் தேர்தலில் 32 இலட்சம் வாக்காளர்களில், சுமார் 18 இலட்சம் பேர், அதாவது 56 சதவீதத்தினர் வாக்களித்தனர்.இதில் நிரந்திரக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் அடக்கம்.1991-இல் நடைபெற்ற முதற் தேர்தலில் வாக்குரிமையை 7.5 இலட்சம் பேர் அல்லது 39 சதவீதத்தினரே பயன்படுத்தியிருந்தனர். இது படிப்படியாக உயர்ந்து 56 சதவீதமாகியிருக்கிறது. இந்தச் சாதனை வாக்குப்பதிவு மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியின் அடையாளம் என்கிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானி மா ஙோக் (Ma Ngok). 2000-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 51 சதவீதமும், 2001 பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதமும், ஜப்பானின் ஜூலை மேலவைத் தேர்தலில் 57 சதவீதமும், தென்கொரிய ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிற சிங்கபூரில் மட்டும் 2001 பாராளுமன்றத் தேர்தலில் 95 சதவீதம் வாக்குகள் பதிவாயின. மேற்கூறிய ஆசிய, மேற்கு நாடுகளைப் போல் ஹாங்காங் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சியாளர்கள் அல்லர் என்பதால் இந்த 56 சதவீத வாக்குப்பதிவு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1991-இல் நடைபெற்ற தேர்தலிற் தொடங்கி ஹாங்காங் கடந்து வந்த ஜனநாயகப் பாதை நெடியது. 1997 ஜூன் 30 நள்ளிரவில் அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது 156 ஆண்டு காலக் காலனியாட்சி முடிவுக்கு வந்தது. மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங்கின் ‘ ஒரு தேசம் ஈராட்சி முறை ‘யும் அமலுக்கு வந்தது. அதாவது, சீனத்தின் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், ஹாங்காங் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி ‘யாக விளங்கும்; அயலுறவு, பாதுகாப்பு நீங்கலாகப் பிற துறைகளில் ஹாங்காங் சுயாட்சியோடு விளங்கும்;ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவர் ஒருகாலக் கட்டம்வரை மக்கள் சீனக் குடியரசு நியமித்த 800 பேர் அடங்கிய குழுவாலும், பின்னர் மக்களால் நேரடியாகவும் தெரிவு செய்யப்படுவார்; மைய அரசு வகுத்திருக்கும் ‘ஆதார விதி ‘களின் அடிப்படையில் சட்டத்தின் மேலாண்மை பேணப்படும். இந்த ஆதார விதிகளை ஹாங்காங்கின் குட்டி அரசியலமைப்புச் சட்டம் எனலாம்.

1997-லும் மீண்டும் 2002-லும் துங் சீ வா செயலாட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்;அவரது அமைச்சர்கள் மைய அரசின் ஒப்புதலோடு அவரால் நியமிக்கப்பட்டவர்கள்.1997-ல் அவர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் தாய்லாந்தின் நாணயம் பட் தலை குப்புற வீழ்ந்தது. மலேசியாவின் ரிங்கட், இந்தோனேசியாவின் ரூபியா, பிலிப்பைன்சின் பீசோ என்று ஆசியப் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்தது. ஹாங்காங் சொத்து மதிப்பு சரிந்தது. வேலையின்மை அதிகரித்தது. கோழிகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றிய பறவைக் காய்ச்சல் பயமுறுத்தியது. உச்சமாக வந்தது ஸார்ஸ் (SARS- Severe Accute Respiratory Syndrome). 2003 மார்ச்சுக்கும் ஜுனுக்கும் இடையில் சுமார் 1800 பேரைப் பாதித்து 300 பேரைக் காவு கொண்ட தொற்று நோய்; மற்றவர்களின் சுவாசக் காற்றின் மீதேறி மரணதூதன் பயணிக்கிறானோ என்று மக்கள் பீதியுற்றிருந்த காலம்.

இந்த இக்கட்டான தருணத்தில் ஹாங்காங் அரசு ஆதார விதிகளில் ஒன்றான பிரிவு 23-ஐச் சட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது. தேசத்துரோகம், பிரிவினை, ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி போன்றவற்றை அடக்கக் கொண்டு வந்த தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் முன்வரைவு சில கடுமையான விதிகளைக் கொண்டிருந்தது. இதற்கெதிராக 2003 ஜூலை 1 அன்று 5 இலட்சம் மக்கள் வீதிகளில் திரண்டபோது ஹாங்காங்கில் எழுந்த அதிர்ச்சி அலைகள் பெய்ஜிங் வரை உயர்ந்தன. மாநில அரசு சட்டத்தை மீளப்பெற்றது.

