வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

மத்தளராயன்


கொஞ்சம் முன்கூட்டியே கிட்டியிருந்தால் அடிச்சுப் பொளிச்சிருக்கலாமே என்று மத்தளராயனை ஏகத்துக்கு விசனப்பட வைத்த கார்டியன் செய்தி இது.

என்னவென்றால், இங்கிலாந்திலே மூட்டைப் பூச்சிகளின் உபத்திரவம் கூடிப் போச்சாம். நாம் தான் சரியாகப் படிக்கவில்லையோ என்று கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு இன்னொரு தடவை படித்தாலும் மூட்டைப்பூச்சியல்லாதே வேறொண்ணுமில்லை.

இப்பத்தான் நடந்தமாதிரி இருக்கு. கிட்டத்தட்ட ஒரு வருடம் யார்க்ஷையரில் குடியும் குடித்தனமுமாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபோது ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரியில் ஓட்டல் அறைக்கு வந்த மித்ரர்களுக்கு அவசரத்துக்கு வேறேதும் அகப்படாமல் மாலிபு என்ற தேங்காய் ரம் ஆளுக்கொரு கோப்பை விளம்பிக் கொடுத்தேன். வெள்ளை பீங்கான் போத்தலின் அழகில் மயங்கி ஒரு பலவீனமான பொழுதில் வாங்கி, அரை கிளாஸ் குடித்ததுமே, இதை மனுஷனாகப் பிறந்தவன் குடிப்பானா என வெறுத்துப் போய் இறுக்கி மூடிக் கண்ணில் படாத மூலையில் வைத்த வஸ்து அது.

ரம் என்பதாகப்பட்டது ரம் போல இருக்கணும். தேங்காய்ப் பாலை என்ன எழவுக்கு அதிலே சேர்த்தான் என்று அதை உண்டாக்கி வெளியில் விற்பனைக்கு இறக்கியவர்களின் மூணு தலைமுறையையும் திட்டித் தீர்த்து, கொலேசியம் மதுக்கடைக்கு இன்னும் அரை மணி நேரத்தில் அழைத்துப் போய் எல்லோருக்கும் முட்ட முட்ட பியர் வாங்கிக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று தண்டனை வேறு உடனடியாக எனக்கு வழங்கப்பட்டது.

என்ன சார், மூட்டைப் பூச்சி கூட குடித்தனம் நடத்தறீங்க போலே இருக்கு.

வெள்ளைக்காரி, காப்பிரி, சீன இத்யாதி இன ஸ்திரிகளுடன் அங்கே கூடியிருந்து சல்லாபிப்பதாகப் புகார் எழுந்திருந்தால் கூடக் கவலைப் பட்டிருக்க மாட்டேன். மூட்டைப் பூச்சியாமே என் அறையில் ?

மிதமான மப்பில் மிதந்துபோய்த் தோழர் ஒரு தலையணையை எடுத்துத் திருப்பி என்னிடம் ஜனாதிபதி விருது வழங்குகிறது போல் கெத்தாகத் திருப்பித்தர, அதில் அதே. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மூட்டைப் பூச்சி தான்.

சனிக்கிழமை காலைச் சாப்பாட்டுக்குப் போனபோது மனதில் அது திரும்ப வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நெட்டோட்டம் ஓடியது.

சாசேஜும் பிரட்டும் தானே ?

விக்டோரியா மகாராணி காலத்திலிருந்தே அந்த ஓட்டல் உடமையாளரும் விக்டோரியாவுக்கு அக்கா – தங்கை போல் முகவெட்டும் உடைய மார்த்தா அம்மையார் சிநேகத்தோடு விசாரித்தார்.

தினசரி விடிகாலை வராகவதாரத்தை தரிசிப்பதைத் தாற்காலிகாகமாகத் தள்ளிப் போட்டு சுத்த பத்தமாக வேகவைத்த மொச்சையும், ரொட்டியும் மாத்திரம் தரும்படி தயவாகக் கோரிவிட்டு மூட்டைப் பூச்சி சங்கதியைச் சொன்னேன்.

