சுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் ?

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

மஞ்சுளா நவநீதன்


சமீபத்தில் ‘தீரா நதி ‘ இதழில் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் வரும் ஒரு பத்தியைப் பற்றி மார்க்ஸ்-ம் பிரேமும் எழுதியதை நான் படிக்க நேர்ந்தது.

சுந்தர ராமசாமியின் வாசகங்கள் இவை :

‘ ‘நம் தமிழ் மண்ணில் அரைவேக்காடுகள், பிறரைப் பயமுறுத்த உதவும் என அவர்கள் நம்பும் நூல்களை மேய்ந்து விட்டு, நம்முன் வந்து நாள்தோறும் வாலைத் தூக்கிக் கழிப்பதைப் பார்த்து வருகிறோம். கழிக்கும் ஜென்மங்களுக்குள் இன்று கடுமையான போட்டி நிலவுவதால் ஏககாலத்தில் நிகழும் எண்ணற்ற கழிப்புகளால் நம் சுற்றுப்புறம் பாழ்படத்தான் செய்யும். ‘ ‘

சுந்தர ராமசாமி எழுதிய இந்த வாசகம் பற்றி மார்க்ஸ் சொல்வது இது. ‘இவர்களில் (அதாவது புத்தகங்களைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதுபவர்கள் – ம ந) பெரும்பாலோர், தொண்ணூற்றைந்து சதம் பார்ப்பனரல்லாதவர்கள் என்பதான உண்மையை நாம் இத்துடன் இணைத்துப் பார்த்தல் அவசியம். இவர்களும், இவர்கள் அறிமுகப்படுத்திய கோட்பாடுகளும் சென்ற இருபதாண்டுகளில் தமிழ் இலக்கிய சூழலின் உயிர்ப்புமிகு விவாதங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும், புதிய இலக்கிய விகசிப்புகளுக்கும் காரணமாய் இருந்துள்ளமையை யார் மறுக்க இயலும் ? இந்த இருபதாண்டுகளில் இங்கே தூசு கிளப்பிவிட்டிருக்கிற புதிய சிந்தனைகள், அரசியலற்றுப் போய் கிடந்த எழுத்து/சிந்தனைக் களங்களை மீள் அரசியலாக்கம் செய்கின்றன. பிரச்சினைப்படுத்துகின்றன. நிரந்தரம், உன்னதம், மரபு, சுகம் போன்ற ‘ஈசிசேர் ‘ கனவுகளை அதிரவிட்டிருக்கின்றன. இலக்கியச் சுகானுபவத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. ‘

சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள். எங்காவது தலித்துகள் எல்லாம் எழுத வந்துவிட்டார்கள் என்று அங்கலாய்க்கிறாரா ? அவர் சொல்வதெல்லாம், என்ன படித்தோம், அது இங்கு பேச பொருந்துமா என்றெல்லாம் கண்டுகொள்ளாமல், படித்ததை வாந்தி எடுத்துவிட்டு அறிவுஜீவி பட்டம் வாங்கிக்கொள்ள வந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்.பயமுறுத்தத் தம்முடைய படிப்பறிவை உபயோகிக்கிறார்கள் என்று தானே சொல்கிறார். என்ன தவறு இதில் ?

சுந்தர ராமசாமிக்கு நான் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. சுந்தர ராமசாமி சொன்னதில் பல உண்மைகள் இருக்கின்றன. அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. திண்ணையின் பக்கங்களில் மிக விரிவாக, ஜெயமோகன் அவரி விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே ஜாதி பார்த்து ஒருவரை விமர்சித்து பாரபட்சம் காட்டியது இல்லை என்பது இலக்கிய வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த சேதி. அவர் சிறந்த இலக்கியவாதிகளைச் சரியாக விமர்சனம் செய்யவில்லை என்று ஜெயமோகன் போன்றோர் விமர்சிக்கிறார்களே தவிர, அவர் சாதியவாதி என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. சொல்ல எந்தவிதமான காரணமும் இல்லை. ஆனால், சுந்தர ராமசாமி இவ்வாறு கண்டதைப் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை விமர்சனம் செய்தால், அதன் காரணம் ‘இப்போது எழுதுபவர்களில் 95சதவீதத்துக்கு மேல் பார்ப்பனரல்லாதவர்கள் அதனால்தான் இந்தக் காட்டம் ‘ என்று கண்டுபிடிக்கிறார் அ.மார்க ?.