தொடர்ந்து 2003 நவம்பரில் நிகழ்ந்த நகர்மன்றத் தேர்தலில் பிரிவு 23-ஐ ஆதரித்த அரசுக்கு ஆதரவான வேட்பாளர்களை மக்கள் தண்டித்தனர். இவற்றால் உற்சாகம் பெற்ற ஜனநாயக ஆதரவாளர்கள், 2007-இல் செயலாட்சித் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், சட்டப்பேரவையின் செயல்முறைத் தொகுதிகள் 2008-இல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் உரக்கக் குரல் கொடுத்தனர். செயலாட்சித் தலைவர் தேர்தலும் சட்டப்பேரவை அமைப்பும் 2007-இல் மறு பரிசீலனை செய்யப்படலாம் என்று ஆதார விதிகளின் பின்னிணைப்பில் சொல்லப்பட்டிருந்ததும் ஒரு காரணம். ஏப்ரல் 26-இல் பெய்ஜிங்கில் கூடிய மக்கள் தேசீயக் காங்கிரசின் நிலைக் குழு, ஆதார விதிகளுக்கு மறு விளக்கம் தந்து, ஜனநாயகவாதிகளின் கோரிக்கையை நிராகரித்தது. ஹாங்காங்கின் ஜனநாயகம் முதிர்ச்சி பெறவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டது. DAB மற்றும் லிபரல் கட்சியினர் நிலைக் குழுவின் தீர்மானத்தை ஆதரித்தனர்; பொது வாக்குரிமை கனிவதற்கு 2012 வரையிலான அவகாசம் தேவை என்பது அவர்கள் நிலைப்பாடாயிருந்தது. ஜனநாயக ஆதரவாளர்களோ மைய அரசைக் கடுமையாகச் சாடினர்.

இந்தச் சூழலில்தான் செப்டம்பர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியது. பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் சமூகச் சமநிலையைப் பேணுவதற்கு மைய அரசோடுள்ள மோதற் போக்கு உகந்ததல்ல என்றன. ‘ஹாங்காங்கை நேசியுங்கள்; சீனாவை நேசியுங்கள் ‘ என்பது அவர்கள் பிரச்சாரமாக இருந்தது. மாறாக ‘ஜனநாயகத்தை நேசியுங்கள் ‘ என்பது ஜனநாயக ஆதரவுக் கட்சிகளின் குரலாக ஒலித்தது. 30 பூகோளத் தொகுதிகளில் 25-ம், 30 செயல்முறைத் தொகுதிகளில் 5-ம், ஆக சுமார் 30 இடங்களைக் கைப்பற்றிச் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறுவது ஜனநாயக ஆதரவுக் கட்சிகளின் திட்டமாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இல்லை.பூகோளத் தொகுதிகளில் 18-ம், செயல்முறைத் தொகுதிகளில் 7-ம், ஆக 25 இடங்களோடு அவர்கள் சமாதானம் அடைய வேண்டி வந்தது. பூகோளத் தொகுதிகளில் ஜனநாயகவாதிகளும், அரசு ஆதரவாளர்களும் முறையே 62 மற்றும் 38 சதவீத வாக்குகளைக் கையகப்படுத்தினர்.

சில முடிவுகள் ஹாங்காங்கின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தின. ஐந்து தொகுதிகளில் ஒன்றான புத்தம்பிரதேசக் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டவர்களில் இரண்டு பேர், இரு துருவங்களென்று சொல்லத்தக்கவர்கள். ஒருவர் ‘ஜடாமுடி ‘ என்று அழைக்கப்படும் லியுங் க்வோக் ஹுங்; அமைப்புக்கு எதிரான கலகமும் ஷே-குவாரா படம் பொறித்த டி-ஷர்ட்டும் இவரது அடையாளங்கள்; 300 சதுர அடி அரசுக் குடியிருப்பில் வசிக்கும் லியுங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். மற்றவர், லிபரல் கட்சித் தலைவர் ஜேம்ஸ் டெயின்; 46 தொழில் நிறுவனங்களின் இயக்குனர்; மைய அரசுக்கு நெருக்கமானவர்; மிடுக்காக உடையணியும் டெயினின் இல்லம் நகரின் உயரமான ‘சிகரம் ‘ பகுதியில் இருக்கிறது. ஒருத் தொலைக்காட்சிப் பிரச்சாரத்தின் போது லியுங் கேட்ட கேள்வி: ‘ஒரு சாலையோரக் கடையில் ஒரு பன்னும் தேநீரும் என்ன விலையென்று டெயினுக்குத் தெரியுமா ? ‘ டெயின் பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டார். லியுங் ‘எதிர்ப்பு ‘ வாக்குகளையும், டெயின் ‘ஆதரவு ‘ வாக்குகளையும் ஈர்த்தனர் என்று கருத இடமிருக்கிறது. இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவரும் பதிவானவற்றில் சுமார் 15 சதவீத வாக்குகளைக் கையகப்படுத்தினர். விமர்சகர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே தொகுதியின் உறுப்பினர்களானதை ஜனநாயகம் முன்னோக்கிச் செல்வதன் அடையாளம் என்கின்றனர்.

