கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

நாக.இளங்கோவன்


—-

அஞ்சலி செலுத்த அலுக்காத குமுகாயம்! (சமுதாயம்).

அஞ்சலி செலுத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்திவிட்டால் பொதுநலப்பணி ஆற்றிவிட்டதாகக் கருதும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்துவதற்கென்றே காத்துக் கிடக்கும் குமுகாயம்!

அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை ஆசையுடன் பயன்படுத்திக் கொள்ளும் குமுகாயம்!

அஞ்சலி ஒன்றை மீண்டும் செய்த குமுகாயம் சற்றே களைத்துப் போய்க்கொண்டு இருக்கிறது!

அஞ்சலிகள் இன்னும் சில நாள்கள் நீடிக்கக் கூடும்!

அஞ்சலிகளுக்குப் பஞ்சமில்லா இந்நாட்டில்,

அஞ்சலி செலுத்தப் படவேண்டியவை அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும்!

அஞ்சலி முடிந்ததும் அடுத்த அஞ்சலிக்கு குமுகாயம் தயாராகிவிடும்!

‘அஞ்சலிக்கும் அஞ்சலிக்கும் இடைவெளி அஞ்சலிகளே! ‘

அஞ்சலிகளுக்கு மட்டும் இந்நாட்டில் தடையே கிடையாது!

நீண்ட காலத்திற்குப் பின் அல்ல!

எண்ணிப் பார்த்தால் நினைவுகளில்

அண்மைய காலத்திய கோரச் சாவுகள் எத்தனையோ

நினைவுக்கு வருகின்றன.

நித்தம் ஒரு காரணம்! ஏடுகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்

அஞ்சலி செலுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்.

இயற்கையின் அழகை வருணிப்பது போல

அந்தக் கொடுமைகளை வருணிக்கிறார்கள்! ஒருமுறையல்ல,

மணிக்கொருமுறை தொலைக்காட்சியும், நாளுக்கொருமுறை ஏடுகளும்!

கேட்டால் பத்திரிக்கை தருமம் என்று சொல்லக்கூடும்!

ஆனால் சொல்லக்கூடிய சேதிகளில் ஏதேனும் புதிது உண்டா என்றால்

இல்லவே இல்லை.

ஒரே ஒரு ஆங்கில ஏடு மட்டும்

இப்படிப் படமும் எழுத்தும் போடுவதற்காக வருந்தியிருந்தது.

வேறுவழியில்லாமல் இந்தக் கொடுமையை இப்படி நாங்கள்

போடுகிறோம் என்று எழுதியிருந்ததில் ஒரு முதிர்வும் வேதனையும்

தெரியத்தான் செய்தது.

சேதிகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் பல ஏடுகள் அவற்றை எழுதிய முறைகள் அருவருப்பைத் தந்தன.

எழுத்தாளர்கள் பலரும் கொஞ்ச நாள்களுக்கு

இந்தத் தீவிபத்தைப் பற்றி நிறைய எழுதக் கூடும்.

சிறுகதை பெருகதை ஆளர்களுக்கும், திகில் கதை எழுதுவோருக்கும்

நல்ல வரும்படி உண்டு சில நாள்களில்!

கவிஞர்கள் ?

ஓ..இதுவும் ஒரு கவிதைக் காலம்!

சில வெகுசன ஏடுகள், தமிழகத்தின் பெருமை

சொல்லும் ஏடுகள், அந்தப் பள்ளியில்

ஏதாவது கிசுகிசு கிட்டுமா ? கவர்ச்சிக் காட்சிகள் கிடைக்குமா

என்று கூட தேடி அலையக்கூடும்!!

திடாரென்று சட்டங்கள் பாய்கின்றன.

சில பேர்கள் பதுங்குகிறார்கள்!

சிலர் பதுங்குவதாலேயே பலர் பாய்கிறார்கள்!

நகைப்புதான் வருகிறது!

