வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ‘

=டாக்டர் அம்பேத்கர் ( ‘பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ‘ எனும் நூலிலிருந்து)

‘வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இது மதமாற்றத்துக்கு

தடையாக உள்ளது. ‘

-லொஸேன் உலக எவான்ஜலிக்கல் செயற்குழுவின் ‘இந்திய சூழலில் ஆன்மீக போராட்டம் ‘ எனும் அறிக்கையிலிருந்து.

1. கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா ? அவர்கள் மகத்தான கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில்தானே ஈடுபடுகிறார்கள் ? இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதற்கு என்ன சான்றுகளை காட்ட முடியும் ? வேண்டுமானால் நீங்களும் அவர்களைப் போல சேவைகளில் ஈடுபடுங்கள்.

கிறிஸ்தவ அமைப்புகளின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் மதமாற்றத்துக்கான வெறும் தூண்டில்தான் என்பதை இரட்சண்ய சேனை அமைப்பின் நிறுவனரான ஜெனரல் பூத் தெரிவித்துள்ளார். கல்கத்தாவின் காலம் சென்ற தெரசாஅம்மையாரும் சற்றேறக்குறைய இதே கருத்துகளை கூறியுள்ளார். கிறிஸ்தவத்தின் இந்த சேவைகளுக்கு போட்டியாக வேறெந்த சேவை அமைப்புகளும் வந்துவிடக்கூடாதெனபதில் கிறிஸ்தவ திருச்சபை மூர்க்கமாக உள்ளது. உதாரணமாக, கோவாவில் ‘கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்புக்கு ஊறு விளைவிப்பதாக ‘ அப்பகுதியின் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை கத்தோலிக்க புனித விசாரணை அப்புறப்படுத்தியது. அண்மைக் காலங்களில் தெரசாவின் சேவையை மையமாக கொண்டு டாமினிக் லப்பயர் என்னும் கத்தோலிக்க எழுத்தாளர் (நம் மத சார்பற்ற வட்டாரங்களில் இவர் பெரிதும் மதிக்கப்படுபவர்) பாதி கற்பனையும் மீதி பிரச்சாரமுமான ‘City of Joy ‘ எனும் நூலில் இராமகிருஷ்ண மிஷன் துறவிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து குழந்தைகளை இந்திய அரசு இயந்திர உதவியுடன் மும்பையில் விற்பனை செய்வதாக எழுதியிருந்தார். இவ்வாறு மேல் நாடுகளில் கிறிஸ்தவரற்ற இந்திய சேவை அமைப்புகளை பற்றி மிகவும் மட்டரக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுதான் இவர்கள் ‘சேவையில் ‘ ஈடுபடுகின்றனர். மேலும் இவர்களது கல்வி அமைப்புகள் பெரும்பாலும் இந்திய அரசின் சலுகைகளும், நிர்வாக தலையீட்டின்மையும் கொண்டு நடத்தப்படுகின்றன. ஆனால் ஹிந்து கல்வி அமைப்புகளோ அரசின் நிர்வாகத் தலையீடும் சலுகைகளின்மையும் கொண்ட சூழலில் நடத்தப்படுகின்றன. மேற்கு வங்க அரசின் நிர்வாகத்தலையீடு காரணமாக ஸ்வாமி விவேகானந்தர் கண்ட இராம கிருஷ்ண சேவை அமைப்பு தன்னை ஹிந்துவற்ற சிறுபான்மை என அறிவிக்க கோரியது இந்த மதச்சார்பற்ற கேலி கூத்தின் கோரமான உச்ச கட்டம். இத்தனை சாதகமற்ற சூழலிலும் இன்று இந்தியாவின் மிக பரவலான கல்வி அமைப்பாக வித்யா பாரதி விளங்குவதும், ஓராசிரியர் கல்வி கூடங்கள் எனும் பொருளாதார திறமை கொண்ட அமைப்புகள் மூலம் தலித் மற்றும் வனவாசிகளுக்கு கல்வி அளிப்பதில் பெற்றுள்ள வெற்றிகளும் இந்திய தேசியத்தின் உள்ளார்ந்த முழுமைப் பார்வையின் வலிமையின் வெற்றியே.வனவாசிகளுக்கு மருத்துவசேவை புரிவதில் பெரும் வெற்றியும் சாதனையும் கண்ட விவேகானந்த வனவாசிகள் நல அமைப்பின் டாக்டர் சுதர்சனை கடத்தப்போவதாக வீரப்பன் அறிவித்ததும், வீரப்பன் ஆதரவு பிரசுரங்களுடன் கிறிஸ்தவ கன்யாஸ்திரி அண்மையில் கைது செய்யப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். கட்டாய மதமாற்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ சர்ச் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏராளம். ஐரோப்பாவை நடுநடுங்க வைத்த புனித விசாரணை எனும் Holy inquisition ஐ எடுத்துக் கொள்ளலாம்.உலகிலேயே மிக அதிக காலகட்டம் இந்த புனித விசாரணை நடத்தப்பட்டது இந்திய மண்ணில்தான்1. கோவா புனித விசாரணையின் போது பல ஹிந்துக்கள் மீது கட்டாய மதமாற்ற கொடுமை திணிக்கப்பட்டது என்ற போதிலும் இன்றும் கோவா ஹிந்து பெரும்பான்மையுடன் விளங்குகிறது என்றால் அது ஹிந்து மதத்தின் உள்ளார்ந்த வலிமையினால்தான். இந்தியாவின் இதர பாகங்களுக்கும் இது பொரூந்தும். கோவா புனித விசாரணைகள் 200ெ300 ஆண்டுகளுக்கு முன் நட்ந்த பழங்கதை இப்போது அப்படி அல்லவே எனும் கேள்வி எழலாம். ஆனால் இன்று மிசோ கிறிஸ்தவ அமைப்பு ‘ கிறிஸ்தவரல்லாதவர்கள் பிறப்பிலேயே பாவிகள் ‘ என கூறி பிரச்சாரம் செய்து வருகிறது. மதமாற மறுத்ததால் மிசோரமை சார்ந்த ரியாங்கு வனவாசிகள் 35,000 பேர் இன்று அகதிகளாக திரிபுராவில் வாழ்கின்றனர்2. மிக மோசமான சூழலில் நீர் மூலம் பரவும் நோய்களால் நாளைக்கு 15 ரியாங்குகள் இறப்பதாக திரிபுராவின் மருத்துவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. மிசோரம் முதலமைச்சர் இந்த இனத்துடைத்தெடுப்பை தேசிய ஊடகங்களில் நியாயப்படுத்தினார். எவ்வித கண்டனமும் எழவில்லை. கட்டாய மதமாற்றத்துக்கு உட்பட மறுத்த ஒரே காரணத்துக்காக இன்று தங்கள் இன அழிவினை வீடிழந்து, மானமிழந்து உடல் நலமிழந்து எதிநோக்குகின்றனர் ரியாங்குகள். கட்டாய மதமாற்றம் கிறிஸ்தவ நிறுவன மதத்தின் 2000 ஆண்டு பிரிக்க இயலாத உண்மை. மேலைக் கிறிஸ்தவ இறையியல் சிலுவையில் அறையப் பட்டிருக்கும் கிறிஸ்துவின் மனித நேய ஆன்மீக உயிர்த்தெழல் ஒருவேளை பாரதிய சுதேசி திருச்சபையின் மூலம் நிகழலாம். எதுவானாலும் கட்டாய மதமாற்றம் இன்றும் நிகழும் ஒரு உண்மையே.

