போலி அறிவியல் சாயல்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

முனைவர்.எம்.வேதசகாயகுமார்


ரவி சீனிவாஸின் கட்டுரை படித்தேன். ஏற்கனவே இப்பகுதியில் நான் சொல்லியிருந்த விஷயங்களை மேலும் விளக்க உதாரணமான ஒரு சந்தர்ப்பம் இது என்று பட்டதனால் இதை எழுதுகிறேன்

ரவி சீனிவாஸ் ஆரம்பம் முதலே புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறும் ஒரு முக்கிய விஷயம்தான் இங்கேயும் பிரச்சினை. இலக்கியமும் பிற அறிவுத்தளங்களும் முற்றிலும் வேறுவேறானவை. இலக்கியத்தை சார்ந்து நீங்கள் சொல்லும் ஒரு கருத்து அவதானகம் Observation மட்டுமே. அதை நிருபிக்கவே முடியாது. காரணம் இலக்கிய விமரிசனத்துக்கு பொதுவாக ஏற்கப்பட்ட முறைமை Methodology கிடையாது. அந்த அவதானகத்தை நிகழ்த்துவதற்கான ‘முகாந்தரம் ‘ என்ன என்று மட்டுமே ஓரு விமரிசகன் பார்க்க முடியும். அது இருந்தால் அப்படி ஒரு ஊகத்தை நிகழ்த்துவதற்கான பிற அறிவுத்தளக் காரணங்கள் மற்றும் இலக்கிய காரணங்களை தொகுத்து அப்பார்வையை முன்வைக்க முடியும்.

‘இதோ இந்தக் கோணத்தில் இப்படி இதை பார்க்கலாம். இதற்கான காரணங்கள் இவை. இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சித்திரம் இது . இந்த பார்வையை பரிசீலித்துப் பாருங்கள் ‘ என்று இலக்கிய சிந்தனையாளன் சொல்கிறான். அதை அவன் நிரூபிக்க முடியாது. இலக்கியம் சார்ந்த எந்தக் அக்ருத்தும் இன்றுவரை நிரூபிக்கப்பட்டது இல்லை. எந்த ஒரு எழுத்தாளனைப்பற்றியும் படைப்பைப்பற்றியும் இதைத்தான் சொல்ல முடியும். இன்றுவரை சொல்லப்பட்ட எல்லா இலக்கிய கருத்துக்களும் இப்படிப்பட்டவைதான். இக்கருத்து அதன் creativity காரணமாக நம்மில் ஒரு மனச்சலனத்தை ஏற்படுத்தும்.நாம் அதன் கோணத்தில்பார்க்க ஆரம்பிப்போம்.

இக்கருத்துக்களின் பயன் என்ன ? இப்படிப்பட்ட மாறுபட்ட பலவகையான வாசிப்புகள் வழியாகவேதான் ஒரு படைப்பு பற்றிய ஒட்டுமொத்த கூட்டுவாசிப்பு உருவாகிறது. இலக்கியச்சூழலின் பலவகையான முகங்கள் வெளிப்படுகின்றன. இம்மாதிரி முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தை நாம் நம் கோணத்தில் எடுத்து ஆராயலாம். மாறுபட்ட தரப்புகளை முன்வைக்கலாம். அப்படி வைக்கும்போது நமது கோணத்தையும் நாம் அதை அடைவதற்கான முகாந்தரங்களையும் தர்க்கங்களையும் முன்வைக்கவேண்டும். சும்மா அது தப்பு இது தப்பு என்பதில் அர்த்தமில்லை.

