ராமன் ராஜா
எங்கள் அலுவலகத்தில் பாழாய்ப்போன ஜாவாவை எழுதி எழுதி அலுத்த இளைஞர்கள் பலரும் ஒன்று கூடி விவாதித்து, சலிப்புத்தீர எங்கேயாவது பிக்னிக் போவதாக முடிவாயிற்று. இணையத்தில் பல மணி நேர மேய்ச்சலுக்குப் பிறகு, கேரளத்தில் வயநாடு பகுதியில், பச்சை மலைகளின் நடுவே பொதிந்திருக்கும் என்னவோ கடவு என்கிற உல்லாசப் பயண விடுதியைத் தேர்ந்தெடுத்தோம்.
இந்தக் கட்டுரை எங்கள் பயணத்தைப் பற்றியதல்ல. அந்தாட்சரி பாடித் தம்போலா ஆடி ‘லெஜ்ஜாவதியே ‘ என்று மலையாளப் பாட்டுக்கு டப்பாங்குத்து போட்ட பஸ் பயணத்தையும் – சிகரெட் வாங்க இறங்கிய சீனுவாசனை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட, அவன் தொடுவானத்திற்கு அப்பாலிருந்து தொங்கு நாக்குடன் ஓடி வந்து ஏறிக்கொண்டதையும் – அந்த ஐந்து நட்சத்திர ரிசார்ட்டில் கூசாமல் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை நாற்பத்திரண்டு ரூபாய்க்கு விற்ற அநியாயத்தையும் – மச்ச மாமிசங்கள் நிறைந்த பஃபேயில் எனக்கு வெஜிடேரியன் எதுவும் கிடைக்காமல், வெறும் சாதத்தில் வெள்ளரிக்காய்ப் பச்சடியைப் பிசைந்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்ததையும் – அருவியில் குளித்ததையும், அட்டைப் பூச்சி கடித்து ரத்தக் களறியானதையும் – அதற்கு வேர்க்கடலைக்காரனிடமிருந்து உப்பு வாங்கித் தூவி நாட்டு வைத்தியம் பார்த்த அவலத்தையும் – எழுதப் புகுந்தால் அது தனிப் புத்தகம்.
நான் சொல்ல வந்தது, அங்கே நான் செய்து கொண்ட ஆயுர்வேத மசாஜ் பற்றியது. இந்த ஊர்ப்பக்கமெல்லாம் ஆயுர்வேத மசாஜ் வெகு பிரபலம் என்று சொன்னார்கள். பிழிச்சல், கிழிச்சல், சவட்டி ஒழிச்சல் என்று பல வகை உண்டாம்… வாஜ்பாய் கூட வந்திருந்தாராம்.
அதுவரை நான் மசாஜ் செய்துகொண்டதில்லை. பாண்டிச்சேரி பக்கமெல்லாம் வேறு தொழில் பார்க்கும் வனிதையர்கள் பலர், பகலில் மசாஜ் செய்வதாக அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்ததால் ஒரு திகில் கலந்த குறுகுறுப்பு எழுந்தது. சரி, முயன்றுதான் பார்ப்போமே என்று ஒரு ஆர்வக் கோளாறில் தொலைபேசியை எடுத்து அந்தக் ‘குக்கூ ‘ குரல் பெண்ணிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டேன். சொன்ன நேரத்திற்கு என் மிகச்சிறந்த உள்ளாடைகள் அணிந்து உடையணிந்து அங்கே சென்று தயக்கமாக எட்டிப் பார்த்தேன்.
