கருத்தும். சுதந்திரமும்.

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

PS நரேந்திரன்


NewYork Times-ஐ படிப்பவர்களூக்கு, Tom Friedman பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. Friedman-இன் அரசியல் கட்டுரைகள் உலகப் புகழ் வாய்ந்தவை. Foreign Affairs Columnist-ஆக அவர் எழுதும் அரசியல் கட்டுரைகள், குறிப்பாக அமளி துமளிப் பட்டுக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கு ஆசியநாடுகள் பற்றி அவர் எழுதிய, எழுதிவரும் கட்டுரைகள், அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பிற பகுதிகளிலும் மிகவும் கவனிக்கப் படுபவை. பல்வேறு மொழிகளிலும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப் பட்டு பலராலும் வாசிக்கப் பட்டுவருபவை. (ஏதேனும் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறதா என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. அங்ஙனம் நடந்தால் அது மிக ஆச்சரிப் படத்தக்க விஷயம்தான்!).

போன வாரம் லைப்ரரியில் துளாவிக் கொண்டிருந்த போது, Fridman எழுதிய Longitudes & Attitudes என்ற புத்தகம் கண்ணில் பட்டது. நிறைய நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம். மேற்படி புத்தகம் வெளிவந்த சமயத்தில் (2002 ?) CNBC-ன் Tim Russert, Friedman உடன் இது குறித்து எடுத்த ஒரு பேட்டியைப் பார்த்திருக்கிறேன். மிக அருமையான பேட்டி அது. ஈராக் ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கா கடுமையாக முஸ்தீபுகள் செய்து கொண்டிருந்த நேரத்தில் எடுக்கப் பட்ட பேட்டி. 90% அமெரிக்கப் பத்திரிகைகள் நடக்கப் போகும் ஆக்கிரமிப்பு குறித்து ஆதரித்து எழுதி வந்தார்கள் அந்த நேரத்தில். அல்லது எதிர்க்காமல் மெளனமாக இருந்தார்கள்.

அந்தச் சூழ்நிலையில் ஈராக்கிய ஆக்கிரமைப்பை எதிர்த்து எழுதிய, பேசிய ஒரு சில பத்திரிகையாளர்களில் Tom Friedman-ம் ஒருவர். Friedman ஒரு லிபரல். Democratic கட்சியைச் சேர்ந்தவர். ஆழமான உணர்ச்சிகரப் பேச்சாளர். எழுதுவதைப் போலவே அவர் பேசுவதும் நெஞ்சை நக்கி விட்டுப் போகும். ஒவ்வொரு பிரச்சினையையும் பற்றி மிகத் தெளிவாக அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல், அழுத்தமாக அதை அவர் விளக்கிப் பேசும் போது நம்மையும் அறியாமல் அதில் ஈர்க்கப் பட்டுவிடுவோம். மிகக் குறைவானவர்களூக்கே அந்த ஆற்றல் இருக்கிறது. நன்றாக எழுதுகிறவர்கள் நன்றாக பேச மாட்டார்கள். Vice versa…இவர் ஒரு விதிவிலக்கு.

Longtitudes & Attitudes புத்தகம் Tom எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு பாகங்கள். ஒரு பாகம் செப்டம்பர் 11, 2001 க்கு முன் எழுதியது. July, 2002 வரை மற்றொரு பாகம். உலகின் பிரச்சினைக்குறிய பல பாகங்களில் பயணம் செய்து, நேரடியாகக் கண்டு, அனுபவித்து எழுதிய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் நிறைந்து கிடக்கின்றன. Friedman ஒரு தேச சஞ்சாரி. அவர் வேலையே அதுதானே. Beirut-இல் இருப்பார் ஒருநாள். Peshawar-இல் இருப்பார் மறுநாள். திடாரென்று பெங்களூக்கு ஒரு விசிட் அடித்து விட்டுப் போவார்.

இந்தியாவிற்கு ஆதரவாக எழுதிவரும் மிகச் சில அமெரிக்க பத்திரிகையாளர்களில் ஒருவராயிருப்பதாலும், காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் என்ற உறுதியாக எழுதிவருவதாலும் எனக்கு Friedman கட்டுரைகள் மேல் அபாரமான மதிப்பு உண்டு. சுற்றி வளைக்காமல் நேரடியாக பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து எழுதுவதும் ஒரு காரணம்.

NewYork Times பத்திரிகை அவருக்கு அளித்திருக்கும் சுதந்திரம் அளவிட முடியாதது. அமெரிக்க ஜனநாயகத்தின் அற்புதம் அது. எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானுலும், எவரைப் பற்றி வேண்டுமானாலும் அவர் எழுதலாம். பத்திரிகை ஆசிரியரோ அல்லது அரசியல் தலைவர்களோ அதைத் தடுக்க முடியாது. அதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்,