ஹேய், எங்க ஓட்டல்லே பெட் பக்கா ? ராத்திரி எத்தனை பெக் அடிச்சே சொல்லு என்றார் மெனுகார்டை என் தலைக்கு மேலே வீசிச் செல்லமாக அடித்தபடி.

அப்புறம் அவர் தலைமையில் ஒரு சிறிய படை – ராத்திரி முழுக்க வேலை பார்த்துக் கண்ணில் தூக்கம் நிரம்பி வழிந்த பார் டெண்டர் பெண்கள் எல்லோரும் – என் அறையை முற்றுகையிட்டுத் தலைகீழாகக் கலைத்துப் போட்டுத் தேடியும் என்னைத் தவிர ஒரு பூச்சியும் காணக் கிடைக்கலை.

இந்த வாரம் கார்டியன் சொல்கிறது என்னவென்றால் –

‘இங்கிலாந்தில் மூட்டைப் பூச்சிகளின் எண்ணிக்கை 1995 முதல் வருடா வருடம் ஸ்டெடியாகப் பெருகி வருகிறது. பூச்சி மருந்துகளின் வீர்யத்தைத் தாங்கித் தழைத்து வளர்கிற இவை முழுக்க ஒரிஜினல் இங்கிலாந்து சுதேசியான மூட்டைப் பூச்சிகளேயன்றி உஷ்ணப் பிரதேச நாடுகளிலிருந்தோ வேறே எங்கிருந்துமோ இங்கே வந்து குடியேறியவை இல்லை. ‘

மூட்டைப் பூச்சி சென்சஸ் எடுக்க டோனி பிளேர் அரசாங்கத்தில் ஒரு பட்டாளம் துரைகளை சம்பளம் கொடுத்து மூட்டைப் பூச்சி இல்லாத மேஜை நாற்காலி போட்டு லண்டனிலோ வெஸ்ட் மினிஸ்டரிலோ ஏதாவது முடுக்குச் சந்தில் உட்கார்த்தியிருப்பார்கள் போலிருக்கிறது. போகட்டும். இதைப் போன வருடமே கார்டியன் எழுதியிருந்தால் மார்த்தா அம்மையார் முன்னால் என் தரப்பு வாதத்தை மூட்டை மூட்டையாக அடுக்கி இருப்பேனே.

****

முன்பெல்லாம் மாத ஜோதிடம், பவான்ஸ் ஜெர்னல் தவிரப் பிற பத்திரிகைகள் வருடம் பிறந்தது முதல்கொண்டு நர்சரி குழந்தைகள் போல் ஏபிசி ஏபிசி என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆடிட் பீரோ ஓஃப் சர்க்குலேஷன் என்ற இந்த ஏ.பி.சி இந்தியப் பத்திரிகைகளின் விற்பனை, வாசகர் தளத்தின் பரப்பளவு விவரங்களை மொழிவாரியாகத் தொகுத்து வருடா வருடம் வெளியிடும். நான் முந்தியா நீ முந்தியா என்ற மார்தட்டல், சவால் இன்னோரன்னவை மொழிக்கு மொழி அகில பாரத நாடகமாக அரங்கேறும் இந்த நிகழ்ச்சி தமிழில் டிவி சானல்கள் வீட்டு வரவேற்பரைகளை ஆக்கிரமித்துக் கொண்ட பின்னால் அவ்வளவு விஸ்தாரமாக நடைபெறுவது இல்லை. ஆனால் சகாக்களே முன்னோட்டே முன்னோட்டே என்று மலையாளத்தில் இன்னும் படையோட்டம் தொடர்கிறது.