அடுத்த தீராநதி இதழில் எழுதியிருக்கும் சுந்தர ராமசாமி, எப்படி பல எழுத்தாளர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகள் ஆதரவு இல்லாமலேயே பெரும் புகழ் பெற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் சிறந்த எழுத்தாளர்களில் எத்தனை பேர் பிராம்மணர்கள் ?

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் போல, பார்க்கும் திசையெங்கும் பார்ப்பனச் சதிகளைப் பார்க்கும் அ.மார்க்ஸ் அவர்களுக்கு, சுந்தர ராமசாமியையும் பார்ப்பன முத்திரை குத்துவதில் பலன் இருக்கிறது.

எதிராளியின் கருத்தை எதிர்கொள்வதற்கு வசதிப்படவில்லை என்றால் உடனடியாக ஒரு பிரம்மாஸ்திரத்தை வீச வசதியாக இந்த ‘பிராமணர் ‘ வார்த்தை கிடைத்துள்ளது என்று எண்ணுகிறேன்.

இந்தக் கட்டுரையிலேயே இன்னொரு நண்பர் – இவரும் பிராமணர் – மார்க்ஸிடம் பேசும்போது கொடுத்த எதிர்வினை பற்றியும் எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

மார்க்ஸின் மேற்கோள் தொடக்கம்:

‘1. வகுப்புவாதக் கலவரங்கள் எல்லாவற்றிற்கும் வெறும் வகுப்பு வெறுப்பே காரணமாக இருப்பதில்லை. பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு வகுப்புவாதச் சாயம் பூசப்படுகிறது.

2. பெரியாரும் திராவிட இயக்கங்களும் இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் முதன்மைப்படுத்தி எதிர்த்து வந்ததுதான் இன்று சாதீயம் இறுக்கமடைந்ததற்கும், சாதிக் கலவரங்கள், சாதிப் பெருமைகள் உருப்பெறுவதற்கும் காரணம்.

3. இந்து மதத்தை, பிராமணீயத்தை எதிர்ததற்காகவே பவுத்த, சமண மதங்களை வரவேற்றுவிட இயலாது. அவை

பின்னாளில் இந்து மதத்தையும் விட மோசமாகச் சீரழிந்தன. (இந்த மூன்றும் மார்க்ஸின் கருத்தல்ல. பேசப்படும் நண்பரின் கருத்து – ம ந.)

அவருடைய எல்லாக் கருத்துகளையும் தொடர்ந்து மறுக்க வேண்டாம் எனச் சற்றே ஒதுங்கியிருந்த நான் பவுத்த, சமண மதங்களைப் பற்றி அவர் சொன்னபோது குறுக்கிட்டேன்.

திராவிட இயக்கம் நூறாண்டுகால வரலாறுடையது; பவுத்த சமண அவைதீக மதங்கள் சுமார் 2500 ஆண்டு கால வரலாறுடையன. இன்றைய நிலையைக் கொண்டு அவற்றின் தொடக்க கால நியாயங்களை மறுத்துவிட இயலாது.

இந்து சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வுகளுக்கும், வருணாசிரமமாக அவற்றைக் கோட்பாட்டுருவாக்கம் செய்ததற்கும் எதிர்வினையாக உருவான பவுத்த சமண அவைதீக மதங்களை இதுவரை அம்பேத்கரியர்களும், இடதுசாரிகளும் மிகவும் முற்போக்கானவையாகவே பார்த்து வந்துள்ளனர். ஒரேடியாக அவற்றின் முற்போக்குப் பாத்திரத்தை நீங்கள் மறுப்பது சரியாக இல்லை. விவாதத் தொடக்கம் முதல் நீங்கள் மேற்கொள்கிற நிலைப்பாடுகள் கவைலயளிக்கின்றன என என் அச்சத்தை முன்வைத்தபோது நண்பர் அதனைக் கடுமையாக எதிர்கொண்டார்.

‘ ‘இப்படித்தான் நீங்கள் உடனடியாக முத்திரை குத்துவீர்கள். அடுத்தகட்டமாக என்னைப் பார்ப்பான் என்பீர்கள் ‘ ‘ என்று படபடத்தார்.

அவர், நான் மிகவும் மதிக்கும் நண்பர்களில் ஒருவர். அவரை நான் இதுவரை பார்ப்பனராக யோசித்ததுமில்லை. பல்வேறு அம்சங்களில் என்னுடன் மிகவும் கருத்து ஒன்றுபடக்கூடியவர் அவர். எனினும் சுமார் மூன்றாண்டுகளுக்குப் பின்பு அவரைச் சந்தித்த போது இப்படியாக அவர் கோபப்பட்டதும், தனக்குத்தானே முத்திரை குத்திக் கொண்டதும் எனக்குச் சற்றே அயற்சியை அளித்தன. ‘

மார்க்ஸின் மேற்கோள் முடிவு.

இந்த உரையாடலும் , நண்பரின் எதிர்வினையும் மார்க்ஸிற்கு அயர்ச்சி அளித்தது – அதாவது நான் அப்படியெல்லாம் முத்திரை குத்தக் கூடிய ஆள் இல்லை என்று பொருள்பட எழுதிய மார்க்ஸ், அடுத்த பத்தியிலேயே சுந்தர ராமசாமியின் கருத்தை பிராமணக் கருத்தாகக் குறிப்பிடுவது கவனிக்கப் படவேண்டியது.

***

அ.மார்க்ஸ் சொல்வதில் சமணம் பவுத்தம் பற்றிச் சொல்வதில் உண்மை இருக்கிறது. சனாதன இந்து மதத்துக்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை தாங்கி வந்த மதங்கள் அவை. இந்துமதம் சீர்படவும், தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொண்டு புனரமைக்கவும், நிச்சயமாக பெளத்த மதமும், சமண மதமும் உதவின என்பதில் மார்க்ஸ் கருத்துடன் நான் உடன்படவே செய்கிறேன். ஆனால், ஏன் அவரது நண்பர், அ மார்க்ஸ் வார்த்தையில் ‘படபடத்தார் ‘ ? இப்படிப்பட்ட படபடப்பு ஏற்படும்படியாகத் தானே கடந்த 75 வருடங்களாய் இங்கே விவாதங்கள் நடைபெறுகின்றன ? இந்தியச் சூழலில் மார்க்ஸியத்தைக் காண வேண்டும் என்று சொன்னதற்காக கோவை ஞானியை பிராமணியக் கருத்தாளர் என்று முத்திரை குத்தவில்லையா இவர்கள் ? இந்த நண்பர் ‘படபடத்தார் ‘ என்று எழுதிச் செல்லும் மார்க் ? அப்படிப்பட்ட படபடப்பை ஏற்படுத்தும்படியாகத் தான் தன் அணுகுமுறை என்று உடனேயே, இந்தக் கட்டுரையிலேயே நிரூபித்திருக்கிறார்.

மார்க்ஸ் அதே கட்டுரையில் கீழே சுந்தர ராமசாமிக்கு எதிராக இந்த முத்திரை குத்தலைச் செய்திருக்கிறார். சிறந்த கட்டுரையாளரை, சிறந்த நாவலாசிரியரை, சிறந்த விமர்சகரை, பார்ப்பனர் என்று முத்திரை குத்துகிறார். காரணம், இன்று பலர் ‘ கண்டதைப் படித்துவிட்டு, படித்ததைப் புரிந்து கொள்ளாமல் மேற்கோள் காட்டிப் பிழைக்கிறார்கள் ‘ என்று சொன்னதற்காக. மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகத் தம் படிப்பறிவைப் பயன் படுத்துகிறார்கள் என்று சொன்னதற்காக.

சுந்தர ராமசாமி சொல்வது இன்னும் தீவிரமானது. பிராமணியக் கருத்தாக்கம் என்று கல்விச் செருக்கையும், புரிபடாத ஏட்டுப்படிப்பை முன்னிறுத்தி அச்சுறுத்துவதையும் நாம் புரிந்து கொண்டால் , இந்த பிராமணியக் கருத்தாக்கத்திற்கு நேர் எதிரான ஒரு கருத்தை அல்லவா சுந்தர ராமசாமி சொல்கிறார் ?

படியுங்கள். எதைப் படித்தாலும் அதனைக் கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்காமல் படித்துவிட்டு, அதனை ‘வேத வாக்காக ‘ எடுத்துக்கொண்டு பேசாதீர்கள் என்று சொல்கிறார். ஒரு காலத்தில் பிராமணர்கள் ‘வேதத்தை ‘ கேள்வி கேட்காமல் ஒப்புக்கொண்டு அதன் அடிப்படையிலேயே உலகத்தை புரிந்து கொள்ளவும், அதனை மேற்கோள் காட்டுவதே பிழைப்பாகவும் செய்து வந்தார்கள். இன்று அந்த வேலையை, வேறு சிலர் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா இது தொனிக்கிறது ?