‘தாளாளரைக் கைது செய்!

ஆசிரியர்களுக்குப் பார் ஒன்றுமே ஆகவில்லை! ‘ என்ற குரல்கள்.

அவர்களும் போய் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி

செய்திருப்பார்கள்! அவ்வளவுதான்!!

இந்தச் சினங்கள் ஒரு அரசியல்வாதியின் கள்ள அணைப்பில்

அணைந்து போய்விடும் சினங்கள்!

அந்தச் சினங்களில் கூட நேர்மை இல்லை! அல்லது,

‘சினப்படக் கூடத் தெரியவில்லை ‘.

எதன்மேல் எல்லாம் சினம் பாருங்கள்!

அந்தப் பள்ளியின் தாளாளர் மேல் சினம்!

அங்கே பாடம் சொல்லிக் கொடுத்த

வாத்தியார்கள் மேல் சினம்!

உண்மையில் இந்நாட்டில் பாடமே சொல்லித்தரத் தெரியாத

வக்கற்ற வாத்தியார்கள்தான் முக்கால்வாசிக்கும் மேல்;

வேற எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் வாத்தியார்

வேலைக்கு வருபவர்கள்தான் அதிகம்.

அப்படிப்பார்த்தால் அந்தப் பள்ளி வாத்தியார்களிலும்

வக்கற்ற வாத்தியார்கள்தான் மிகையாக இருந்திருப்பர்.

அந்த வக்கற்ற வாத்தியார்கள் மேல் சினம்!

அரசாங்கத்திற்கு, கல்வி, பள்ளி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய

அதிகாரிகள் மேல் பொத்துக் கொண்டு வந்தது சினம்!

அந்தச் சினத்திற்கு இலக்கு சில வகையற்ற அதிகாரிகள்; அவ்வளவுதான்!

மிஞ்சிப் போனால் 100 கி.மீ தொலைவிற்கு

இடமாற்றம் செய்யப் படுவர்.

அப்புறம் எதன்மேல் சினம் ?

அங்கே சமையல் செய்யப் போன சமையல் காரர் அல்லது

சமையல் கார அம்மையாரின் மேல் சினம்!

இப்ப சாகவா நாளைக்கு சாகவா என்று அரசு மருத்துவமனையே

அல்லாடுகையில் திடாரென்று திரண்டு வந்த சாவுகளைக்

கவனிக்க முடியாததால் மருத்துவமனையின் மேல் சினம்.

அப்புறம் ?

இடவேண்டியவர்கள் இட்டார்கள்!

சுடவேண்டியவர்கள் மேலும் சுட்டார்கள்!

ஊரிலே இழவு என்றால் தப்புக்குப் பிடிக்குமாம் சனி!

அதுபோல, அத்தனைப் பிணங்களையும் எரிக்க முடியவில்லை/ஆளில்லை

என்று சுடுகாட்டு வெட்டியானின் மேல் சினம்!

சரி சினம் இன்னும் அடங்கவில்லையே என்ன செய்வது ?

பிடி அந்த அரசியல்வாதிகளை!

திட்டித் தீர்க்கலாம் வாருங்கள் என்று ஒரு படை.

அரசியல்வாதிகள் இந்த ஒரு முறை மட்டும் யாரும் யாரையும்

குறை சொல்லிக் கொள்ள வில்லை. (ஆயினும் சில ஏடுகள் அந்தத் திரித்து விடும்

திருப்பணியை செய்தன) அடடா, என்ன ஒரு நல்ல மனம் என்று

எண்ணத் தோன்றுகிறதா ? அதுதான் இல்லை.