ஆயுர்வேத செண்டர் பூமிக்கடியில் பேஸ்மெண்டில் இருந்தது. நவீன கம்ப்யூட்டர்கள் முன்னே, வெண் பட்டுப் புடவை உடுத்தி இப்போதுதான் தாமரைப்பூவிலிருந்து எழுந்து வந்த மாதிரி இளம் பெண்கள் இனிமையாகச் சிரித்தார்கள். சுவர் முழுவதும் சுஸ்ருதர், தன்வந்திரி படமெல்லாம் போட்டு விதவித பாட்டில்களில் விதவிதக் கஷாயங்கள் விற்றார்கள். இருமல், தேமல் முதல் ஆண்களின் பிரத்தியேகப் பிரச்சினைகள் வரை அத்தனைக்கும் மருந்து உண்டு. விலைதான் ஆனை விலை !
அவர்களில் அகன்ற கண்களும் படர்ந்த கூந்தலும் சந்தனப் பொட்டுமாய், கேரளம் போலவே செழிப்பாக இருந்த ஒரு சேச்சியை மானசிகமாய்த் தேர்ந்தெடுத்தேன். என் பெயரைச் சொன்னதும் கம்ப்யூட்டரில் தேடிக் கண்டுபிடித்துப் புன்னகைத்து, ‘ப்ளீஸ் கம் ‘ என்று ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள் கொலுசு அணிந்த ஒரு பெண்.
அந்த அறை விசாலமாக இருந்தது. நட்ட நடுவில் ஒரு உயரமான டேபிள் – கறுப்பாக உறுதியாகக் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டு, ஆயிரம் வருஷ எண்ணைப் பிசுக்குடன் ஏதோ பலி பீடம் போல் உக்கிரமாக இருந்தது. தலைமாட்டில் தூக்கு மரம் மாதிரி ஒன்று செங்குத்தாக நின்றிருக்க, உயரத்தில் பித்தளைப் பூண் போட்ட கொக்கியிலிருந்து ஒரு தாமிரச் சட்டி தொங்கிக்கொண்டிருந்தது. ஓரத்தில் ஒரு ஸ்டவ். அருகே வித விதமான புட்டிகள் தயாராக இருந்தன. காற்றில் ஒரு ஆயுர்வேத நெடி இருந்தது.
கொலுசுப் பெண், ‘இவ்விட இரிக்யு ‘ என்று மர நாற்காலியில் உட்காரச் சொல்லி சைகை காட்டிவிட்டுக் கதவைச் சார்த்திக் கொண்டு வெளியேறினாள்.
என் இதயம் ‘ஜல் ஜல் ‘ என்று துடிக்க, அட்ரினலின் சுரக்க, உள்ளங்கை வியர்க்க, கடிகாரம் உறைய, காத்திருக்க, கதவு திறக்க, பல்ஸ் எகிற, உள்ளே நுழைந்தது – அந்தோ – புஸ்தி மீசை வைத்த ஒரு ஆண் !
அவர் பணிவாகக் கும்பிட்டார். தன் பெயர் ‘கங்ஙாதரன் ‘ என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தலையைப் பின்னுக்கு வழித்து வாரி மல் ஜிப்பா அணிந்து மைனர் போலிருந்தார். ஆரம்பிக்கலாமா ? ‘ என்று ஏப்ரன் அணிந்து கொண்டார். அவர் பேசியது மலையாளச் சாயல் அடித்த ஆங்கிலமா, ஆங்கிலச் சாயல் அடித்த மலையாளமா என்று கடைசி வரை கண்டு பிடிக்க முடியவில்லை.
தடுப்புக்குள் சென்று உடைகளைக் களைந்து அவர் தந்த பால் வெண்மையான ரெடிமேட் கோவணத்தை அணிந்து பழநி முருகன் போல் வெளிப்பட்டேன். கங்காதரன், அகத்தியர் படத்தில் சீர்கழி கோவிந்தராஜன் வைத்திருப்பது போன்ற ஒரு கமண்டலத்தைக் கொண்டு வந்து ஸ்டவ்வில் சூடாக்க ஆரம்பித்தார். எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தேன்: ஆம்பர் நிற எண்ணெய். அதில் ஏதேதோ நாட்டு மருந்து சமாச்சாரங்கள் குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்தது போல் அடைசலாக மிதந்தன. எண்ணெயை எனக்குத் திகிலேற்படுத்தும் வரை காய்ச்சிவிட்டுத்தான் இறக்கினார் கங்காதரன். ஒழுங்காக டிப்ஸ் தராதவர்களுக்கு அடுத்த முறை விபரீதம் நேரிடும் என்று தோன்றியது.