இப்போது ஏ.பி.சி தன்னந்தனியாக இந்த சர்வேயில் ஈடுபடாமல், இந்தியன் நியூஸ்பேப்பர்ஸ் சொசைற்றி, அட்வற்றைசிங் ஏஜன்சீஸ் அசோஷியேஷன் என்ற அமைப்புகளோடு சேர்ந்து கணக்கெடுப்பு நடத்துகிறது. மற்ற மொழிகளில் எப்படியோ, தொடர்ந்து பல வருடங்களாகவே மலையாளத்தில் சர்க்குலேஷனில் முன்னணியில் இருப்பது மலையாள மனோரமா தினப்பத்திரிகை. தொட்டடுத்த இடத்தில் மாத்ருபூமி. போன மாதம் வெளிவந்த சர்வேயும் இதைத்தான் சொல்கிறது.

ஆனால், கணக்கெடுப்பு விவரத்தை வைத்து இந்த இரண்டு பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரமாக அடித்துக் கொள்வது ரசமான விஷயம். ‘தொடர்ந்து இரண்டாம் ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொண்ட எங்கள் எதிராளிக்கு வாழ்த்துகள் ‘ என்று மனோரமா விளம்பரம் கொடுத்தால், ‘நாங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துப் பார்த்துக் கழுத்துச் சுளுக்கிக் கொண்ட எதிராளிக்கு அனுதாபங்கள் ‘ என்று மாத்ருபூமி ஸ்பாண்டிலோசிஸ் கழுத்துப் பட்டையைப் பரக்கப் போட்டு விளம்பரம் தருகிறது.

இது தவிர தத்தம் பத்திரிகைகளிலும் முதல் பக்க அறிக்கையாக ‘எதிராளியுடெ தளர்ச்ச மாத்ருபூமிக்கு நேட்டமாவுன்னு ‘ என்பது போன்ற தலைக்கெட்டுகளில் அரைப் பக்க அறிக்கையாக, விகிதாசார வளர்ச்சி ஒப்பீடு, மார்தட்டல், கிண்டல் இத்யாதி. எதிராளியின் பெயரைக் குறிப்பிடாமல் சாடும் இந்த வகை அறிக்கைகள் சார்லஸ் டிக்கன்ஸின் ‘பிக்விக் பேப்பர்ஸ் ‘ நாவலில் பேட்டைப் பத்திரிகைகளான ஈட்டன்ஸ்வில் கெசெட், ஈட்டன்ஸ்வில் இண்டிபெண்டண்ட் என்பவை நீள நீள வாக்கியங்களை எழுதித் திட்டித் தீர்த்துக் கொண்டதை நினைவு படுத்தும்.

ஈழத்திலும் எழுபது வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட இரு பத்திரிகைகளான ‘வீரகேசரி ‘க்கும் ‘தினகரன் ‘ பத்திரிகைக்கும் நடுவே இப்படி ஒரு மோதல் இருந்ததை ‘தினகரன் ‘ பிரதம ஆசிரியர் இ.சிவகுருநாதன் எழுதிய ‘இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி ‘ புத்தகத்திலிருந்து (1993, பாரி நிலையம், சென்னை) கண்டுகொள்ளலாம்.

‘நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் ஆரம்பித்த வீரகேசரி பத்திரிகை .. இந்தியர்கள் இந்தியர்களைக் கொண்டு இந்தியர்களுக்காக வெளியிட்ட பத்திரிகையாகவே இது இருந்தது. திருநெல்வேலி என்றதும் உடனே தமிழ்நாடு திருநெல்வேலியை நினைத்தார்களே ஒழிய யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி இருக்கிறது என்பதை இவர்கள் எண்ணியதே இல்லை.. தினகரன் இவ்வாறு இருக்கவில்லை. இலங்கையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறவில்லை…இந்தியர்களுக்கே தமிழ் தெரியும் என்ற கருத்து இருந்ததால் வீரகேசரிக்கு வ.ரா, செல்லையா போன்றவர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டார்கள்…தினகரனில் முக்கியப் பொறுப்பு இலங்கையரிடமே கொடுக்கப்பட்டது. முதல் ஆசிரியராக திரு கே.மயில்வாகனமும், நிர்வாக ஆசிரியராக திரு.இராமநாதனும் கடமையாற்றினர்…. ‘

1983 இனக் கலவரத்தின் போது இரண்டு பத்திரிகைகளுமே காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளானதைக் குறிப்பிடும் நூலாசிரியர் வீரகேசரி அலுவலகம் கொளுத்தப்படாமல் தப்பியதற்கு அது ஜே.ஆர்.ஜெயவர்த்தனே சிறுவயதில் வசித்த்த கட்டிடத்தில் இருந்ததும் காரணம் என்கிறார்.

பத்திரிகை மோதல் விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தில் தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சி அரசியல் மாற்றங்களோடு பின்னிப் பிணைந்து நிற்கும் ஒன்றாகும். அதை நேர்த்தியாக எழுதியிருக்கிறார் சிவகுருநாதன். இனக் கலவரத்தில் வீடிழந்து, குடும்பத்தைப் பிரிந்து, எழுதிய முதல் பிரதியும் காணாது போய் சொந்த வாழ்வில் வண்டி வண்டியாகத் துக்கங்களை அனுபவித்த அவர் அதையெல்லாம் ரத்தினச் சுருக்கமாக ஒரு விலகி நிற்கும் பார்வையோடு முன்னுரையில் கூறுகிறார். சிவகுருநாதன் அனுபவித்ததில் நூறில் ஒரு பங்கு கூட அனுபவித்திராத தமிழகப் பத்திரிகையாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

****

கொட்டாரக்கர பிரகாஷ் புகைப்படம் சகிதம் தினப் பத்திரிகையில் முதல் பக்கத்தைப் பிடித்தது விபத்து மூலம்தான். அந்தப் பாவப்பட்ட மனுஷனை விபத்து துரத்தித் துரத்தி அடிக்கிறது வாழ்க்கை முழுக்க. பிரகாஷின் முப்பத்தைந்து வருட ஜீவிதத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்காமல், கையில் மாவுக்கட்டும், தலையில் முண்டாசு போல் பேண்டேஜும், மூக்கில் பிளாஸ்திரியுமாக நொண்டிக் கொண்டு நடக்காமல் போன நாட்கள் சொற்பம்.

பிரகாஷுக்கு ஆறு வயசாக இருக்கும்போதே ஆக்சிடெண்ட் என்பது ஏபி பாசிட்டிவ் ரத்தத்தின் ரத்தமாக அவரோடு சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஆற்றில் குளிக்க அச்சனோடும் சேச்சியோடும் போகும்போது அவரை மட்டும் வெள்ளம் அடித்துக் கொண்டு போக, ஊர்க்காரர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் சில வருடம் கழித்து அந்த ஆபத்பாந்தவர்களில் சிலர் இஞ்ஞக்காட்டில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் பைக் எதிரில் வந்த டாங்கர் லாரி மேல் மோதி வழிமாறி அவர்கள் மேலேறிக் கன்னாபின்னா என்று காயப்படுத்தியது. மோட்டார் சைக்கிளில் பின் சீட்டில் ஜாலியாக உட்கார்ந்து வந்த பிரகாஷ் லாரிக்கு அடியில் நசுங்கிப் போனதாக முடிவு செய்து வீட்டு முற்றத்தில் பந்தல் போட்டு அழ ஆரம்பிக்கும்போது அவர் உடம்பு முழுக்கக் கட்டோடு ஆஸ்பத்திரி வண்டியில் ஸ்ட்ரெச்சரில் கிடந்தபடி வந்து சேர்ந்தார்.