‘என்னுடைய கட்டுரை அச்சேறுமுன் அதைப் படிப்பவர் எனது Copy Editor மட்டும்தான். ஏதேனும் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருப்பின் அதைத் திருத்துவது மட்டுமே அவர் வேலை. எனது கட்டுரைகளில் எழுதப் பட்டிருக்கும் கருத்துக்களைப் பற்றி விமரிசிக்கவோ அல்லது நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதுபற்றி விமரிசிக்கவோ அவருக்கு உரிமையில்லை. 1995-ல் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை எனது பிரசுரகர்த்தாவை நான் சந்தித்ததில்லை. உலகில் எங்கும் பயணம் செய்து செய்தி சேகரிக்க எனக்குத் தங்கு தடையற்ற பணவசதி (unlimited budget) அளிக்கப் பட்டிருக்கிறது. ‘

எப்பேர்பட்ட வசதி அது! கருத்துச் சுதந்திரமும், பொருளாதாரச் சுதந்திரமும் ஒரு பத்திரிகையாளருக்குக் கிடைத்தால் அதை விட வேறென்ன வேண்டும் ? எத்தனை நாடுகளில் அது போன்ற வசதி இருக்கிறது ? ஜனநாயகம் என்ற போர்வையில், ‘Full Fledged சர்வாதிகாரம் ‘ அல்லவா நடந்து கொண்டிருக்கிறது உலகின் பெரும்பாலான நாடுகளில் ?

இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இருக்கும் அதே நேரத்தில், Ethicsக்கும் மிக முக்கிய இடம் தரப்படுகிறது. யாருமே உண்மைக்குப் புறம்பான, கற்பனையான, வக்கிரமான கருத்துக்களை எழுதிவிட முடியாது. தூக்கிக் கீழே போட்டு நசுக்கி விடுவார்கள். மிகக் கடின உழைப்பு மற்றும் சோதனைகளுக்குப் பிறகே Friedman போன்றவர்கள் மேலே வரமுடியும். அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் அத்தனை எளிதானதில்லை.

பொதுவாக அமெரிக்காவில் Printed Mediaவிற்கு இருக்கும் சுதந்திரம், தொலைக் காட்சி போன்ற Visual Mediaவுக்கு இல்லை என்பது என் எண்ணம். நிறுவன முதலாளிகளின் எண்ணம் எதுவோ, அதுவே செய்தியிலும் பிரதிபலிக்கும் (அப்பா டி.வி.யும், அம்மா டி.வி.யும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது). அதிலும் CNN போன்ற நிறுவனங்களில் வரும் செய்திகளை நான் அதிகம் நம்புவதில்லை. ஒருவிதமான இந்திய எதிர்ப்பு CNNக்கு இருக்கிறது. முஷாரஃப் & Co. அளக்கும் அண்டப் புளுகு, ஆகாசப் புளூகுகளை நேரடியாக ஒளிபரப்புவார்கள். Pakistan is our Ally…Ally என்று கும்மி அடிக்காத குறையாக தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். போட்டி Channel-ஆன Fox கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் Fox ‘வெள்ளை வெளேரென்று ‘ ஒரே பளிச்சிடும் வெள்ளையாக இருக்கிறது. மருந்துக்குக் கூட ஒரு கறுப்பன் தென்படுவதில்லை.

Longitudes & Attitudes கிடைத்தால் படித்துப் பாருங்கள். முடிந்தால் கீழ்க்கண்ட இணைய தளங்களுக்கு ஒரு விசிட் அடியுங்கள்…

www.thomaslfriedman.com

www.nytimes.com

********

ஒன்றை விட்டு விட்டேனே…..என்னை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த ஒரு பேட்டிக் கட்டுரையும் இந்த புத்தகத்தில் இருக்கிறது. சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல்லாவுடனான (70 வயது!) பேட்டிதான் அது. அதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை அது மிகப் பெரிய ஆச்சரியம்தான். ஏனென்றால், Thomas Friedman ஒரு யூதர்!

எனக்குத் தெரிந்து சவுதி அரேபியாவிற்குப் போய் உயிருடன் திரும்பி வந்த ஒரே யூதர் அவராகத்தான் இருப்பார். அரேபியர்களின் யூத வெறுப்புணர்ச்சி அளவிட முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. நேரிலே கண்டிருக்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன் சவூதியில் ஒரு இரண்டு வருடம் வேலை செய்து வந்தேன். அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனியர்கள், லெபனிகள், எகிப்தியர்கள், துனீசியர்கள் என்று பலதரப்பட்ட அரபு நாட்டு மக்களூடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இஸ்ரேல் என்ற வார்த்தையை கேட்டாலே கட்டுக்கடங்கா கோபம் வரும் அவர்களுக்கு. இப்படிப் பட்டவர்க்ளிடம் யூதர் எவரேனும் சிக்கினால் அவரைக் காப்பாற்ற கடவுளால் கூட இயலாது. பின் எதற்கு அப்படிப் பட்ட இடத்திற்கு அவர் போகிறார் ? என்று நீங்கள் நினைக்கலாம்.

அதுதான் Tom Friedman.

ஒரு Columnistக்கு மத, இன, சாதி, மொழி பேதம் எதுவும் இல்லை. அவரின் பணி உள்ளதை உள்ளபடியே உலகத்திற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே அடிப்படை என்பது அவரின் குணம். அந்த குணமே அவரின் புகழுக்கும் காரணம். இதில், தான் இறக்க நேரிடலாம் என்பது அவருக்குத் தெரிந்தே இருக்கிறது.

