நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

மே 11, 2004


UN Integrated Regional Information Networks

ஐக்கியநாடுகள் அமைப்பின் பிராந்திய செய்தித்தொடர்பு

மே 11, 2004

Kano

மே மாதம் 11ஆம் தேதி, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கோபத்துடன் கானோ நகரத்தின் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். இந்த எதிர்ப்பு ஊர்வலம் சமீபத்தில் யால்வா நகரத்தில் கிரிஸ்துவ தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து.

பள்ளிக்கூடங்களும் வியாபாரங்களும் மூடப்பட்டிருந்தன. அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்திய இஸ்லாமிய மதகுருக்கள் முஸ்லீம்களைக் கொல்ல மேற்கத்திய சதிவலை பின்னப்பட்டிருப்பதாக குரல் எழுப்பினர்.

உமர் இப்ராஹிம் காபோ என்ற கானோ உலீமா கவுன்ஸில் தலைவர் போராட்டக்காரர்களிடம் பேசும்போது, ‘தங்கள் சகோதரர்கள் கொல்லப்படுவதை , குறிப்பாக யால்வா நகரத்தில் நடந்திருப்பதைப் பார்த்து சகிக்க முடியாமல் இருக்கிறார்கள் ‘ என்று கூறினார்.

நைஜீரிய செஞ்சிலுவைச்சங்கம் மேமாதம் 2 ஆம் தேதி நடந்த தாக்குதலில் யால்வா நகரத்தில் சுமார் 600 முஸ்லீம்கள் கிரிஸ்துவ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறியது. யால்வா நகரம் மத்திய நைஜீரியாவின் பீடபூமியில் இருக்கிறது. வடக்கு நைஜீரியாவின் ஹைஸா மற்றும் ஃபலூனி இனத்தினர் இங்கு வாழ்கின்றனர்.

கிரிஸ்துவ மதம் சார்ந்த டோரக் இன மக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவர்கள் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கோடாரிகள் கொண்டு இந்த நகரத்தைத் தாக்கினார்கள். உள்ளேயிருந்து ஆட்கள் வெளியேற முடியாதபடி கதவை அடைத்து எல்லா வீடுகளின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினர்.

‘முஸ்லீம்களுக்கு எதிரான உலகளாவிய போரின் ஒரு முனையே ஆஃப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் யெல்வாவிலும் நடக்கிறது ‘ என்று கானோ நகரத்தின் தெருக்களில் கூடிய கூட்டத்தில் காபோ அவர்கள் பேசினார்.

இன்னும் ஏழு நாட்களுக்குள்ளாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பான அனைவரையும் கைது செய்யவேண்டும், இல்லையெனில் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு யாரையும் குற்றம் சாட்டமுடியாது என்று நைஜீரிய ஜனாதிபதி ஓலுஸ்கன் ஓபஸன்ஜோவுக்கு இவர் எச்சரிக்கை விடுத்தார்.

போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் இஸ்ராலிய பிரதமர் ஆரியல் ஷரோன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்தார்கள். பின்னர் கானோ மாநில கவர்னரான இப்ராஹிம் ஷிகாரோ அவர்களின் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டார்கள்.

இந்த கூட்டத்தாரிடம் பேசிய கானோ கவர்னர் ஷாகாரோ அவர்கள், அப்பாவி மக்களை தாக்க வேண்டாம் என்றும், முஸ்லீம்களின் உரிமைகளையும் கெளரவத்தையும் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தாரை கேட்டுக்கொண்டார்.

நைஜீரியாவிலும் உலகமெங்கும் முஸ்லீம்களைக் கொல்வது நம்மை பயமுறுத்தாது என்றும் நம்மை இன்னும் தைரியப்படுத்தும் என்றும் கவர்னர் உரை நிகழ்த்தினார்.

மனித உரிமை கண்காணிப்புக் குழு நைஜீரிய அரசினை யேல்வா நகரத்து மக்களை சரியாகப் பாதுகாக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

இதுபோன்று நடக்கும் தொடர்ந்த கொலைகளின் தொடர்ச்சியே இந்த கிரிஸ்துவ பயங்கரவாதச் செயல் என்றும் இது தடுத்திருக்க முடியும் என்றும் நியூயார்க்கில் உள்ள இந்த மனித உரிமைக் கண்காணிப்புக் குழு கூறியிருக்கிறது.

மனித உரிமை கண்காணிப்புக்குழுவின் ஆப்பிரிக்க பிரிவின் இயக்குனரான பீட்டர் டாகிராம்புட்டே அவர்கள் ‘ பீடபூமியில் நடக்கும் விஷயங்களை தொடர்ந்து அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதே இப்படிப்பட்ட சுழற்சியான பழிவாங்கும் கொலைகள் நடக்கக்காரணம் ‘ என்று கூறினார்.

நைஜீரியாவின் அரசு இந்தத் தாக்குதலைப் பற்றி புலன் விசாரணை செய்து வன்முறை சுழற்சியை நிறுத்த அவசரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த அமைப்புக் கோரியுள்ளது.

யேல்வா நகரம் சுற்றி இருக்கும் பிரதேசத்தில் தொடர்ந்து இது போன்ற மத போர்கள் நடந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான கொலைகள் நடக்கின்றன. 2001இல் கிரிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மாநில தலைநகரான ஜோஸ் நகரத்தில் நடந்த போரில் சுமார் 1000 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

***

நன்றி: ஆல் ஆப்பிரிக்கா நியூஸ்

http://allafrica.com/stories/200405110785.html

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்