மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதாவிற்கு ஜனநாயகம் என்றால் என்ன என்ற அடிப்படை சிறிதும் தெரியாது. காமராஜர், ஜவகர்லால் நேரு , அண்ணா, ராஜாஜி, கருணாநிதி, தேவராஜ் அர்ஸ், நம்பூதிரிபாட் போன்றவர்களும் வளர்த்த அரசியல் கலாசாரம் வேறு. எம் ஜி ஆர், ஜெயலலிதா வளர்க்கும் அரசியல் கலாசாரம் வேறு. எம் ஜி ஆரின் செல்வாக்கின் மீது சவாரி செய்து, அந்த ஒரு தகுதி மட்டுமே உள்ள ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் , அந்த ஆட்சி நிலைப்பட்டதும் தமிழ் நாட்டின் அரசியல் பாரம்பரியத்தின் மீது விழுந்த அடி என்று சொல்ல வேண்டும். ஆனால், ஜெயலலிதா திடாரென்று இந்தக் கலாசாரத்தைக் கைப்பற்றிவிடவில்லை. இது கருணாநிதின் ஆளுயர மாலை அரசியலும், பிறகு எம் ஜி ஆரின் மக்கள் அபிமானம் கொண்டு , ஆனால் மக்களுடன் கலந்து பழகாத ஓர் அரசியலும் தொடர்ந்து ஜெயலலிதாவிடம் வெறும் மமதையாகவும், அர்த்தமற்ற அரசியல் நடவடிக்கைகளாகவும் உருப்பெற்றுள்ளன.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்தவர்கள் செய்யும் அராஜகமோ, எதேச்சாதிகாரமோ அல்ல என்ற அடிப்படையை உணராதவர்கள் தான் இப்படிப்பட்ட தலைவர்கள். மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்பவர்கள். ஆனால் இன்றைய அரசியல் பிரதிநிதித்துவச் சட்டம் இருக்கும் வரையில் இது தவிர்க்க முடியும் என்றும் தோன்றவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வந்தால் ஓரளவு மற்ற குரல்கள் கேட்க வாய்ப்புள்ளது. தர்மபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்டதற்கு தார்மிகப் பொறுப்பு யாரைச் சார்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் இதை வலியுறுத்தவோ, வழக்குகள் தொடரவோ எந்த அரசியல் சாராத அணிகளும் முயலவில்லை. அரசியல் சார்ந்த இயக்கங்களுக்கு இது பற்றிப் பேச எந்த முகாந்திரமும் இல்லை. ஏனென்றால் இவர்களும் இதே போன்ற நடைமுறையைத் தம்முடைய தலைவர்களுக்காக, பின்பற்றக் கூடியவர்கள் தான்.

மதமாற்றத் தடைச்சட்டம் , ஜெயலலிதாவின் முயற்சியால் சட்டமாகிவிட்டது. ஜெயலலிதா போய் வேறு ஆட்சி வந்தால் இது கிடப்பிற்குப் போக வழியுண்டு. ஆனால் கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் தலையில் நிரந்தரமாய்த் தொங்கக் கூடிய ஒரு கத்தி இது. இந்தச் சட்டமே தப்பு . ஆனால் இது பற்றி நம் அரசியல் தலைவர்கள் எடுத்துள்ள நிலைபாடு வினோதமாகவும், யார் எப்படிப் பேசுவார்கள் என்று முன்னமே தெரிந்த ஒரு விதமாகவும் உள்ளது என்பது தான் சோகமான விஷயம். அதில்லாமல் இந்தச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் கம்யூனிஸ்டுகள் தவிர வேறு யாருக்கும் அந்தரங்க சுத்தியோ, இந்தச் சட்டம் எப்படி ஜனநாயகச் செயல்பாட்டின் ஆணிவேரை அசைக்கிற அசிங்கமான ஒரு சட்டம் என்ற உணர்வு இருப்பதாய்த் தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு விஷயம், அதுவும் இது போன்ற ஒருதலைப் பட்சமான சட்டம் எப்படி சட்டபூர்வமாய்ச் செல்லும்படியாகக் கூட இருக்கக் கூடாது என்று எவருக்கும் விளங்கவில்லை.

மற்ற மானிலங்களில் இந்தச்சட்டம் இயற்றப் பட்ட போது கிறுஸ்தவ அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. இந்த சட்டம் நீதிமன்றங்களால் ஏற்கப் படாததற்கு சொல்லப்பட்ட மிக முக்கியமான காரணம் , ‘தூண்டுதல் ‘களால் மதம் மாறுவது என்ற தொடரில் தூண்டுதல் சரியாய், சந்தேகமின்றி வரையறுக்கப் ப்டவில்லை என்பது தான். அதாவது பணம் கொடுப்பது என்பது வெளிப்படையாய்த் தெரியும் விஷயம். கல்வி ஒரு தூண்டுதல் என்று சொல்ல முடியுமா ? அவர்களுக்கு அளிக்கிற மற்ற உதவிகளை எப்படி அடையாளம் காண்பது ? இது தெளிவாக வரையறுக்க முடியாத ஒன்று, என்பது நீதிபதியின் தீர்ப்பு.

இன்னொரு தீர்ப்பில் மதம் மாறுவது அடிப்படை உரிமை என்று அங்கீகரித்த நீதிமன்றம், மதம் மாற்றுவது அடிப்படை உரிமை இல்லை என்று சொல்லியிருக்கிறது. மேலோட்டமாய்ப் பார்த்தால், இது முரண்பாடு போலத் தோன்றக் கூடும். ஆனால் இந்தப் பார்வை ஓரளவு சரியே. அதாவது, மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதனின் தேர்வாய் இருக்கும்போது அது தனிமனித சுதந்திரம் என்ற கருத்துக்குள் வருகிறது. மதமாற்றப் பிரச்சாரம் என்பது ஒரு சமூக நடப்பாய், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கிய ஒரு செயல்பாடு என்பதால் , சமூக விளைவுகளையும் கருத்தில் கொண்டு செய்லபட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து.

மதமாற்றத் தடைச் சட்டம் ஜெயலலிதாவினால் உருவாக்கப் பட்ட பிறகு, ஏற்பட்டிருக்கும் விவாதங்களும், பெருமக்களின் பேச்சுகளும் கவனித்து வருகிறேன். ஜெயலலிதாவின் நண்பர் வீரமணி ஒப்புக்கு எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு சரி. கருணாநிதி எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. ஜெயலலிதா எதைச் செய்தாலும் எதிர்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம். எனினும் கருணாநிதியின் நிலைபாடு இதற்கு எதிராகத் தான் இருந்து வந்திருக்கிறது. பா ஜ க வுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் போது, பா ஜ கவின் செயல்திட்டத்தில் இது இடம் பெற்றிருக்கிறதே என்று சுட்டிக் காட்டப் பட்ட போது , பா ஜ கவின் செயல் திட்டத்திற்கு தன் ஆதரவு இல்லை. பொதுவான கூட்டணியின் செயல் திட்டத்திற்கே ஆதரவு என்று சொன்னதுண்டு. இந்து முன்னணியும், சங்கராசாரியாரும் இதனை வரவேற்றிருக்கிறார்கள் இதுவும் எதிர்பார்க்கத்தக்கதே. இந்தத் தடைச் சட்டம் பைத்தியக்காரத் தனம் என்றால் இதற்கு தெரிவிக்கப் படும் எதிர்ப்புகள் இன்னமும் பைத்தியக் காரத்தனம்- எதிர்ப்புகள் நியாயமானவை என்றாலும்- என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்த சர்ச்சையில் தலித்துகள் இடம் பெறுவது முதல் பைத்தியக் காரத்தனம். இந்து முன்னணிக் காரர்களும் சரி , கிறுஸ்தவ ஆயர்களும் சரி தலித்துகளின் மதமாற்றத்தை முன்னிறுத்தியே இந்த விவாதத்தைத் தொடங்குகிறார்கள். இது விசித்திரமானது.

தலித்துகளை இந்து மதத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென்றால், தீண்டாமை ஒழிய வேண்டும், தீண்டாமைக் கொடுமைகள் அகலவேண்டும், சமத்துவம் எல்லா இடங்களிலும், எல்லா முறைகளிலும் நிலவ வேண்டும். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல தீண்டாமைக் கொடுமைகளில் உடனே அங்கு சென்று இந்து முன்னணிக் காரரகள் யாரும், நீங்கள் இருவரும் இந்துக்கள் நீங்கள் இப்படி தீண்டாமை பாவிக்கக் கூடாது என்று சொன்னதாகவோ , மேல்சாதிக் காரர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் மேற்கொண்டதாகவோ தெரியவில்லை. இப்படிப் பட்ட சட்டம் இல்லாமல் தலித்துகளை இந்து மதத்திற்குள் வைத்திருக்க முடியாது என்ற முடிவிற்கே வந்து விட்டார்கள். சமூக சீர்திருத்தத்தைக் காட்டிலும், இப்படிப்பட்ட ‘தெளிவற்ற ‘ சட்டங்களை நம்பித்தான் இந்து மதம் வாழ முடியும் என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல் இருக்கிறது இவர்களின் நடத்தை.