பலரும், இங்கே விட் கென்ஸ்டைனிலிருந்து, ஹஸ்ஸர்ல் வரை முரண்பட்ட சிந்தனையாளர்களைக் கூட ஒன்று போல ஒரே வரியில் பேசுகிறார்கள். இந்த ஆட்களைப் படித்தார்களா அல்ல, பெயரை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களிடம் சிலம்பம் ஆடுகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் இன்றைய அறிவுஜீவிகளை விமர்சனம் செய்யாமல் என்ன செய்வது ? விமர்சனம் செய்தால், உடனே பார்ப்பன மேலாண்மை போகிறது என்று அழுவதாக சுந்தர ராமசாமிக்கு திட்டு வேறு.

இந்த முத்திரை குத்தும் கலையில் வல்லவர்கள் இடதுசாரிகள். பாஸிஸ்டு, எதேச்சதிகார அடிவருடி, திரிபுவாதி இப்படி. நேற்று மார்க்ஸியர்களாய் இருந்து இன்று பெரியாரிஸ்டுகளாய் ஆனவர்களுக்கு இது இன்னமும் செளகரியம். முதலாளித்துவ அடிவருடியை அப்படியே பார்ப்பன அடிவருடி என்று மாற்றிவிட்டால் கோட்பாட்டு அணுகலும் மாறிவிடும். முத்திரைகள் தான் கோட்பாடு போலும். அதில் பார்ப்பனரே சிக்கிக்கொண்டுவிட்டால் கேட்கவே வேண்டாம். மேற்பட்ட பார்ப்பன சிந்தனையாளர் படபடத்ததிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், எப்படிப்பட்ட ஒரு கருத்து ரீதியான அடக்குமுறையும், முத்திரை குத்தலும் இங்கே உள்ளன என்பதற்குச் சான்றாய். கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்வதற்குப் பதிலாக சாதியைப் பார்த்து எதிர்வினை ஆற்றுகிற ஒரு செயலை அறிவுலக தர்மமாய்க் கொண்டுவிட்டது இன்றைய பகுத்தறிவு முற்போக்குக் கருத்துலகம்.

அ.மார்க்ஸ் சொல்வது இதுதான். நான் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொண்டு , திருப்பிச் சொல்லும் வரை, நான் உன்னை பார்ப்பனன் என்று சொல்லமாட்டேன். ஆனால், நான் சொல்லும் கருத்துக்களை குறுக்கு விசாரணை செய்தால், நீ பார்ப்பன மேலாண்மையை நிறுவுபவன், அல்லது பார்ப்பன அடிவருடி. (அது என்னமோ தெரியவில்லை இந்த ‘பார்ப்பன அடிவருடி ‘ என்ற வார்த்தை தமிழ் அகராதியில் ஏறியது திராவிட இயக்கங்களின் பங்களிப்பு. இதுபோல் ‘நாடார் அடிவருடி ‘, ‘வன்னியர் அடிவருடி ‘ ‘முதலியார் அடிவருடி ‘ என்றோ ஏன் வார்த்தைகள் உருவாகவில்லை என்று யோசிப்பதுண்டு. காரணம் வெளிப்படை. இந்த விதத்தில் திராவிட இயக்கங்களுக்கு வெற்றி தான்.)

***

சுந்தர ராமசாமியை பார்ப்பனரென்று திட்டுவது அ.மார்க்ஸ் மட்டும் செய்வதல்ல. பன்முகம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளர் பிரேம் அவர்களும், சுந்தர ராமசாமியின் அதே வரிகளை எடுத்துக்கொண்டு, பார்ப்பன மேலாண்மையை நிறுவ முயல்கிறார் என்று சுந்தர ராமசாமியைக் குற்றம் சாட்டுகிறார். இருவரும் சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதுகிறார்கள்.

பிரேமின் கட்டுரையிலிருந்து மேற்கோள் தொடக்கம்:

‘ஒரு பெரும் பத்திரிகையில் கேள்விபதில் என்பது ஒரு சனநாயகக் களம் என்ற அடிப்படையில் இதை வாசித்து பார்த்தபோது பலவிதமான ஞான உபதேசங்களையும் வேத வாக்குகளையும் உடைய பீடிகையொன்றை சுந்தர ராமசாமி எழுதி இருந்தார் . அதில் நாம் ‘ உலகம் தன்னகத்தே புதைத்துக் கொண்டிருக்கும் அறிவின் பேரளவை ‘ பலவற்றாலும் புரிந்துகொள்ள முடிந்தாலும் மிகக் கசப்பான உண்மையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுதான் பிராமண மனம் எவ்வளவுதான் மூடுதிரைகள் போட்டாலும் தனது சனநாயக பன்மைத்துவ எதிர்ப்பை தனக்குள் குறையாமல் காத்துவருகிறது என்பது .

திரு சு ரா அவர்களை ஏதோ ஒரு வகையில் நவீன எழுத்தாளராகவும் அதன்மூலமே பன்மைத்துவ சனநாயக ஆதரவாளராகவும் நாம் எதிர்பார்த்து வந்திருக்கிறோம். இவரது பண்பட்ட ‘ ‘ சுயமான உண்மைகளை கண்டடையும் ஆவேசத்தில் மூழ்கிய ‘ ‘ எழுத்து எப்படி வெளிப்படுகிறது என்று பார்ப்போம். ‘ நம் தமிழ் மண்ணில் அரைவேக்காடுகள் பிறரை பயமுறுத்த உதவும் என அவர்கள் நம்பும் நூல்களை மேய்ந்துவிட்டு நம் முன் வந்து நாள்தோறும் வாலைத்தூக்கி கழிப்பதை பார்த்து வருகிறோம். கழிக்கும் ஜென்மங்களுக்குள் இன்று கடுமையான போட்டி நிலவுவதால் ஏக காலத்தில் நிகழும் எண்ணற்ற கழிப்புகளால் நம் சுற்றுப்புறம் பாழ்படத்தான் செய்யும் .நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாம் இந்த மண்ணில் வாழ விரும்புகிறோம். சுற்றுப்புறத்தை இயன்றளவு சுத்தப்படுத்த விரும்புகிறோம் ‘

பலநூறு வருடங்களாக அறிவும் வாசிப்பும் மறுக்கப்பட்டவர்கள் சிந்தனைத்துறையில் அறிவுத்துறையில் புகும்போது ஓடி ஓடி தாங்கள் நம்பும் /நம்பாத நூல்களைபடிப்பதென்பது இயல்பே. இந்த வேகம், வெறியே அவர்களை விடுவிக்கும் சக்தி. அறியாமை பற்றிய சுயபோதத்தால் வந்ததுதான் இது. ஆனால் பலவகைப்பட்ட அறிவு என்பது கழிவு என்றும் , சுற்றுப்புறத்தை பாழ்படுத்தும் ஒன்று என்றும் பிராமண மரபுதான் சொல்லிவருகிறது.தான் நம்புவதைத்தவிர வேறு எதுவுமே அறிவு அல்ல, அறம் அல்ல , தர்மம் அல்ல எனும் கொடுங்கோன்மை இது. சமீப காலமாக உருவாகி வரும் பன்மையறிவுக்கு எதிரான மிகக் காட்டமான எதிர்வினை இது.

சுற்றுப்புறத்தை இயன்றவரை சுத்தப்படுத்த முயலும் இவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள்தான் உண்டு .எண்ணற்ற ஜென்மங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது . மேய்வதற்கான நூல்களை தடை செய்வது . இந்த மண்ணில் வாழ விரும்பும் இவர்கள் வேறு என்ன செய்வதற்கு இருக்கிறது ? சனநாயகத்துவத்துக்கும் பன்மைத்துவத்துக்கும் பிற சுதந்திரங்களுக்கும் பிராமணியத்துக்கும் எந்தகாலத்தில் உறவு வரும் ? சு. ராவிடம் கேளுங்கள் .அதுவரை சும்மா கிடக்கட்டும் இந்த சூத்திர ஜென்மங்கள் .

சுந்தர ராமசாமி ,நகுலன் ,வெங்கட் சாமிநாதன் மற்றும் இவர்களுக்கு முன்னான சி சு செல்லப்பா ,க நா சு முதலியவர்களால் வளர்த்து எடுக்கப்பட்ட கலை இலக்கியத்துவ விவாதங்கள் எல்லாமே எந்த ஒரு தத்துவக் கோட்பாடு சார்ந்தோ அல்லது கலையிலக்கியக் கோட்பாடு சார்ந்தோ விவாததை முன்னெடுத்தவையல்ல. மாறாக எல்லாமே வெற்று அபிப்பிராயம் சார்ந்தவை . இவற்றுக்கு மாறாக எஸ்வி ராஜதுரை ,ஞானி, தமிழவன் ,பிரம்மராஜன் போன்றவர்கள் தத்துவப்பள்ளிகள் சார்ந்தும் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தும் உரையாடல்களை தமிழ் சூழலில் வளர்த்தவர்கள் . இவர்கள் பிராமணச் சிறுபத்திரிகை ‘ அபிப்பிராய மரபுக்கு ‘ எதிராக ‘அறிவு விவாத மரபை ‘ தமிழ் சூழலில் வளர்த்தவர்கள் .

