இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

தொல்.திருமாவளவன்


(22.11.2002 அன்று திண்டுக்கல் மாவட்டம் மானூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரைச்சுருக்கம்.)

இந்தப் பொதுக்கூட்டம் என்பது, திண்ணியம் கொடுமையைக் கண்டித்தும், கவுண்டன்பட்டி கொடுமையைக் கண்டித்தும், தொடர்ந்து தலித் மக்கள் மீது ஏவப்படுகிற அரசு வன்முறைகளைக் கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்ணியத்திலே என்ன நடந்தது ?

திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கிற லால்குடி வட்டத்திலே இருக்கிற ஒரு கிராமம் தான் திண்ணியம் கிராமம். அந்தத் திண்ணியம் கிராமத்திலே இரண்டு தலித் இளைஞர்களை பட்டபகலில் பலபேர் கூடிநின்று வேடிக்கை பார்க்கின்ற பொழுது, சுப்பிரமணியன் என்ற வாத்தியாரும், அவர் மனைவியும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடுபோட்டு, காய்ந்து கிடந்த மலத்தை அள்ளிவந்து வாயிலே திணித்திருக்கிறார்கள். எதற்காக ? கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக. அந்த வாத்தியாருடைய மனைவி, முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவராக இருந்தபோது கருப்பையா என்ற தலித் இளைஞரிடத்திலே தொகுப்பு வீடு கட்டித் தருவதாக லஞ்சம் வாங்கியிருக்கிறார். அந்த லஞ்சத்தை வாங்கினாரே தவிர வீடு கட்டித்தரவில்லை.

ஆகவே, வீடு கட்டித்தராத நிலையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றுதான் கருப்பையா கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது ? பணத்தை தரவில்லை என்பதால் ஊரிலே முறையிட்டான். ஊரில் இருப்பவர்களும் அதை வாங்கித்தரவில்லை. ஒரு கட்டத்திற்கு மேலே பொறுமையிழந்த அவன், ‘என்னிடத்திலே வாங்கிய பணம் இரண்டாயிரம் ரூபாயை, முன்னால் ஊராட்சி மன்றத்தலைவி திருப்பித்தரவில்லை. ஊர் பொது மக்களே அந்தப் பணத்தை வாங்கித்தாருங்கள். இல்லையேல் இந்த ஊருக்குச் செய்கின்ற வெட்டியான் வேலையை செய்ய மாட்டேன். ‘ என்று தமுக்கடித்து இத்தனை ஆண்டுகளாய் சாவுப்பறை கொட்டிய கருப்பையா அன்று தன் உரிமைக்காக போர்ப்பறை கொட்டினான். இதுதான் அந்த சாதி வெறியர்களுக்கு ஆத்திரம் மூட்டியிருக்கிறது.

அந்த வாத்தியார் சுப்பிரமணியன், கருப்பையாவை தேடிப்போன போது கருப்பையா இல்லை என்பதால், கருப்பையாவோடு கூடியிருந்த இரண்டுபேரை கூட்டி வந்து ‘எப்படிடா ‘ எங்களை அவமானப்படுத்தலாம். நாங்கள் இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை ஊருக்குச் சொல்லலாம் என்று செருப்பால் அடித்ததோடல்லாமல், ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்க்கின்ற போது, பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பியால் சூடுபோட்டு, மலத்தை தின்ன வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமை, இந்தக் கேவலம், இந்த அருவருப்பு, மானுட நேயமுள்ள மனிதர்கள் வாழ்கிற மண்ணிலே நடக்குமா ? உலக நாடுகளெல்லாம் மனிதவுரிமை பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கிற பொழுது, இந்தத் தமிழ் மண்ணில், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயிலே மலத்தைத் திணிக்கிறான் என்றால் நாம் எப்படி இதைத்தாங்கிக் கொள்ள முடியும். தமிழ் நாட்டிலே இருக்கிற எந்த ஒரு அரசியல் கட்சியாவது, தலைவராவது இந்தப் பிரச்சினையைக் கண்டித்து அறிக்கை விட்டார்களா ?

எந்தெந்தப் பிரச்சினைக்கோ அறிக்கை விடுகிறார்கள்.

