யாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

வெங்கட் ரமணன்


இரண்டு நாட்களுக்கு முன் சிறுவனாக இருந்தபோது என்னைத் தேடிவந்த சிஐடி போலீஸைப் பற்றி எழுதியிருந்தேன். இப்படியெல்லாம் இன்னும் நடக்கிறதா என்று ஒன்று இரண்டு நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.

இன்று காலை பல்வேறு யாகூ குழும நண்பர்கள் இந்தியாவில் குழுமங்களின் வலைத்தளங்களைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தனர். பத்திரிக்கை செய்திகளைப் பார்க்கும் பொழுது கைன்ஹ்உன் எனும் மேகாலயப் பிரிவினைவாதிகளின் குழுமம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகவும், இதனை இந்தியர்கள் கண்களிலிருந்து மறைக்கவே இந்த விளையாட்டு என்றும் தெரியவருகிறது. உதாரணத்திற்கு,

இந்தத் தடை-விளையாட்டை ஆடியிருப்பதன் மூலம் இந்தியா அமெரிக்கா, சீனா முதலிய பெரியவர்கள் அணியில் சேர்ந்துள்ளது. சீனா அரசு அடிக்கடி இதுபோன்ற ஆட்டத்தை ஆடிவருகிறது. 9/11 க்குப் பிறகு அல்-ஜஸீரா போன்ற இணைய தளங்களை அமெரிக்கா நேரடியாகவும், இதைச் செய்வதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றைப் பறைசாற்றிக்கொள்ளலாம் என்ற நப்பாசையால் இணைய சேவைவழங்குவோர் தாங்களாகவே முன் வந்தும் தடைகளை அறிவித்தார்கள். இப்பொழுது முதன் முறையாக இந்தியாவும்…

இந்திய அரசாங்கம் டிஎஸ்எல் என்ற சேவை வழங்குனருக்கு எழுதியதாக இணையத்தில் உலவும் தொலைநகலைப் பார்த்தால் அவர்கள் தனிப்பட்ட இந்தக் குழுவை மாத்திரமே தடை செய்யச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் தனியார் மற்றும் VSNL சொல்லிவைத்தாற்போல் யாகூ குழுமங்களை முற்றாகத் தடை செய்திருப்பதிலிருந்து இது அன்புடன் வாய் வார்த்தையாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அப்படித் தடை செய்யப்பட்ட குழுமத்தில் என்னதான் புரட்சிகரமாக இருக்கிறது என்று போய் பார்த்தேன். சிரிப்புத்தான் வந்தது. அந்தக் குழுவில் மாதத்திற்கு ஒன்றரை மின்னஞ்சல்கள் வருகின்றன.

உதாரணமாக, செப்டம்பர் மாத்தில் இதுவரை வந்த மூன்று மின்னஞ்சல்களில் ஒன்றான,

Nang iai trei naka bynta ka Ri bad ka Jaid bynriew

Hynniewtrep,Nga kitbok bad kit rwiang ia phi baroh bad nga kyrmen ba

U trai Nongbuh Nongthaw un don ryngkat bad phi.

Khublei Shihajar nguh.

என்பதைப் போன்ற மின்னஞ்சல்களைப் படிப்பதால் சராசரி இந்தியரின் நாட்டுப்பற்று எந்த அளவில் குறையும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. சில குழு அஞ்சல்களில் சாலைகளைப் போடுவதாகச் சொல்லி மாநில அரசாங்கம் பணத்தைச் சாப்பிடுவதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்துத்வா சிப்பாய்கள் சோனியா காந்தியைச் சிரச்சேதம் செய்யச் சொல்லி அழைக்கும் கூவல்களுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் ஜுஜுபி.

ஒன்றுமில்லாத கூழாங்கல்லை, மேருமலையாக்கியிருக்கிறது இந்திய அரசாங்கம். இதைத் தடை செய்யச் சொல்லி யாகூவிடமே கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டு யாகூ மறுத்திருந்தால், யாகூவைப் பணியவைக்க இந்திய அரசுக்கு வேறு சாத்தியங்கள் உண்டு. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு குழுமங்களில் இடமில்லை எனத் தெளிவாக யாகூ அறிவிக்கிறது. எனவே, அவர்களுக்கு வர்களின் நடவடிக்கைகளை விளக்கி, குழுமங்களிலிருந்து நீக்கச் சொல்லியிருக்கலாம்.

இப்படி தடாலடியாக யாகூ குழுமங்களுக்கு ஒட்டுமொத்த தடா தந்திருப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரம் மண்ணாங்கட்டி என்று பலர் கூவியெழ இடம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுகும் மேலாக 96 உறுப்பினர்களைக் கொண்டு, ஆண்டுக்கு பதினைந்து கடிதங்களுடன் நடந்து கொண்டிருக்கும் கைன்ஹ்உன் குழுவிற்கு இலவச விளம்பரம் கிடைத்திருக்கிறது.

தமாசு என்னவென்றால், இணையத்தின் மூலம் யாகூ குழுமங்களை வாசிப்பதுதான் தடுக்கப்படும். பெரும்பாலான இந்தியர்கள் குழுமச் செய்திகளை மின்னஞ்சலாகத்தான் பெறுகிறார்கள், இவர்களில் சிலர் கைன்ஹ்உன் செய்திகளை இன்னும் மின்னஞ்சல் மூலமாகப் பெற்றுக்கொண்டிருப்பார்கள். இதை எளிதில் தடை செய்யமுடியாது.

கேவலமாக, தொழில்நுட்ப அறிவில்லாமல் இந்த விளையாட்டை விளையாடியிருப்பதன் மூலம் இந்திய அரசாங்கம் ஒட்டுமொத்தமாகக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

http://www.tamillinux.org/venkat/myblog

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்