ஆனால் அறிவியல் கட்டுரைகள், அறிவுத்துறைகள் சார்ந்த கட்டுரைகள் இப்படிப்பட்டவையல்ல. அறிவியல் தளம் எதுவானாலும் அங்கே கருத்துக்களை முன்வைப்பதற்கும் நிரூபிப்பதற்கும் உரிய முறைமை ஒன்று உண்டு. ஒரு கருத்து நிரூபிக்கப்படும் அதே தர்க்கத்தை பயன்படுத்தி அதை நிராகரிக்கவும் அது வாய்ப்பு அளிக்கும் . அறிவியலாளன் ஒர் அவதானகத்தை சொல்லி பிறகு முறைமையைக் கையாண்டு அதை புறவயமாக நிரூபிக்கிறான்.

எத்தனையோ காலமாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த சின்ன விஷயம்கூட தெரியாமல் ரவி சீனிவாஸ் இலக்கியதிறனாய்வுக் கட்டுரைகளில் அறிவியல் முறைமையை தேடி தன்னையும் குழப்பி பிறருக்கும் சிக்கலைக் கொண்டு வருகிறார் . இலக்கியக் கட்டுரைகளில் கலிவித்துறை சார்ந்த ஆய்வேடுகளில் மட்டும் ஆய்வேட்டு முறைமை ஒன்று காணப்படும். அது முறையாக எடுத்துச் சொல்வதற்கான ஒரு வகை தரப்படுத்தப்பட்ட வடிவம் மட்டுமே அல்லாமல் நிரூபிக்கவும் மறுக்கவும் உதவக்கூடிய ஒன்று அல்ல. அதையும் பிற கட்டுரைகள் கைகொள்வது இல்லை.

இனி ரவி சீனிவாசின் கட்டுரைக்கு வருவோம். ஜெயமோகன் கட்டுரையை ‘தரமான ‘ சமூகவியல் இதழில் போடமுடியுமா என்று கேட்கிறார். இதுவே தவறு. அது சமூகவியல் கட்டுரை அல்ல. அது இலக்கியக் கட்டுரை. பழந்தமிழ்நாட்டு சமூக அமைப்பு என்ன என்பதல்ல அக்கட்டுரையின் கேள்வி. அதைப்பற்றிய தரவுகளை திரட்டி அது ஆய்வுசெய்யவும் இல்லை.யாதைப்பற்றிய் ஆய்வுண்மை எதையும் முன்வைக்கவும் இல்லை. அக்கட்டுரையின் கேள்வி நமது இலக்கிய ரசனையின் உணர்ச்சிகள் எப்படி உருவாகின்றன என்பதுதான் . இலக்கியத்தின் ஆன்மீக அடிப்படை என்ன என்பது தான் அதன் வினா. இப்படிப்பட்ட ஒரு கேல்வி இலக்கியத்தில் புறவயமாக ஆராயப்பட முடியுமா ? அதற்கு ‘நிரூபிக்கப்பட்ட ‘ பதிலை தரவும் முடியுமா ? முடியாது. அப்படியானால் என்ன செய்ய முடியும் ? முழுமைசார்ந்த Holistic ஆன ஊகங்களை மட்டுமே முன்வைக்க முடியும். ‘இப்படி இருக்குமா அல்லது இப்படி இருக்குமா ‘ என்ற அளவில். அந்த ஊகங்களுக்கான அறிவார்ந்த முகாந்திரம் இருக்கவேண்டும். அந்தப் பார்வை நம் மனதை பாதித்து நம் கற்பனையை தூண்டவேண்டும். அதன் மூலம் நாம் இலக்கியம் குறித்த ஒரு புதிய பார்வையை அடைகிறோம்.