கிறுஸ்தவ ஆயர்களும் தலித்தை முன்னிறுத்துவது இதற்கு இணையான இன்னொரு அபத்தம். கிருஸ்தவ மதத்தின் பிரசினை என்னவென்றால், காலனியாதிக்கத்தின் கீழ் மிகுந்த வன்முறைகளுடன் பல இடங்களிலும், நவீன கல்வி மற்றும் மருத்துவத்தை முன்னிறுத்தி பல இடங்களிலும் மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.இன்று அப்படி ஒட்டுமொத்த மதமாற்றத்திற்கு வழிகள் குறைவு. இன்று உலக அளவில் கிறுஸ்தவ மதம் பெரும் சிக்கலில் உள்ளது. வளர்ந்த நாடுகளில் கிறுஸ்தவ மதத்தை பாவிப்பவர்களின் எண்ணிக்கை அருகி வருகிறது. இஸ்லாமிய நாடுகளுக்குள் இவர்கள் நுழையவே முடியாது. சீனா , ஜப்பான் போன்ற நாடுகள் இவர்களைத் தடை செய்து வைத்திருக்கின்றன. சீனாவில் இப்படிப் பட்டவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு தண்டிப்பதும் நிகழ்ந்துள்ளது. இந்தியா இவர்களுக்கு மிகச் சரியான விளைநிலம். ஜனநாயக உரிமைகள் எல்லோருக்கும் உண்டு. பொதுவாக கிறுஸ்தவர்கள் மீது நன்மதிப்பும் இங்கு பெரும்பான்மையோருக்கு உண்டு. ஆங்காங்கே தலித்துகள் மீது கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் சாதியப் பிரசினைக்கு மதமாற்றம் ஒரு தீர்வாக , பெரியார், அம்பேத்கர் போன்றோரால் முன்வைக்கப் பட்டிருக்கிறது. எனவே இது மிகச் சரியானநேரம் , இடம் என்பது கிறுஸ்துவர்களின் முடிவு. அதனால் தலித் ஆய்வு மையங்கள் என்ற பெயரில் தலித்களை மதமாற்றம் செய்வதைக் குறிக்கோளாய்க் கொண்டு செயல்படத் துவங்கியிருக்கிறார்கள். பொதுவாக இந்து மதத்தின் மீதான விமர்சனத்தை, தலித்களுக்கு இந்து மதத்தில் நியாயம் இல்லை என்ற வாதத்தையும் முன்னிறுத்தினால் அறுவடை அமோகமாய்ச் செய்யலாம் என்பது இவர்களின் கணிப்பு. இந்த அபத்தம் பல கேள்விகளை எழுப்புகிறது. ‘ஏசுவே சத்தியமும் ஜீவனும் வழியும் ‘ என்பதெல்லாம் தலித்களுக்கு மட்டும் தானா ? மேல் சாதி இந்துக்களுக்கு தருவதற்கு கிறுஸ்தவ மதத்திடம் எதுவும் இல்லை என்ற முடிவிற்கே வந்து விட்டார்களா ? ஏசுவே கடவுளின் ஒரே மகன் என்ற கருத்தாக்கத்தையும் முன்னிறுத்தாமல், மற்ற மதங்களில் உள்ள அநீதிகளுக்குத் தீர்வாக கிறுஸ்தவ மதம் முன்னிறுத்தப் படுகிறதா ? இது இந்து மதத்தில் உள்ள அநீதிக்கு மட்டும் தீர்வா அல்லது, இஸ்லாமிய, பெளத்த மதங்களில் உள்ள அநீதிக்கும் கிறுஸ்தவம் தீர்வா ? எனில் அந்தந்த மதங்களின் பிரசினைகளை முன்னிறுத்தி அந்தந்த நாடுகளில் கிறுஸ்தவப் பிரசாரம் செய்யப் படுகிறதா ? ஒரு கம்பெனி தன்னுடைய நுகர்பொருளை விற்பதற்குக் கடைப்பிடிக்கும் உத்தியை ஒத்த ஒரு செயல் இது. வேறு கம்பெனி நுகர்பொருளினால் பல தீமைகள் உண்டு. எனவே அதனை நம்பி ஏமாறாதீர்கள். எங்கள் பிராண்டையே நம்பி வாங்குங்கள் என்பதான ஒரு வியாபார உத்தி.

ஆக்ஸ்ட் 2002-ல் யூத ராபிகளின் அமைப்பும், கிறுஸ்தவ ஆயர்கள் அமைப்பும் உலக அளவில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தன. இனிமேல் பரஸ்பரம் மதமாற்றம் செய்ய முயல்வதில்லை என்பதான ஒப்பந்தம் இது. யூதர்களுக்கும், கிறுஸ்தவர்களுக்கும் உள்ள முரண்பாடு கடந்த 2000 வருடங்களாக அணையாமல் இருக்கிற ஒரு சச்சரவு. யூத எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்ததற்கு மிக முக்கிய காரணம் – கிறுஸ்தவம், குறிப்பாக புரோடஸ்டண்ட் மதம். யூதாஸ் என்ற யூதன் ஏசு நாதரைக் காட்டிக் கொடுத்தான் என்பதில் தொடங்கி பலவாறான கட்டுக் கதைகளில் வளர்ந்த இந்த வெறுப்பின் உச்சம் தான் ஜெர்மானிய யூத அழிப்பு. இந்த இரு மதங்களுக்கிடையே மதமாற்ற முயற்சிகள் குறித்து பலவாறாக விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. செத்தவர்களுக்கு ஞானஸ்நானம் அளித்து அவர்களுக்கு முக்தி அளிக்கிற அபத்தம் வரையில் கூட இது சென்றதுண்டு. இந்த ஒப்பந்தம் ஒரு வித போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு தான் இவ்வளவு வருடங்கள் கழித்து போப் ஜான் பால், யூதர்களை கிறுஸ்தவர்களின் மூத்த சகோதரர்கள் என்று அழைத்து , அவர்கள் தமக்கு நாடு அமைத்துக் கொண்டதை வரவேற்றிருந்தார். ‘யூதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வரைபடத்தில் பாதிப் பகுதியை வைத்துக் கொண்டு சொர்க்கம் போக முயல்கிறார்கள். ‘ என்பதான நகைச்சுவைத் துணுக்கும் சொல்லப்படுவதுண்டு. அதாவது பழைய ஏற்பாடு (Old Testament) யூதர்களின் புனித நூல் என்றால், புதிய ஆகமம் (New Testament) கிறுஸ்தவர்களின் புனித நூல். வெறும் பழைய ஏற்பாடு என்பது முழுமையாகாத ஒன்று என்பதும், ஏசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் முழுமையான வழியை அறியாதவர்கள் என்பதும் இதன் குறிப்பீடு. இப்போது ஏற்பட்ட ஒப்பந்தம் எப்படி இந்த நிலைபாட்டை மாற்றியமைக்கிறது என்று தெரியவில்லை. இந்தச் சலுகை யூதர்களுக்கு மட்டும் தான். கிறுஸ்தவ தத்துவத்தின் படி , மற்ற மதத்தைச் சார்ந்த எல்லோரும் இன்னமும் மனம் திரும்பாத பாவிகள் தான்.

இதையொத்த இன்னொரு அபத்தம் ராமதாஸ் போன்ற தலைவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது. ராமதாஸின் கட்சி, வன்னியர்கள் என்ற இந்துமதத்தினுள் இருக்கும் வன்னியர் சாதியினரை மையமாய்க் கொண்டு இயங்குவது. அதாவது மிக நேரடியாக இந்து மதத்தின் இருப்புடன் அடையாளங்களுடன், வாழ்முறைகளுடன் தொடர்பு கொண்ட ஒரு கட்சியை இவர் நடத்துகிறார். இந்து மதம் மோசம் என்றோ, இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள் என்றோ அவர் வன்னியர்களிடம் சொல்ல மாட்டார். ஏனென்றால் அப்படிச் சொல்லத் தொடங்கினால், வன்னியர்களே இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வன்னியர்கள், தமிழ் நாட்டில் உள்ள மற்ற பிரிவினரைப் போலவே மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர் மற்ற மதம் மற்றும் சாதியினரை உள்ளடக்கி அரசியல் பண்ண முயன்றதும் உண்டு. ஆனால் தம்முடைய அடிப்படை பலமான வன்னியர்களை இந்த முயற்சிகளால் அன்னியப் படுத்துகிறோம் என்று உணர்ந்தவுடன் , மீண்டும் வன்னியர் கட்சியாக்க முயன்று வருகிறார். தலித்கள் இவருக்கு மிகவும் பக்க பலமாய் இருந்த காலம் போய், அவர்கள் திருமாவளவன் தலைமையின் கீழ் சென்றவுடன் ஏற்பட்ட சாதிச்சச்சரவுகளைத் தடுக்க இவர் பெரிதும் முயலவில்லை. இவர் தலித்கள் மதமாறும் உரிமை பற்றிப் பேசுவது மிகவும் விசித்திரம். நாங்கள் மோசமான இந்துமதத்தை விட்டு வெளியேற மாட்டோம், ஆனால் நீங்கள் போய்த்தொலையுங்கள் , ஏனென்றால் நாங்கள் உங்களை நன்றாக நடத்த மாட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதைப் போன்ற ஒரு செயல் இது.

