ஆதித்தனார் 100: அஞ்சலி

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

ஞாநி


எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரணத் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக ஆகிவிட்ட தினத்தந்த்ி இதழை உருவாக்கி நிலை நிறுத்திய சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் நூற்றாண்டு செப்டம்பர் 27 தொடங்கியுள்ளது. இதழியல் துறையில் அக்கறையும் ஆர்வமும் உள்ள எவரும் ஆதித்தனாரின் முன்னோடிப் பணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

வழக்கறிஞர் மகனாகப் பிறந்த ஆதித்தனாரும் முதலில் வழக்கறிஞராகவே பணியாற்றினார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூருக்கு சென்று அங்கே வசதியான வக்கீலாக வாழ்ந்தவர் தன் 37ம் வயதில் தமிழகம் திரும்பி தினத்தந்தி ஏட்டைத் தொடங்கினார்.

லண்டனில் படிக்கும் போது தன் கைச்செலவுக்காக பத்திரிகைகளுக்கு எழுதி வந்த ஆதித்தனாருக்கு அங்கே எளிய ஆங்கிலத்தில் நடந்து வந்த டெலிகிராஃப் போன்ற ஏடுகளைப் போல தமிழிலும் நடத்தும் எண்ணம் உருவாகியிருந்தது. திராவிட இயக்க ஆதரவாளராகவும், தமிழ் ஆர்வலராகவும் இருந்த ஆதித்தனாரின் ஆரம்ப கால தந்தி ஏடு அன்றைய மணிப்பிரவாள நடையை தானும் பின்பற்றியது. யூனியன் சர்க்கார், கிராதகன், பிரேதம்,ஜில்லா, வாபஸ் என்ற சொற்களெல்லாம் அப்போது சகஜமாகப் பயன்படுத்தப்பட்டன.

அறுபதுகளில் தந்தியின் தமிழ் நடை மாறியது. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மனிதர்கள் வழக்கிலும் இரண்டறக் கலந்துவிட்ட பிற மொழிச் சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், பெருமளவில் எளிய தமிழ்ச் சொற்களையே தினத்தந்தியில் அதிகம் பயன்படுத்தினார் ஆதித்தனார்.

தினத்தந்தி தொடங்குவதற்கு சுமார் முப்பது ஆண்டுகள் முன்னால் பத்திரிகையாளர் பாரதி பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கூறிய அறிவுரையை முழுமையாகப் பின்பற்றி வணிக வெற்றியையும் அடைந்து காட்டியவர் ஆதித்தனார்தான். சிறு வாக்கியங்களாக எழுதவேண்டும். எழுதியதைத் தமிழ் தெரிந்த ,

ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு வாசித்துக் காட்டி அவனுக்கு விளங்கியதென்றால், சரியாக எழுதியிருப்பதாக அர்த்தம் என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு ரிக்ஷா ஸ்டாண்டிலும் நிரூபித்துக் காட்டியது தினத்தந்தி.

ஆதித்தனார் அரசியல் துறையில் சாதித்தவை குறைவுதான். சட்ட மன்ற உறுப்பினராக, சபாநாயகராக, அமைச்சராகப் பல பதவிகளை அவர் வகித்தார். சட்டப்பேரவை விதிகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. 1942ல் தோன்றிய தந்தி, 1946ல் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துக்காக உதவி நிதி திரட்டித் தந்தது இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

ஆனால் எந்த அரசியல் சக்தியும் புறக்கணிக்கமுடியாத சக்தியாக தினத்தந்தி ஏட்டை வலிமையும் வீச்சும் உடைய மக்கள் இதழாக மாற்றியதே ஆதித்தனாரின் சாதனை. பத்திரிகை எழுத்தாளர்களுக்கான அவருடைய கையேடு எளிமையானது. யதார்த்தமானது. ஜோசியம் கூட எப்படி எழுதப்பட வேண்டும் என்று அதில் ஆதித்தனார் மனோதத்துவ அடிப்படையில் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

பத்திரிகை நிர்வாகத்தில் ஆதித்தனார் பெரும் திறமைசாலி. இன்றளவும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகளுக்கு நிகராக விளம்பரங்கள் வந்து குவியும் ஒரே தமிழ் ஏடாக தினத்தந்தி இருப்பதற்கு ஆதித்தனாரின் நிர்வாகக்கட்டுமான அறிவும் திட்டமிடலும் முக்கியக் காரணம். இந்தியாவிலேயே முதன்முதலில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனிப் பதிப்புகள், தனித்தனியே அச்சிடும் வசதிகள், வெளியீட்டு முறையை ஒரே இடத்தில் குவிக்காமல் பரவலாக்குவது என்ற உத்தியை ஆங்கிலத்தில் ராம் நாத் கோயங்காவும் தமிழில் ஆதித்தனாரும் மட்டுமே வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள்.

