தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சின்னக்கருப்பன்


***

டாக்டர் மன்மோகன் சிங் (உண்மையிலேயே பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து மேலும் படிப்பறிந்தோர் அங்கீகரித்து கொடுத்த டாக்டர் பட்டம்) பிரதமராகிறார். வாழ்த்துக்கள்.

இதனை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால், காங்கிரஸ் இன்று தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று வெற்றி பெற்றதை தாண்டி நிச்சயமாக அறுதிப்பெரும்பான்மை கூட பெற்றிருக்கலாம்.

இது சோனியா காந்தி போட்ட பிச்சை என்று எழுதுவது மடமை. இவர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றத்தலைவர். அவரே அப்படிக் குறிப்பிட்டாலும் இது உண்மையில் ராஜசேகர ரெட்டி போட்ட பிச்சை என்று கூறினாலாவது சற்றே பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் எம்பிக்களில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் ஆந்திர பிரதேச எம்பிக்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் உண்மையில்.

இதுவரை உத்தரபிரதேசத்திலிருந்து வந்த தலைவர்கள் பிரதமர் பதவி பெற்றதன் காரணம் அந்த எம்பி குழு மிக அதிக எண்ணிக்கையில் இருந்ததும் இந்தி பேசும் மக்களின் பிரதிநிதிகள் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததும் ஒரு காரணம். இன்று காங்கிரஸ் எம்பிக்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆந்திர எம்பிக்கள். அவர்களுக்கு நிச்சயம் அதிக எண்ணிக்கையில் காபினட் பதவிகள் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கிறேன். சென்ற அரசில் தமிழக எம்பிக்கள் அவர்களது எண்ணிக்கைக்கு அதிகமான வீதத்தில் காபினட் மற்றும் இதர மந்திரிப் பதவிகள் வகித்தார்கள். இந்த முறையும் அப்படியே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்தின் எம்பிக்கள் (திமுக, மதிமுக காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை ) காங்கிரஸ் கூட்டணி வெற்ற பெற்றதாக உணரப்படுவதற்கு முக்கியமான காரணம்.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஆந்திர எம்பிக்கள், தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 60க்கும் மேல். காங்கிரஸ் பெற்ற 145 இடங்களில் 45 இடங்கள் தமிழக ஆந்திர மாநிலங்களிலிருந்தே வருகின்றன. இன்றைய ஆட்சியின் 272இல் தெற்கு மாநிலங்களிலிருந்து தெரிவிக்கப்படும் ஆதரவு மட்டுமே தமிழ்நாட்டின் 39 + ஆந்திராவின் 34 + கேரளாவின் 18 + கர்னாடகாவின் 10 = 101 தெற்கிலிருந்து ஒருவர் தலைமைப்பொறுப்பேற்பதுதான் சரியானதாக இருக்கும். வடக்கு , கிழக்கு, மேற்கு அனைத்தும் சேர்ந்துதான் மிச்சம். (நானும் கணக்குப்போட்டு பார்க்கிறேனே 🙂

தெற்கில் இந்த வெற்றிக்கு சோனியா காரணமா ? தமிழகத்தில் திமுக அணி வெற்றி பெற்றதற்கும், ஆந்திராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும், கேரளாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற்றதற்கும் சோனியா காரணமா ? ஆனால் சோனியாவே இந்த வெற்றிக்குக் காரணம் என்ற மாயையும் காந்தி-நேரு மாயையும் அதிகாரப்பூர்வமான மாயையாக கட்டமைக்கப்படும்போதும், சோனியா மேனியா உருவாக்கப்படும்போதும், இந்த மாயைகளை உருவாக்குவதற்கான தேவையைப் பற்றிய சந்தேகம் வருகிறது. சோனியாவே பிரதமர் என்று போராடிய ‘காங்கிரஸ் தொண்டர்களில் ‘ பெரும்பாலோர் தெற்கத்தியர்கள் இல்லை என்பது ஒரு வினோதம்.

ஆந்திராவின் வெற்றிக்கு முக்கியமான ராஜசேகர ரெட்டிக்கு ஒரு ரொட்டி மரியாதை கூட காங்கிரஸில் இல்லை. (உனக்குத்தான் ஆந்திர முதல்வர் பதவி கொடுத்தாயிற்றே ?)

***

சோனியா பிரதமராக மறுத்திருக்கிறார்.

கலாம் அவர்களைச் சந்திக்கச் செல்லும் முன்னர் வரைக்கும் தானே பிரதமர் என்ற நிலையிலிருந்து ஒரு மாற்றமும் இல்லை. சந்தித்துத் திரும்பிய பின்னர் அளித்த பேட்டியில் (கூடவே மன்மோகன் சிங்) தான் பிரதமராக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பது கலாமுக்கே வெளிச்சம்.

பாரதிய ஜனதா கட்சியினர் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வேலையில் ஈடு பட்டிருக்கிறார்கள். சோனியா பிரதமராக ஆவது அவர்களது கட்சி வளர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் தேச நலன் அவர்களது கட்சி நலனை விட முக்கியமானதாக இருக்க வேண்டும்.

(இது ஒரு விவாதத்துக்குரிய ஒரு விஷயம். இதனை இரண்டு புறமும் விவாதிக்கலாம். உதாரணமாக தங்கள் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்கள் வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்லக்கூடாது என்று அவர்கள் போராடுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுத்துக்கொண்டு அவர்களை பாராட்டவும் செய்யலாம்.

இந்தியாவின் நிலைத்த அரசியல் அமைப்புக்கு பங்கம் வருகிறாற்போல, மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்வதும், தெருப்போராட்டமும், இந்தியாவை சீர்குலைத்துவிடும் என்ற அடிப்படையில் சங் பரிவாரங்கள் போராடுவதை திட்டவும் செய்யலாம்)

முதலாவது காங்கிரஸ் தனது பிரதம மந்திரி வேட்பாளர் என்று சோனியாவைச் சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை என்றாலும் கூட, அது திமுகவிலிருந்து லாலு பிரசாத் யாதவ் வரைக்கும் மற்ற இடங்களிலும், பொது மக்கள் மத்தியிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் சோனியாவே பிரதமர் என்பது நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயம்தான். ஆகவே காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், சோனியா பிரதமர் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கும் தெரிந்த விஷயமே. இப்போது திடார் என்று பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மேலும் பாரதிய ஜனதா கட்சி சோனியா பிரதமராக ஆகக்கூடாது என்று மக்கள் ஓட்டுப்போட்டால் அந்த ஓட்டு தங்களுக்கே வரும் என்ற நம்பிக்கையில் சோனியாவை எதிர்கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அனுமதித்திருந்தார்கள். இன்று திடாரென்று இரட்டைக் குடியுரிமை என்று பேசுகிறார்கள். சோனியாவுக்கு இரட்டைக் குடியுரிமை இருப்பதாகவும் அதனால் அவர் பிரதமர் பதவியில் உட்கார முடியாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. உலகமகா அபத்தம் இது. சோனியாவுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தால், எப்படி இவ்வளவு காலம் எதிர்கட்சித்தலைவராக காபினட் ரேங்கில் அவர் இருக்க அனுமதித்தார்கள் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ?

(எல்லாவற்றையும் விட எனக்கு எரிச்சல் வருவது காங்கிரஸ் கட்சி இன்னும் இந்தியர்களை கேனையன்களாக நினைப்பது. சோனியாவைக் காட்டினால்தான் இந்தியர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவார்களா ? அது என்ன காரணம் ? நரசிம்மராவ் அவர்களுக்கு எப்படி சோனியாதலைமைப்பதவியின் போது கிடைத்த வாக்குக்களை விட அதிகம் கிடைத்தது ? மன்மோகன் சிங் அவர்களை முன்னமே தலைவராக அறிவித்திருந்தால், சோனியாவின் காரணமாக எதிர்த்து ஓட்டுப்போட்ட பலர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். நிச்சயமாக பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியிருக்கும். அங்கு என்டிஏவுக்குச் சென்றிருக்கும் 11 எம் பி பதவிகள் காங்கிரசுக்கு வந்திருக்கும். மேலும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் போதெல்லாம். சரத்பவாரிலிருந்து திமுகவரைக்கும் எல்லோரிடமும் அறுதிப்பெரும்பான்மை காங்கிரசுக்குக் கிடைக்கவில்லை என்றால் மன்மோகன் சிங்தான் பிரதமர் என்று பேசியிருப்பதாக ரிடிஃப் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அரசியல்தலைவர்களிடம் ஒரு பேச்சு மக்களிடம் ஒரு பேச்சா ? சுப்பிரமணிய சுவாமி சொல்வதுபோல necessityஐ virtueவாக ஆக்கிக் காண்பிக்கிறார்கள்.

)

சோனியா பிரதமராக ஆவது இந்திய நலனுக்கு ஆபத்தானது என்று பாரதிய ஜனதா கட்சியினர் உண்மையிலேயே நினைத்திருந்தால், அவர் எதிர்கட்சித்தலைவராக ஆவதையே இதே போல எதிர்த்திருக்க வேண்டும். சுயநலன் காரணமாக அதனை அனுமதித்துவிட்டு இன்று குய்யோ முய்யோ என்று கத்துவது நாகரிகமற்றது. ஆனால் என்.டி.ஏ தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்டிஏ சோனியா பிரதமரானால் ஆட்சி ஏட்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது என்று அறிவித்தது புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேச எழுந்த போதெல்லாம் காங்கிரஸ் அவரை பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்திருக்கிறது. சோனியா அல்ல வேறு எந்த காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றாலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதே நிலைப்பாட்டை கடைபிடித்தால் புரிந்து கொள்ளலாம். மன்மோகன் சிங் பிரதமராகிறார் என்றதும், ஒரு பிரச்னையுமில்லை என்டிஏ ஆட்சி ஏட்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார். (சோனியா பிரதமரானாலும் தான் கலந்து கொள்வேன் என்று வழக்கம்போல வாஜ்பாய் தெரிவித்திருக்கிறார்)

மேலும் சட்டம் அனுமதிக்கிறது என்பது போன்ற ஒரு அபத்தமான வாதத்தை நான் கேட்க விரும்பவில்லை. இதனை கலைஞர் கருணாநிதியிலிருந்து சுர்ஜித்சிங் வரை உபயோகிக்கிறார்கள். சட்டம் அனுமதிக்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தை எதிர்த்துப் போராடக்கூடாது என்று சொல்ல முடியாது. அப்படி என்றால் எந்த ஒரு சட்டத்தையும் எதிர்த்து யாரும் போராடக்கூடாது., போடா உட்பட. ஒரு சட்டம் தவறென்று ஒருவர் கருதினால் அதனை தெளிவாகச் சொல்ல வேண்டும். நான் போடா சட்டத்தை எதிர்க்கிறேன். அதனைச் சொல்கிறேன். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களும், சுதந்திரமடைந்த இந்தியாவுக்கு வெளியே பிறந்தவர்களும் இந்திய பிரதமராக ஆகக்கூடாது என்றதொரு சட்டம் இல்லாதது தவறென்று நான் கருதுகிறேன். அதனைச் சொல்கிறேன். அன்று அமெரிக்கச் சட்டம் அடிமைமுறையை ஆதரித்தது என்ற காரணத்தால், அன்று அமெரிக்க கறுப்பினத்தவரும் அமெரிக்காவின் சிந்தனையாளர்களும் அடிமைமுறை அனுமதியை எதிர்க்காமல் இல்லை.

அமெரிக்கர்கள் தங்களது ஜனநாயக அனுபவத்திலிருந்து உடனடி பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள் அதற்கு ஏற்றாற்போல அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பைத் தடுக்க சட்டங்களையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். இரண்டு உதாரணங்கள் தருகிறேன். 4 முறை தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்தார் ருஸ்வெல்ட். அவர் சென்று அடுத்த ஜனாதிபதி வந்தவுடன், அமெரிக்க பாராளுமன்றத்தில் உடனே ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள். தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று ஒரு சட்டம் வந்தது அப்போதுதான்.

கென்னடி தன் சகோதரரான பாபி கென்னடியை தனது அரசாங்கத்தின் அட்டார்னி ஜெனரலாக நியமித்தார். அந்த ஆட்சியில் இருவரும் ஏறத்தாழ இணைந்தே ஆட்சி புரிந்ததாகக் கூறப்பட்டது. கென்னடியின் மறைவுக்குப் பின்னர் உடனே அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. ஒரு ஜனாதிபதி தன் உறவினர்கள் யாரையும் எந்த அரசாங்க வேலைக்கும் நியமிக்க முடியாது என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.

நாம் இன்னும் வம்சாவளி அரசியலை தடுக்க முடியாமல் இருக்கிறோம். ஏனெனில் அதிகார துஷ்பிரயோகம் என்பது மக்கள் மத்தியில் எந்த விதமான ஆழமான அவநம்பிக்கையை ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்துகின்றது என்பதை காணமுடியாமல் நம்முடைய அன்றைய கட்சிச்சார்பு கண்களை மறைக்கிறது. இந்தியா இந்த அவலங்களைத் தாண்டி மீண்டெழும்.

***

கம்யூனிஸ்ட் அணியினர் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு

இன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்கு முக்கியமான காரணம் கம்யூனிஸ்ட் அணியினர். ஆனால், வெளியிலிருந்து ஆதரவு என்று அறிவித்திருக்கிறார்கள்.

இது போன்றதொரு அபத்தத்தை இன்னும் பேசி வருகிறார்கள் இடதுசாரியினர். எதிர்காலத்தில் இன்னொரு ஹிஸ்டாரிக்கல் பிளண்டரை ஒப்புக்கொள்ள காரணம் வேண்டாமா ?

வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தாலும், ஐந்துவருடங்கள் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி என்ற பயமுறுத்தல் காரணமாக காங்கிரஸ் என்ன ஊழல் புரிந்தாலும், அராஜக ஆட்சி புரிந்தாலும், தொழிலாளர்கள் மீது ஏறிமிதித்தாலும், இன்னொரு டில்லிக் கலவரத்தை உண்டு பண்ணிலாலும் கூட கம்யூனிஸ்டுகள் இந்த அரசைக் காப்பாற்றுவார்கள். சந்தேகமில்லை. ஆனால், நிலையான ஆட்சி அல்ல நான் இங்கு முன்னிருத்துவது.

நான் சொல்வது பொறுப்பற்ற அதிகாரம். காங்கிரஸ் ஆட்சியின் அனைத்து முடிவுகளும் கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆலோசித்தேதானே எடுக்கப்படும் ? ஆனால் எடுக்கப்படும் ஒரு முடிவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொறுப்பேற்க மாட்டார்கள். அராஜக ஆட்சி நடந்தால் பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால் சாதனைகளுக்குச் சொந்தம் கொண்டாடுவார்கள். (இது போன்றதொரு பொறுப்பற்ற அதிகாரத்தால் வங்காளத்தில் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை வரலாற்றாசிரியர் மறக்கமாட்டார்கள் எனக் கருதுகிறேன்)

கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுக்குள் பங்கு பெறட்டும். அவர்கள் நல்லதோ கெட்டதோ ஆட்சி செய்யட்டும். அதன் விளைவுகளுக்குப்பொறுப்பேற்கட்டும். (நேற்றைக்கு வரைக்கும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் பங்கு பெற்ற திமுக, அரசிலிருந்து வெளியே வந்ததும், எல்லா பொறுப்பையும் கை கழுவி விட்டது என்பது தெரியும், இருந்தும் சொல்கிறேன்)

கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கு பெறட்டும். பங்குச் சந்தை சில நாட்கள் விழலாம். விழட்டும். இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது எனக் கருதுகிறேன். வெளிநாட்டினர் பங்குச் சந்தையில் விளையாடுவது குறைக்கப்படட்டும். ஐந்துவருட நிலையான ஆட்சியில் எல்லாம் சிறப்பாகவே நடக்கும்.