55 ஆண்டுகளில்,

பெருங்காலம் இந்தியாவை ஆண்ட பேராயக்கட்சிக்கும்,

இடையில் ஒரு 5/6 ஆண்டுகள் ஆண்ட அழுக்கு மூட்டைகளுக்கும்,

தமிழகத்தில் ஆண்ட பேராய (காங்கிரசு),

திராவிட (திமுக), எந்தக் கணக்கிலும் சேராத அ.தி.மு.க என்ற

எல்லா கட்சிகளுக்கும், இந்தச் சாவில் சம பங்கு உண்டு என்பதால்

யாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவில்லை.

அந்தப் பள்ளியின் வயதும் 50 ஆண்டுகளாம்! புகழ் பெற்ற பள்ளியாம்.

இன்னும் பாருங்கள் வேடிக்கையை. கும்பணிகள் தங்கள்

வணிகத்திற்கு ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள். அதில்

தங்கள் வருத்தத்தை வடிவான வார்த்தைகளில் கொட்டி,

அஞ்சலியை செலுத்தி, வாசகனை கவர்வதில் முனைப்பு

காட்டுகிறார்கள்.

இன்னும் சில சினங்கள் உண்டு!

ஊர்வலங்கள் நடக்கின்றன!

அதிலே ‘தீயே உனக்கு இரக்கம் இல்லையா ? ‘

என்று ஒரு வாசகம்.

தீயிடம் சினம் கொள்கின்றனர்! தீயிற்கு இரக்கம் வேண்டுமாம்!

அப்புறம் பாருங்கள்! சினம் அதிகமாகி அதிகமாகி

கடைசியில் ‘எல்லாத்துக்கும் காரணம் இந்தக் கூரைகள்தான் ‘

என்று கூரையைப் பிரித்து எறிய ஆரம்பித்து விட்டார்கள்!

குரங்குகள்தான் சினம் வந்தால் கூரையில் ஏறி பிய்த்து எறியும்.

அப்படிப் பட்ட குரங்குத்தனம்தான் தற்போது கூரைகளைப்

பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறதே தவிர,

திட்டமிட்ட மதியின் செயல்பாடாய் இது தெரியவில்லை.

சரி – கூரையைப் பிய்த்தாகிவிட்டது. மின் கோளாறால்

தீ விபத்து ஏற்பட்டால் மின்சாரம் முழுவதையும் பிய்த்து விடுவார்களா ?

நான் ஒன்றும் கூரைகளுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை.

தங்கள் சினத்தை காட்டத் தெரியாத,

தங்கள் சினத்திற்கு வடிகால் இல்லாத

இந்தக் குமுகாயம் எதன் மேல் எல்லாம் சினம் கொள்கிறது

என்று சொல்லத்தான்! இந்தக் கூரைகளைப் பிய்த்துப் போடுவதோடு

தன் சினத்தை முடித்துக் கொண்டு அடுத்த வேலையில் தங்களை

மறந்துவிடுவார்களே, அதை எண்ணித்தான் எனது சினமெல்லாம்.

40000 பள்ளிக்கூடங்கள் இருக்கும் தமிழ் நாட்டில்,

கல்வித்தலங்கள் கழிவறைகள் போல் இருக்கின்றன.

இதை மிகக் குறைவான செலவுகளில் சிறப்பான

தலங்களாக மாற்ற முடியும். ஆனால், அதைச் செய்யப் போவது யார் ?

அரசாங்கம் ? எத்தனை அதிகாரிகளிடம் நேர்மையிருக்கிறது ?

அரசியல் வாதிகள் ? காவல் துறையினர் ? சட்டம் ? நீதி ? எல்லாமே பழுது.

அப்படியென்றால் பொது மக்கள் ஞாயமானவர்களா ?

தமக்கு சாதகம் என்றால் எந்த அரசியல் வாதிக்கும்,

அதிகாரிக்கும் தர வேண்டியதை தரத் தயாராக இருப்பவர்கள்தான்

பெரும்பாலான மக்கள். ஞாயமானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும் ?

போபால் விசவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட 5+ இலக்கம்

மக்களுக்கு நிவாரணத்தொகை 20 ஆண்டுகள் கழித்துக் கிடைக்கிறது.