காகிதப் பஞ்சம் இருந்த யுத்த காலத்தில் உடை மரம், புளிச்ச கீரைத்தண்டு, வைக்கோல் என்று தன் சொந்த ஊரான நெல்லை வட்டாரத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தானே காகிதத் தயாரிப்பில் ஈடுபட்டார் ஆதித்தனார். நள்ளிரவுக்குப் பிறகும் வரும் முக்கிய செய்திகளை அச்சிலேற்றியாக வேண்டும் என்பதற்காக அவர் அலுவலகத்தில் ஒரு நடைமுறையை கொண்டு வந்ததாகச் சொல்லுவார்கள். பி.டி.ஐ, யூ.என்.ஐ முதலிய செய்தி நிறுவனங்களின் டெலிபிரிண்ட்டர்கள் முக்கிய செய்தி அனுப்பும்போது அதில் ஒரு மணி ஒலிக்கும். அலுவலகத்தில் இரவு கடந்து விடியற்காலையில் உதவி ஆசிரியர் உறங்கிக் கொண்டிருந்தாலும், டெலிபிரிண்ட்டரில் மணி ஒலி கேட்டால் உடனே அவரை எழுப்ப வேண்டுமென்பது அட்டெண்டருக்கு கட்டளை. அப்படி எழுப்பியதும், அந்த அட்டெண்டருக்கு உடனடியாக பத்து ரூபாய் சன்மானம் தரவேண்டும் என்பது உதவி ஆசிரியருக்கான கட்டளை.

மணி எப்போதேனும்தான் ஒலிக்கும். ஆனால் ஒலிக்கும்போது நிச்சயம் தவறவிடப்படாது.

ஆதித்தனார் தந்தியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தான் குமுதம் இதழும் தொடங்கப் பட்டது. அன்றைய சூழலில் இவை இரண்டு மட்டுமே பிராமணரல்லாத உரிமையாளர்கள் தொடங்கி வெற்றி கண்ட வெகுஜன இதழ்கள். இரண்டு இதழ்களும் பிராமண எதிர்ப்பு காட்டிய இதழ்களோ, பகுத்தறிவு- நாத்திகப் பிரசார இதழ்களோ அல்ல. இன்றும் இரண்டுமே காஞ்சி சங்கராச்சாரியார் செய்திகளை பக்தியுடன் வெளியிடுகின்றன. ஆனால், தாங்கள் சென்று சேர விரும்பிய சராசரி வாசகனை இவை இரண்டும் எப்படி அணுகுகின்றன என்பதில் முக்கியமான வேறு பாடு உள்ளது.

சினிமா, செக்ஸ் கிளுகிளுப்புகளில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் தம் வாசகரை குமுதம் வெளியே கொண்டு வர முற்படுவதே இல்லை. அவ்வப்போது வேறு விஷயங்களை வர்த்தகக்

காரணங்களுக்காகவே பயன்படுத்தினாலும், அவற்றின் பின்னால் வாசகர் போய்விடாமல் திரும்பத் திரும்ப சினிமா-செக்ஸ் போதையில் அமிழ்த்தி வைத்திக் கொள்வதில் குமுதம் கவனமாக இருந்து வந்திருக்கிறது.

தினத்தந்தி அறுபதுகளின் சதக் சதக் நடையிலிருந்து நிறையவே மாறி வந்திருக்கிறது. தந்தி கைவிட்டுவிட்ட அந்த நடையை இப்போது உண்மையில் பின்பற்றுபவர்கள் ‘புலன் ‘ஆய்வு இதழ்கள்தான். இன்னும் ‘அழகி ‘களும் கவர்ச்சிப்படங்களும் பெண் பற்றிய சம்பிரதாயப்பார்வைகளும் தந்தியில் நீடித்தாலும், உலகளாவிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வரலாற்றுச் செய்திகள் என்று பல புதிய தளங்களில் தரமான தகவல்களை எளிய தமிழில் தினத்தந்தி அதிகம் தந்து வருகிறது. அரசியல் ரீதியாக யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்கு முதல் பக்கம், மற்றவர்களுக்கு உட்பக்கம் என்ற தன் நிலையில் கறாரக இருந்து வந்தாலும், நக்சல்பாரிகள் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளின் செய்திகளுக்கும் இருட்டடிப்பு செய்யாமல் இடம் அளித்து வருகிறது.

தினத்தந்தி தன் வாசகரை அழைத்து வந்து நிறுத்தும் இடத்துக்கு நாம் சென்று அவர்களை மேற்கொண்டு வேறு புள்ளிகளுக்கு மலையாள பத்திரிகைகளைப் போல அழைத்துச் செல்ல இயலும். குமுதம் நிறுத்தி வைத்துள்ள இடத்துக்கு சென்றால் சென்றவர் புதைகுழியில் சிக்க நேரிடும்.

ஆதித்தனாரின் நூற்றாண்டு விழா நேரத்தில் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டியதெல்லாம் அவர் ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு அழைத்து வந்து நிறுத்தின இதழியலை ஏன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலையில் சமூகம் சிக்கியிருக்கிறது என்பதைத்தான்.

தீம்தரிகிட அக்டோபர் 1-15 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி