“கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஞாநி


கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஒரு குரல் எழுந்தது. கால வரையறை இன்றி சினிமா கொட்டகைகளை மூடப் போகிறோம் என்று அறிவித்தார்கள் கொட்டகைக்காரர்கள்.

கால வரையறை எல்லாம் எதற்கு ? ஒரேயடியாகக் கூட மூடி விட்டுப் போங்களேன் என்கிறேன் நான்.

சினிமா கொட்டகைகளை மூடி விட்டால் தேசத்தில் என்ன குடி முழுகிப் போய் விடும் ? பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளை மூடினால் அடுத்த தலைமுறையே முட்டாளாகிவிடலாம். மருத்துவமனைகளை மூடினால் நோய் முற்றி மனிதர்கள் செத்துப் போவார்கள்.

சினிமா கொட்டகையை மூடினால் சமூகத்துக்கு என்ன ஆகும் ? டி.வியில் பத்து வய்து சிறுமிகளெல்லாம் தொப்புளைச் சுற்றி ஜிகினா தூள் ஒட்டிக் கொண்டு “ சரக்கு வெச்சிருக்கேன்” என்று பாடி ஆடிக் கொண்டு இருக்கும் கேவலத்திலிருந்து விடுதலை அடைவார்கள். இரண்டு வரி திருக்குறள் மனப்பாடம் செய்யும் வயதைக் கூட எட்டாத குழந்தைகளெல்லாம் ‘ கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா ?” என்று கேட்கும் கேவலங்கள் முடிவுக்கு வரும்.

சாராயக்கடைகளை, மதுக்கடைகளை மூடினால் சிகரெட்டை தடை செய்தால் சமூகத்துக்கும் மனிதர்களுக்கு எவ்வளவு லாபமோ அதை விட உங்கள் சினிமா கொட்டகைகளை மூடினால் அதிக லாபம் கிட்டும். ஏனென்றால் அவையெல்லாம் உடலை மட்டுமே பாதிக்கிறவை. உங்கள் சினிமா தலை முறை தலைமுறையாக மனங்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. ஆண்-பெண் உறவு என்பதையே ஆடி மாத நாய்கள் போல் அலைவது மட்டும்தான் என்பதாகத்தான் உங்களுடைய பெரும்பாலான சினிமாப் பாடல்களும் காதல் காட்சிகளும் ஆக்கி வைத்திருக்கின்றன.

இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் ; அதைத்தான் நாங்கள் தருகிறோம் என்ற உங்கள் வாதம் பொய்யானது. இதிலிருந்து மாறுபட்டு வேறு என்ன நீங்கள் நல்லதாகக் கொடுத்து மக்கள் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்கள் ? நூறு மசாலா படங்களுக்கு நடுவே ஒரே ஒரு நல்ல படம் கொடுத்தால் மசாலாவைத்தான் மனம் விரும்பும். நூறு நல்ல படங்களுக்கு நடுவில் ஒரு மசாலாவைக் கொடுத்தால், மசாலாவை நிராகரித்துவிடும். நூறு வேளை தொடர்ந்து விஸ்கி குடித்து பழக்கப்படுத்தப்பட்டவனிடம் மோரைக் கொடுத்தால் அவன் நிராகரிக்கத்தான் செய்வான். அவனுக்கு மோர் பிடிக்கவில்லை என்று வாதாடமுடியுமா ?

எனவே நீங்கள் இப்போது மக்களிடம் விநியோகித்துக் கொண்டிருப்பது ஒன்றும் தேவாமிர்தம் அல்ல. அதை நீங்கள் நிறுத்தி விட்டால் மக்கள் பட்டினியில் செத்துப் போய் விடுவார்களே என்று கவலைப்பட.

சரி. ஏதோ இத்தனை நாளாக இதே தொழில் செய்து வந்துவிட்டார்கள். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மனங்களை நாசம் செய்யும் படங்களை தயாரிக்கும் இந்தத் தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களைக்காட்டித்தான் எங்கள் கருணையை அரசின் சலுகைகளைக் கோருவது உங்கள் வழக்கம். (அவர்களுக்கு சம்பள உயர்வு தரும்போது மட்டும் முணுமுணுப்பீர்கள்.)

உங்கள் தொழிலின் பிரச்சினை உண்மையில் என்ன ?

கொட்டகைகள் நிரம்புவதில்லை. மக்கள் படம் பார்க்க கும்பல் கும்பலாக வருவதில்லை. திருட்டு விசிடியில் வீட்டிலேயே பார்த்து விடுகிறார்கள். டெலிவிஷனால் சினிமா அழிகிறது. இதெல்லாம்தான் உங்கள் வழக்கமான வாதம்.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில்தான், குறிப்பாக, ஆந்திரத்திலும், தமிழ் நாட்டிலும்தான் தேவைக்கு மேல் அதிகமான சினிமா கொட்டகைகள் இருக்கின்றன. எந்த மேலை நாட்டிலும் இந்த விகிதாசாரத்தில் கொட்டகைகள் கிடையாது. எனவே இருக்கும் தியேட்டார்கள் அதிகம். குறைவதுதான் நாட்டுக்கும் நல்லது. உங்கள் தொழிலுக்கும் நல்லது.

விசிடி ஒரு நவீன தொழில்நுட்பம். ஒரு புதிய தொழில் நுட்பம் வரும்போது அது பழைய தொழில் நுட்பம் சார்ந்த தொழிலை பாதிக்கத்தான் செய்யும். முதலில் சினிமா வந்தபோது தெருக்கூத்தும் நாடகமும் பாதிக்கப்படவில்லையா ? அவர்களுடைய கதைகளையே நாடகங்களையே நீங்கள் படமாக எடுத்த போது, அவர்கள் உங்களைத் தடுத்தார்களா ?

செல்போன் வரும்வரை எஸ்.டி.டி பூத்துகளெல்லாம் பிரமாதமாக வியாபாரம் செய்தன. இப்போது அவை நலிந்துவிட்டன. பூத் உரிமையாளர்கள் எல்லாருமாக செல்போனை ஒழிக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறார்களா என்ன ?

எங்கள் படங்களையே விசிடியில் திருட்டுத்தனமாக பதிவு செய்து விற்று எங்கள் வருமானத்தை திருடுகிறார்களே என்பதுதான் உங்கள் பதில் கேள்வி. தவறுதான். திருட்டு விசிடியில் உங்கள் தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் நடன இயக்குநர்களும் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து ஐடியாக்களை சுட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அது அதர்மமாகப் படவே படாது என்றாலும் இது தவறுதான்.

ஏன் மக்கள் வீட்டிலிருந்துகொண்டே விசிடி பார்க்க விரும்புகிறார்கள் ? பாதி கொட்டகைகளில் கழிவறை என்ற பெயரில் ஒன்று வைத்திருகிறீர்களே அதை நினைத்தாலே தியேட்டருக்கு வரத்தோன்றாது. ரெஸ்டாரண்ட்டோ கொள்ளைக்கூடம். படம் பார்க்கும் அரங்கில் எஸ்.பி.முத்துராமன் படம் கூட மணிரத்னம் படம் மாதிரி பாதி இருட்டாய் இருக்கும். அப்படிப்பட்ட ப்ரொஜக்டர்கள்.

இதையெல்லாம் மீறி கொட்டகைகளுக்கு இன்னமும் மக்கள் வருவது அவர்களுடைய சகிப்புத் தன்மையையே காட்டுகிறது. அதை நீங்கள் அதிகம் சோதிக்க முடியாது.

உண்மையில் சினிமா தொழில் தானும் உருப்பட்டு சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு ஐந்து அம்ச திட்டம் இதோ.

விசிடி உரிமையையும் ஒரு ஏரியாவாகக்கருதி முதல் நாளிலேயே ஒரு கணிசமான தொகைக்கு விற்றுவிடுங்கள்.

படத் தயாரிப்பு செலவைக் குறையுங்கள். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல நடிப்பு இவற்றை மட்டுமே நம்புங்கள்.

திறமையான புதுமுகங்களைக் கொண்டு குறைந்த செலவில் படம் எடுங்கள்.

ஸ்டார்களுடைய சம்பளத்தைக் குறைக்காமல் சினிமாவைக் கப்பாற்றவே முடியாது. தனுஷ் வாங்குகிற சம்பளம் அப்துல் கலாமுக்குக் கூட கிடையாது. ஸ்டாரின் ஆயுட்காலம், ஹீரோயினின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்தான்; அதற்குள் சம்பாதிக்க வேண்டாமா என்று கேட்பீர்கள். ஐந்து ஆண்டுகளில் ஐந்து படங்களில் படத்துக்கு 20 லட்சம் வீதம் ஒரு கோடி சம்பாதித்தால் போதாதா ? அந்தப் பணத்தில் இரண்டு தலைமுறைக்கு நிம்மதியாக வாழலாமே. உங்கள் படத்துக்கு ஐம்பது ரூபாய் டிக்கட் கொடுக்கிறவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த தொகையை சம்பாதிக்க முடியாது என்பது உங்கள் மனசாட்சியை உறுத்தாதா ?

சினிமாவுக்கு வீடியோ விரோதியல்ல. வீடியோவுக்கென்றே தனியே சிறிய அரங்குகளை தொடங்குங்கள். அவற்றில் பிலிமில் எடுக்காமல் வீடியோவிலேயே எடுக்கப்பட்ட படங்களை மட்டுமே காட்டச் செய்யலாம். ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு அதிகபட்சம் எட்டு லட்சம் ரூபாய்தான். நூற்றுக்கணக்கில் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்களிலிருந்து சினிமாவுக்கு புது ரத்தம் கிடைக்கும்.

தொடர்ந்து மெகா பட்ஜெட், ஸ்டார் வேல்யூ, ஃபாரின் லொகேஷன், விர்சமான ஆட்டம், பாட்டு, கொள்லையடிக்கும் டிக்கட் ரேட், மோசமான தியேட்டர் நிலை, இவற்றை நம்பித்தான் இருக்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் மொத்தமாக எல்லா திரையரங்குகளையும் மூடத்தான் வேண்டி வரும்.

( மூடப்போவதாக அறிவித்தவர்கள் அறிவிப்பை திரும்பப் பெற்று கொண்டு விட்டார்களாம். இந்த மாதிரி பூச்சாண்டிகள் இனிமேல் மக்களிடமோ அரசிடமோ எடுபடாதுஎன்பதை உணர்ந்தால் சரி.)

நியூ பிலிமாலயா ஏப்ரல் 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி