வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

மத்தளராயன்


*

பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை.

காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ் சாகுருவியாக ஸ்டேண்டர்ட் அண்ட் புவர் ரேட்டிங் சரிந்த சோக சமாசாரத்தையும் இன்னோரன்ன விஷயங்களையும் தினமும் தருகிற அலுப்பு ஒரு பக்கம். ரயில் விபத்து, எஸ்மாவில் கைது, டிஸ்மிஸ், விடுதலை, பள்ளிப்பையன் தற்கொலை போன்ற சகலரையும் எதோ விதத்தில் பாதிக்கும் விஷயங்கள் பற்றிப் படிக்கும்போது ஏற்படும் கவலை, பயம், சகலமானதிலும் நம்பிக்கை இழப்பு என்று இன்னொரு புறம்.

சனிக்கிழமை அலுவலகம் கிளம்பும்போது வாசலில் காத்திருக்கிற மாம்பலம் டைம்ஸ் என்ற எங்கள் பேட்டைப் பத்திரிகை தரும் ஆசுவாசத்தை வேறு எந்தப் பத்திரிகையும் தர முடியாது.

பத்திரிகை வாங்க ஒரு பைசா செலவில்லை என்பதில் தொடங்கும் நிம்மதி அது. ஈராக்கும், சார்ஸும், வில்லன் புஷ்ஷும் மந்திரம் போட்டது போல் மறைய, இங்கே முதல் பக்கத்தில் ஆரிய கெளடா தெருவில் மரத்தைச் சுற்றி மாநகராட்சி வைத்திருந்த சிமிண்ட் பாளங்கள் நீக்கப்பட்டன. அயோத்தியா மண்டபத்தில் வோக்கல் கான்சர்ட் பை ரங்காச்சாரி யண்ட் பார்ட்டி. புது ரயில்வே டைம்டேபிள் மாம்பலம் ஸ்டேஷனில் விற்பனைக்குக் கிடைக்கிறது (விலை இருபத்தைந்து ரூபாய்).

ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் இருந்தபோது அவர் எழுதிய எதையும் நான் படித்ததில்லை. ஆனால் மாம்பலம் டைம்ஸில் வாராவாரம் படிக்கிறேன். ரங்கராஜனின் கட்டுரை மொழி சுவையானது. பின் நவீனத்துவப் பண்டிதர்கள் தலைகீழாக நின்றாலும் அந்த லகுவும் ஆற்றொழுக்கும் அவர்கள் எழுத்துக்கு வரவே வராது.

மாம்பலம் டைம்ஸில் ராண்டார் கை ‘மாம்பலம் ம்யூசிங்ஸ் ‘ என்ற பெயரில் மாம்பலம் பிரமுகர்களைப் பற்றி எழுத ஆரம்பித்து சாவகாசமாக கல்கி, சாண்டில்யன், நாகையா வரை வந்தார். பிறகு லட்சுமிகாந்தன் கொலைப் பக்கம் பேனாவைத் திரும்பினார். அப்புறம் அதிலிருந்து மீண்டு வரவே இல்லை. ஆச்சு ரெண்டு வருஷம், லட்சுமிகாந்தன் அமரத்துவம் பெற்று மாம்பலம் டைம்ஸில் இன்னும் வாராவாரம் வளைய வருகிறார். கன்னித்தீவுக்கு முன்னால் ராண்டார்கை லட்சுமிகாந்தன் கதையை முடித்து விடுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

பேட்டைப் பத்திரிகையில் இன்னொரு மகிழ்ச்சி, ஐம்பது அறுபது வருடத்துக்கு முற்பட்ட காலத்துக்குப் போய் இறங்கியது போல் ஏற்படும் பிரமை.

‘வீட்டு நம்பர் இன்னது, லேக் வ்யூ ரோட், மாம்பலம் வாசியான ஆராவமுதன் கடந்த வியாழக்கிழமை மதியம் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு வெறிநாயால் துரத்தப்பட்டார். கடித்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் ஜூபிளி தெரு டாக்டர் கிருஷ்ணன் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்து ஊசி போட்டார். ஆராவமுதனும், டாக்டர் கிருஷ்ணனும் மேற்கு மாம்பலத்தில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம் நிருபரிடம் சொன்னார்கள் ‘

பரபரப்பும் ஓட்டமும் ஆகக் குறைந்திருந்த நாட்களில், அதாவது ரெண்டாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அது போகட்டும் –

மேற்கு மாம்பலத்தில் நாய்கள் பற்றி இந்த ஆள் பிரஸ்தாபிக்கிறானே ? அதுக்குப் பின்னால் என்ன இருக்கும் ? ஏதாவது இலக்கிய வம்படி வல்லடி வழக்கடியா ? மேற்கு மாம்பலத்தில் இருக்கப்பட்ட சிற்றிலக்கிய, பேரிலக்கிய வாதிகள் யாவர் ? கோமல் சாமிநாதன் ? அவர் போய்ச் சேர்ந்தாச்சே. போஸ்டல் காலனி ‘ழ ‘ ராஜகோபாலன், விருட்சம் அழகியசிங்கர் ..

இப்படி யாராவது நகுலனின் நாய்கள், நடுநிசி நாய்கள், நாச்சார் மட நாய்கள் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி எல்லாம் செய்ய ஆரம்பித்தால் நான் சொல்லிக் கொள்வது இதுதான் –

ராஜகோபாலனும், அழகியசிங்கரும் சாதுப்பிராணிகள். இதை எழுதுகிறவன் சரியான ‘லொள் ‘ளுப் பேர்வழி. குரைக்கிற நாயாகப்பட்டது கடிக்கக்கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.


பாக்கிஸ்தானில் பேராசிரியர்கள் ஆங்கில இலக்கிய நூல்கள் பலவற்றையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்க முனைந்திருப்பதாக ‘கார்டியன் ‘ பத்திரிகையில் படித்தேன்.

அலெக்சாண்டர் போப் அவுட் – ‘ரேப் ஓஃப் தி லாக் ‘ என்று பெயரிலேயே அசிங்கம்! அத்ரியேன் ரிச்சின் கவிதைகள் கிடையாது. அந்தம்மா லெஸ்பியன் ஆச்சே. விக்ரம் சேத் வேணாம் – இந்தியர். (அதுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம் ?)

‘கிட்டத்தட்ட எல்லாப் பாடப் புத்தகத்திலும் செக்ஸ் பற்றிக் குறிப்பு இருக்கிறது. ஹெமிங்வேயின் ‘சூரியனும் உதிக்கிறது ‘ நாவலில் ஓரினப் புணர்ச்சியாளர்கள் அலையோ அலையென்று அலைகிறார்கள். ஜான் டோன் கவிதைகளில் கவிஞர் எதிர்ப்படுகிற எல்லாப் பெண்களையும் படுக்கைக்கு அழைத்துப் போவதிலேயே குறியாக இருக்கிறார். சகலரும் சாராயம் குடிக்கிறார்கள். சீன் ஓ காசேயின் ‘முதலின் முடிவு ‘ நாடகத்தில் ‘When the song ended, Darry cocks his ear and listens ‘ என்று வருகிறது. சீச்சீ எத்தனை அசிங்கமான விஷயம் .. cocks his ear! ‘

மெத்தப் படித்த பேராசிரியர்கள் அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் மேலே கண்டபடி இருக்கிறதாம்.

சதா செக்ஸ் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்தன் மனோதத்துவ மருத்துவரிடம் குணப்படுத்திக் கொள்ளப் போனான். டாக்டர் ஒரு சதுரத்தை வரைந்து இதென்ன என்று கேட்டார். சீ, அசிங்கம் என்றான் இவன். அப்புறம் டாக்டர் இரண்டு கோடுகளை வரைந்து இது உனக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டார். மகா ஆபாசமாக இருக்கு என்றான் இவன். டாக்டர் ஒரு வட்டத்தை வரைய ஆரம்பிக்க, வந்தவன் கோபத்தோடு எழுந்து போனானாம் – ‘என்ன டாக்டர், இத்தனை படித்தவராக இருக்கீங்க, உங்க கிட்டே குணப்படுத்திக்கலாம்னு வந்தா அசிங்க அசிங்கமாப் படம் வரஞ்சுக்கிட்டே இருக்கீங்களே ‘.

பாக்கிஸ்தானியப் பேராசிரியர்களின் காமாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரிகிறது போலும்.

நம்முடைய சநாதனிகள் (சரித்திரத்தைத் திருத்தி எழுதிய நேரம் போக), இது போல் தமிழ்க் கல்வியை உத்தாரணம் செய்யக் கிளம்பி, கல்லூரிப் பாடப்புத்தகத்தில் முலை தேடி அழிக்கக் தொடங்கினால், எங்கே ஆரம்பிப்பார்கள் ? சிலப்பதிகார ஒற்றை முலை ? எங்கே முடிப்பார்கள் ? கலாப்ரியா ?