மோட்டார் பைக் பக்கமே போகக் கூடாது என்றும் அதை ஓட்டுவது பற்றிக் கனவு கூடக் காணக் கூடாது என்றும் வீட்டில் கடுமையாக எச்சரிக்கப்பட்டாலும், அடுத்த வருடமே பட்டாழியில் உறவினரோடு இன்னொரு தடவை

மோட்டார் பைக்கில் ஏறினார். ஓட்டிப் போன உறவினரும் எல்லாத் தெய்வங்களையும் பிரார்த்தித்துக் கொண்டு வண்டியைக் கிளப்ப, நாலு கிலோமீட்டர் போவதற்குள் விபத்து. ஓட்டியவருக்குப் பட்ட அடி கடுகு போல் என்றால், பின்னால் உட்கார்ந்து போன பிரகாஷுக்கு வழக்கம்போல் பெருங்காயம்.

மோட்டார் சைக்கிள் வேண்டாம், வெறும் சைக்கிள் போதும். அதுவும் ஓட்டவெல்லாம் வேண்டாம். சும்மா பின்னால் உட்கார்ந்து டபிள்ஸ் போகலாம் என்று அடுத்த வருடம் துணிச்சலாகக் கிளம்பிய பிரகாஷை விதி லாரியாகப் பின் தொடர (இது மூணு வருஷம் முன்னால் மோதினதில்லை. வேறே ஒண்ணு) திரும்ப ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ‘செளக்கியமா சார் ? ‘ என்று பிரகாஷைக் குசலம் விசாரித்து உடம்பில் சிரத்தையாக எம்பிராய்டரி போட்டார்கள்.

இரண்டு சக்கர வாகனமே வேண்டாம், பாதுகாப்பான பஸ் தான் இனிமேல் நமக்கு சரிப்படும் என்று பஸ்ஸில் டிக்கட் எடுத்து இவர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தால் தவறாமல் அந்த பஸ் ஒரு சின்ன விபத்திலாவது அகப்படாமல் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வதில்லை. பஸ்ஸில் பிரகாஷ் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாலே அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அடுத்த பஸ்ஸுக்கு ஓட, அந்த பஸ்ஸும் பாதி வழியில் பிரேக் டெளன் ஆன நிகழ்ச்சிகள் ஏராளம்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது என்று ஆண்டவனையே பதினெட்டுப் படியேறிப் போய்க் கேட்டுவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்து விரதம் இருந்து சபரிமலைக்கு நடந்த பிரகாஷை காட்டுக்குள் யானை துரத்தத் தடுக்கி விழுந்து காயம்பட்டு அடுத்த விபத்து.

இதற்கு நடுவே பிரகாஷுக்கு விபத்து இல்லாமல் கால்கட்டு போடவேண்டும் என்று பெரியவர்கள் தீர்மானித்து நாள் நட்சத்திரம் பார்த்து மஞ்சள் பத்திரிகை அடிக்க, அவருக்கு ஷாக் அடித்தது. கல்யாணத்துக்குக் கிளம்பப் படு குஷியாகப் புதுச் சட்டையை இஸ்திரி செய்ய உட்கார்ந்த பிரகாஷுக்குப் பழைய எலக்றிக் அயர்ன் பாக்ஸ் கொடுத்த ஷாக் அது. ஒரு வழியாகச் சமாளித்து எழுந்து உட்கார்ந்து பந்து மித்திரர் சமீபம் வேனில் கல்யாண வீட்டுக்குப் போவதற்காகக் காத்திருக்கும்போது, தறிகெட்டு ஓடிவந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா கணக்கு சுத்தமாகக் கூட்டத்தில் எல்லோரையும் விட்டுவிட்டு பிரகாஷ் மேல் மோத, மாப்பிள்ளை புது வேட்டி, புதுச் சட்டை, புதுப் பிளாஸ்திரி தரித்து டெட்டால் மணக்கத் தாலி கட்டினார்.

பிரகாஷின் மனைவிக்கு அவர் விபத்துக்குள்ளாவது பழகிவிட்டது. ராத்திரி வேலை முடிந்து வரத் தாமதமானால் அந்தம்மா தொலைபேசுவது ஊரில் இருக்கும் மருத்துவமனைகளுக்குத்தான்.