அப்படிப்பட்ட ஒரு ஊகம்தான் தமிழ் வரலாற்றில் எப்போதோ பெண்வழிச்சமூகம் இருந்திருக்கலாம் என்பது. ஆகவே நம் இலக்கியத்தில் ஒரு ‘தோற்கடிக்கப்பட்ட அன்னை ‘ ஒளிந்திருக்கிறாள் என்பது. அதற்கான அறிவுத்தள முகாந்திரமாக, ஒரு தொடக்கப்புள்ளியாக எங்கல்ஸை சுட்டுகிறார். காரணம் சமூகம் பரிணாமம் கொள்கிறது என்ற கோட்பாட்டை நம்பினால்மட்டுமே இந்த அடிப்படையை போட்டுப்பார்க்கமுடியும். சமூகம் ஒரு அக அமைப்பை உருவாக்கி அதன் விதிகளின்படி இயங்குகிறது என்று சொன்னால் முடியாது. அதனடிப்படையில் கேரள சமூக வரலாற்றை சுட்டுகிறார். ஒட்டுமொத்த தமிழிலக்கிய வரலாற்றை தர்க்கப்படுத்தி காட்டுகிறார். இப்படி பார்க்கலாமே என்றுதான் அதற்கு பொருள். இப்படித்தான் என்பதல்ல. அக்கட்டுரையை எந்த உலக இலக்கிய இதழும் அதற்குரிய முக்கியத்துவத்துன்தான் அணுகும்.

நேர் மாறாக இக்கட்டுரை பழந்தமிழ் நாட்டில் இருந்த சமூக அமைப்பு என்ன என்ற கேள்வை சமூகவியலடிப்படையில் எழுப்பி அதற்கு இலக்கிய ஆதாரம் தேடியிருந்தால் அதன் தளமே வேறு. சமூகவியல் கட்டுரைகளுக்கு உரிய முறைமை அதற்கு இருந்தாகவேண்டும். ஒவ்வொரு தகவலும் முழுமையாக தரப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கான ஆராய்ச்சிமுறையே வேறு. இதை ஜெயமோகன் அறிவியல்கட்டுரையின் சாயலில் எழுதியிருந்தால் உடனே நான் தரவுகள் போதாது என்று நிராகரிப்பேன்

நான் மீண்டும் மீண்டும் இவ்விதழில் சொல்லிவரும் விஷயம் என்னவென்றால் இலக்கியக் கட்டுரைகளில் , அல்லது இதழியல் கட்டுரைகளில் அவற்றின் எல்லையை மீறி அறிவியல்கட்டுரைகளின் சாயலை அளித்து எழுதக்கூடாது என்பதுதான். அப்படி எழுதும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. இலக்கியக் கட்டுரைகளுக்கு அப்படிப்பட்ட போலி அறிவியல்சாயலை அளித்தவர்கள் அமைப்பியலாளர்கள் மற்றும் பிற மொழியியலாளர்கள். இவர்கள் சொன்னவையும் மற்ற இலக்கியக் கருத்துக்கள் போலவே Holistic ஆன ஊகங்கள்தான். [ சொல்லின் மீது அர்த்தம் வழுக்கி செல்கிறது [ தெரிதா] என்பது எப்படி ஓர் அறிவியல் உண்மை ஆக முடியும் ? ] ஆனால்அவற்றுக்கு அறிவியல் கருத்துக்களின் தோரணையை செயற்கையாக உருவாக்கி அளித்து விட்டார்கள். இதை பிற்பாடுவந்த தாமஸ் பாவெல் முதலிய அறிஞர்கள் கடுமையாக சுட்டிக்காட்டி விமரிசனம் செய்துள்ளனர். இன்றைய கல்வித்துறையிலும் இந்த விமரிசன பார்வை உள்ளது.

ஜெயமோகன் கட்டுரை இலக்கியக் கட்டுரைக்கான நடையில் மொழியில் உள்ளது. ஊகங்களை முன்வைத்து வாசகனை யோசிக்கவைக்கிறது. Holistic ஆன ஊகங்களை சொல்லி தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக பலவிதமாக தொகுத்துப் பார்க்க செய்கிறது. அப்படி அதன் வடிவம் இருக்கிறது.