***

காங்கிரஸ் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது

1984இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 49.10 % வெற்றி பெற்ற இடங்கள் 404

1984இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 7.74 % வெற்றி பெற்ற இடங்கள் 2

மாநிலக் கட்சிகளின் ஓட்டு சதவீதம் 11.56 வெற்றி பெற்ற இடங்கள் 58

*

காங்கிரஸ் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது

1989இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 39.53 % வெற்றி பெற்ற இடங்கள் 197

1989இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 11.36 % வெற்றி பெற்ற இடங்கள் 85

ஜனதா தளம் 17.79 சத வாக்குக்களைப் பெற்று 143 இடங்களைப் பெற்றது.

மாநிலக் கட்சிகளின் ஓட்டு சதவீதம் 15 வெற்றி பெற்ற இடங்கள் 46

*

காங்கிரஸ் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது. தேர்தல் நடுவில் அவர் கொலையுண்டார். தேர்தலுக்குப் பிறகு நரசிம்மராவ் தலைமையில் அரசு அமைந்தது.

1991இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 36.55 % வெற்றி பெற்ற இடங்கள் 244

1991இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 20.04 % வெற்றி பெற்ற இடங்கள் 120

ஜனதா தளம் 11.77 சத வாக்குக்களைப் பெற்று 59 இடங்களைப் பெற்றது.

மாநிலக் கட்சிகளின் ஓட்டு சதவீதம் 15 வெற்றி பெற்ற இடங்கள் 46

*

நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

1996இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 28.80 % வெற்றி பெற்ற இடங்கள் 140

1996இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 20.29 % வெற்றி பெற்ற இடங்கள் 161

ஜனதா தளம் 8.08 சத வாக்குக்களைப் பெற்று 46 இடங்களைப் பெற்றது.

மாநிலக் கட்சிகள் 24 சதவீத வாக்குக்களைப் பெற்று 131 இடங்களைப் பெற்றன (பல ஜனதாதளத்துடன் கூட்டு)

*

சோனியா தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

1998இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 25.82 % வெற்றி பெற்ற இடங்கள் 182

1998இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 25.59 % வெற்றி பெற்ற இடங்கள் 141

ஜனதா தளம் 3.24 சத வாக்குக்களைப் பெற்று 6 இடங்களைப் பெற்றது.

மாநிலக் கட்சிகள் 29 சதவீத வாக்குக்களைப் பெற்று 150 இடங்களைக் கைப்பற்றின (பாஜக கூட்டணியில் பல)

*

சோனியா தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

1999இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 28.30 % வெற்றி பெற்ற இடங்கள் 114

1999இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 23.75 % வெற்றி பெற்ற இடங்கள் 182

ஜனதா தளம்(யு) 3.10 சத வாக்குக்களைப் பெற்று 21 இடங்களைப் பெற்றது. (பாஜக கூட்டணி)

மாநிலக் கட்சிகள் 30 சதவீத வாக்குக்களைப் பெற்று 168 இடங்களைப் பெற்றன (பல பாஜக கூட்டணியில்)

*

சோனியா தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

2004இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 26.82% வெற்றி பெற்ற இடங்கள் 145

2004இல் பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு விழுந்த சதவீதம் 22.21 % வெற்றி பெற்ற இடங்கள் 138

ஜனதா தளம்(யு) 3.10 சத வாக்குக்களைப் பெற்று 7 இடங்களைப் பெற்றது. (பாஜக கூட்டணி)

மாநிலக் கட்சிகள் ?

*

20 வருடங்களில் பாரதிய ஜனதா கட்சி முக்கியமான கட்சியாக பரிணமித்திருக்கிறது. 7 சதவீத வாக்குகளிலிருந்து இன்று 22 சதவீத வாக்குகள் பெறும் கட்சியாக ஆகியிருக்கிறது. காங்கிரஸ் 49 சதவீத வாக்குகள் பெற்ற 1984இலிருந்து இன்று 26 சதவீத வாக்குகளாகக் குறைந்திருக்கிறது. எனினும், அந்த வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்குச் செல்லவில்லை. மாநிலக் கட்சிகள் இடதுசாரி என்று சிதறியிருக்கிறது. 1984 காங்கிரஸ் பேரலையின் போதுகூட 50 சதவீத வாக்குக்கள் தாம் காங்கிரசுக்கு விழுந்திருக்கின்றன.