அப்படி என்ன உத்தியோகம் பார்க்கிறார் பிரகாஷ் ? எல்.ஐ.சியில் இன்ஷுரன்ஸ் ஏஜெண்ட்.

****

ஒரு நாள் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் மேட்ச் தொடரிலும் பாகிஸ்தானோடு மோதி இரண்டிலும் கெலித்த பரமானந்தத்தில் இந்திய கிரிக்கெட் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் முதல் மானாமதுரை பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் வரை அரசும், குடிமக்களும் இருக்கும் சுபவேளையில் எழுத வேறே விஷயமே கிடைக்கலியா என்று யாராவது அங்கலாய்த்தால், இல்லைதான் இப்ப என்ன பண்ணனும்கிறீங்க என்று கலாய்க்க மத்தளராயன் ரெடி.

விஷயம் ஒண்ணும் பெரிசு இல்லை. அண்மையில் அதாவது ஐம்பது வருடம் முன்னால் 1954ல் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தில் மேற்கு ஜெர்மனி ஜெயித்ததற்கு அந்த நாட்டுக் கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களுக்கு ஆட்டம் தொடங்கும் முன்னால் உற்சாக ஊசி போடப்பட்டது தான் காரணமாம். மேற்படி புகார் போன வாரம் எழுந்திருக்கிறது.

ஹங்கேரியை ஜெர்மனி மூன்று – இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட அந்தப் பந்தயம் நடந்த மைதானத்தின் கிரவுண்ட்ஸ்மேன் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர் போல் இத்தனை வருடம் வாயை இறுக்க மூடி வைத்திருந்து, வயசான காலத்தில் இப்போதுதான் திறந்திருக்கிறார்.

ஜெர்மனி விளையாட்டு வீரர்கள் இருந்த அறையில் நிறைய ஊசி இறைந்து கிடந்ததைப் பார்த்தேன் என்கிறார் அவர். பேண்டில் பொத்தான் கழன்று விழுந்து தைக்க எடுத்த ஊசியில்லை அதெல்லாம். மருந்து குத்திவைக்க எடுத்தவை.

ஐம்பது வருடப் பழசானால் என்ன, செய்தியைக் கூடியவரை முந்தித்தர வேண்டுமென்று ஜெர்மனியப் பத்திரிகையான பில்ட் அந்த உலகக் கோப்பை சம்பந்தப்பட்டவர்களைத் தேட, அவர்கள் அதிர்ஷ்டம், ஜெர்மன் குழுவின் மருத்துவரான பிரான்ஸ் லூகன் எண்பத்திநாலு வயசில் இன்னும் சுகஜீவனம் நடத்தி வருவதாகத் தெரிய வந்தது.

ரொம்பவே சிரமப்பட்டு – சினிமாவா என்ன இது, நாலாம் ரீலில் கொசுவர்த்தி சுழல பிளாஷ்பேக் சட்டென்று வர ? – அவருடைய மலரும் நினைவுகளைப் பத்திரிகை நிருபர்கள் கிண்டிக் கிளற, டாக்டர் தாத்தா ஒரு வழியாக நினைவு வந்து சொன்னது – ‘ஆமாமா, பசங்களுக்கு வைட்டமின் சி ஊசி போட்டேன். அப்பத்தான் உற்சாகமா விளையாட முடியும்னு தோணிச்சு ‘.

‘பசங்கள் ‘ மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் இறைவனடி ஏகி ஏகப்பட்ட வருடமாகி விட்டது. ‘சும்மா ஏதோ இன்செக்ஷன் போட்டார் அந்த டாக்டர். ஊசியைக் கூட சரியா சுத்தப்படுத்தாம, சோவியத் ஸ்டவ்லே காய்ச்சி எல்லோருக்கும் குத்தி, ஏன் கேக்கறீங்க, மஞ்சக் காமாலை வந்து ரொம்பவே கஷ்டப்பட்டோம். உற்சாக மருந்தாவது மண்ணாங்கட்டியாவது, அம்பது வருசத்துக்கு அப்புறம் வெந்து சுக்கா உலர்ந்த புண்ணுலே பேனாவைப் பாய்ச்சறது நியாயமா ‘ என்று இந்த மூன்று தீர்க்காயுசுப் பாட்டன்மாரும் வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு நிருபர்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.

