வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

மத்தள ராயன்


இந்து பத்திரிகை சிறப்புப் பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயணோடு ஒரு நீண்ட உரையாடல் நடத்திவர சமீபத்தில் வாய்த்தது. பல நாள் கழித்துச் சந்தித்தாலும் பேச வேறே விஷயம் எதுவும் இல்லாததைப் போல, மராத்தி – ஆங்கிலக் கவிஞர் அருண் கொலட்கர் பற்றித்தான் திரும்பத் திரும்பப் பேச்சு நீண்டு கொண்டு போனது.

அலக் பதம்செ போல, அவரைவிடச் சிறப்பாக மும்பையில் பலகோடி ரூபாய் பணம் புரளும் விளம்பரத் துறையில் சாதனையாளராக அறியப்பட்டிருக்க வேண்டியவர் கொலட்கர். வெற்றிகரமான வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள் புரிந்ததாலோ என்னமோ பதம்செ மும்பை நாடக அரங்கிலும், விளம்பரத் துறையிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். விளம்பரத் துறை வெறுத்துப் போய் அருண் கொலட்கர் விலகி வந்தது இருபது வருடம் முன்பு. மராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுத்து வன்மை. ஓவியத் திறமை. இதெல்லாம் அவர் கூடவே தொடர்ந்தாலும் இவற்றையும் கடந்தே கொலட்கரின் வாழ்க்கைப் பயணம்.

பிரபாதேவியில் பத்துக்குப் பனிரெண்டு தனியறையில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாமல், பெருங்கூட்டத்தில் ஒருவனாக வசித்த இந்த மனிதர் காமன்வெல்த் பரிசு வாங்கிய இந்தியாவின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர் என்பதை லோக்கல் டிரெயின் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும் சக குடித்தனக்காரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெஜூரி என்ற அந்தப் பரிசு பெற்ற கவிதைத் தொகுதி வெளிவந்து இருபத்தெட்டு ஆண்டுகள் கழித்து கொலட்கரின் அடுத்த இரண்டு கவிதைத் தொகுதிகள் இந்த ஜூலையில் வெளிவந்த விவரமும் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. மிஞ்சிப் போனால் அவரை ஒரு எக்செண்ட்ரிக் என்று நினைத்திருப்பார்கள். (விமர்சகர் ஷாந்தா கோகலே அவர் ஒரு off-centric பேர்வழி என்பார்.)

கடிதம் போட்டால் பதில் போட மாட்டார். சந்திக்க முயன்றால் சிக்க மாட்டார். சித்தம்போக்கு சிவம்போக்கு என்பதற்கு இன்னொரு பெயர் அருண். கெளரி ஏகத்துக்கு சிரமப்பட்டு அவரோடு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கவிஞரை அவர் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கண்ட செவ்வி அபூர்வமானது. கொலட்கர் என்ற கவிஞரை விட கொலட்கர் என்ற மனிதரைப் பற்றிய ஜீவனுள்ள வார்த்தைச் சித்தரிப்பு அது.

உதாரணம் –

கேள்வி :நீங்கள் மும்பை ஜே.ஜே ஸ்கூல் ஓஃப் ஆர்ட்ஸில் ஓவியம் பயின்று தேர்ச்சியடைந்தீர்கள். ஆனால், மற்ற மாணவர்களை விடத் தேர்வில் வெற்றிபெற்று படிப்பை முடிக்க நிறைய நாள் எடுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறதே.

பதில் – ஆமாம். ஏனென்றால் நான் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன்.

கேள்வி -அதாவது ..

பதில் – ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன்.

ஜெஜூரியோ, புதிய புத்தகமான கருப்புக் குதிரைக் கவிதைகளோ (காலா கோடா போயம்ஸ்), கொலட்கரின் கவிதைகள் முதல் வாசிப்பில் சட்டென்று அவரை ஒரு சினிக் ஆக இனம் காட்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் நம்மை அறியாமலேயே மெல்ல மெல்ல அவர் கவிதையில் அமிழும்போது நேயமும் கருணையும் மிகுந்த, மகத்துவத்தை எல்லாம் நிராகரிப்பதின் மூலமே மகத்துவத்தைத் தேட முற்பட்ட (சச்சிதானந்தன் கவிதை சொல்வது போல்) ஓர் அற்புதமான மனிதர் கிடைப்பார். கெளரிக்கு சந்திக்க வாய்ப்புக் கிட்டிய அந்த மனிதரைப் பற்றி ஈடுபாட்டோடு சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு வீடு திரும்பிய இரவு மனம் முழுக்க கொலட்கர்.

பார்த்துப் பார்த்து வார்த்தைகளைக் கவிதையில் இடுவார் கொலட்கர். குஷ்டரோகிகளின் சங்கீதம் ‘ கவிதையில், மூக்கு இல்லாதவன் பாடிப் போகும் பாட்டு ‘a tuneless song / for a city without soul ‘ என்பது போல்.

காலாகோடா என்பது மும்பை கோட்டை – போர்ட் பாம்பே – பகுதியில் ஒரு போக்குவரத்துத் தீவு. அந்த டிராஃபிக் ஐலண்டைச் சுற்றிய நிகழ்வுகள் குறித்த விவரணை செறிந்த கவிதைகளும், புண்ணியத் தலமான ஜெஜூரியின் சாதா, சிறப்பு தெய்வங்களும், மனிதர்களும், கதவு, நிலை, ஜன்னல்களும், யாத்திரீகர்களை உமிழ்ந்து திரும்பும் பேருந்தும் என்று கொலட்கர் கட்டி எழுப்பும் கலைடாஸ்கோப் காட்சிகளின் முரணில் நிகழும் அபூர்வமான ஒத்திசைவு மனதில் எழும்பி அலைக்கழித்தபடி இருந்தது.

காலையில் கெளரி தொலைபேசினார். கொலட்கர் முந்தின நாள் இரவு மும்பையில் காலமான செய்தியைச் சொல்வதற்காக.

மலையாள எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கி மறைவு போல், செய்தி வருவதற்கு முன்பே மத்தளராயனைப் பாதித்த இன்னொரு இழப்பு அருண் கொலட்கருடையது. எப்படி இது சாத்தியம் ? சில கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஆனாலும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறோம்.

****

மூன்று மாதம் இடைவெளி விட்டு வாரபலனைத் தொடரும்போது உலகம் தலைகீழாகப் புரண்டு போகாத நிம்மதி.

எட்டு மாத பெங்களூர் வாழ்க்கையும், படிக்க ஆரம்பித்த கன்னடமும் அரைகுறையாக நிற்க, திரும்பச் சென்னைக்குக் குடிமாறிய அண்மைக் காலத்தில் கர்னாடகத்தில் தரம்சிங் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவோடு சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கிறார். மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் போன முதுபெரும் உறுப்பினர் வீரப்பா, வாரபலனில் வாழ்த்தியதற்கு மாறாக, தன் தொண்ணூற்றேழாவது வயதில் இயற்கை எய்தி நூற்றுச் சொச்சம் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேத்திகளையும், இடைத்தேர்தலையும் விட்டுப் போனார்.

பெங்களூர் சாலைகள் தரக்கேடில்லாமல் இருந்தாலும், புறநகர் பிரதேசமான கமனஹள்ளியிலும் லிங்கராஜபுரத்திலும் சாலை என்ற சொல்லே அகராதியில் இல்லாமல் போயிருக்கிறது. சதா நொசநொச என்று பெருந்தூறலும் சிறுமழையுமாகப் பொழுது கழிவதால், இரண்டடி ஆழத்துக்குச் சகதியில் உழுது ஊர்ந்தும் நடந்தும் கொண்டு தினசரி நடவடிக்கைகளைத் தொடர மக்கள் பழகிக் கொண்டுவிட்டார்கள்.

கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முகத்தில் சிரிப்பு பொங்கி வழிகிறது. பிறமொழிப் படங்களை வேறு மாநிலங்களில் வெளியிட்டு ஒரு மாதம் சென்ற பின்பே கர்னாடகத்தில் வெளியிட வேண்டும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தது அவர்களுக்குச் சாதகமாக முடிய திருட்டு விசிடித் தயாரிப்பாளர்களே முழுமுதல் காரணம். புதுத் தமிழ்ப் படத்தையும், இந்திப் படத்தையும் வீட்டிலேயே தேசல் விசிடியில் உத்தேசமாகப் பார்த்து சென்னாகிதே என்று திருப்திப்பட்டுக் கொண்டு பூவரச இலையில் உருட்டி வைத்த கால்கிலோ குல்கந்தை விழுங்கி விட்டுத் தியேட்டரில் போய் கன்னடப் படம் பார்க்க பெங்களூர்வாசிகள் பழகிக்கொண்டு விட்டார்கள்.

ஆனாலும் செளந்தர்யா இல்லாத கன்னட சினிமா அவர்களுக்குப் பழக்கமாக இன்னும் கொஞ்சம் நாள் செல்லும். மலையாள ரீமேக்காக, செளந்தர்யாவின் கடைசி திரைப்படம் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருப்பது அவருடைய ஆன்மாவுக்கு சாந்தியை அளிக்கும்.

****

கர்னாடக விஷயம் இப்படி இருக்க, கேரளத்தில் பத்திரிகைகள் மிகுதியான செய்தி வரவால் திணறுகின்றன.