2. தலித்களுக்கு எதிராக மேல் சாதி ஹிந்துக்கள் நடத்தும் கொடுமைகளால்தானே அவர்கள் மதம் மாறுகிறார்கள் ? கிறிஸ்தவ இஸ்லாமிய வரலாற்றில் இருக்கும் மானுட மதிப்பு ஹிந்து மதத்தில் இல்லையே. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் தலித்களுக்கும் வனவாசிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது. எனவே மதமாற்றத்தில் என்ன தவறு ?

மேல்சாதி ஹிந்துக்கள் தலித் மற்றும் வனவாசிகளுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. இதில் ‘மேல் சாதி ஹிந்து ‘ வென முத்திரை குத்தபடும் கொடுமையாளர்கள் பொதுவாக ஒரே சாதியினர் அல்ல. இக் கொடுமைகளின் பின்னால் இருப்பது பெரும்பாலும் நிலத் தகராறுகள், தனிப்பட்ட விரோதங்கள், சாதி ஓட்டு வங்கி சார்ந்து எழும் மதச்சார்பற்ற கட்சி அரசியல் கூட காரணமாகலாம். மனு ஸ்மிருதியின் பிரதியைக் கூட பார்த்திராத, அவ்வார்த்தையையே கேட்டிராத சாதியினருக்கிடையே நடைபெறும் சமுதாய பிரச்சனைகளுக்கு மேல்சாதி/தலித் நிறம் பூசி பிரச்சாரம் செய்யும் ‘நற் செய்தி ‘ அறிவிக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள், ஜிகாதிகள், மற்றும் ‘குப்பை கூடைக்கு ஏற்றதாக ‘ அம்பேத்கர் கண்ட ஆரிய திராவிட இன வாதத்தை தம் மூளைக்குள் ஏந்திக் கொண்ட ஈவெரா வழி வந்த பகுத்தறிவுகள் ஒரு உண்மையை மறந்து விடுகின்றனர். பல்லாயிரக் கணக்கான தலித் மற்றும் வனவாசிகளின் சாவுக்கும் மானமிழப்புக்கும் அவர்கள் சந்திக்கும் தலைமுறைகளாகத் தொடரும் மானுடச் சோகங்களுக்கும் அதி முக்கிய காரணிகளாக திகழ்பவர்கள் ஜிகாதிகள், கிறிஸ்தவ மிஷினரிகள் சார்ந்த அமைப்பினர் மற்றும் போலி மதச்சார்பின்மையின் ஓட்டுவங்கி அரசியல்வாதிகளாவர்.