உச்சி வெய்யில் பட்டை உரிக்காத அபூர்வமான ஒரு மத்தியானப் பொழுதில் வடக்கு உஸ்மான் வீதிப் போக்குவரத்துக்குக் குறுக்கே நீந்திக் கடந்து போனால் இரண்டு பெயர்ப் பலகைகள் அருகருகே இருந்து வா, வா என்று காலைப் பிடித்து இழுக்கின்றன.

மோர்க்கூழும், கொழுக்கட்டையும், புளி உப்புமாவும் மணக்க மணக்க விருந்து படைக்கும் ‘சக்கரப் பொங்கல் ‘ உணவு விடுதி ஒரு பக்கம். பா.ராகவன் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது இந்த ஓட்டலைப் பற்றி முதல் பக்கத்தில் நேர்த்தியான வாழையிலை லே-அவுட்டோடு எழுதி இப்போது அதற்கு cult status வந்து, சதா நெரியும் கூட்டம். உ ள்ளே போகவே முடியவில்லை.

வயிற்றுக்குணவு இல்லாதபோது படிக்கவாவது ஏதாவது வாங்கலாம் என்று அருகே உள்ள ந்யூ புக்லேண்ட்ஸில் நுழைந்தபோது சட்டென்று கண்ணில் பட்டது ‘கவிமணியின் கவிதைகள் ‘.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதைகள் முழுவதும் அடங்கிய ஆய்வுப் பதிப்பு. வெளியீடு ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை, தொலைபேசி 091-44-2433 1510.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதின் தொடக்கத்திலும் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தரும் மனநிறைவை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் எந்தப் படைப்பும் தரமுடியும் என்று தோன்றவில்லை.

காகம் கரைதல் கேளீரோ ?

கதவைச் சற்றே திறவீரோ ?

ஆகஇரண்டு கணப்பொழுதுக்கு

அப்பால் இங்கே தங்கோமோ.

தேகம் அலுத்துச் செல்வோமோ.

சென்றால் மீண்டும் வாரோமோ.

வாகின் அமைந்த சாலைஇதன்

வாயில் காக்கும் காவலரே.

கவிமணியின் எளிமையும் சந்தமும் குழந்தைமையும் கண்ணைக் குளமாக்குகின்றன. மினிமலிசம், டாகன்ற்ஸ்டர்க்ஷன், ரீடர்லி டெக்ஸ்ட், ரைட்டர்லி டெக்ஸ்ட் – சரிதான், போங்கப்பா.

எத்தனை பெரியவர்கள் நம்மிடையே உலவிப் போயிருக்கிறார்கள். நாம் அவர்களைக் காலம் கடந்தாவது புரிந்து கொண்டு மதிக்கிறோமா ?

இன்னும் ஒரே ஒரு பாட்டு. ஆம், பாட்டுத்தான். கீர்த்தனை. கவிமணி எழுதியது.

கதிரைக் காண்பதெப்போ ?

—-

இராகம் நாதநாமக்ரிய – தாளம் திச்ர ஏகம்

பல்லவி

களை பறிப்ப தெப்போ ? – கண்ணில்

கதிரைக் காண்ப தெப்போ ?

அநுபல்லவி

விளைநில முழுதும் – அடர்ந்து

மீறிமே லோங்கும் (களைபறிப்ப)

சரணம்

உள்ள உரத்தையெல்லாம் – ஊரை

உறிஞ்சு கின்றதையோ!

கொள்ள உணவின்றிப் – பயிரும்

குறுகிப் போகுதையோ!

குறுகும் பயிரினைக் – காணில்

கும்பி எரியுதையோ!

அறு கணிந்தவனே! – சிவனே!

ஆதி பராபரனே! (களைபறிப்ப)

டிசம்பர் சபாக் கச்சேரியில் இதை எல்லாம் பாட மாட்டார்களா ?


காலச்சுவடு ஜூலை – ஆகஸ்ட் 2003 இதழில் அரவிந்தன் எழுதிய ‘இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது ? ‘ படித்தேன்.

‘ஜெயகாந்தன் கதைகளை முன் வைத்து ‘ என்று அவர் தொடங்குவது ‘ஜெயகாந்தன் கதைகளை முன்வைத்து அவர் மீது நிகழ்த்தும் தடியடிப் பிரயோகம் ‘ என்பதன் தலைப்புச் சுருக்கம்.

‘ அவருடைய கதைகள் பற்றித் தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது ‘ என்று ஆரம்பிக்கிறார் அரவிந்தன் கெத்தாக.

