வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

மத்தளராயன்


1) பெயர் – குந்தர் கிராஸ்

2) நாடு – ஜெர்மனி

3) தொழில் – எழுத்தாளர்

4) வயது – 76

5) விருது – இலக்கியத்துக்கான நோபல் பரிசு

6) தற்போது செய்து கொண்டிருப்பது – தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது. இலக்கியத்தில் 3 உ (உருவம் – உள்ளடக்கம் – உத்தி) சார்ந்த சோதனைகளை விடாமுயற்சியுடனும் உற்சாகத்துடனும் செய்து கொண்டிருப்பது

7) சமீபத்தில் எழுதிய நாவல் – ‘ Im Krebsgang ‘

8) ஆங்கில மொழிபெயர்ப்பு – Crabwalk (Translated by Krishna Winston)

9) கதை – 1945ல் சோவியத் படையினரால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல். 9000 பயணிகளில் தப்பிப் பிழைத்த சிலரில் நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண். அவளுக்குப் பிறந்து தற்போது மத்திய வயதை அடைந்த பத்திரிகையாளனான மகன். இண்டெர்னெட்டில் மேயும் இளைஞனான அப்பெண்மணியின் பேரன். கப்பல் விபத்தின் நினைவுகளிலிருந்து இன்னும் மீண்டு வராத அம்மாவின், அதையும் கடந்து வாழ்க்கை இருப்பதாக நினைக்கும் மகனின், போரின் வரலாற்றை மீள்பார்வை பார்க்க விரும்பும் பேரனின் பதிவுகள் – பத்திரிகையாளனின் பார்வையில்.

10) உத்தி – மிக மெலிதான மாந்திரீக யதார்த்தச் சாயல் (கார்சியா மார்க்வெஸிலிருந்து இங்கேதான் நுட்பமாகக் குந்தர் கிராஸ் வேறுபடுகிறார்.)

11) நடை –

‘Why only now ? ‘ – he says, this person not to be confused with me. Well, because Mother ‘s incessant nagging..

I ‘m doing someone else ‘s bidding but at least I can leave myself out of it for the time being, because the story began long before me, more than hundred years ago, in Schwerrin nestled amid seven lakes …

The starting place for my story suddenly acquired a presence on the Internet. An anonymous source was posting biographical information, complete with dates, street names, and report cards, a treasure trove for someone like me who was under pressue to dig up the past.

12) கேள்வி – குந்தர் கிராஸ் போல் எழுபது வயது கடந்த, எழுத்து மூலம் அவர் போல் புகழ் பெற்ற, அவர் போலவே வாழ்க்கை நடத்த எழுத்தைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத தமிழ் எழுத்தாளர்களுக்கும், குந்தர் கிராஸுக்கும் ஆறு வித்தியாசங்கள் என்னென்ன ?

********************************************************************

பெண் கவிஞர்களின் கவிதைமொழி அவர்களின் மேல் சுமத்தப்பட்ட ஆணாதிக்க எதிர்பார்ப்புக்களுக்கான மெளனமான உடன்பாட்டின் வெளிப்பாடாகவே கடந்த சில நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது.

கணவன், காதலன், தந்தை, மகன், உடன்பிறந்தோன் என்ற உறவுமுறைகள் மட்டுமே பெண்ணுக்கு விதிக்கப்பட்டதற்கு முன் தோன்றிய சங்க கால ஒளவை – அதியன் நட்பும், தன்னுடைய உடல் சார்ந்த இச்சைகளைப் பெண் வெளிப்படுத்தக்கூடாது என்ற இடைக்காலக் கட்டுப்பாடுகளில் சிக்காத ஆண்டாளின் காதல் வெளிப்பாடும், பெண் கவிதைமொழியை நிலைநிறுத்திய தளத்திற்குத் தற்காலக் கவிதை மீண்டும் சென்று கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

யோனியும், முலையும் கவிதாயினிகளின் சொல்லாக வருவதில் ஏற்படும் அதிர்ச்சியோ, அருவறுப்போ, கிளர்ச்சியோ தற்காலிகமானது. விரைவில் அது அடங்கி அவர்களின் கவிதைமொழி நிலைப்படும்.

அதுவரை பொறுப்பது நம் போன்ற பொறுப்பானவர்களின் கடமை.

*******************************************************

கல்கத்தாவில் சென்னைவாசிகளின் ஐக்கிய சபை

சென்ற ஜனவரி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்கத்தாவிலிருக்கும் சென்னைவாசிகளிலே பலர் சேர்ந்து ஒரு சங்கம் கூடியிருக்கிறார்களென அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.

சென்னை மாகாணத்திலிருந்து பாஷை அறியாத இடத்திலே வெகுதூரம் சென்று ஜீவனம் புரியும் ஜனங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் ஹிதமாகவும், அனுகூலமாகவும் இருக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

மேலும் இவ்வாறு ஒரு சங்கம் இருக்கும் பக்ஷத்தில் சென்னையிலிருந்து புதிதாகக் கல்கத்தாவுக்கு ஜீவனார்த்தமாகவேனும், வேறே எதன் பொருட்டேனும் செல்லும் வாலிபர்களுக்கு மிகவும் சவுகரியங்கள் ஏற்படக்கூடும்.