இப்படிப் பட்ட எதிர்க்குரல்களில் இன்னொரு அபத்தக் குரல் திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோருடையது. இவர்களும் மதமாற்றம் என்பது தலித்களின் உரிமைப் பிரசினை என்றே பார்க்கிறார்கள். இந்து மேல்சாதியினர் , இந்து தலித்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் போது, அவர்களை எதிர்த்துப் போராடவேண்டியதில்லை , மதம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாய் இவர்கள் பார்வை இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கும் இது பற்றிப் பேச அருகதை இல்லை. இவர்கள் ஆளும் மானிலத்தில் இருகும் சட்டத்தைப் பற்றி கவலை இல்லாதவர்கள் , தமிழ் நாட்டில் சோனியா காந்தியின் மீது ஜெயலலிதாவின் தாக்குதலால் தான் இப்படி இந்தச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

கிருஸ்தவ இஸ்லாமிய மதமாற்ற முயற்சிகள் பணத்தினால் நடைபெறுகின்றன, மிரட்டலால் நடைபெறுகின்றன என்பதிலும் உண்மையில்லை. காலனியரசின் கீழ் கிறுஸ்தவர்களும், முகலாய அரசின் கீழ் முஸ்லீம்களும் மதம் மாறியிருக்கலாம். ஆனால் இன்று இப்படிப்பட்ட முயற்சிகள் ஏதும் பெருவாரியாய் இருப்பதாய்த் தெரியவில்லை. இன்னமும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளும் பணிகளும் கிறுஸ்தவர்கள் பண்ணும் அளவிற்கு இந்துக்கள் அமைப்பு ரீதியாய்ப் பண்ணவில்லை. ஓரிரு உற்சாகமிக்க கிறுஸ்தவப் பிரசாரகர்கள் எல்லை மீறிப் போய் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கலாமே தவிர இது பெருவாரியாக நடப்பதாய்ச் சொல்லமுடியாது.

மதமாற்றத்தடைச் சட்டம் தனிமனிதனின் ஜனநாயக உரிமையில் கைவைக்கிற, மோசமாக வரைவு செய்யப்பட்ட சட்டம். இது நிச்சயம் காஞ்சி சங்கராசாரியார் ஆசியுடன் நடந்தேறியிருக்கிறது. காஞ்சி சங்கராசாரியாருக்கு இந்து மதக் காவலராக வேடமிட்டு, அவரைச் சார்ந்து நிற்கும் ஒரு கும்பல் வலுப் பெறுவதில் சமூக அரசியல் லாபங்கள் இருக்கலாம். ஆனால் இந்து மதத்தின் பெரும்பான்மை மக்களுக்கு சங்கராசாரியாரின் தலைமையோ அல்லது இந்தச்சட்டமோ எந்தப் பலனையும் அளிக்காதது மட்டுமல்ல, மத வேறுபாடுகளை முன்னிறுத்திய முரண்பாடுகள் வளரத் தான் வழி வகுக்கும். தீண்டாமைக்கு எதிராக வலுவான குரல் கொடுக்காத சங்கராசாரியாரும், மடாதிபதிகளும் , இந்து முன்னணியும் இந்தச்சட்டத்தைக் கொண்டு இந்து மதத்தைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை. சட்டத்தினால் மட்டும், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களின் மனமாற்றத்தையும், மதமாற்றத்தையும் தடுத்துவிடமுடியாது.

இதை ஏதிர்த்து வரும் குரல்கள் எல்லாமே ஜனநாயக அடிப்படையில் அல்லாமல், என் கண்ணிலுள்ள உத்தரத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, எதிராளியின் கண்ணில் உள்ள தூசு பற்றிப் பேசுவோம் என்று குரல் கொடுப்பது தான் வருந்தத் தக்க விஷயம்.

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்