கங்காதரன் கிண்டியைச் சாய்த்துச் சூடான எண்ணெயைத் தாராளமாக என் தலையில் ஊற்றி அளைய ஆரம்பித்தார். ஆரம்ப அதிர்ச்சி மறைந்ததும் அந்தச் சூடும் ஒரு சுகமாகவே இருந்தது. கமர்க்கெட் மிட்டாயும் வேப்பம் பிண்ணாக்கும் கலந்த ஒரு வித வாசனை வீசியது.
என் நெற்றியில் கன்னத்தில் காதில் மோவாயில் எண்ணெயைத் தடவி முகத்தின் contour-களையெல்லாம் மென்மையாய், பிளாஸ்டிக் மயிலிறகால் வருடுவது போல் பதமாகத் தேய்த்து விட்டார். பிறகு விக்கு விநாயகராம் போன்ற தேர்ந்த கலைஞனுக்கே உரிய மிடுக்குடன் கங்காதரனின் விரல்கள் என் தலையில் தாளமிட ஆரம்பிக்க, அந்த லயத்தில் நான் கரைந்தேன்; மெய் மறந்தேன்.
போகப் போக அந்த விரல்கள் உக்கிரம் பெற்று மயிர்க் காட்டுக்குள் புகுந்து புகுந்து சாடின, பிராண்டின, பிடுங்கின. என் கழுத்து காணாமல் போய், தலை என் வசமின்றித் தொளதொளத்து ஆடியது. மூடின கண்ணுக்குள் வெள்ளித் திரைகள் டார் டாராகக் கிழிந்தன. பத்து நிமிடத்திற்குப் பிறகு தனி ஆவர்த்தனம் ஓய்ந்த பின்னும் என் தலையாட்டம் தொடர்ந்தது.
அடுத்து என் முதுகெங்கும் அந்த இளம் சூடான சொர்க்கத்தைப் பூசி சிக்குப் பலகையில் மல்லாக்கப் படுக்க வைத்தார்; பச்சக் பச்சக் என்று ஒட்டியது. வலது கையிலிருந்து தொடங்கிச் சுளுக்கெடுக்க ஆரம்பித்தார். இரண்டு கை விரல்களாலும் என் கையை வளைத்துப் பிடித்து, தோள் முதல் விரல் வரை நீண்ட மின்னல் சொடுக்குப் போல் ஒரு விஷ்ஷ்…பின்பு வேகமாக வளையலைக் கழற்றுவது போல் ஒரு உருவல். அப்புறம் இடது கை.
கங்காதரன் இப்போது இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துப் பருந்து போல் விரித்து வைத்துக் கொண்டார். அந்தக் கைகள் யுத்த விமானம் தரையிறங்குவது போல் இருபது டிகிரியில் சரிந்து என் வயிற்றில் இறங்கி, மார்பில் சுழன்று திரும்பித் தோளில் வழுக்கி, விரல் நுனி வரை நீண்ட மின்னல். மறுபடி பருந்து, மறுபடி லாண்டிங்…
அதன் பிறகு மந்த கதியில் தாய் பிள்ளையிடம் காட்டும் பரிவு போல ஒவ்வொரு விரலாகப் பற்றி நளினமாகச் சொடுக்கெடுத்து விட்டார்.
கால்களில் மசாஜ் செய்யும்போது ஆடுசதையில் முரளிதரனின் பந்து போன்ற சிக்கலான ஒரு திருகல், ஒரு நிமிண்டல். சுகமாக வலித்தது. கால் விரல்களைப் பால் கறப்பது போல் உருவியதில் மிகவும் குறுகுறுத்தது.