ஆனால் அதை ஓர் அறிவியல் கட்டுரையாக எடுத்துக் கொண்டு, அது பழந்தமிழக சமூக அமைப்பைப்பற்றி ஒரு ஆய்வுண்மையை முன்வைக்கிறது என்று கொண்டு , அதற்கான அறிவியல்முறைமையைதேடி குரலெழுப்புகிறார் ரவி சீனிவாஸ். அகட்டுரை இரண்டரைப்பக்க அளவுள்ளது. அதில் பழந்தமிழகம் குறித்த பகுதி வெறும் ஒரு பக்கம். ஒருபக்கத்தில் ஓர் சமூக ஆய்வுண்மையை சொல்ல எவராலும் முடியாது. அப்படி சொல்வதற்கான நடையோ , முறையோ அதில் இல்லை என்பதை இலக்கியக் கட்டுரைகளில் அறிமுகம் உள்ளவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

அகட்டுரையை மட்டம்தட்ட ரவி சீனிவாஸ் தன்னை ஓர் சமூக அறிவியலாளராக பாவித்துக் கொண்டு எழுதிய கட்டுரையைத்தான் போலி அறிவியல் சாயல் கொண்டது என்று சொல்லவேண்டும். அவர் அதற்கு ஓர் அறிவியல்கட்டுரையின் முறைமையை போலியாக கொடுக்கிறார். அப்படியானால் சொல்பவை ஆய்வுண்மைகள் என்று ஆகிறது. அந்நிலையில் முறைமை கைக்கொள்ளப்பட்டுள்ளதாஎன்ற கேள்வி எழுகிறது . அக்கேள்வியுடன் பார்த்தால் அவரது மேற்கோள்கள் கேலிக்குரியன என்று புரியும்.

நான் இத்துறையில் பலவருடங்களாக ஆய்வு செய்பவன் என்ற நிலையில் இக்கட்டுரை ஆய்வேடாக என்முன் வந்தால் எப்படி இதை பார்ப்பேன் ? இதில் தரவுகள் முறைப்படி அடையப்பெறவில்லை , கைக்கு கிடைத்த வரிசைப்படி அடையப்பட்டுள்ளன. கேரள மக்கள் வழி ஆய்வுகள் முறையே மூன்று கட்ட அறிஞர்களின் கருத்துக்களை அடுக்கி வைத்து செய்யப்படவேண்டும் . பர்போஸா , புக்கானன், ஹெர்மன் குண்டர்ட் ஆகியோரின் குறிப்புகளினாலான முதல் கட்டம் ; இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை ,பத்மனாப மேனன், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை ஆகியோர் கேராளா சொசைட்டி பேப்பர்ஸ் முதலிய இதழ்களில் எழுதிய இரண்டாம் காலகட்டம். ராபின் ஜெஃப்ரியில் Robin Jefry துவங்கும் மூன்றாம் நவீன காலகட்டம். ஜெஃப்ரி சமூக பரிணாம விதிகளில் , முரணியக்கத்தில் நம்பிக்கை கொண்டவர். அதை தாண்டி அடுத்த அமைப்புவாதகட்டம். பிறகு இன்றைய நவ வரலாற்றுவாத கட்டம். இம்மூன்றுகட்டங்களிலும் வெவ்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில விஷயங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்று ஆய்வு செய்யும் ஒருவர் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு வந்த வரிசையை முழுமையாக பிந்தொடர்ந்து தன் கணிப்பை முன்வைக்கவேண்டும். ஏதாவது சிலரின் மேற்கோள்களை தூவிவிட்டால் போதாது. ஓர் ஆய்வேட்டில் உள்ள ஒரு கருத்து ஓர் உண்மை அல்ல. அது ஒரு தரப்புமட்டுமே. அதன் மறுதரப்புகளையும் ஆய்வாளன் அறிந்திருக்கவேண்டும். அதுதான் கறாரான உண்மையை உருவாக்கும் முறைமை. ரவி சீனிவாஸ் சட்டென்று ஒருசில பெயர்களை தூக்கி போடுகிறார். அக்கட்டுரைகளின் பின்புலம் என்ன விவாத தளம் என்ன என்றெல்லாம் ஆராயாமல் . இப்படி செய்வதே போலி ஆய்வு. இப்படி இன்று எந்த துறையிலும் ஓர் ஆய்வேட்டை இருநாட்களில் இணையத்தின் உதவியுடன் செய்துவிட முடியும். அதற்கு மதிப்பு இல்லை. இப்படி உருவாக்கப்படும் உண்மை ஓர் போலி ஆய்வுண்மை.