எந்தெந்தப் பிரச்சினைக்கோ ஒன்று சேர்கிறார்கள். ‘இவ்வளவு பெரிய அவமானம் தமிழ் மண்ணிலே நடந்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியிலே நடந்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் ‘ என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை விட்டாரா ? ‘நான் நாடாண்டபோது நடக்காத ஒரு கேவலம் இன்று ஜெயலலிதா ஆளும்போது நடந்திருக்கிறது ‘ என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் பண்ணலாம் அல்லவா ? ஆனால், கருணாநிதி இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை எதிர்க்கத் தயாராக இல்லை. தலித் மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விட அவரது மனம் ஒப்பவில்லை. ஒருவார காலமாக இந்தப்பிரச்சினை வெளியே தெரியாத நிலையில், அதைச் சொல்லுவது வெட்கம் என்று பாதிக்கப்பட்டவர்கள் மூடிமறைத்திருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிறகுதான், சிலர் கைது செய்யப்பட்டார்கள். சில நாட்களிலேயே இந்த அரசு மலத்தை வாயிலே திணித்தவனை குண்டர் தடுப்புச் சட்டத்திலிருந்து விடுவித்துவிட்டது. ஆனால், தலித் இளைஞர்களைப் பிடித்து சித்திரவதை செய்யவும், காவல் நிலையத்திலே அடித்துக் கொல்வதும், இன்றைக்குக் காவல்துறையின் போக்காக உள்ளது. ஆனால், செல்வி. ஜெயலலிதா அப்பட்டமாக போலீசுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்.

இப்படி தலித் இளைஞர்களை காவல் நிலையங்களிலே வைத்து சித்திரவதை செய்வது மட்டுமல்ல; தலித் பெண்களை நடுராத்திரியிலே பிடித்துக்கொண்டு போய் ஐந்து அல்லது பத்து பேர் கூட்டாகச் சேர்ந்து கற்பழிக்கிறார்கள். தமிழ் நாட்டிலே நடந்திருக்கிற காவல் நிலைய கற்பழிப்புக்களையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் மலைவாழ் பெண்களாக அல்லது தலித் பெண்களாக இருக்கிறார்கள். இன்றும் இந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு குற்றவாளியைத் தேடும்போது, இதர சாதிகளின் தெருக்களில் காவல்துறை தன்னுடைய விருப்பம் போல இரவிலோ பகலிலோ நுழைந்து விட முடியுமா ? இது வரை அப்படி நுழைந்திருக்கிறார்களா ?

ஆனால், ஒரு சாதாரண பொய் வழக்கைப் போட்டு, நடுராத்திரியிலே குற்றவாளியைத் தேடுவதாக சேரிகளை முற்றுகையிட்டுக் கொடூரமாகத் தாக்குவது போலிசின் வாடிக்கையாகவே நீடித்து வருகிறது. வந்தவாசி அருகே பொன்னூரில் அந்தக் கொடுமை நடந்தது. அது ஒரு சேரி. பெரம்பலூர் மாவட்டத்திலே ஒகளுரில் நடந்தது! அது ஒரு சேரி. மதுரை மாவட்டத்திலே, மீனாட்சி புரத்திலே நடந்தது. அது ஒரு சேரி. கொடைக்கானல் அருகே குண்டுப் பட்டியிலே நடந்தது. அது ஒரு சேரி. தூத்துக்குடி மாவட்டத்திலே கொடியன்குளத்திலே நடந்தது. அது ஒரு சேரி. சேரிகளிலே மட்டும் இந்தக் கொடுமை கருணாநிதி ஆட்சியிலும் நடந்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது.

கவுண்டன் பட்டி என்ற ஊரில், நிலப்பிரச்சினையில் சங்கன் என்ற தலித் இளைஞனை அடித்து உதைத்து பின்பக்கமாக இருகைகளையும் ஒருவன் பிடித்துக்கொள்ள, இன்னொருவன் சங்கனின் வாயிலே சிறுநீரைக் கழித்திருக்கிறான். அப்படிச் செய்தவன் யார் தெரியுமா ? சென்னையிலே ஆயுதப்படைப்பிரிவில் போலிசாக வேலை பார்க்கிறான். ஆனால், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ‘இந்தச் செய்தியைக் கேட்டு நான் துடித்துப் போய் காவல் துறைக்கு உத்தரவிட்டேன் ‘ என்றார். இதுவரை அவன் கைது செய்யப்படவுமில்லை, பணி நீக்கம் செய்யப்படவுமில்லை. திண்ணியத்திலே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் கவுண்டன்பட்டியிலே இப்படி நடந்திருக்குமா ?

ஆக மலத்தை தின்னவைத்தாலும், சிறுநீரைக் குடிக்க வைத்தாலும் நீ இந்து மதத்திற்குள்ளேதான் உழல வேண்டும். கிறித்துவத்திற்குப் போகக்கூடாது, முஸ்லீமாக மாறக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதா ? அப்படி அவர்கள் மாறுவதற்கு யாரோ வந்து ஆசைகாட்டி மோசம் செய்து ஏமாற்றுகிறார்களாம். அதற்கானத் தண்டனையில் கூட எவ்வளவு வேறுபாடு பாருங்கள். பிற்படுத்தப்பட்டவனை ஒருவன் மதம் மாற்றினால் மூன்றாண்டுகள் கடும் தண்டனை, ரூ50000 அபராதம். ஒரு குழந்தையையோ அல்லது ஒரு தலித்தையோ ஒருவன் ஏமாற்றி மதம் மாற்றினால் அதற்கு நான்கு ஆண்டுகள் கடும் தண்டனை, ரூ 1 லட்சம் அபராதம். அந்த அளவுக்கு தலித் மக்களை ஏமாளிகளாக கருதுகிறார் முதலமைச்சர். இதுவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக எங்கேயாவது வழக்குப் பதிவாயிருக்கிறதா ?

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெட்கமிருந்தால் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த மண்ணில் தாழ்த்தப்பட்டவர்களை என்றைக்காவது நீங்கள் சகோதரர்களாக நினைத்திருக்கிறீர்களா ? கோவிலிலே நுழைய விட்டிருக்கிறீர்களா ? செருப்பு போட்டு போகக் கூடாது; குடை பிடித்துப் போகக் கூடாது; நல்ல உடை உடுத்தக் கூடாது; குளத்திலே இறங்கக்கூடாது; என்றெல்லாம் தடுத்துவரும் நீங்கள் மனிதாபிமானமுள்ளவர்களா ? யாரிங்கே காட்டுமிராண்டி ? இங்கே இதுவரை எந்த ஒரு மடமாவது எந்த சங்கராச்சாரியாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மருத்துவமனையைக் கட்டித்தந்த சான்று உண்டா ? ஆனால் பள்ளிக்கூடம் கட்டித்தந்தவன் வெள்ளைக்காரன். பஞ்சமி நிலம் கொடுத்தவன் வெள்ளைக்காரன். மருத்துவமனை கட்டித்தந்தவன் வெள்ளைக்காரன். எந்த இந்து மடாபதி தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டு செய்திருக்கிறார்கள் ?

சட்டமன்றத்தில் மதமாற்றத்தடைச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க பல முறை எழுந்து முயற்சித்துப் பார்த்தேன். அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. சட்டமன்றத்தில் கேட்க முடியாததால் இந்த மக்கள் மன்றத்தின் மூலம் கேட்கிறேன்! இதற்கு முதல்வரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் ஜெயலலிதா ஒரு அதிதீவிர இந்து அடிப்படைவாதி. இனிமேல் அண்ணா, எம்.ஜி.யார் படங்களுக்குப் பதில் சங்கராச்சாரியார், இராமகோபாலன் படங்களைப் போட்டு சுவரொட்டி அச்சிட்டாலும் அச்சிடுவார். அந்தளவுக்கு அடிப்படைவாதியாக மாறிப் போயிருக்கிறார். இந்த நாட்டிலே மதம் மாற்றத் தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு என்ன தேவை வந்திருக்கிறது ?

காஞ்சிபுரம் பக்கத்திலே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்திலே 20 ஆண்டுகளாக கோவிலிலே சேரி மக்கள் நுழைய முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இசுலாமியர்களாக மதம் மாறுவதாக சொன்னவுடன் சங்கராச்சாரியார் ஆத்திரப்பட்டு ஜெயலலிதாவிடம் சொல்லி இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். அதைப் போல கள்ளக்குறிச்சி பக்கத்திலே வீரபயங்கரம் என்கிற ஊரிலே அய்யனார் கோவில் இருக்கிறது. அந்த அய்யனாரை பறையன் பார்த்தாலே தீட்டுப்பட்டுவிடுமாம். அந்த சாமியைவிட பறையனுக்கு சக்தி அதிகமாயிருக்கிறது என்றுதானே இதன் மூலம் தெரியவருகிறது. அந்தச்சாமியை ஊர்வலத்திலே வருகிறபொழுது பார்த்தாலே குற்றம் என்று சொல்லித் தாக்குதல் நடத்துகிறார்கள்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு வக்கில்லாத தமிழக அரசு, தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாமியர்களாக, கிறித்துவர்களாக மாறுகிறார்கள் என்றால், அதற்கு கட்டாயப்ப்படுத்திதான் மாற வைக்கிறார்கள் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அடக்கி ஒடுக்க நினைத்தால் என்ன பொருள் ? ‘நீ மலம் தின்று கொண்டே இரு; மூத்திரம் குடித்துக் கொண்டே இரு ‘ என்றுதானே பொருள்.