இந்த அறிவு விவாத மரபு என்பது பலவிதமான பன்மைப்போக்குகளைகொண்டதால் பல்வேறு விலகல்களையும் முரண்களையும் கொண்டே வளர்கிறது. இந்தப்போக்கின் தத்துவார்த்த சொல்லாடல்களை எந்த இடத்திலும் இதுவரை அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாத சுந்தர ராமசாமி பெரும்பத்திரிகை ஹோதாவில் இறங்க கிடைத்த வாய்ப்பை இந்த அறிவுவிவாத மரபை எள்ளி நகையாடவும் அதன் மீது எந்தவித விமரிசனமும் இல்லாமல் தாக்குதலை செய்யவும் கும்பலை திரட்டுகிறார் .

இந்நிலையில் பல காலங்களாக பேசிவரும் பலதரப்பட்ட பிராமண அறிவுசீவிகளின் பேச்சுகள் எழுத்துக்களினூடாக அறிவின் பயணம் முடிவற்று தொடரும்போது அனைத்துக்கும் அடிப்படை நியதி ஒன்றை மனம் [!] தேடத்தொடங்கும்போது [அவற்றின் உண்மைவடிவில் ]அறிந்தவை மட்டு என்றும் அறியாதவை கடல் என்றும் [சூத்திர தலித்துகளுக்கு ] தெரியத்தொடங்குகிறது ‘

பிரேமின் மேற்கோள் முடிவு.

பிரேமின் வார்த்தைகளை மேலே தந்துள்ளேன். மார்க்ஸ், பிரேம் இருவருமே சுந்தர ராமசாமியை அறிவுப்பரவலுக்கு எதிரானவராகத் தூக்கி நிறுத்த முயல்வது ஏன் ? சுந்தர ராமசாமி அறிவு விவாத மரபுக்கு எதிராக எங்கே இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார் ? அவர் பிராமணியக் கருத்தின் பிரதிநிதியாகவா இந்தக் கட்டுரையில் தோன்றுகிறார் ? எஸ் வி ராஜதுரை , பிரம்மராஜன் போன்றவர்களுக்கு ‘காலச்சுவடு ‘ பத்திரிகையில் சுந்தர ராமசாமி இடம் தரவில்லையா ? இவர்கள் மீது சுந்தர ராமசாமிக்கு என்ன பகைமை ? தம்முடன் கூட்டுச் சேர்த்துக் கொள்வதற்காகத் தான் பிரேம் இவர்கள் பெயரை உபயோகிக்கிறார் என்று சொல்லலாமா ? ஜனநாயகத்தையும் , பன்முகத்தன்மைகளையும் எதிர்க்கிற வாக்கியம் எங்காவது சுந்தர ராமசாமியால் எழுதப் பட்டிருக்கிறதா ? பலவகைப் பட்ட அறிவையா சுந்தர ராமசாமி கழிவு என்கிறார் ? இல்லவே இல்லை. அறிவை முன்னிறுத்தாமல், சுய சிந்தனையற்று வெறும் புத்தகங்களின் பெயரையும், ஆசிரியர்கள் பெயரையும் வீசுவது பற்றியல்லவா சொல்கிறார் ? அறியாதவை கடல் , என்ற பொதுவான வாக்கியம் சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டுள்ளது. அறியாதவை கடல் சூத்திர தலித்துகளுக்கு என்று எங்காவது சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறாரா ? இதை பிராமணக் கருத்துருவம் என்று சொல்வதற்கு எங்கே என்ன ஆதாரம் இருக்கிறது ? இந்த வாக்கியத்தை, தமிழ் தெரிந்த யார் படித்தாலும், இது பயமுறுத்தலுக்கு அறிவைப் பயன்படுத்துகிறவர்களுக்கு எதிராக என்று தானே தோன்றும். மார்க்ஸ்-கும், பிரேமுக்கும் மாத்திரம் எப்படி இது பிராமணியக் கருத்தாக புலப்படுகிறது ? சுந்தர ராமசாமி பிராமணர் என்பது தான் இந்த வெறுப்பாய் வெளிப்படுகிறதே தவிர, வேறு காரணம் இல்லை. இந்த அர்த்தமற்ற வெறுப்புக்கு கோட்பாட்டு மெருகு ஏற்றிவிட்டால் , தலித்களுக்கு பார் சுந்தர ராமசாமி உன் எதிரி என்று காட்டி விடலாம் என்ற எண்ணம் தான் இருவருக்கும். ஆனால் தலித் இப்படியெல்லாம் ஏமாறுபவர்கள் அல்ல.