உதாரணமாக திரிபுராவில் மதம் மாறாத காரணத்தால், தம் வனவாசி பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிடாத காரணத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் ஜமாத்தியா வனவாசிகள். பாப்டிஸ்ட் திருச்சபையால் உருவாக்கி வளர்க்கப்பட்ட NLFT யினரால் பல ஜமாத்தியா சமுதாய சேவை மையங்கள் எரிக்கப்பட்டுள்ளன. குடும்பங்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளன. கூட்ட கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.3 ஆனால் கிறிஸ்தவர்கள் ‘கொடுமைப்படுத்தப்படும் ‘ குஜராத்தை எடுத்துக் கொள்ளலாம். ஹிந்து தெய்வச்சிலைகள் மீது சிறுநீர் கழித்தல், பத்து வயது நிரம்பாத பள்ளிக் குழந்தைகளிடம் ‘என் மீட்பர் கிறிஸ்து மட்டுமே என உணர்ந்து கொண்டேன் ‘ என எழுதி வாங்குதல் போன்ற நிகழ்வுகளின் எதிர்விளைவாக நிகழ்ந்த ‘கொடுமை ‘களில் ஒரு உயிர்பலி கூட ஏற்படவில்லை. ஆனால் முன்னால் குறிப்பிட்ட ரியாங்குகள் வனவாசிகள் இன்று விலங்குகளை விட கீழாக தம் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ வைத்திருப்பது கிறிஸ்தவ மதமாற்ற வெறியே. ஜிகாதிகளால் ஆகஸ்ட் 2000இல் கொல்லப்பட்ட படுகொலையில் உயிரிழந்த பீகாரின் நிலமற்ற கூலித் தொழிலாள ஹிந்துக்கள் தலித்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும்4. பீகாரில் இவர்களை வேட்டையாடுபவர்களோ மதச்சார்பின்மையின் தன்னிகரற்ற தனிப்பெரும் தலைவரான லல்லுவின் குண்டர்கள் மற்றும் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட சத்திரிய ஓட்டுவங்கியின் விளைவான ரண்வீர் சேனாவினர்.பங்களாதேஷில் அனைத்துவித அவமானங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டு தங்கள் கொஞ்ச நஞ்ச சொத்துகளையும் விட்டுவிட்டு ஓடிவரும் பெளத்த சக்மா வனவாசிகளை அகதிகளாக்கியது எது ? மேலும் எத்தனை தலித்கள் மதமாற மறுத்த ஒரே காரணத்தால் ஜிகாதிகளால் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர்! இப்பதிவுகளின் அடிப்படையில் வனவாசிகள் மற்றும் தலித்களுக்கு எதிராக தெற்காசியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய அழிவாதிக்க சக்திகள் எவை என்பது கணிக்கப்பட வேண்டும். மதத்தின் அடிப்படையில் நம் தேசத்தின் நலிவுற்ற சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகள் மேலும் சமுதாய மேல்மட்ட அரசியல் வாதிகள் தம் ஓட்டு வங்கி அரசியல் இலாபத்திற்காக தலித்களுக்கு எதிராகவும் அவர்களை பயன்படுத்தியும் வாழும் கொடுமைகள் ஆகியவையும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விராட ஹிந்து குடும்பத்தில் ஆயிரமாயிரமாண்டுகளாக எவ்வித ஊறுபாடுமின்றி பாதுகாக்கப் பட்டு வந்த தலித், வனவாசி வழிபாட்டுமுறைகளுக்கும் எதிராக மிகக் கேவலமான பிரச்சாரம் மேற்கில் இதே கூட்டத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