தலித் மக்கள் இலவச உதவிகளை வாங்கிக் கொண்டு மதம் மாறுகிறார்கள் என்றால், புரட்சியாளர் அம்பேத்கர் சலுகைகளுக்காகவா மதம் மாறினார் ? மதம் மாற்றத்திற்கான அரசியல் என்னவென்று ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? மதமாற்றத்தின் பின் இருக்கிற வரலாறு தெரியுமா ? புரட்சியாளர் அம்பேத்கருடைய வரலாற்றை ஒரு மணி நேரமாவது ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும். ‘பிறக்கும்போது என்னை இந்து என்று சொன்னது சமூகம். ஆனால், நான் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் ‘ என்று உறுதி எடுத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

அதன்படி, 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் பவுத்தத்தை தழுவி, டிசம்பர் 6ம் நாள் பரிநிர்வாணமடைந்தார் புரட்சியாளர் அம்பேத்கர். சாகும் பொழுது எந்தக் கொம்பனும் புரட்சியாளர் அம்பேத்கரை இந்து என்று சொன்னதில்லை. தான் மட்டுமன்றி தன்னுடன் இலட்சம் பேரை திரட்டி பவுத்தத்தை தழுவினார். ஏன் பவுத்தத்தை தழுவினார் ? எதற்கு மதம் மாறினார் ? கோதுமை வாங்கிக் கொண்டு மதம் மாறினாரா ? சட்டை துணிமணி வாங்கிக் கொண்டு மதம் மாறினாரா ? என்ன அடிப்படையிலே மதம் மாறினார் ? புரட்சியாளர் அம்பேத்கர் ஜெயலலிதா சொல்வது போல ஏமாளியா ? இந்து மதத்தின் கொடுமைகளை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காக மதம் மாறினார். இந்து மதவெறியை அடையாளம் காட்டுவதற்காக மதம் மாறினார்.

இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைக்கப்படுவோர், குளிக்காமல் இருப்பதனால், மாட்டுக்கறி தின்பதால், ஏழை எளிய மக்களாய் இருப்பதனால் தீண்டப்படாதவராய் நடத்தப்படவில்லை. இந்து மத வெறி படைத்த மன்னர்களிடத்தில் சரண் அடைந்தவர்கள் சாதி இந்துக்களானார்கள். ‘சாதியமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது; உன் இந்து வெறியாட்டத்திற்குப் பணியமுடியாது ‘ என்று எதிர்த்தவர்களையே எதிர்த்து அடக்கி ஒடுக்கி சேரி என்னும் சிறையிலே தள்ளினார்கள். இந்த வரலாற்றை திருமாவளவன் சொல்லவில்லை. உலகின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவரான மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுகிறார். இவர்கள் பவுத்தர்கள் என்பதாலேயே அடக்கப்பட்டார்கள். இன்றைக்கும் அதுதான் நடக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் இந்த மண்ணை ஆளவேண்டும் என்று எண்ணுகிறான்.

அதனால்தான் முஸ்லீம்களை வெட்டுகிறான். குஜராத்திலே தீ வைக்கிறான். கிறித்துவ தேவாலயங்களுக்குத் தீவைக்கிறான். ஏனென்றால், இங்கே கிறித்துவனாக இருப்பவன் இசுலாமியனாக இருப்பவன் ஐரோப்பாவிலிருந்தோ, அரேபியாவிலிருந்தோ வந்துவிடவில்லை. முன்னாளில் பள்ளனாக, பறையனாக, சக்கிலியனாக இருந்தவன்தான். ஆகவே, அடிப்படையில் இவர்களை எதிர்ப்பது என்பதுதான் இந்துக்களின் வெறியாட்டமாக இருந்து வருகிறது. இன்றைக்கு ஜெயலலிதா சட்டத்தைப் போட்டு அடக்கி ஒடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சட்டத்தை கிறித்துவர்கள் எதிர்க்கிறார்களோ இல்லையோ இசுலாமியர்கள் எதிர்க்கிறார்களோ இல்லையோ தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்த்தாக வேண்டும். தப்பிப்பதற்காக நமக்குள்ள ஒரே கதவையும் ஜெயலலிதா சாத்திவிட்டார். இந்தக் கொடுமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான கொடுமை. இந்நிலையில், நாம் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் இருக்கிறோம். அத்தனை சேரி மக்களும் விடுதலைச் சிறுத்தைகளாய் மாறவேண்டும். இது ஒன்றுதான் இந்த ஒடுக்கு முறைகளுக்கு ஒரே தீர்வாகும். நன்றி! வணக்கம்.

‘இந்துத்துவத்தை வேரறுப்போம் ‘ (தாய்மண் வெளியீடு: ஏப்ரல் 2003) நூலிலிருந்து

தட்டச்சு செய்தவர்: சொ.சங்கரபாண்டி (sankarpost@hotmail.com)

திண்ணை பக்கங்களில் மதமாற்றம் பற்றி

  • <யோகிந்தர் சிகந்த்>

  • <கிருஸ்துவ மதத்தில் அடிமை வியாபாரம்>

  • <பெயர் மாற்றமல்ல வழி>

  • <மதமாற்றத் தடைச்சட்டத்தின் அரசியல்>

    Series Navigation

  • தொல்.திருமாவளவன்

    தொல்.திருமாவளவன்