ஏன் இத்தனை கறாராக பார்க்கவேண்டும் ? காரணம் ஆய்வுத்துறையில் இருப்பவர்களுக்கு தெரியும் ஆய்வுகளில் எப்படி பிழைகள் நிகழும் என்று. வெளியே உள்ளவர்கள் தான் ஆய்வுத்துறையை வியந்து பார்ப்பார்கள். ஆய்வேடுகள் , குறிப்பாக சமூக அறிவியல் ஆய்வேடுகள், இன்று உருவாக்கப்படும் முறை மிக பொதுப்படையான ஒன்று. ஆய்வேட்டுக்கான முறைமையை கைக்கொண்டால் எதுவுமே பிரசுரமாகிவிடும். இதில் உலகப்புழபெற்ற இதழ்கள், ஆசிரியர்கள்கூட விலக்கல்ல. ரவி சீனிவாஸ் இப்பகுதியில் Peer reviewed magazines என அடிக்கடி எழுதுவதனால் இதை சொல்கிறேன். கல்வித்துறை இதழ்கள் முறைமையை மட்டுமே கண்காணிக்கும் அவ்வளவுதான். உதாரணமாக டாக்டர் ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் [Stuart Blackburn Senior Lecture at the University of London ‘s School of Oriental and African Studies] குமரிமாவட்டத்தைப்பற்றி ஆராய்ந்த உலகப்புகழ்பெற்ற ஆய்வாளார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மூலவர் ஸ்தாணு- சிவன், மால்- விஷ்ணு, மற்றும் அயன் – அய்யனார் , ஒரு நாட்டார்தெய்வம் ஆகிய மூன்றின் கலவை என்று தன் உலகப்புகழ்பெற்ற நூலில் அவர் எழுதினார் என்பது நாட்டாரியலாளர்களிடையே புகழ்பெற்ற செய்தி . சுசீந்திரத்தில் செருப்பு பாதுகாப்பவர் தெளிவாகச் சொல்வார் அது மும்மூர்த்தி உருவம் என .

இப்போது இந்தக்கட்டுரையையே பார்ப்போம் . கேரள மக்களில் நாயர் என்ற சிறு குழுமட்டுமே மக்கள்வழி சொத்துரிமைகொண்டது என்பது மேற்கோள். இது மிக தவறான ஒன்று என்பதற்கு பலநூறு நூல்களை காட்டமுடியும். கேரளசமூகத்தில் ஈழவர், தண்டார், புலையர் என பல சாதிகளும் ஏதாவது ஒருமுறையில் பெண்வழி குலமுறை கொண்டவர்களே. அது இல்லாதவர்கள் வெளியே இருந்துவந்த நம்பூதிரிகள். மதம் மாறிய சிரியன் கிறித்தவர்கள். இஸ்லாமியர்களில் முஜாகிதுகள். ஆனால் பல ஏடுகளில் நாயர் மட்டுமே சொல்லப்பட்டிருக்கும் .காரணம் ஜெஃப்ரியின் புகழ்பெற்ற நூலான ‘நாயர் ஆதிக்கத்தின் சரிவு ‘ . Decline of Nair Dominance அதை மேற்கோள்காட்டி பலரும் எளிதாக எழுதிசெல்வார்கள்.