பிறகு என்னைக் குப்புறப் படுக்கச் சொல்லி முதுகில் கட்டை விரல்களால் அழுத்தி வழிக்க ஆரம்பித்தார். முதுகின் அனாடமி அறிந்து ஒவ்வொரு தசையையும் அதனதன் வீச்சிலேயே வாசிக்கும் கை தேர்ந்த லாகவம். பத்து வருஷமாக கம்ப்யூட்டர் முன்பு கூன் போட்டு அமர்ந்து சேமித்திருந்த முதுகு வலியெல்லாம் அந்த மந்திரப் பேயோட்டியின் விரல் வருடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியானது.
கங்காதரனின் அனுபவம் வாய்ந்த அசைவுகளில் ஒரு பாலே நடனத்தின் நளினம் இருந்தது. அந்த ஏஸி அறையிலும் அவர் நெற்றியில் வியர்த்தது. மெளனச் சுவர்களில் பெருமூச்சு எதிரொலித்தது. அந்தக் கைகளின் அழுத்தமும், தேவைப் படுகிற உடல் வலிமையும் எனர்ஜி செலவும் பூந்தளிர் மங்கையரால் நிச்சயம் முடியாது.
கடைசியில் என்னை எழுப்பி உட்கார வைத்து உள்ளங்கால்களைத் துணியால் துடைத்துப் புன்னகைத்து பாத்ரூமைக் காட்டினார். அங்கே பதமான சூட்டில் வெந்நீர் அமைந்திருந்தது. ஒரு வெண்கலப் பானையில் புதினாச் சட்னி போல் பச்சையாக ஒரு கலவை. அதைச் சந்தேகமாய் முகர்ந்து பார்த்தேன். இது எண்ணைப் பிசுக்கைப் போக்குவதில் வல்லது என்று சிரித்துக் கதவை மூடிக் கொண்டு வெளியேறினார். உண்மை. சிங்கம் மார்க் சீயக்காயைவிட நன்றாக வேலை செய்தது. (ஒரு கண்ணில் சற்று சட்னி இறங்கிவிட, நான் அடுத்த நாள் வரை சுக்ராச்சாரியார் போல் இடுக்கிக் கொண்டு நடமாடியது வேறு விஷயம்.)
உடையணிந்து வெளியேறி கிரெடிட் கார்டை நீட்டியதில் பெரும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் விட்டார்கள். கங்காதரனின் சேவையைப் பாராட்டி சொற்ப டிப்ஸ் கொடுத்ததிலேயெ அவர் மிகவும் மகிழ்ந்து மிகையாகக் கும்பிட்டார். பாவம், அவருக்குச் சாப்பாடு போட்டுப் பத்து ரூபாய் பேட்டாவிலெயே முடித்து விடுகிறார்கள் போலும்.
நீங்கள் அடுத்த முறை கேரளா பக்கம் டூர் சென்றால் தவறாமல் கங்காதரனைச் சந்திக்கவும். அருவிக் கரைப் பக்கம் செல்வதானால் முரட்டு ஜீன்ஸும் முழங்கால் வரை பூட்ஸும் அணிந்து செல்லவும். நீங்கள் – பாவம் – வெஜிடேரியன் என்றால் நிறைய பிஸ்கட் பொட்டலங்கள் எடுத்துச் செல்லவும். அப்படியே கங்காதரனிடம் இதய வால்வு பழுதான அவர் குழந்தை இன்னும் இருக்கிறதா என்று நாசூக்காக விசாரித்து எனக்கு இ-மெயில் செய்யவும்.
***
r_for_raja@rediffmail.com
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- உயிர்க்குடை
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- மரண தண்டனை எதற்காக ?
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- கிள்ளுப் பூ
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- காற்று
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்