********

இந்தியாவிலும் நல்ல political columnistகள் இருக்கிறார்கள். ஆனால், Arun Shourie, M.J. Akbar, Preetish Nandhi, Kushwant Singh….என்று எல்லாம் வட இந்தியர்களாகத்தான் நினைவிற்கு வருகிறார்கள். Fareed Zakaria (News Week) எழுதுக் கட்டுரைகளூம் நன்றாகத்தான் இருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து Fareed எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை.

தமிழ்நாட்டில் ஏன் இதுபோன்ற columnistகள் உருவாகவில்லை என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நல்ல பத்திரிகையாளர்களே இல்லையா ? அல்லது எழுத அஞ்சுகிறார்களா ? என்று தெரியவில்லை. எனக்கென்னவோ இரண்டாவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. உண்மைகளை எழுதும் பத்திரிகையாளர்கள் வீட்டிற்கு ஆட்டோவில் ஆளனுப்பி அடிப்பதும், உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதி உதைக்கச் சொல்லும் ‘ஜனநாயக சர்வாதிகாரிகள் ‘ வாழும் புண்ணிய பூமியல்லவா தமிழ்நாடு ? அங்கொன்றும், இங்கொன்றுமாகக் குரல் கொடுக்கும் எதிர்ப்பாளர்களின் குரல் வளையை நசுக்குவதில் திராவிடக் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. பத்திரிகைச் சுதந்திரம் என்பது வெறும் பெயரளவில்தான். விமரிசனங்களைத் தாங்கும் மனப்பான்மையும், சகிப்புத்தன்மையும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு இல்லை (என்ன காரணத்தாலோ வழக்கறிஞர் விஜயன் நினைவிக்கு வந்து போகிறார்). வயதுக்கேற்ற mental maturity இல்லதவர்களிடம் மல்லுக்கட்டி என்ன பயன் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் வாய்மூடி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

நன்றாக எழுதும் ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் குரல் அதிகம் வெளியே கேட்பதில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள். வெகுஜன வாசிப்பு உள்ள பெரிய பத்திரிகைகளில் இவர்களின் கட்டுரைகள் பிரசுரிக்கப் படுவதில்லை. தப்பித் தவறி பிரசுரிக்கப் பட்டாலும் எழுதியவரைக் குறித்து, அவர் சாதியைக் குறித்து எழும் கண்டணக் கணைகளைத் தாங்கும் சக்தி தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லை. எழுதப்படும் கருத்தை விமரிசனம் செய்வதுதான் சரியானது. அதை விடுத்து எழுதியவரை தரக்குறைவாக விமரிசிப்பதுதான் திராவிடப் பண்பாடோ ?

இன்னொரு விசித்திரமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள்தான் அறிவாளிகள். மற்றவர்களெல்லாம் அரை வாளிகள் என்கிற தாழ்வு மனப்பான்மைதான் அந்த விசித்திரம். கதையோ, கட்டுரையோ, கவிதையோ…. தாய்மொழியில் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எந்த மொழியில் படித்தாலும் கிடைப்பதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதற்காக ஆங்கிலத்தில் எழுதியதெல்லாம் குப்பை, அதை படிக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. தாய்மொழியில் சொல்லப்படும் விஷயம் மிக எளிதாக படிப்பவரால் புரிந்து கொள்ளப்படும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன்.

எதையும் வெளிப்படையாக எழுதும் போக்கு தமிழ்நாட்டில் இல்லை. எல்லாம் பூடகமாக, ரகசியமாகச் சொல்ல வேண்டும். அதை ஒரு சராசரி வாசகன் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். நடக்கிற கதையா இது ? இதுவா கருத்துச் சுதந்திரம் ? ஒரு செய்தி உண்மை என்றால் அதை அஞ்சாமல், நேரடியாக வெளியிடும் மனத் துணிவு எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கிறது ?

அப்படியே தப்பித் தவறி எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது ‘சாம, பேத, தான, தண்டம் ‘ தாராளமாக பிரயோகிக்கப்படும். ‘தடா ‘விலிருந்து ‘பொடா ‘வரைக்கும் இதற்குத்தானே இருக்கிறது. எத்தனை அநியாயங்கள், அக்கிரமங்கள் நடந்தாலும் தமிழ்நாட்டுப் பிரபல பத்திரிகைகள் கண்டு கொள்வதில்லை. சினிமா போன்ற கவைக்குதவாத சங்கதிகளை பிரசுரித்துக் கொண்டே காலத்தை ஓட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நல்ல பத்திரிகையாளர்கள் உருவாவது எட்டாக் கனிதான்.

சுய விமரிசனம் செய்து கொள்ளாத எந்த சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அம்மாதிரியான சுய விமரிசனத்தை முன்னின்று நடத்த வேண்டியவர்கள் எழுத்தாளர்களூம், பத்திரிகையாளர்களும்தான். செய்வார்களா ? அவர்களுக்காக இல்லாவிட்டாலும், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டாவது….

***

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்