கட்டுடைத்தல் கோட்பாட்டை உருவாக்கிய ழாக் தெரிதா இறந்தாலும், முல்க் ராஜ் ஆனந்த் மறைந்தாலும் முதல் பக்கச் செய்தியாவது மலையாளப் பத்திரிகையில் மட்டும்தான். போன வாரம் மூத்த கவிஞர் பாலாமணி அம்மா தொண்ணூற்று ஐந்தாவது வயதில் இறந்தபோது மாத்ருபூமி முதல்பக்கத்தில் நாலு காலச் செய்தி அது. ஆனாலும் பாலாமணி அம்மாவின் மகளும் எழுத்தாளருமான மாதவிக்குட்டி என்னும் சுரையா ‘இந்தப் பத்திரிகைகள் யாராவது செத்துப் போனால் நடத்தும் ஆட்டபாட்டம் சகிக்கவில்லை. நான் இறப்பதாக இருந்தால் கனடா நாட்டில்தான் போய் இறப்பேன். அப்போதுதான் இதிலிருந்து தப்பிக்கலாம் ‘ என்று ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்!

தமிழ்நாட்டு சிவகாசி ஜெயலட்சுமி போல் மலையாளத்தில் கோட்டயம் லதா நாயர் பத்திரிகைகளில் தொடர்ந்து முதல் பக்கத்தைப் பிடித்து வருகிறார். மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, ஏராளமான இளம்பெண்கள் வாழ்வைச் சிதைத்த வழக்குகள் இந்த அம்மையார் மேல். பத்து வருடம் முன்பு இன்ஷ்யூரன்ஸ் மோசடியில் சிக்கித் தலைமறைவாகி இன்னும் ‘பிடிகிட்டாப் புள்ளி ‘யாகவே இருக்கும் சுகுமாரக் குரூப்பு போல், கோட்டயம் லதாவும் ஆகலாம் என்று பத்திரிகைகள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டன. போதாக்குறைக்கு, லதாவுக்குக் குடும்ப நண்பரான கவியூர்க்கார நம்பூத்திரி ஒருத்தர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டு அவர்கள் சாவுக்கு லதா நாயரே காரணம் என்று கடிதம் எழுதிவைத்து விட்டுப் போனது வேறு விஷயத்தை இன்னும் பரபரப்பாக்கியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஈழவ சமூகப் பிரமுகர் வெள்ளாப்பள்ளி நடேசன் தன் அரசியல் பலத்தைக் காட்டும் விழாவாக வருடாவருடம் ஓணம் கழிந்ததும் நடத்தும் நாராயண குரு ஜெயந்திக்கு வந்த சோனியா ஏ.கே.ஆன்றணியை இறங்கச் சொல்லிவிட்டு, உம்மன் சாண்டியை முதலமைச்சர் நாற்காலியில் ஏற்றி வைத்துத் தில்லி போய்ச் சேர்ந்தார்.

ஆன்றணி, முதல்மந்திரி பதவி கையை விட்டுப் போனதும் விஜயம் செய்ய இடம் திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா. அங்கே ஒட்டகச் சிவிங்கியைப் பார்த்தபோது அவருக்கு மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் நினைவுக்கு வரக் காரணம் அச்சு சாரின் உயரம் இல்லை. ஆன்றணி பதவிக் காலத்தில் அந்த ஆண் ஒட்டகச் சிவிங்கிக்குப் பெண்துணை தேடி நாடெல்லாம் அலைந்தபோது, கொல்கத்தா உயிரியல் பூங்காவில் ஜோடி இருப்பதாக அறிந்து, மார்க்சிஸ்ட் அச்சுதானந்தனை வைத்து சக மார்க்சிஸ்ட்டும் வங்க முதல்வருமான தோழர் புத்ததேவ் சாட்டர்ஜியோடு சம்பந்தம் பேசவைத்து ஒட்டகச் சிவிங்கியின் வாழ்க்கையை மலர வைத்த நினைவுகளில்தான் ஆன்றணிஇன்னும்.

ஆன்றணி போய் சாண்டி வந்தாலும், காங்கிரசே இல்லாமல் போனாலும், குழு நடவடிக்கை இல்லாமல் நாம் இல்லை என்கிற காங்கிரஸ் ஐ குரூப் லீடர் கருணாகரனும் மகன் முரளீதரனும் அதிசயத்திலும் அதிசயமாக அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதால் பத்திரிகைகளுக்குத் தீனி போடுவதில்லை.

ஆனாலும் கேரள காங்கிரஸ் – எந்தக் காலத்திலேயோ காங்கிரஸிலிருந்து பிரிந்து போனவர்கள் – கட்சியில் பூசல் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலேதான்.