சரி சார், அப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாங்க எங்க வேலையைப் பார்க்கப் போகிறோம். காலச்சுவடு அதன் வேலையைப் பார்க்கட்டும். ஜெயகாந்தன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

அட, ஒரு பேச்சுக்குச் சொன்னாப் போயிடறதா ? ஜெயகாந்தனை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடலாம் வாங்க.

அரவிந்தன் நம்மை வாசலில் நிறுத்தி விட்டுச் சிடுசிடுத்தபடி பிரம்போடு விமர்சன வகுப்புக்குள் நுழைகிறார்.

‘கதை முழுவதும் இரைச்சல் ‘, ‘மிகு உணர்ச்சி ‘, ‘ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம் ‘

மனுஷன் மகா கோபமாக இருக்கிறார். ஜெயகாந்தனை பெஞ்சில் எழுந்து நிற்கச் சொல்லி விரட்டுகிறார்.

முதல் விளாசு – ‘ஜெயகாந்தனின் முதல் கதையிலேயே அவர் ஏ தென்றலே என்கிறார். படிக்க எனக்கு மிகவும் கூச்சம் ஏற்படுகிறது ‘.

ஜெயகாந்தன், ஏன் இப்படிக் கஷடப் படுத்துகிறீர்கள் ? அடிக்கத்தானே விமர்சகர் ? அவர் இப்படிக் கூசிக் குறுகி நிற்கலாமா ? ‘இது என் முதல் நாவல் ‘ என்று ‘ஒரு புளியமரத்தின் கதை ‘ முன்னுரையில் எழுதியதுபோல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்திருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா ? உமக்கு ஏன் புத்தி கெட்டுப் போனது ?

(வெகுஜனப் பத்திரிகையான கல்கியில் வெகுஜன எழுத்தாளரான குட்டிகிருஷ்ணன் – கி.ராஜேந்திரன் -இருபத்தைந்து வருடம் முன்னால் இதுதான் புளியமரம் என்று அறிமுகப் படுத்தாமல் இருந்தால் எனக்கும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும், புன்னை மரத்துக்கும் புளிய மரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காது. குட்டிகிருஷ்ணனுக்கு நன்றி சொன்னால் அரவிந்தன் என் தலையில் ஓங்கிக் குட்டுவார்).

ஜெயகாந்தன் கதைகளில் அடிக்கடி ஆவும் ஓவும் போட்டுக் கொண்டிருந்தால் எப்படித் தாங்குவது என்று இன்னொரு முறை பிரம்பை ஓங்கி விட்டு, கை வலிக்கிறதே என்று அலறுகிறார் அரவிந்தன்.

சுஜாதா ஒரு தடவை தயங்கித் தயங்கிச் சொன்னாரே – ‘ஓ ‘வை ஜெ.கே ஒரு கதையில் கொஞ்சம் போல் பயன்படுத்தியிருக்கிறார் என்று. அது இல்லையா விஷயம் ? அவர் போட்ட மீதி ‘ஓ ‘வை எல்லாம் நான் ஏன் பார்க்காமல் போனேன் ? ஓ ஜெயகாந்தன், ஓய் ஜெயகாந்தன், அடிக்க வாகாக உள்ளங்கையை இப்படி நீட்டுமய்யா. பெஞ்சில் நின்றால் குனியக் கூடாதா என்ன ? இனிமேல் ஓ போடாமல் கதை எழுதுவேன் என்று நூறு முறை இம்போசிஷன் எழுதும்.

பாக்கியராஜ் படம் மாதிரிக் கதை எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று அடுத்த அடி. பாக்கியராஜ் இங்கே எங்கே வந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்புறம் அரவிந்தன் கை முருங்கைக் காய் பறிக்கப் போயிருக்குமா என்ன ? உங்களுக்கும் ரெண்டு சாத்து. ஆமா.

‘வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற ஜெயகாந்தனது துடிப்பு கடைசி வரை ஓய்ந்ததாகத் தெரியவில்லை ‘

அரவிந்தனின் இந்தக் ‘கடைசி வரை ‘யை இன்னொரு தடவை அவசரமாகப் படித்து, காலச்சுவடைத் தொப்பென்று போட்டு விட்டு ஓடியே போய் இந்து பத்திரிகையைத் தேடினேன். ஸ்போர்ட்ஸ் பேஜில் ஓபிச்சுவரியை வரி விடாமல் படித்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். நலம். நலமே.