ஆகவேதான் ஆய்வாளன் மிக கறாராக இருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தகவலும் அவனால் பல கோணங்களில் சரிபார்க்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு கருத்து ஒரு குறிப்பிட்ட பார்வையை சார்ந்தது என்றும் பிறபார்வைகளை கருத்தில்கொண்டே பார்க்கத்தக்கதென்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படை முழுமையான கோட்பாட்டு ரீதியான பார்வை ஆகும். ஒரு சில மேற்கோள்களை சொன்னால் போதாது. ஆகவே ரவிசீனிவாஸின் குறிப்பே ஆய்வாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகும் . ஏனெனில் ஓர் ஆய்வேட்டுக்கு உரிய முறைமையும் முழுமையும் அதில் இல்லை, தவறான தகவலை அவசரவாசிப்பில் மேற்கோளாக அளிக்கிறது. அதேசமயம் ஆய்வேட்டுக்குரிய முறையை போலிசெய்து நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது.

இங்கே ஒரு தகவல். ஜெயமோகன் கடந்த 5 வருடங்களாக அவரது அசோகவனம் நாவலுக்காக பெண்வழி சமூக அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்துவருகிறார். இத்தளத்தில் முக்கியமான ஆய்வுகளைசெய்த திரிவிக்ரமன் தம்பி அவரது அண்டைவிட்டுக்காரர். எவ்வளவோ தகவல்களை விரிவாக நான் அ கா பெருமாள் ஆகியோர் ஜெயமோகனின் வீட்டில் இருந்து பேசி ஆராய்ச்சி செய்திருக்கிறோம். அந்த ஆராய்ச்சிக்கு போய் கால்டுவெல் போப் பூசல் பற்றிய பல புதிய செய்திகளையெல்லாம் நான் தோண்டி எடுத்துள்ளேன். தன் கட்டுரையில் ஜெயமோகன் ஒரு முப்பது நூல்களை , ஏழெட்டு கருத்துசண்டைகளை சாதாரணமாக அளித்திருக்கமுடியும். எங்கல்ஸின் கருத்துக்கள் குறித்தும் அவை மறுக்கப்பட்டமை குறித்தும் மிக விரிவாக சமீபத்தில்கூட பேசியுள்ளோம். சமூகப் பரிணாம முறையை மறுத்த லெவி ஸ்ட்ராஸின் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வுகள் இங்குள்ள பழஞ்சமய குறிகளை குலக்குறிகளாக [totem] புரிந்துகொண்டமை பற்றியும் பேசியுள்ளோம். இவற்றையெல்லாம் சொல்லி அக்கட்டுரையை ஓர் ஆய்வேட்டைபோல ஆக்கி ரவி சீனிவாஸ் போன்றவர்களை மிரட்டுவது எளிது. அதுதான் போலி அறிவியல்சாயல்என்பது. இப்போது மிக அதிகமாக கண்டிக்கப்படுவது இதுதான்.

அதாவது இலக்கியக் கட்டுரை அதன் பார்வையில் உள்ள Creativity காரணமாகவே முக்கியமாகிறது. அதுதான் முக்கியம். அந்த தன்மையை நம்பி அது செயல்படவேண்டும். அது ‘உண்மை ‘ அல்ல. Observation மட்டுமே. அறிவியல் கட்டுரையின் போலிச் சாயலை அளித்து அந்த Observation ஐ ஏதோ நிரூபிக்கப்பட்ட உண்மைபோல சொல்லிவிடக் கூடாது. அது போலி அறிவியல் ஆகும். . ஒரு Observation ஐ அதற்கு சமானமான, அதற்கு மாற்றான இன்னொரு Observation மூலமே மறுக்க வேண்டும். அதற்கு திராணி இல்லாவிட்டால் மெளனமாக இருக்கும் பக்குவமாவது தேவை.

——————————————-

emveethaa@rediffmail.com

Series Navigation

முனைவர்.எம்.வேதசகாயகுமார்

முனைவர்.எம்.வேதசகாயகுமார்