சில ஸ்மிருதிகள் சமுதாய சமத்துவத்திற்கு எதிரான கருத்துகளை கூறியிருப்பது உண்மைதான். ஆனாலும் அவை ஸ்மிருதிகளே. அவை மாற்றப்படவும் ஏன் தூக்கி எறியப்படவும் செய்யலாம். மேடைகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான பரம் பூஜ்னீய பாளா சாகேப் தேவரஸ் அவர்கள் ‘பெண்ணடிமை மற்றும் மானுடத்துவ ஒருமைக்கு எதிரான நூல்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது தூக்கி எறியப்பட வேண்டும். ‘ என கூறினார்5. ஆனால் இஸ்லாமில் ‘இறக்கப்பட்ட ‘தாகவும் எக்காலத்திற்கும் மாற்றங்கள் தேவைப்படாததாகவும் கருதப்படும் குர்ரான் அடிமை முறையினை அங்கீகரிப்பதையும், அவ்வாறே நால்வரின் அங்கீகரிக்கப்பட்ட ‘பரிசுத்த நற்செய்திகள் ‘ அடங்கிய ‘புதிய ஏற்பாடென்று ‘ கிறிஸ்தவர்களால் கருதப்படும் நூலும் அடிமை அமைப்பு அங்கீகரிக்கப்பதை காணலாம். இதன் அடிப்படையில் சர்வதேச அளவில் அடிமைகள் வர்த்தகத்தையும் கிறிஸ்தவ இஸ்லாமிய பேரரசுகள் நடத்தின. மொகலாய அரசுகளும் இந்தியர்களை ஐரோப்பியர்களுக்கு அடிமைகளாக விற்று வந்துள்ளனர்.6. இன்றைக்கும் அடிமை முறையினை முழுமையாக நடத்தும் ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளும்7 ஒப்பந்த அடிமைத்தன்மையினை இன்றைக்கும் ‘விரும்பத்தகாதெனினும் இறை நீதிக்கு புறம்பானதல்ல ‘ என கூறும் கத்தோலிக்க திருச்சபையும்8 அவற்றிற்கு வழக்கறிஞர் ஊழியம் புரியும் மதச்சார்பற்ற கூலிப் பட்டாளமும் நேரான முகத்துடன் சமூக நீதி குறித்து பேச இயல்வது அதிசயமான விஷயம்தான். ஹிந்து சமுதாயம் முழுக்க முழுக்க குற்றம் குறையற்றதென்று கூற வரவில்லை. மாறாக பண்பாட்டு பன்மை வளம் காப்பு மற்றும் சமுதாய நீதி குறித்து உண்மையாக விழைவோர் இம்மண்ணின் உள்ளார்ந்த மதிப்பீடுகளின் மேல் தன் போராட்டத்தை அமைப்பதின் மூலம் மிகச் சிறந்த வெற்றிகளை பெற முடியும். குரு கோவிந்த சிங்கின் கல்சாவும், ஸ்ரீ நாராயண குருவின் குரு குலமும், ஐயா வழியின் அன்புக்கொடி எனும் காவிக்கொடியுடன் தலைப்பாகையும் ஏந்திய இயக்கமும், சங்கர வேதாந்தமும்,விவேகானந்தரின் அத்வைதமும், அம்பேத்கரின் சஙக சரணமும் பரிணமித்த இத்தேசத்தில் மகத்தான வெற்றி பெற்ற இவ்வியக்கங்களின் அடியொற்றியே நாமும் வெற்றி பெற முடியும். அடிமைத்தன்மையை தம் மூல நூல்கலிலிருந்து கூட களைய முடியாத ஆபிரகாமிய பரவு மதங்கள் நமக்குத் தேவையில்லை.

3. வத்திகான் II தெரியுமா உங்களுக்கு ? மற்ற மதங்களை மதிக்கும் தன்மை இன்று கிறிஸ்தவ திருச்சபையின் கோட்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளது. இந்நிலையில் ஏதோ மதமாற்றத்தின் மூலம் மத விரோதம் ஏற்பட்டுவிடும் என்பதெல்லாம் பழங்கதைதான்.

உண்மை என்னவென்றால் வத்திகான் II தான் இன்று பழங்கதை ஆகிவிட்டது. கார்டினல் ராட்சிங்கர் மற்றும் இன்றைய பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் ‘மானுட மீட்பு கத்தோலிக்க திருச்சபைக்கு அப்பாலும் நிகழலாம் ‘ என்பதற்கான சாத்திய கூறுகளை கத்தோலிக்க இறையியலாளர்கள் விவாதிப்பதையே மறுதலிக்கும் ‘டொமினியஸ் ஜீசஸ் ‘ எனும் திருச்சபையின் புனித ஆவணம் மூலம் வத்திகான் II உருவாக்கிய பன்மை சகிப்பு தன்மையின் எழுந்த சில சிறு துளிர்களையும் அழித்துவிட்டனர். குஜராத்தில் இறைப்பணி புரிந்த (காலம் சென்ற) அந்தோனி டி மெல்லாவினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய ஞான மரபுகளின் வரலாறு என்றேனும் பெரும் தொகுதிகளாக வெளி வருகையில் இந்த எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இம்மகத்தான மனிதர் அவற்றின் பக்கங்களில் கட்டாயம் முக்கிய இடம் பெறுவார். இவர் எழுதிய ‘சாதனா ‘ எனும் கத்தோலிக்க துறவிகளூக்கான ஆன்மீக பயிற்சி நூல் மதங்களின் குறுகிய சுவர்கள் தாண்டி, அந்நூலை பயன்படுத்தும் எந்த மனிதருக்கும், அவர் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும் கூட வாழ்வினை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக திகழ்கிறது. இந்நூல் இன்று ாதவறு செய்ய இயலாதி கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பீடத்தால் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது9. இது சமய நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள எந்த இந்தியனையும் வேதனைப்படுத்தக்கூடியது. இன்றைய கத்தோலிக்க தலைமைபீடம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தற்போது புனித விசாரணைக்கான (Holy Inquisition) அலுவலகத்தை திறந்துள்ளது. மேலும் பல மத்திய கால போக்குகளை மீநூடழ வைத்துள்ளது.

4. பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மற்றும் தலித் சமுதாயங்களின் சமுதாய மற்றும் ஆன்மீக தலைவர்கள், சமுதாய விடுதலை போராளிகள் மற்றும் அவதார புருஷர்கள் மத மாற்றம் குறித்து என்ன கூறுகிறார்கள் ?

ஜிகாதி ஆட்சியாளரின் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக தன் தலையையே கொடுத்து தர்மம் காத்தார் குரு தேஜ் பகதூர். சாதியத்தை நிராகரித்தெழுந்த கல்சா பந்த் நிறுவனரும் இறைவீரருமான சத்குரு கோவிந்த சிங் தன் இறுதி மூச்சு வரை கட்டாய மதமாற்றிகளை எதிர்த்து போராடினார். தென்கோடி குமரியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளித்த, அவதார புருஷராக வணங்கப்படும் வைகுண்ட ஸ்வாமி அவர்கள் சிலுவை வேதமும் தொப்பி வேதமும் (இஸ்லாம்) உலகெமெல்லாம் போட துடிப்பதை கண்டித்து தர்ம வழி நடக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீரவுரை வழங்கினார்10. அய்யன் காளி பல கிறிஸ்தவ போதகர்களுக்கு எதிராக வாதம் புரிந்து தம் மக்களை மதமாற்ற முனைந்தவர்களை தோற்கடித்தார்11. மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும் எதிர்த்தார். தமிழகத்திலும் சாதியத்தை எதிர்த்த சிறந்த சமுதாய மறுமலர்ச்சியாளரான ஸ்வாமி சித்பவானந்தரும் மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டுமென விரும்பினார்.

5. ஆனால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ‘ நான் ஹிந்துவாக சாக மாட்டேன் ‘ என சூளுரைத்து மதம் மாறியுள்ளாரே.

உண்மைதான். சவர்ண மதச் சார்பின்மையாளர்கள் மற்றும் ஸ்மிருதி அடிப்படைவாத பழமையாளர்கள் ஆகியோரை திருத்த முடியாதென்ற முடிவுக்கு வந்த பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், அத்தகையோரது பிடியில் ஹிந்து தர்மம் இருக்கும் போது தான் ஒரு ஹிந்துவாக இறக்கப் போவதில்லை என முடிவு செய்தார். அதற்கு மாற்றாக அவர் ஆபிரகாமிய மதங்களை தேர்ந்தெடுக்கவும் இல்லை, பகுத்தறிவு இல்லாமல் ஆரிய திராவிட இன வாதம் பேசவுமில்லை. மாறாக பெளத்த தர்மத்தை தேர்ந்தெடுத்தார். ‘ஒடுக்கப்பட்டவர்களை அந்நியப்படுத்த தாம் விரும்பவில்லை ‘ என்றும் கூறினார். கிறிஸ்தவத்திற்கான மதமாற்றம் தலித்களை தங்கள் வேர்களிலிருந்து அறுத்துவிடுவதாகவும் அவர் கூறினார்12.

