பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பாஸ்டன் பாலாஜி


அரசியல் மாநாட்டை குறித்து நான் முதன்முதலில் கேள்விபட்டபோது பத்து வயதிருக்கலாம். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்றைய முதல்வர் ம்.கோ.ரா. வாள் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததாக செய்தி சொன்னார்கள். சில வருடம் கழித்து தேர்தல் வந்தபோது, கபாலி கோவிலுக்கு செல்லும் வழியில் லவுட்ஸ்பீக்கர் சத்தம். மயிலை மாங்கொல்லையில் ஏதோ மீட்டிங் போல என்று போஸ்டர் பார்த்து கலைஞர் கருணாநிதி பேசப்போவதாக அறிந்து கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து, ஐஐடி நுழைவுத் தயாரிப்புக்காக வெங்கட்ரமணா ரோட்டின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் வகுப்புக்கு செல்லும் +1 வயது. ராஜீவ் வருவதால், 12A பஸ் பாதியிலேயே திருப்பி விடப்பட்டதால், நாகாத்தம்மன் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, வெள்ளை அம்பாஸ்டர் கார்களும் ப்ரெளவுன் போலீஸ் ஜீப்புகளும் பறக்கும் அணிவகுப்பு நிகழ்த்தியதை வேடிக்கை பார்க்க முடிந்தது. அப்புறம் ஒரு பா.ம.க. மாநாடு. புதுக் கொடி, வித்தியாமான வாழ்க கோஷம் எல்லாம் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்க வைத்தது. பயணித்த 12B-யோ திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், திருவான்மியூர் என்று நான் அதிகம் பார்த்திராத ஏரியாக்களை சுற்றிக் காட்டியபிறகு பனகல் பார்க் வந்து சேர்ந்தது. மறைமலை நகர் காங்கிரஸ் மாநாடு பேப்பரில் மட்டுமே கேள்விப்பட்ட கூட்டம். அதன் பிறகு பிலானிக்கு முரளி மனோ ?ர் ஜோஷி ரதம் செலுத்தி வந்தபோதும், நான் பாட்டுக்கு ‘சாஜன் ‘ பார்த்து புரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஜெயலலிதா கோட்டை செல்வதற்காக பத்து மணி நேரம் போக்குவரத்தை நிறுத்துவது; என்றோ ஒரு நாள் ரஜினி இதற்குக் கோபப்பட்டு, வண்டியை விட்டு இறங்கி தம் அடித்தது என்று பத்திரிகையில் படித்ததோடு சரி.

இப்பொழுது மீண்டும் ஒரு மாநாடு. அந்த மாநாடு நடக்கும் இடத்திலிருந்து ஒரு பத்து மைல் தள்ளிதான் நான் வேலை பார்த்தாலும் ஊழ் வலியது. மஞ்சள், ஊதா, சிவப்பு, கருஞ்சிவப்பு, வெளிர்சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என்று விதவிதமாக எச்சரிக்கை விடுகிறார் ஒரு மந்திரி. (Def Con Alerts: Collect them All!) இன்னொருவரோ, ‘கேளடி கண்மணி ‘ அஞ்சுவாய் ‘ஏதோ தவறாய் நிகழ நேரிடலாம் ‘ என்று அச்சமாக இருக்கும்படி அறிக்கை மட்டும் விட்டு விடுகிறார். (The Seattle Times: Nation & World: Tom Ridge warns nation of impending attack).

பாஸ்டனில் சுதந்திர (டெமொக்ராடிக்) கட்சியின் மாநாடு. இரண்டு ஜான்களையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் கோலாகலங்கள். நியு யார்க்கில் குடியரசு கட்சியின் பரிந்துரைப்பு விழா. அங்கும் சில பல தெருக்கள் அடைக்கப்படுகின்றன. மாநாடு நடக்கும் மாடிஸன் வளாகம் அருகில் வசிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியே கால்வைக்கக் கூட தடை விதிக்கப் படலாம். ஆனாலும், பாஸ்டனில் கெடுபிடிகள் கொஞ்சம் அதிகம். அவற்றில் சில

  • வீட்டை விட்டு வெளியே வந்தால் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பச்சை அட்டை அல்லது பாஸ்போர்ட், பிறந்த நாள் சான்றிதழ், மின்கட்டண ரசீதுகள், தவணை அட்டை நோட்டிஸ்கள், சன் டிவி பற்றுச்சீட்டுகள், என எல்லாவற்றையும் பத்திரமாக பையில் எடுத்துச் செல்வது நலம்.
  • அவ்வாறு எடுத்து வரும் பையானது நகைக்கடையில் கம்மல் வாங்கினால் தரப்படும் இலவச சுருக்குஞ்சியை விடப் பெரிதாக இருக்குமானால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு நடந்த மாதிரி பரிசோதனைக்கு உட்படத் தயாராக இருத்தல் நலம்.
  • இந்த சோதனைக்கு நிற்கும் க்யூவினால், ட்ரெயினை தவறவிடக்கூடாது என்பதற்காக, சாதாரணமாக கிளம்பும் எட்டு மணிக்கு பதிலாக அதிகாலை ஐந்து மணிக்குள் வீட்டை விட்டு தொடர்வண்டி நிலையத்தை அடைதல் நலம்.
  • காண்பதற்கு தெற்காசியவை சேர்ந்தவன் போல் இல்லாமல் இருத்தல் நலம்.
  • அப்படி தோற்றமளித்தால், எந்த ஸ்டேஷனில் செக்கப் இல்லை என்று அறிந்து வைத்துக் கொண்டு அந்த நிலையத்தைப் பயன்படுத்தல் நலம்.
  • சுருக்கமாக, ஜூலை மாதயிறுதியில் பாஸ்டனை விட்டு பறந்து விடுதல்… அச்சச்சோ… விமானத்தில் பறப்பது, விமான நிலையத்தை அடைவது ‘நடக்க ‘க் கூடிய காரியம்; பாத யாத்திரை சென்றால் மட்டுமே விமான நிலையத்தை அடையும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது. எனவே, காரை எடுத்துக் கொண்டு காணாமல் போவது நலம்.

    நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்பது போல் சோதனை போட்டு டெமொக்ராடிக் கட்சி வேட்பாளர்கள் கெர்ரியையும், எட்வர்ட்ஸையும் காத்து அனுப்பவேண்டிய முக்கிய பொறுப்பு. மனித உரிமை மீறப் படுகிறது என்று குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், எல்லாரையும் சோதிக்காமல் சிலரை மட்டுமே சில இடங்களில் நுழைந்தால் மட்டுமே சோதிப்போம் என்பதிலும் உடன்பாடில்லை.

    இந்த மாதிரி ஜும்போ மாநாடுகளுக்கு சில யோசனைகள்:

  • ரொம்பப் பேர் கிட்டவே நெருங்காத, ஆனால், ரசனையான தலங்களில் நடத்தலாம். காட்டாக குடியரசு கட்சிக்கு மவுண்ட் ரஷ்மோர், ஜான்களுக்கு ரோட் ஐலண்டின் கடற்கரையோரம்.
  • இந்த மாநாடுகளை மொத்தமாக ரத்து செய்துவிட்டு, அந்தப் பணத்தையும் தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஒரு பெரிய மகாநாடு; சாதரணர்களுக்குத் தொல்லை; நலம் விரும்பிகளும் டிவியில் மட்டுமே பார்க்க முடியும்; இதற்கு பதிலாக, மதில்-மேல்-பூனை தொகுதிகளில் எல்லாம் நேரடியாக விசிட் கொடுத்து வோட்டு சேகரிக்கலாம்.
  • தங்களுக்கு நம்பிக்கையான கொள்கைகளில் பணம் காணிக்கை ஆக்கலாம். உதாரணத்துக்கு கடவுள் பற்றை அதிகரிப்பதற்காக புஷ்ஷும், சுற்றுப்புறத்திற்காக கெர்ரியும் நிதி வழங்கி தங்கள் கொள்கைப் பிடிப்புகளைப் பலப்படுத்தலாம்.
  • எங்கள் ஊர் காய்கறிக் கடையில் நடந்த கொள்ளை, எதிர்த்த வீட்டில் நடந்த வன்புணர்வு முயற்சி போன்றவற்றைத் தடுக்க காவல்துறைக்கு நேரமும், திட்டங்களும் கொடுக்கலாம்.
  • ட்ரெயினில் பயணிக்காத தீவிரவாதிகளை(யும்), கண்டுபிடிக்க சொல்லலாம்.
  • எல்லா தரப்பு மக்களையும், விரைவாக பரிசோதிக்க அதி நவீன மெட்டல் டிடெக்டர்களையும், அதிக எண்ணிக்கையில் போலீஸையும் பல்வேறு நுழைவாயில்களில் நிறுத்தி, வாக்கு-சாவடிகளையும், இன்ன பிற முக்கியமான இடங்களையும் கடப்பதை ஜரூர் ஆக்கலாம்.

    ஆனால், நான்கு நாட்கள் கூட்டம் என்ற பெயரில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, மறுப்பு அறிக்கை விடும் வாய்ப்பை தந்தே தீருவோம் என்கிறார்கள். மூன்று முகமாக நடித்த ரஜினி, அப்பா-மகன், அண்ணன்-தம்பியாக நடித்துக் கலக்கும் விஜயகாந்த், அஜித், சரத்குமார் போன்ற தமிழ் நடிகர்கள் அரசியலுக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். அவ்வாறு எல்லாம் பயிற்சி எடுக்காமல் இரட்டை வேடம் போட முயல்கிறார்கள் அமெரிக்காவின் புஷ்ஷும் கெர்ரியும். இந்த மாதிரி சிறப்பு பல்டிக்களுக்காகவே கெர்ரி-யிஸம் பட்டியலிட ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் நல்லதுக்குத்தான் ? போன தேர்தலில் புஷ்-இஸம் கொடுத்த ஸ்லேட் இந்த தேர்தலுக்கு கெர்ரி-யிஸம் கொடுப்பதால், அவர்தான் ஜனாதிபதியாகப் போகிறாரோ… என்னவோ!

    E-Tamil

    Series Navigation

  • பாஸ்டன் பாலாஜி

    பாஸ்டன் பாலாஜி