ஒரு கருத்து எப்போது ஒரு கருத்துருவத்தின் பிரதிபலிப்பு ஆகிறது ?

ஒன்று : நிறுவனமயமாக்கப் பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தம்முடைய கருத்துகளை வெளியிடும்போது. உதாரணமாக மு கருணாநிதி ஒரு கருத்தைச் சொன்னால், அது தி மு க என்ற அமைப்பின் கருத்து என்று சொல்லிவிடலாம். ராம்தாஸ் ஒரு கருத்தைச் சொன்னால், அது பா ம க வின் கருத்து என்று சொல்லிவிடலாம். ஆனால் நான் எல்லா வன்னியர்களுக்குமாகப் பேசுகிறேன் என்று அவர் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னாலும் அவர் கருத்துக்காக, என் வீட்டுக்கு அருகில் உள்ள வன்னியரிடம் சென்று இதுதான் வன்னியரியமா என்று நான் கேடுவிட முடியாது.

இரண்டு : ஒரு கருத்தின் அடிப்படை அம்சங்கள் வெளியிடும்போது. இனவாதம் , கறுப்பர்களைத் தாழ்வு என்று பேசினால் உடனே இதனை இனங்காண முடியும். யூதர்களைத் தாக்கும்போது உதாரணமாய் வெளிநாடுகளில் பணமூட்டைகள் என்ற குழூவுக் குறியைப் பயன் படுத்துகிறார்கள். இந்தப் பிரயோகம் வரும்போது உடனே இந்தக் கருத்தை அடையாளம் காணமுடியும்.

ஆனால் ஒரு தனிமனிதன் பேசும்போது எந்தக் குழுவின் பிரதிநிதியாக இந்தத் தனிமனிதனை நிறுத்திப் பேசமுடியும் ? அவனுக்குப் பல பாத்திரங்கள் இருக்கலாம்.

சுந்தர ராமசாமி அவர்களை, இந்த வாசகத்தை வைத்துப் பலவேறு முறையில் பார்க்கலாம்.

சுந்தர ராமசாமி வயதானவர், இப்போது எழுதுவர்கள் எல்லாம் இளைஞர்கள். இது அவருக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம்.

சுந்தர ராமசாமி நாகர்கோவில்வாசி, இப்போது எழுதுபவர்கள் எல்லாம் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் . இதனால் இவருக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லலாம்.

சுந்தர ராமசாமி ஓர் ஆண். இப்போது பெண்கள் நிறைய எழுத ஆரம்பித்துவிட்டார்கள் . இது சுந்தர ராமசாமிக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் இப்படியுள்ள குழுக்களின் பிரதிநிதியாய் அவர் இல்லாமல், பிராமணர் என்ற அடையாளத்தை அவர் மீது ஏற்றுவதுதான் மிக இயல்பானதாய் இவர்களால் செய்யப் படுகிறது. இதுவே இயல்பானது என்று கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒரு பொய் பரப்பப்பட்டு எஸ்டாபிளிஷ்மெண்ட் ஆகிவிட்டது.

எத்தனை எத்தனையோ உடைகளில் சுந்தர ராமசாமியைப் பார்க்கலாம் என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏன் அவரை பார்ப்பனர்களின் பிரதிநிதியாகப் பார்க்க வேண்டும் ?

எளிய விஷயம். கடந்த 100 வருடங்களில், பிரிட்டிஷ் அரசாங்கமும், பின்னர் திராவிட இயக்கமும், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பாகுபாட்டை எஸ்டாபிளிஷ்மெண்ட் சிந்தனையாக ஆக்கியிருக்கிறது. (இந்தப் பாகுபாடு இந்திய மரபில் 2000 வருடத்தில் எங்குமே இல்லை. மூவர்ணத்தாரும், தீண்டத்தகாதாரும் தான் எப்போதும் பிரித்துப் பேசப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பிராமணர் , பிராமணரல்லாதார் என்று பிரித்து அந்தப் பிரிப்பை இயல்பாய் ஆக்கியதன் மூலம் பிற மேல்சாதியினர் ஒரு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். அதாவது சாதியத்தின் கொடுமைக்கு தம்முடைய பொறுப்பை வேறு குழு ஒன்றின் மீது சுமத்தித் தப்பிக்கச் செய்யும் முயற்சி இது. இந்த முயற்சி வெற்றியும் பெற்றிருக்கிறது.) இந்த சிந்தனைக்கு மாற்றாக சிந்திப்பது இன்று கலகமாகி விடுகிறது. யார் என்ன சொன்னார் என்று கவனிக்காதே, அவன் பார்ப்பானா இல்லையா என்று பார் என்பது முக்கியமாகிவிட்டது. இதனால், நாஸ்திக சிந்தனை கொண்ட பிராம்மணர்கள் கூட, சாதியத்தை எதிர்க்கும் பிராமணர்கள் கூட, இதே எஸ்டாபிளிஷ்மெண்ட் சிந்தனைக்குள் வரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. அப்படி பேசினால்தான் முன்னேற்றச் சிந்தனை உள்ளவன் என்ற பட்டம் கிடைக்கும் என்ற கட்டாயம்.