கணிசமான வாக்குகளைப் பெற்று வாகைசூடிய இன்னுமிருவர் கவனத்தைக் கவர்ந்தனர். ஒருவர், கவ்லூன் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஆல்பர்ட் செங்; நேயர்கள் தொலைபேசி வழியாகப் பங்கேற்கும் தனியார் வர்த்தக வானொலியின் ‘தேநீர்க் கோப்பையில் ஒரு புயல் ‘ எனும் நிகழ்ச்சியைக் கடந்த பத்தாண்டுகளாகத் தொகுத்து வழங்குகியவர்; அரசாங்கத்தின் மீது தனது எல்லையற்ற விமர்சனங்களின் மூலமாகச் சொற்போர் நிகழ்த்தியவர். மற்றவர், ஹாங்காங் தீவுத் தொகுதியில் மோதிய ரீடா பான்; கடந்த சட்டப் பேரவையின் சபாநாயகர்;சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தேசீயக் காங்கிரஸில் அங்கம் வகிக்கிறார்; ‘செயலாட்சித் தலைவர் தேர்தலைப் பொது வாக்குரிமை மூலம் நடத்துகிற பக்குவத்தை ஹாங்காங் 2012-இல் தான் அடையும்; செயல்முறைத் தொகுதிகள் 2020 வரை தொடர வேண்டும் ‘ என்று தனது பிரச்சாரத்தில் வலியுறுத்தி வந்தார். எதிரெதிர்க் கருத்துக்களைக் கொண்ட இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவரும் கட்சிகளின் பின் துணையின்றிப் போட்டியிட்டதுதான்.

தேர்தல் முடிவுகளுக்குப் பலவிதமான எதிர்வினைகள் இருந்தன. ஜனநாயகக் கட்சியின் மார்ட்டின் லீ பிரதிநிதித்துவத் தேர்தல் முறையே தங்கள் பின்னடைவுக்குக் காரணம் என்றார். மொத்த இடங்களில் சரிபாதியை மட்டுமே பொது வாக்குரிமை மூலம் நிர்ணயிக்கிற இந்த முறை ஜனநாயக விரோதமானது என்றார் மற்றொரு ஜனநாயக அதரவாளரான எமிலி லா. 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஜனநாயகவாதிகளுக்கு நல்கியிருக்கும் வாக்கு, மக்களுக்குப் பொது வாக்குரிமையின் மீதுள்ள விருப்பத்தின் அடையாளமே என்றார் பத்திரிக்கையாளர் கிறிஸ் யுங். மைய அரசோடு இணக்கமான சூழல் வேண்டுமென்கிற தங்கள் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்றார் DAB-யின் தலைவர் மா லிக். பெய்ஜிங் ஆதரவு நாளிதழ் வென் வெய் போ, தேர்தல் முடிவுகளை ‘தேசப் பற்றுள்ளவர்களுக்குப் பெரும்பான்மை ‘ என்று வர்ணித்திருந்தது. ஆங்கில நாளிதழ் South China Morning Post, ‘வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னமே இந்தத் தேர்தலில் வெற்றி ஈட்டியவர்கள் பொதுமக்கள் ‘ என்று எழுதியது.

மாநில மைய அரசுகள் இந்த முடிவுகளை எங்ஙனம் எதிர் கொண்டன ? செயலாட்சித் தலைவர் துங் சீ வா, ‘இந்தத் தேர்தலிலும் இதன் முடிவுகளிலும் நான் பெருமைப்படுகிறேன்; இந்தப் பேரவை மாறுபட்ட கருத்துக்களையுடைய, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ‘ என்றார். மேலும், சட்டப் பேரவையில் அரசு ஆதரவாளர்களுக்குப் பெரும்பான்மை உள்ள போதும் மக்களின் எதிர்ப்பைச் சந்தித்த பிரிவு 23-ஐச் சட்டமாக்கத் தாம் முயற்சிக்கப் போவதில்லை என்றார். அக்டோபர் 1 பெய்ஜிங்கில் நிகழ்ந்த சீன தேசீய தினக் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டவர்களில் 10 ‘மிதவாத ‘ ஜனநாயக அதரவு சட்டப் பேரவை உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ஹு ஜின் டாவ் மாறுபட்ட கருத்துடையவர்கள் ஒன்றுபட்டு ஹாங்காங்கின் உறுதிப்பாட்டையும் ஒத்திசைவையும் முன்னேற்ற முடியுமென்றார்.

இந்தச் சட்டப் பேரவையின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

****

ramnath@netvigator.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்