அதுவும் எவ்வளவு என்றால் ஒரு ஆளுக்கு குத்து மதிப்பாய 30 ஆயிரம் உரூவாய்.

இந்த 30 ஆயிரம் உரூவாய் என்பது ஒரு இந்தியப் பிச்சைக்காரன்

இரண்டு வருடங்களில் சம்பாதித்து சேமித்து விடக் கூடிய காசு.

இதற்காக இவர்கள் காத்திருந்தது 20 வருடங்கள்.

இவர்களது சினத்தின் விலை 30 ஆயிரம் உரூவாய்.

அதாவது 650 அமெரிக்க வெள்ளி!

3 வருடங்களாக காவிரியில் தண்ணீர் வரவில்லை.

பொதுமக்கள் பலே கில்லாடிகள்.

பழியைத் தூக்கி செயலலிதா மேலும் கருணாநிதி மேலும்

போட்டு விட்டு தங்கள் பிழைப்பைப் பார்ப்பார்கள்.

கருணாநிதி, செயலலிதா ஒரு புறம் இருக்கட்டும்.

திங்க சோறில்லாமல் 3 வருடம் சரவல் பட்டும்

விவசாயிக்கு இன்னும் சினமே வரவில்லைங்க!

காவிரியை நம்பி வாழும் ஏறத்தாழ 1 கோடி பேர்களில்

வெறும் 1 இலக்கம் பேருக்குக் கூட சினம் வரவில்லை!

சினம் வந்து காவிரிக்கரையில் அணிவகுத்து

போராட்டத்திற்கு செல்லத் தோன்றவில்லை!

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம்

கேட்கவும் வேண்டாம், கேட்கப் படவும் வேண்டாம்

என்று பொறுப்பற்று வாழும்போது கொடுக்கப் பட வேண்டிய விலை

மிகப் பெரிதாகத்தான் இருக்கும்.

தஞ்சை இராச இராசன் கோயிலில் பெருந் தீவிபத்து

நடந்தது 97/98 ஆம் ஆண்டு வாக்கில். அது நம் நினைவை

விட்டு அகன்று விட்டது. அங்கேயும் கூரைதான் எரிந்தது.

அங்கேயும் தப்பிக்க இடமில்லாமலே பலர் மாண்டனர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் திருவரங்கத்திலே திருமணக்

கூடத்திலே பல பேர் மாண்டனர். அங்கேயும் கூரை எரிந்தது.

காரணம் மின்கசிவு என்றார்கள்.

தற்போது கல்விக் கூடத்திலே கூரை எரிந்து பலர் மாண்டிருக்கின்றனர்.

வாழ்க்கைத் தரமும், நுகர்வோர் தரமும் சீரழிந்து

கிடக்கிறது. ஏன் எதற்கு என்று வாயெடுத்து கேட்கத் தெரியாத

மக்கள் கொண்ட குமுகாயம். உரிமையைக் கேட்பது அநாகரிகமாகக்

கருதும் குமுகாயமாக ஆகி முழு அடிமைகளாக ஆகப் போகின்ற

குமுகாயமாக இது தெரிகிறது.

செய்தித்தாள்களை எடுத்தால் காவல் துறையினரின் ஒழுக்கக்

கேடுகள்தான் தினச் சேதிகளாக வந்து கொண்டுள்ளன.

பண்ணையாருக்குச் சினம் வந்தால் பண்ணையாள்களின் குடிசைகளை

கொளுத்தி விடுவார். பெரிய ஆலை அல்லது நிறுவனம் கட்ட வேண்டுமானால்

அங்கிருப்பவரை காலி செய்ய குடிசைகளை கொளுத்தி விடுவார்கள்.