1999இல் பாஜக கூட்டணி அமைத்ததால் அதன் வாக்குச் சதவீதம் 25இலிருந்து 23 சதவீதமாகக் குறைந்தாலும் அதே 182 இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. அதே போல இன்று காங்கிரஸ் கூட்டணி காரணமாக 28 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகக் குறைந்தாலும் 145 இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் நரசிம்மராவ் தலைமையில் அது பெற்ற 28.80 சதவீத ஓட்டுக்களை சோனியா அதிகரிக்கவில்லை என்பதை கவனியுங்கள். உடனே அடுத்து நடந்த தேர்தலில் 1998இல் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்து 3 சதவீத வாக்குக்களை இழந்திருக்கிறது. 1991இலிருந்து 1996க்கு சுமார் 8 சதவீத வாக்குக்களை காங்கிரஸ் இழந்திருந்தாலும், அது பாரதிய ஜனதா கட்சிக்குச் செல்லவில்லை. 1991இலும் 1996இலும் அது 20 சதவீத வாக்குக்களையே பெற்றிருக்கிறது.

இதன் மூலம் தெரிவது சோனியாவால் காங்கிரஸ் கட்சிக்குப் பிரயோசனமில்லை. நரசிம்மராவ் பெற்ற 28 சதவீதத்தையே சோனியா தலைமையிலும் காங்கிரஸ் பெறுகிறது. இது காங்கிரஸ் ஓட்டே தவிர சோனியா ஓட்டு என அழைப்பது எங்ஙணம் ? காங்கிரஸ் இழக்கும் ஓட்டுக்கள் பாரதிய ஜனதா கட்சிக்குச் செல்வதில்லை. அவை ஜனதா தளத்தின் இன்றைய புத்திரர்களாக இருக்கும் ஜாதிக்கட்சிகளுக்குச் செல்கின்றன (லல்லு பிரசாத் யாதவ், முலயாம் சிங் யாதவ், , மாயாவதி ஆகியோர் நடத்தும் கட்சிகள். மாயாவதியை ஜனதாதள உற்பத்தியாகச் சொல்லவியலாது எனினும் காங்கிரஸ் ஓட்டு அங்கேதான் செல்கிறது)

நாடு தழுவிய கட்சிகளின் ஓட்டு சதவீதம் 80 சதவீதத்திலிருந்து இன்று 64 சதவீதமாகக்குறைந்திருக்கிறது. (இந்த கட்சிகளாவை பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா மார்க்ஸிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா, இந்திரா காங்கிரஸ் ஆகியவை)

மாநில கட்சிகளின் ஓட்டு சதவீதம் 8 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. (ஸமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், அதிமுக, திமுக தெலுங்கு தேசம் ஆகியவை)

**

மேற்கண்ட எண்ணிக்கைகளை வைத்து பல விஷயங்களை அறியலாம். நீங்கள் பல விஷயங்களை யூகிக்கலாம். என்னால் யூகிக்க முடிந்ததை நான் கீழே குறிப்பிடுகிறேன்.

முதலாவது காங்கிரஸ் ஓட்டு எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. அது நரசிம்மராவ் வந்தாலும், சோனியா வந்தாலும் சீதாராம் கேஸரி வந்தாலும் எங்கும் போகப்போவதில்லை. சமீபத்தில் எடுத்த சில ஆய்வுகள் காங்கிரஸின் பிரபல்யம், சோனியாவின் பிரபல்யத்தை விட அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது. அதே ஆய்வுகள் வாஜ்பாயியின் பிரபல்யம் பாரதிய ஜனதாவின் பிரபல்யத்தைவிட அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தன. இரண்டையுமே என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது.

இரண்டாவது பாஜகவின் ஓட்டு எண்ணிக்கையும் அப்படியே இருக்கிறது. இதற்கு பல காரணங்கள், சிலவற்றை முன்பு ‘பாஜக ஒளிர்கிறதா ‘ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

மூன்றாவது தமிழ்நாட்டு நிலையை இந்தியாவும் அடைந்து வருகிறது என்பது.