கண்ணகி சிலை பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்ததற்காக , ஞாநியை திண்ணை பக்கங்களிலும், நந்தனிலும் பார்ப்பனர் என்று திட்டிய அருணாசலம் போன்றவர்களும், சுந்தர ராமசாமியை பிராமணக் கருத்தாளர் என்று வரையறுக்கும் மார்க்ஸ், பிரேம் போன்றவர்களும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றனர். திண்ணையில் ஞாநி கண்ணகி சிலை அகற்றியதை ஆதரித்து எழுதியதற்கு எதிர்வினை ஆற்றிய அருணாசலம் போன்றவர்களும் தம்மை சூத்திரர்களாகவும் , ஞாநியைப் பிராமணராகவும் கண்டது நினைவிற்கு வருகிறது. அதே போல் இப்போது சுந்தர ராமசாமி பிராமணிய அறிவுச் செருக்கிற்கும், புத்தகத் தனமான குழப்பக் கருத்துக்கும் எதிர்வினை ஆற்றும் போது பிராமணர் என்று முத்திரைகுத்தப்படுகிறார். பிரேமும், மார்கஸ்-ம் சூத்திரர்கள் ஆகிவிடுகின்றனர்.

திராவிட இயக்கம் தோற்றுவித்த ஜாதிவெறி, இனவெறி, மொழி வெறி இன்று எஸ்டாபிளிஷ்மெண்ட் சிந்தனையாக ஆகிவிட்டது. திராவிட இயக்கச் சிந்தனைதான் இன்று சரியான அரசியல் என்ற ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டு நிரந்தரம் கொண்டுவிட்டது. Politically Correct என்பது இது தான். இந்த திராவிட இயக்கச் சிந்தனையில் இருக்கும் ஜாதிவெறியும், மொழி வெறியும் இனவெறியும் பொலிடிகலி கரெக்ட். இந்த இனவாதத்திற்கு எதிராகக் கருத்துச் சொன்னால் பிராமண அடிவருடி.

ஒரு சிறுபான்மையினரை எதிர்க்கும் இந்துத்வா இயக்கம் சொல்வது பாஸிஸம். இன்னொரு சிறுபான்மையினரை எதிர்க்கும் திராவிட இயக்கம் சொல்வது முன்னேற்றம். இஸ்லாமியரை வெளியிலிருந்து வந்தவர்கள் என்று சொல்பவர்கள் ஃபாசிஸ்ட். பிராமணர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று சொல்பவன் பகுத்தறிவாளன். இரண்டுக்குமே வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டுதான். ஆனால், பழைய வரலாற்று ரீதியான காரணங்களை வைத்து இன்று ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரை அரசியலிருந்து ஒதுக்கும் வேலைகளைச் செய்யும் இரண்டுமே சரியானதல்ல. இதைச் சொல்லும் நான் இரண்டு கும்பலுக்குமே விரோதி.

***

சுந்தர ராமசாமியின் இந்த வார்த்தைகளுக்கு எனக்கும் விமர்சனம் உண்டு.

ஒன்று; இது போன்ற கழிவுச் சொற்கள் வாசகமாய் – Scatology – இல்லாமலே, அவருக்கே உரிய அங்கதத்துடன் இதே கருத்தைச் சொல்லியிருக்கலாம். அதுவும் குறி வைக்கப்பட்டவர்களைத் தைத்துத் தானிருக்கும்.

இரண்டு : இது எவர் பற்றியது என்று வெளிப்படையாகவே பெயர்களைச் சொல்லியிருக்கலாம். யாருடைய எந்தச் செயல்பாடு பற்றியது இந்த விமர்சனம் என்று சொல்லியிருந்தால் பொத்தாம் பொதுவான கருத்தாக இது உதிர்ந்திருக்காது. இதோ என்று இவர் தொப்பிகளை வீசப் போக எனக்குத் தான் , எனக்குத் தான் என்று மார்க்சும், பிரேமும் முன்வந்து அணிந்து கொள்ள முற்பட்டிருக்க மாட்டார்கள்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்