இங்கே எங்கேயும் கொளுத்திக் கொள்ளவில்லை என்றால்,

இருக்கவே இருக்கிறது மதச் சண்டைகள். மதம் கொண்டு

கூரைகளை மட்டுமல்ல, கோபுரங்களையும் கொளுத்தி அல்லது

இடித்து விடக் கூடிய சக்தி தீராத மத வெறிக்கு உண்டு.

அது சற்று ஓய்ந்தால், சாதி வெறி பற்றிக் கொள்ளும்.

அப்போது எரியும் கூரைகளிற்குக் கூட சாதி உண்டு!

அய்யோ எரிகிறதே என்றால் இன்றைக்கு அதை அணைக்கக் கூட

தண்ணீர் இல்லை தமிழகத்தில்.

அரசு, அரசியல், சட்டம், காவல், நீதி, கல்வி, வேலை, உணவு,

மருத்துவம், சாலை, வணிகம், என்று எல்லா நிலைகளிலும்,

துறைகளிலும் ஒழுக்கமும் நாணயமும் கெட்டுப் போய் கிடக்கிறதென்றால்

அதற்கு வெறும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மட்டும்

காரணமாகி விட முடியாது.

ஒட்டு மொத்த குமுகாயமும் தன்னைத் தானே

ஏய்த்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே இந்தத் தீவிபத்தில் பொதுமக்களிடம் மற்றும் அரசுகளிடம்

இன்று வெளியாகி இருக்கும் அஞ்சலிகளும் சினங்களும் வெறும் சம்பிரதாயங்கள்.

இந்த அஞ்சலிகளை வெளியிட்டிருக்கும் பலர்

கூட அரசையும் பொதுமக்களையும் ஏதோ ஒரு வகையில்

ஏமாற்றி இருப்பார்கள் என்று நம்புவது கடினமல்ல.

ஏற்றத்தாழ்வுகள் பெருகும் போது தன் நலம் பெருகிப் போகிறது.

தன் நலம் பெருகும் போது கடமைகள் காணாமற்போகும்.

கடமை தவறும் போது நேர்மையும் தவறித்தான் போகும்.

நேர்மை தவறும் போது சினம் அவிந்துதான் போகும்.

சினம் அவிந்து போன குமுகாயம் சீரழிந்துதான் போகும்.

அந்தச் சீரழிவின் ஒரு துளிதான் கும்பகோண விபத்து.

இன்று கும்பகோணத்தில் சரவல்!

நாளை எந்தக் கோணத்தில் சரவலோ ?

ஆகையால்,

அஞ்சலி செலுத்துவோரும் அழுகாச்சி வந்தோரும்

அதை நிறுத்திக் கொள்வது நேர்மை.

அதைவிட நேர்மை, அவசர அவசரமாக நடவடிக்கைகள்

எடுப்பதும், சந்தடி சாக்கில் ஆலோசனைகள் கூறுவதையும்

தவிர்த்தல். இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்

என்று பேசுவதில் சுகம் காணாமல் இருத்தல் நன்று.

மாறாக ஒவ்வொருவரும் தீராத சினம் கொள்ள வேண்டும்!

அச்சினத்தில் உறுதி வேண்டும். அந்த உறுதியுடன் மதி சேரவேண்டும்.

அந்த உறுதி வேண்டுமானால், மனதில் உரோசம் வேண்டும்.

செயக் கூடாதவற்றைச் செய்யாமல் இருக்க வைராக்கியம் வேண்டும்.

அது ஒரு ஒழுக்கப் புரட்சிக்கு அடிகோலும்.

அது வருங்காலத்துக்குப் பயன்படும்.

அதைவிட்டு விட்டு 500 உரூவாய் 600 உரூவாய்

சம்பளத்துக்கெல்லாம் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை,

சமையல்காரர்களை போய்த் துரத்திக் கொண்டிருப்பது

கோழைத்தனம் மட்டுமல்ல பம்மாத்து.

அன்புடன்

நாக.இளங்கோவன்

—-

nelan@rediffmail.com

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்