ஜெயகாந்தன் கதைகளை இது வரை விமர்சித்தவர்கள் (அதாவது பாராட்டியவர்கள்) அரவிந்தனின் கண்ணில் அடுத்துப் படுகிறார்கள். ஒரு குறுஞ்சிரிப்போடு அவர்கள் பக்கத்தில் போக, முன்வரிசையில் பாவம், நடுங்கியபடி நவபாரதி. (ஆமா, தோத்தாத்திரி எங்கே ? அரவிந்தனின் பிரம்புக்குப் பயந்து ஆப்செண்டா ?)

நவபாரதிக்குதான் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்று எத்தனை வித அர்ச்சனை! ‘ஆராதகர் நவபாரதி ‘, ‘உபாசகர் நவபாரதி ‘, ‘ஜெயகாந்தனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்த நவபாரதி ‘.

அது யார் பொன்னீலனா ? ‘தமிழ் நாட்டுப் பண்பாட்டுத் தளத்தை ஜெயகாந்தன் கதைபோல் ஆரோக்கியமாக உலுக்கிய இன்னொரு சிறுகதையை நான் இன்றுவரை அறியவில்லை ‘ என்கிறாரா அவர் ?

அரவிந்தன் ஒரு வினாடி பொன்னீலனின் கண்களைப் பார்க்கிறார். மனுஷன் சாமி வந்த மாதிரி நிற்கிறார், பார் என்று நம்மிடம் சைகை செய்கிறார். பொன்னீலன் புல்லரிக்கிறதாக அவர் புறங்கையைப் பார்த்து விட்டுத் தீர்மானமாகச் சொல்கிறார்.

இந்த நவபாரதியின், இந்தப் பொன்னீலனின் மிரட்டலையும் மீறி ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நுழைந்தாராம் அரவிந்தன். கேட்கவே ரத்தம் கொதிக்கிறது. மூர்ச்சை போட்டவரும், புல்லரித்துப் போய் நிற்கிறவரும் அப்படியே படுத்தும், புறங்கையைச் சொரிந்து கொண்டும் கிடக்க வேண்டியதுதானே ? என்னத்துக்கு இப்படி அரவிந்தனை மிரட்டுகிறார்கள் ?

சரி, இந்த மிரட்டலையும் மீறித் துணிவோடு அந்த அடலேறு அக்கினிப் பிரவேசத்துக்குள் போய்ப் பார்த்தால் அம்மா பெண்ணுக்குத் தலையில் தண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறாள். அம்புட்டுத்தானா என்று ஏமாற்றம் அரவிந்தனுக்கு. ஜெயகாந்தன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால், புத்தகம் வாங்கிய காசுக்கு அவருக்குத் திருப்தி கிடைத்திருக்கும் :

1) ஸ்ரீவேணுகோபாலன் எச்சமாகத் தொடர்ந்து எழுதியது போல் அந்த கங்காவைத் தலையில் நெருப்பு வைத்துக் கொல்லலாம். குறைந்த பட்சம் அவள் தலையில் வென்னீரையாவது ஊற்றியிருக்கலாம். அரவிந்தனுக்கு ஜலதோஷம் பிடித்து அடுக்கடுக்காக இப்படித் தும்மல் வராது.

2) கங்காவும் அவள் அம்மாவும் காலச்சுவடு பத்திரிகையைப் புரட்டி, அரவிந்தனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் ‘விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே விழும் வெளியைச் சாத்தியப்படுத்தும் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனம் காண முயலும் பிரக்ஞைக்கு ஒற்றைப் பரிமாண போதனைகளால் எந்தப் பலனும் இருக்காது ‘ என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவாதித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவோ, சேர்ந்து கையெழுத்துப் போட்டு காலச்சுவடுக்கு வாசகர் கடிதம் எழுதுவதாகவோ முடிக்கலாம்.

3) சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் படுத்துக் கொள்ளப் போகவைத்திருக்கலாம்.

‘நல்ல ‘ எழுத்தைப் படித்த திருப்தியும் வேண்டும். தீவிர எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் ஆழ்ந்த தொந்தரவிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று ‘பல் எனாமல் பாதுகாப்புக்கும், ஈறுகளின் உறுதிக்குமான பற்பசை கோல்கேட் ‘ என வாயசைவுக்கு வார்த்தை ஒட்டாமல் சொல்லும் டி.வி விளம்பர பல் டாக்டர் போல் சொல்கிறார் அரவிந்தன். அரவிந்தன் குரல் அவருடைய சொந்தக்குரல் தானா என்று நான் கேட்கமாட்டேன்.

கோபால் பல்பொடி ஒண்ணு கொடுப்பா. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றதாமே ?

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்