அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கோமதி நடராஜன்


நாட்டுப் பற்று,தெய்வ பக்தி என்றெல்லாம் நம்முள் இருக்கிறதா

என்று கணிக்கும் முன் மனித நேயம் நம்முள் துளிர் விட்டிருக்கிறதா

என்று யோசித்துப் பார்க்க முற்பட்டாலே போதும்,அது,வட்டார உறவை

வலுப் படுத்தி,ஊர்ப்பற்றை உருவாக்கி ,பிறகு மானில அளவில் பெருக்கி

அதுவே நாட்டுப் பற்று என்ற ஆல மரமாகும்.

அந்த ஆலமரத்தின் விதைதான் மனித நேயம்.அன்பே சிவம் என்றால்,

பிறரிடம் அன்பு காட்டுதலும் ஒரு இறைவணக்கம்தானே ?

மனித நேயமில்லாத நாட்டுப் பற்றா ?மன்னிக்க வேண்டும் நான்

நம்ப மாட்டேன்.

மனித நேயமில்லாமல் பக்தியா ?புரியவில்லையே !அது எப்படி

சாத்தியமாகும் ?

நேயம் இல்லாமல் நாடா,அன்பே இல்லாமல் சிவமா ?,

அன்பில்லா ஒருவனுக்குள் இரண்டும் எப்படி இடம் பிடிக்கும் ?,

விதை இல்லாமல் விருட்ஷம் தோன்றுமா ?

ஒருவனிடம் எத்தனை பணமிருக்கட்டும், பலமிருக்கட்டும்,மனிதனை

மதிக்கத் தெரியாத எவனும் செல்வந்தனுமில்லை அடுத்தவனை

அரவணைக்காத எவனும் பராக்கிரமசாலியுமில்லை. மனிதம்

அறியாத எவனும் மனிதனுமல்ல.பதமாய்ப் பழகத் தெரியாதவன் எவனும் பக்திமானுமல்ல.

மனித நேயம் என்ற இந்த அடிப்படை தகுதிதான்,ஒருவனை

ஊருக்கு வெளிச்சம் போட்டு உத்தமனாய்க் காட்டும்.அவன்தான்,

நல்ல தேžயவாதியாக முடியும்,வணக்கத்துக் குரிய, பக்திமானாக

முடியும்.

நான் ,என் வாழ்க்கையில் கடந்து

வந்த ஒவ்வொரு நாளையும், ‘ஆதவன் எழுந்தால் பள்ளிக் கூடம்,

விழுந்தால் விடுமுறை ‘,என்றும், எதிரே வருவோரெல்லாம் ஆசான்

என்றும் கருதி, பாடங்கள் பல கற்றேன்,கற்றுக் கொண்டிருக்கிறேன்,

இன்னும் கற்றுகொள்வேன்.அனுபவக் கல்விக்கு முற்றுப் புள்ளியும்

கிடையாது ,பட்டமளிப்பும் கிடையாது.தள்ளாத வயது முதியவர்தான் என்றில்லாமல்

தவழ்ந்து வரும் குழந்தை கூட சமயத்தில் நம்மை சிஷ்யர்களாக்கி விடும்.சிவபெருமானே மைந்தன் முன்னே மண்டியிட்டு கைகட்டி வாய் பொத்தி,பாடம் கேட்கவில்லையா ?

பள்ளி ஆசிரியர்கள் சொல்லி அறிந்ததை விட ,அனுபவக்

கல்லூரியின் ஆசிரியர்களிடம் கற்றவைகள் ஏராளம்.சிலர்

எப்படி இருக்க வேண்டும்

என்று கற்றுத் தந்தார்கள்,ஒரு சிலர் எப்படி இருக்கக் கூடாது

என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித்தந்தார்கள்.இருவருமே

நான் போற்றும் ஆசிரியர்கள்தான்.

நான் உணர்ந்து எழுதியிருக்கும் அத்தனைக்கும் ‘அன்பு ‘தான்,

அடிப்படை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல், தெள்ளத்தெளிவாய்

தெரியும்.