6. வளர்ந்த கிறிஸ்தவ நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பாருங்கள். அங்கிருக்கும் மத சுதந்திரத்தை பாருங்கள். வணக்கத்துக்குரிய பாப்பரசர் உரோமாபுரியின் அருட் தந்தை ஜான் பால் II அவர்கள் அனைத்து மதஙகளிடமும் காட்டும் அன்பினைப் பாருங்கள். பல்லாயிரமாண்டு பாரம்பரியம் பேசும் பாரத நாட்டில் இத்தகைய பரந்த மனப்பான்மை அல்லவா வேண்டும். அதற்கு பதிலாக இந்த மனித உரிமை பறிக்கும் மத மாற்றத் தடைச் சட்டம் எதற்கு ?

எந்த வளர்ந்த நாடும் தனது சமுதாய வகுப்பு நல்லிணக்கத்தை விட்டு கொடுத்து மத சுதந்திரத்தை ஆதரித்து விடவில்லை. உதாரணமாக ஆஸ்திரியா 1998 இல் இயற்றிய சட்ட அடிப்படையில் ஹரே கிருஷ்ண இயக்க நடவடிக்கைகளை தனிப்பட்ட வழிபாட்டளவிற்கு மட்டுமென கட்டுப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கத்தோலிக்கர்கள் ரஷ்ய பழம் திருச்சபையினரை மதமாற்ற தடைச் சட்டம் உள்ளது. கிரீஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக கூறுகிறது, ‘தனிமனித மத சுதந்திரம் முழுமையாக அளிக்கப்படுகிறது. அதே சமயம் சமூக நல்லிணக்கத்தை கருதி மதமாற்றங்களைத் தடை செய்கிறது. ‘ அமெரிக்காவினைப் பொறுத்த வரை ஒவ்வொரு மதமாற்றமும் குடும்பத்தினரால் நீதிமன்றத்தில் ‘மூளைச்சலவையால் செய்யப்பட்டதல்ல ‘ என நிரூபிக்கும் படி கேட்கப் படலாம். ஆனால் மதமாற்றத்தால் தன் குடும்ப நபர்களை இழக்கும் எத்தனை சராசரி இந்திய குடும்பங்கள் அத்தகைய நீதியினை பெற முடியும் ? இந்திய குழந்தைகள் மதமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு கூட்டங்களாக மேற்கத்திய மதமாற்ற நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள். 1992 இல் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்ட போப் ஜான் பால் II கத்தோலிக்கர்களை மதமாற்றும் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளை ‘ஓநாய்த்தனமாக ‘ நடப்பதாக வர்ணித்தார். இம்மதமாற்றங்களை கட்டுப்படுத்த கத்தோலிக்க அரசுகளுக்கு அழைப்பும் விடுத்தார்.

தொடர்ந்து வெனிசூலேய அரசு உட்பட பல இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க அரசுகள் மதமாற்றத்துக்கு சட்டரீதியான தடைகளை அமுலாக்கின. கத்தோலிக்கர்களை மதமாற்றும் மிஷினரிகளை ‘ஓநாய்த்தனமுடையவையாக ‘ வர்ணித்த அதே போப் இந்தியாவில் தன் மிஷினரிகளை ‘ஆசிய ஆன்மாக்களை அறுவடை செய்ய அழைப்பு ‘ விடுத்தார்.

இன்று பல வளரும் நாடுகளின் சராசரி வருமானங்களை விடக் கூடுதலான பல பில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவில் ஆன்ம அறுவடை பணி மேற்கொள்ளப் படுகிறது. வளரும் நாடுகளின் இறையியல் பன்மை வளத்தின் மீது தொடுக்கப்படும் காலனிய போரே இது. மாபெரும் மனித சோகங்களையே கட்டுப்பாடற்ற மதமாற்றங்கள் விளைவித்துள்ளன. இந்நிலையில் மதமாற்றத் தடை சட்டம் மனித உரிமை பறிக்கும் சட்டமல்ல, வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் சட்டமே இது.

***

குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்:

***

1.1774 இல் ஐரோப்பாவில் முடிந்த புனித விசாரணை கொலைகள் கோவாவில் 1560 முதல் 1812 வரை தொடர்ந்தன என்று கோவா வரலாற்றாசிரியர்அல்பெர்டோ டிமெல்லொ தெரிவிக்கிறார்.