ஐம்பது வருடம் முன்னால் தோற்றுப்போன ஹங்கேரியில் இருக்கப்பட்ட வயசன்மாரோ, ‘முதல் சுற்றில் எங்க அணி எட்டு கோல் எடுத்து ஜெர்மனிக்காரன்களை டின் கட்டினாங்க. அடுத்த சுற்றில் அவங்க எப்படிக் கெலிச்சாங்க ? எல்லாம் ஊசி செஞ்ச மாயம். உண்மை ஊசிப் போகாது. தோண்டுங்க சார் தோண்டுங்க ‘ என்று மஃப்ளரை இறுக்கிக் கொண்டு இருமலுக்கு நடுவே உற்சாகமாகக் குரல் கொடுக்கிறார்கள்.

ஜெயித்தது ஹங்கேரியா, ஜெர்மனியா என்று டேவிட் பெக்கமைக் கேட்கலாம் என்றால் அவர் பாவம், சின்ன வீடா பெரிய வீடா என்று லோல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

****

முதலில் பொப்படம் வந்தது. அப்புறம் ஏ.ஆர்.ரெஹ்மானின் பாம்பே டிரீம்ஸ். இப்போ அடியடி.

நெல்லை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சாதி மத பேதமில்லாமல் வீடு வீடாக உழுத்தம் மாவைப் பிசைந்து உருட்டி இட்ட அப்பளம் தர நிர்ணயம் செய்யப்பட்டு, இங்கிலாந்து உணவு விடுதிகளில் பொப்படமாக ஒரு பவுண்டுக்கும் ஒண்ணரை பவுண்டுக்கும் சாப்பாட்டுக்கு முன்பாரம் பின்பாரமாக சில வருடங்களாக விற்கப்படுவது தெரிந்ததே. போன வருடம் இங்கிலாந்தில் பிரபலமானது ரெஹ்மான் இசையமைத்த ‘நாட்டிய நாடகம் ‘ பாம்பே டிரீம்ஸ். அப்பளத்துக்கும் ஆட்டபாட்டத்துக்கும் அப்புறம் தற்போதைய சூப்பர் ஹிட் அடியடி என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

உள்ளூர், டச்சு, தாய்லாந்து, ஜெர்மன் பியர் எல்லாம் குடித்து அலுத்துப் போன பிரிட்டாஷ்காரர்களுக்காக ஸ்பெஷலாக சேட்டன்மார் எரணாகுளத்தில் உண்டாக்கி அனுப்பியது அடியடி என்ற பியர். முன்னூற்றுச் சில்லறை லண்டன் மதுக்கடைகளிலும், உணவு விடுதிகளிலும் ஒண்ணாங் கிளாஸ் என்று சாதா, மொடாக் குடியர்களாலும், சாப்பாட்டு ராபர்ட்களாலும் மெச்சப்படும் அடியடி விரைவிலேயே அடிமேலடியாக வைத்து இங்கிலாந்து முழுவதும் வலம் வருவதோடு, அண்டை நாடுகளிலும் நுழைய இருக்கிறதாம்.

அடுத்த தடவை லண்டனில் ஏர்ல்ஸ் கோர்ட் டியூப் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறத்து புராதன மதுக்கடையில் படியேறும்போது ‘ஒரு மக் அடியடி, நாலு பருப்பு வடை, தினேஷ் பீடி ஒரு கட்டு ‘ கொண்டுவரச் சொல்லிக் கேட்க வேண்டும்.

மத்தளராயன்


Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்