*வெற்றிக்கு இறைவனைக் காரணம் காட்டினால்,தோல்வியும் ,

இறைவனின் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.சந்தோஷம்

துக்கம்,நன்மை தீமை,லாபம் நஷ்டம் ,அனைத்துமே, அவன் தந்து

வருவதுதான்.

*உங்கள் இழப்புக்கும் தோல்விக்கும், அடுத்தவர் கண் திருஷ்டியைக்

காரணம் காட்டாதீர்கள்.இறைவன் தர நினைப்பதை, மனிதன்

குறுக்கே நின்று தடுக்க, முடியாது.அப்படி நடந்து விட்டால்,நீங்கள்

வணங்கும் இறைவனை,நீங்களே, சக்தியற்றவராக நினைக்கிறீகள்

என்று அர்த்தமாகிறது. உங்கள் பக்தியை நீங்களே சந்தேகிக்கலாமா ?

உங்கள் இறைவனை நீங்களே தாழ்த்தலாமா ?

*உடல் ஆரோக்கியத்துக்கு உண்ணாவிரதம்,மன ஆரோக்கியத்துக்கு

மெளனவிரதம்.ஒரு மணி நேர பேச்சு தெரியப் படுத்தாதை, சில

நிமிட மெளனம் சொல்லிவிடும்.

*கைரேகையும் கருத்தும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்

என்ற கருத்தை,ஒரு மனதாக எல்லோரும் நம்புகிறோம்.கருத்து

வேற்றுமை கலகலப்பான சம்பாஷணைகளுக்குக் குறுக்கே நிற்கக்

கூடாது.அப்படி நின்றால் மொத்த உலகமே அமைதியாகிவிடும்.

ஒட்டிப் பிறந்தவர்களுக்குள்ளேயே உணர்வுகள்,வேறுபடும் என்றால்

மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

*அடுத்தவர் இயலாமையை இடித்துக் மகிழாதீர்கள்.

*அடுத்தவர் அந்தரங்கத்தில் அனுமதியின்றி நுழைய வேண்டாம்.

*யாரையும் மாற்றவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடாமல்,யார் யார்எப்படி

எப்படி இருக்கிறார்களோரவர்களை ,அப்படி அப்படியே ஏற்றுக் கொள்ள,நம்

மனதைப் பக்குவப் படுத்திக் கொள்ளுவோம்.யாருக்காகவும் நாம்

நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்காத போது ,அடுத்தவர், நம்

வழிக்கு வர வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ?

*அடுத்தவரோடு நாம் பழகும் முறை,ஒரு நல்ல எதிரொலி போல் அப்படியே நம்மிடமே திரும்பி வந்து அடையும்.தருவது நல்லதாய் இருந்தால் வருவதும் நல்லதாகத்தானே அமையும் ?.எதிரொலி யாரையும் ஏமாற்றாது.

*நல்லதை நாலு பேர் நடுவே சொல்லுவோம் தவறை,தனியே

அழைத்துச் சென்று சொல்லுவோம் அதுவே உண்மையான நட்புக்கு

இலக்கணம்.

*அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதிருப்போம்.இந்த

விஷயத்தில்,நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட,

புத்தகம் போல் காத்திருப்போம்.தேவையானவர்கள்,நம்மைத் தேடிவந்து கேட்கட்டும்.

* அடுத்தவர்,தங்கள் குறைகளை, கவலைகளை நம்மிடம்

மனம் விட்டுச் சொல்லும் பொழுது அவைகளை, சலிக்காமல் காது

கொடுத்துக் கேட்போம்

*சுமைதாங்கியின் பலம் பார்த்து,குணம் பார்த்து,உங்கள் சுமையை இறக்குங்கள்.

சலித்துகொள்பவரிடமும் சந்தோஷப் படுபவர்களிடமும் சொல்வதில்

பலனில்லை.

*கவலையற்று இருப்பவர்களிடம்,உங்கள் கவலையைக் கூற

முற்படாதீர்கள். சமயத்தில் அவர்களின் காதுகள் மூடப்பட்டிருக்கும்.சிலருக்கு

அடுத்தவர் கவலைகளில் ஆர்வம் இருக்கும் ஆனால் அக்கரை இருக்காது.

*எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்ற

அவசியமும் இல்லை.

*மனிதனின் கை தட்டலுக்காக மட்டும் செயல் படாமல்,

இறைவனின் பாராட்டுகளுக்காகவும் செயல் பட்டால்,நம் வாழ்க்கை

பயனுள்ளதாகும்.

*மனசாட்சியைப் போல் நல்ல துணைவன் வேறு இல்லை.

இறைவன் இருப்பிடமே அதுதானே..மனசாட்சிக்குப் பயந்து நடப்பது

இறைவனுக்குப் பயந்து நடப்பது போல்.

*காரண காரியம் இன்றி எல்லோருடனும் நட்பும் உறவும்

பாராட்டுவோம்,

அதுவே நிலையானதும் ,உண்மையான மகிழ்ச்சியைத் தர

வல்லதும் ஆகும்.

*உங்களைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.அந்த

எல்லையைத் தாண்டி நீங்களும் வெளியேறாதீர்கள்,

அடுத்தவரையும் உள்ளே விடாதீர்கள்.எல்லைக் கோட்டுக்குள் எது

இருந்தாலும் அது பாதுகாப்பானதுதான்.உறவுக்கும் நட்புக்கும் இதுவே

உத்திரவாதம்.

*உங்கள் சுயமரியாதை,சுயகெளரவம் பாதிக்கப் படாதிருக்க

ஒரு கோடு அவசியம்தான்.நமக்கு நாமே போட்டுக் கொள்ள

வேண்டிய ‘லக்ஷ்மண் ரேகா ‘

*தாமரையிலைத் தண்இர்,அதை பார்த்தாலும் அழகு ,

வாழ்க்கையில் அதைப் பழகினாலும் அழகு.அந்த வகையில்,

ஓட்டோடு ஒட்டாமல் உருளும் விளாம்பழமும்,நமக்கு நல்ல ஆசிரியர்தான்.

*அடுத்தவருக்குச் செய்த நன்மைகளுக்கு,பிரதி உபகாரத்தை, அது, நீங்கள்

பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் குழந்தைகளாயிருந்தாலும் கூட,

எதிர்பார்க்காதீர்கள்.

*எல்லோரும் அண்டி வரும் வகையில் தோற்றத்தில் எளிமையும்,

பேச்சில் இனிமையும் சேர்ப்போம்.அதற்காக ஏமாளியாகவும்

கோமாளியாகவும் நிற்காதிர்கள்.

*எள்ளி நகையாட ஒருவர்,ஏந்தி மகிழ ஒருவர் என்று அன்பைத்

தரம் பார்த்து,தகுதி பார்த்து விதைக்காதீர்கள்.எல்லோரும் சமம்

என்று எண்ணினால்தான்,நாமே சமமாக நிற்க இயலும்.

*அடுத்தவரை அடக்க நினைக்கும் முன் ,நம் மனதை நம்மால்

அடக்க முடிகிறதா என்று ஒரு முறை முயற்சி செய்து பார்த்துக்

கொள்வோம்.

*வேப்பங்காய்க்கும்,பாகற்காய்க்கும் கசப்பைக் காரணமின்றி

தரவில்லை கடவுள்.அதன் குணம் அறிந்து,பக்குவமாய் எடுத்தால்

அவைகளின் மகத்துவம் புரிபடத்தானே செய்கிறது ?பழகும் விதத்தில்

பழகினால்எல்லா மனிதர்களும் நல்ல மனிதர்களே.சுயநலத்துக்காக,நாம்

காய்கறிகளிடம் காட்டும் பக்குவத்தை,மனிதனிடமும் காட்டுவோமே.

*……………………………….. [தொடரும்]

[எழுதிக்கொண்டே போனால் விண்மீன்கள் கூட எண்ணிக்கையில்

குறைந்து போகும் என்ற அளவில் இருக்கும் என், அனுபவப் பாடங்களை,இப்போதைக்கு, இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்]

===========

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்