கேரள காங்கிரஸ் பிள்ளை குருப் பிளக்கிறது. இக்கிணியூண்டு கட்சி என்றாலும், குறைந்தது இரண்டு குரூப்புகளாவது வல்லடி வழக்கடியாக செயல்படாவிட்டால் அப்புறம் என்னத்துக்குக் காங்கிரஸ் என்று கட்சிப் பெயரில் இருக்க வேண்டும் என்பது மலையாளி வாதம். ஆன்றணி மந்திரிசபையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண பிள்ளைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய மகன் கணேஷ்குமார் திரைப்பட மற்றும் பிரபல மலையாள தொலைக்காட்சி சீரியல் நடிகரும் கூட.

உம்மன் சாண்டி பதவியேற்றதுமே பிரச்சனை கோழிக்கோட்டில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரீகளுக்கு எதிரான தாக்குதலோடு ஆரம்பித்தது. யார்யாரையோ அரஸ்ட் செய்து, குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று கேரள பொலீஸ் பத்திரிகைகளுக்கு அறிவிக்க, உண்மைக் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை என்கிற மலையாளிகள் தொகை கணிசமானது.

ஆற்றுப் படுகையில் கரிமணல் தோண்டிச் சேகரிப்பது சுற்றுச் சூழலுக்கு உலைவைப்பதோடு மார்க்சிஸ்ட் கட்சியிலும் பிளவை உண்டாக்கும்போல் தெரிகிறது. தாராளமயத்துக்கு மறைமுகமாக ஒப்புதல் தரும் மேற்குவங்கக் கம்யூனிஸ்ட் முன்மாதிரியை ஆதரிப்பதின் நீட்சியாக, மணல் சேகரிப்பும் வியாபாரமும் ஆதரிக்கப்பட வேண்டிய லிஸ்டில் உள்ளதாக அச்சுதானந்தன் சொல்கிறார். மாநிலக் கட்சித் தலைவர் பிணராயி விஜயனும், எம்.பி.பரமேஸ்வரனும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

இது தவிர, வெளியம் பார்கவன் கோபப்பட்டிருப்பதாக இன்னொரு பத்திரிகை செய்தி. கேரள மாநிலத்தின் இந்தியக் கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) தலைவரான இவர் தவிரவும் வேறு சில உறுப்பினர்கள் அங்கே கட்சியில் இருப்பதாக நம்பலாம். பார்கவனின் கோபம் அண்ணாக்களான மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் மீது.

‘எத்தனை காலத்துக்குத்தான் எங்களை திருத்தல்வாதிகள் (ரிவிஷனிஸ்ட்) என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள் ? உடனடியாக அந்தக் கெட்ட வார்த்தைப் பிரயோகத்தை வாபஸ் வாங்குங்கள் ‘ என்று சீறுகிறார் பார்கவன்.

கிடக்கிறது கிடக்க பார்கவனின் கோரிக்கையை மணையில் ஏற்ற மார்க்சிஸ்ட்கள் தயாராக இல்லையாம்.

****

இந்த வாரபலனில் நிறைய மரணக் குறிப்புகள். ஒண்ணு கூடி இங்கே. ஜிக்கி.

‘துள்ளாத மனமும் துள்ளும் ‘ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டா, டோரிஸ் டேயின் ‘கே சரா சரா ‘வை அப்படியே அச்சு அசலாகத் தமிழ்ப் படுத்தி ‘சின்னப் பெண்ணான போதிலே ‘ பாடலா, கூப்பிடு ஜிக்கியை என்று ஒரு காலத்தில் இசையமைப்பாளர்கள் தேடிப்போய்ப் பாடவைத்து, அப்புறம் மறந்தேபோன ஜிக்கி என்ற ஜி.கிருஷ்ணவேணி அண்மையில் காலமானபோது தொலைக்காட்சியில் அரை நிமிடச் செய்தியானார்.

தொலைக்காட்சி காமிராவின் பார்வையில் ஜிக்கி வீட்டு முன்னறையில் சவப்பெட்டியில் அவர் உடலை வைத்திருப்பதும், சூழ்ந்த சுற்றமும் நட்பும் தவிர அவர் கால்மாட்டில் ஒரு டெலிவிஷன் பெட்டி தட்டுப்பட்டது. அதில் ஓடிக் கொண்டிருந்த விளம்பரப்படமும். வீட்டில் உயரும் அழுகைக்கு நடுவே அமிதாப் பச்சன் காட்பரீஸ் சாக்லெட்டையோ வேறு எதையோ விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.

நகர வாழ்க்கைக் காட்சிகளின் அபத்தங்களைக் கவிதையாக்கிய அருண் கொலட்கர் திரும்ப நினைவு வருகிறார்.

மத்தளராயன்


eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்