சென்ற தமிழ்நாட்டுத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சியின் சிறப்பை எடுத்துச் சொல்லி தேர்தலில் நின்றார். உண்மையிலேயே அவரது ஆட்சி அதற்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியைவிட சிறப்பானதாகவும், பொருளாதார வளர்ச்சியை குறி வைத்ததாகவுமே இருந்தது என்றே நான் கருதுகிறேன். அந்த தேர்தலில் கலைஞர் மக்களைச் சந்தித்தபோது, தன் வழக்கமான இனவெறி மொழி வெறி அரசியல் நடத்தாமல் வளர்ச்சி என்பதை அடிப்படையாக வைத்து சந்தித்தார். அந்த ஐந்தாண்டு காலத்தில் நிச்சயம் தமிழகம் ஒளிர்ந்தது என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர் பலத்த தோல்வி அடைந்தார். காரணம் அதற்குள் ஓட்டு வங்கி அரசியல் வேரூன்றி இருந்தது. பாமக ஓட்டு வங்கியும், மதிமுக ஓட்டு வங்கியும், காங்கிரஸ் ஓட்டு வங்கியும் இறுகிப்போய் ஏறத்தாழ முழு ‘மாற்றக்கூடிய ‘ நிலையை அடைந்துவிட்டது (full transferability of votes)

அந்த ஓட்டுக்கள் முழுமையாக அதிமுகவுக்கு மாற்றப்பட்டபோது அதிமுகவின் ஓட்டு வங்கியும் இணைந்து கொண்டு திமுக கூட்டணிக்கு பலத்த தோல்வியைத் தந்தன.

இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதுவே நடந்திருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் நிச்சயம் இந்தியா பல துறைகளில் முன்னேறி இருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளைப் போல பெரிய ஊழல் ஏதும் இல்லை. அதிகார வர்க்கத்தின் பற்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன. தாராளமயமாக்கலின் காரணமாக தொழில் முனைவோர்கள் பல தொழில்கள் துவங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவின் வங்கிக்கணக்கு 1 பில்லியனிலிருந்து 100 பில்லியன் டாலருக்கு உயர்ந்திருக்கிறது. இனி மேலை நாடுகளிலிருந்து கடன் வாங்க மாட்டேன் என்று தெரிவித்து பல ஏழை நாடுகளுக்கு கடன் வழங்கவும் இந்தியா ஆரம்பித்திருக்கிறது. மன்மோகன் சிங் நரசிம்மராவ் கூட்டணி ஆரம்பித்துவைத்த சீர்திருத்தம் இடையில் ஜனதாதள காலத்தில் தொய்வு ஏற்பட்டதை தாண்டி இன்று வேகமடைந்திருக்கிறது.

இந்த தேர்தலில் வழக்கமான மதவெறியை முன்னிருத்தாமல் பாஜக கூட்டணி வளர்ச்சியை முன்னிருத்தி தேர்தலைச் சந்தித்தது. ஆனால் ஓட்டு வங்கி அரசியலே வெற்றி பெற்றது. அதுவே தமிழகத்திலும் ஆந்திராவிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதன் காரணம். வடக்கில் பீகாரிலும் ஜார்க்கண்டிலும், வெற்றி பெற்றதற்கும் இது போன்ற கூட்டணியை லல்லு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் அமைத்ததே.

இனி வெற்றி என்பது எந்த கூட்டணி ஓட்டு வங்கி அரசியல் கணக்குகளை சரியாகப் போடுகிறது என்பதே.

இது ஒரு நல்ல ஜனநாயகம். இது வளர்ந்த நாட்டின் அறிகுறி. தன்னம்பிக்கை உடைய மக்களின் அரசியல்.

அமெரிக்காவில் ஒரு கிண்டல் சொல்வார்கள். ஜனநாயகக் கட்சி (டெமாக்ரடிக் ) உழைத்து பல ஏழைகளை பணக்காரர்களாக ஆக்குகிறது. பணக்காரர்களாக ஆனதும் அவர்கள் குடியரசுக் ( ரிபளிகன்) கட்சியில் சேர்ந்துவிடுகிறார்கள் என்று.

அதேதான் சிறிது மாற்றத்துடன்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்