இச்சங்கத்திற்கு ஆன்ட்ரூயுல் கம்பெனியாரின் முக்கிய அக்கவுண்டன்டாகிய ஸ்ரீமான் என்.ராதாகிருஷ்ணய்யர் தலைமை வகித்திருக்கின்றார்.

சென்னையிலிருந்து சென்று கல்கத்தா ‘இந்தியன் டெயிலி நியூஸ் ‘ பத்திரிகை யாபீஸில் வேலை பார்க்கும் மிஸ்டர் S.A.ராஜூ என்பவர் காரியதரிசியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சங்கத்தை யொட்டிப் புஸ்தக சாலை, பந்தடி முதலிய விளையாட்டுக் களங்கள் முதலிய அனேக சவுகரியங்கள் ஏற்பாடு செய்யப்படுமென அறிகின்றோம். ரங்கூனிலே சென்னை ஹிந்து சங்கத்தின் காரியதரிசியாகவும், பிரஸிடெண்டாகவுமிருந்து அதற்கு மிகவும் உதவி புரிந்த ஸ்ரீ K.பலராமைய்யர் இப்போது கல்கத்தாவுக்கு வேலை மாற்றிவரப் போகின்றார். அவரது வரவு கல்கத்தாவிலிருக்கும் புதிய சங்கத்துக்கு அரியதோர் பலமென்று கருதப்படுகிறது.

( ‘இந்தியா ‘ – 16.2.1907 – சுப்பிரமணிய பாரதி)

————————————————

இந்தக் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றுவது :

1) வங்காள மாநிலத்தில் பணி நிமித்தம் ஏற்பட்ட தமிழர்களின் குடியேற்றம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சங்கம் அமைக்கத்தக்க நிலையில் (ஒரு பத்துக் குடும்பமாவது இருக்குமோ) அமைந்திருக்கிறது. ‘இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் ‘ என்ற பெயரை மும்பை எடுத்துக் கொள்வதற்கு முந்திய காலகட்டமாக இது இருக்கலாம்.

2) சங்கத்தலைவர் ஒரு வர்த்தகத்தில் தலைமைக் கணக்கு அதிகாரி. இந்தியர்களை நேரடியாக அதிகாரியாக நியமிக்க அப்போது இருந்த அடிமை நாட்டு நிலையும், குமாஸ்தாக் கல்வி முறையும் இடம் கொடுத்திருக்காது என்பதால், மேற்படி சங்கத்தலைவர் சுருக்கெழுத்தாளராக நியமனம் பெற்று, படிப்படியாக முன்னேறிக் கணக்கு அதிகாரியாக ஆகியிருக்கலாம். அது முழுவதும் கல்கத்தாவிலேயே நிகழ்ந்த ஒன்றாக இருந்ததென்றால், அவரும் அவர் போன்ற மற்றவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியான சில பத்தாண்டுகளிலேயே அப்படிக் குடிபெயர்ந்திருக்கலாம்.

3) போன நூற்றாண்டுத் துவக்கத்திலேயே தமிழர்களிடத்தில் குறிப்பாக இடைத்தட்டு வாலிபர்களிடையே பந்தாட்டம் பிரபலமாகியிருக்கிறது. இது பெரும்பாலும் மென்பந்து என்ற ball batminton ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது. (டென்னிஸ் இன்னும் மேல் மத்தியதர, உயர் சமுதாய நிலைகொண்டோரின் விளையாட்டாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும்).

4) பத்திரிகைக்காக எழுதப்பட்ட செய்திக் குறிப்பில் பாரதியார் செய்து பார்த்திருக்கும் சில பரிசோதனைகள் :

அ) ‘ன ‘கரமும், ‘ட ‘கரமும் இணையும்போது ‘ந் ‘ வராமல் அப்படியே எழுதுவது – ‘ஆன்ட்ரூயுல் ‘, ‘அக்கவுண்டன்டாகிய ‘. (தற்பவம் ?)

இன்டர்நெட்டா, இண்டர்நெட்டா சர்ச்சை நினைவுக்கு வருகிறது.

அப்படி இல்லாவிட்டால் ‘ண ‘கரம் முதலில் வரவேண்டும் என்பதையும் ‘அக்கவுண்டன்டாகிய ‘ என்பதில் வரும் ‘வுண் ‘ என்பதில்கடைப்பிடித்திருக்கிறார். ‘பிரஸிடெண்டாக ‘ என்பது இன்னொரு உதாரணம்.

ஆ) அப்போது நடைமுறையில் இருந்த பொதுவழக்கத்தை ஒட்டி இம்மாதிரி எழுதியிருக்கலாம். S.A.ராஜூ, K.பலராமைய்யர் போன்ற ஆங்கில முதலெழுத்துக் கொண்ட பெயர்ப் பயன்பாடுகளும் கவனிக்கத்தக்கன.

***

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்