2. The Observer, 08 பிப்ரவரி 1999

3. பிடிஐ செய்தி , 13 ஜனவரி 2002 மற்றும் பிபிசி செய்தி 14,18 ஏப்ரல் 2000

4. புதன் கிழமை, 2 ஆகஸ்ட், 2000, 07:39 GMT பிபிசி செய்தி, இதை போல பல கூட்ட கொலைகளில் தலித்களை ஜிகாதிகள் கொன்றுள்ளனர்.

5. ப.பூ. தேவரஸ்ஜி நிகழ்த்திய மே 1973 நாக்பூர் பேச்சு

6.டச்சு அரசுடனான சிவாஜியின் வணிக ஒப்பந்தம், ‘இஸ்லாமிய ஆட்சியில் உங்களுக்கு கணக்கற்ற ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் என் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்படுகிறது. இதை மீறி அடிமை வியாபாரத்தில் ஈடுபட துணிந்தால் என் வீரர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ‘ English records on Shivaji VolெI பக்கம் 137.

7. தெற்கு சூடானில் இஸ்லாமிய மதகுருக்களின் உதவியுடன் அடிமை வியாபாரம் இன்றும் நடக்கிறது. சவூதி அரேபியா மிகவும் அண்மைக்காலத்தில் தான் (1950 களுக்கு பின்) அடிமை அமைப்பினை நிராகரித்தது எனினும் அடிமை முறை மற்றும் கொத்தடிமை முறை சவூதியில் இன்னமும் நடைமுறையில் உள்ளதாகவே சர்வ தேச மனித உரிமை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

8. ‘இறையுளத்தால் மனிதர்கள் சிருஷ்டியிலேயே தராதரமுடைய வகுப்பினராக உருவாக்கப்படுகின்றனர். ‘ தவறுசெய இயலா போப்பின் அருளாணை: ] Expositio in librum , போப் கிரெகாரி I (கிபி 600), 1912இல் வெளியான கத்தோலிக்க கலைக் களஞ்சியம் ‘அடிமை அமைப்பின் ஒழுக்கவியல் கூறுகள் ‘ என்ற தலைப்பில் வெளிட்ட கட்டுரை, அடிமைகளின் குழந்தைகளுக்கான உரிமை ஆண்டானிடம் இருப்பதற்கான ஒழுக்கவியல் நியாயம் குறித்த ஒரு கத்தோலிக்க ஒழுக்கவியலாளரின் மேற்கோளுடன் முடிகிறது. 1965 இன் இரண்டாம் வத்திகான் அடிமை அமைப்பினை கண்டித்தது. எனினும் இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையின் அதிகார பூர்வ கோட்பாட்டில் கொத்தடிமை முறையை விரும்பதகாததெனினும் பாவமாக ‘ கருதவில்லை. (பார்க்க:http://www.geocities.com/pharsea/Slavery.htm)

9. Notifications on the writings of Antony de Mella SJ, Congregation for Doctrine of the Faith, வெளியிடப்பட்ட நாள் : 24 ஜூன் 1998

10. அகிலத்திரட்டு, (203) ‘ஒரு வேதம் சிலுவை உலகெமெல்லாம் போடு என்பான்/ஒரு வேதம் தொப்பி… ‘

11. 1904/1905 இல் அய்யன் காளி திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டுமென்று மனு கொடுத்தார். 1912 இல் தலித்களின் நெடுமங்காடு உரிமை போராட்டத்தில் அவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

12.டாக்டர் அம்பேத்கர் மேற்கோள் காட்டப்பட்ட நூல், ‘Dalits and the Democratic Revolution: Dr Ambedkar and the Dalits in colonial India p. 230 ‘ ஆசிரியர் கையில் ஓம்விதத்.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்