மஞ்சுளா நவநீதன்
சூலைத் திங்கள் 8ம் தேதி 2002- இந்தியாவின் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப் படவேண்டிய ஒரு நாள். இந்த நாளன்று தான் இந்தியாவின் அனைத்து அரசியல்சாதிகளும் (அதாவது அரசியல்வாதி என்ற சாதி) ஒன்று சேர்ந்து இணைந்த கருத்தை உருவாக்கினார்கள். எதற்காக ? இந்தியாவின் வறுமையை ஒழிக்க திட்டம் வகுக்கவா ? அல்ல. மனித உரிமைகளை நிலைநாட்டவா ? அல்ல. கங்கை காவிரி இணைப்புக்குத் திட்டம் தீட்டவா ? அல்லவே அல்ல. நூறுசதவீதப் படிப்பறிவை மக்கள் எட்டுவதற்குத் திட்டம் தீட்டவா ? இல்லை. வேறு எதற்காக ? தேர்தல் கமிஷன் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் போது எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதற்காக. இதில் மதச்சார்பற்றவர்களும், மதவாதிகளும், மிதவாதிகளும், தீவிரவாதிகளும் , திரிபுவாதிகளும், புரட்சிவாதிகளும் எல்லோரும் ஒன்று பட்டுவிட்டார்கள். பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக, அதிமுக, ரஷ்யா கம்யூனிஸ்ட், சீன கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் லெலினிஸ்ட் மாவோயிஸ்ட் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது போட்ட கூட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.
அப்படி என்ன தேர்தல் கமிஷன் கேட்டு விட்டது ? தேர்தலில் நிற்பவர்களின் குற்றப் பின்னணியை அறிவிக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. இன்னொரு கோரிக்கை சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்பது. மற்றொரு கோரிக்கை கல்வித்தகுதியை அறிவிக்க வேண்டும் . இந்த மூன்று கோரிக்கைகளில் என்ன தவறு இருக்க முடியும் ?
சொத்து விபரங்களை தேர்தலில் நிற்கும் போது அறிவிக்கத் தேவையில்லை, தேர்தலில் வெற்றி பெற்றால் அறிவித்தால் போதும் என்று ஒரு விதியுடன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஏன் சொத்துக் கணக்கை முன்னாலேயே அறிவித்தால் என்ன ? எல்லா வளர்ந்த நாடுகளிலும், ஒவ்வொரு நாடாளுமன்ற வேட்பாளர்களின் வரி மற்றும் சொத்து விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்வையிடும் வண்ணம் பொதுவாக வைப்பது வழக்கம்.
கல்வித்தகுதியைக் கேட்டு அறிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமையில்லையா ? பாகிஸ்தானில் கல்வித் தகுதி – பட்டதாரியாய் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இந்தியாவில் அப்படிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. அது விரும்பத்தக்கதும் அல்ல . (கல்வித்தகுதி ஒரு அவசியத் தேவை என்றால் காமராஜர் கூட தேர்தலில் நின்றிருக்க முடியாதே.) ஆனால் கல்வித்தகுதியை வெளிச்சொல்வதில் வேட்பாளர்களுக்கு. என்ன தயக்கம் இருக்க முடியும் ? ஏன் இருக்க வேண்டும் ? இதில் ரகசியம் என்ன வேண்டியிருக்கிறது ?
சிறையில் எத்தனை முறை என்ன காரணத்திற்காகச் சென்றார்கள் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு ? அரசியல் காரணங்களுக்காகச் சிறை சென்றவர்களுடன், குற்றங்களுக்காகச் சிறை சென்றவர்களை மக்கள் குழப்பிக் கொள்வார்கள் என்று காரணம் சொல்லப் படுகிறது. மக்கள் முட்டாள்கள் என்பது தான் இந்த அரசியல்சாதியின் கணிப்பு போலும்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று அவ்வை சொன்னது உண்மை தான். ஒன்று அரசியல்வாதிகளின் சாதி. அரசியலில் ஈடுபட்டு எம் எல் ஏ , எம் பி ஆகி ஊரைக் கொள்ளையிடும் சாதி. இன்னொன்று ஏமாளிகளாய் வாக்களித்துவிட்டு, தலைவர் வாழ்க கோஷம் போட்டுவிட்டு தம்முடைய கட்சி (அல்லது நம்முடைய மதக்கட்சி, அல்லது நம்முடைய சாதிக்கட்சி) ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஏதும் நல்லது நடக்கும் என்ற நப்பாசையில் வாழும் ஏமாளிச் சாதி.
அரசியல் சாதி , கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒன்று சேர்ந்து விட்டது ஏமாளிச் சாதியான வாக்காளப் பொது மக்கள் கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒன்று சேர்ந்து இந்தப் போக்கை உடனடியாக எதிர்க்க வேண்டும். தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் மாறாமல், நீர்த்துப் போகச் செய்யாமல் பின்பற்றப் படவேண்டும் என்பதற்காகப் போராட வேண்டும்.
***
சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டது பல கட்சிகளுக்கு பல விதங்களில் பிரச்னை என்பது மிகவும் தெரிந்ததுதான். காங்கிரஸ் கட்சிக்கு, கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துவதும், சோனியா காந்தியின் படிப்பை வெளிப்படையாகச் சொல்வதும் பிரச்னை என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. பாஜக தலைவர்களில் பலர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கிரிமினல்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர்கள் பலர் உண்மையிலேயே கிரிமினல்களாக குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, இந்த வேட்பாளர்களின் சொத்துக்கணக்கு வெளிவருவது, பலருக்கு பல விதங்களில் அதிர்ச்சியை தரலாம். தங்களை ஏழைகள் போல காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களிலிருந்து, காங்கிரஸ் தலைவர்களிலிருந்து, பாஜக தலைவர்களிலிருந்து நம் பிராந்திய இனவெறி கட்சிகள் வரை எல்லோரும் கொழுத்த பணக்காரர்கள் என்பதும், இவர்களுக்கு இருக்கும் சொத்துக்கள் பற்றிய விவரம் வெளிவந்தால், தன்னை ஏழையாகக் காண்பித்துக்கொண்டு ஏழைகளுக்காகப் குரலெழுப்புவதாகக் கூறிக்கொண்டு நாடகம் ஆடும் இவர்களது வேஷம் வெளிப்பட்டுவிடும் என்பதும் காரணமாக இருக்கலாம்.
***
இது மட்டும் போதாது. நம் கோரிக்கைகள் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் சகோதரர்கள், பெற்றோர்கள் , குழந்தைகள் எங்கே என்ன செய்கிறார்கள். படிக்கிறார்கள் என்றால் எந்தக் கல்லூரியில் , பள்ளியில் படிக்கிறார்கள் ? குடும்பத்தினர் அனைவரின் சொத்துக் கணக்கும் தாக்கல் செய்யப் படவேண்டும். இது உடனடியாய்ப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. ஆனால் பின்னாட்களில் ஊழல் குற்றம் சாட்டப் பட்டால் என் மாமனாருடையது இந்தப் பணம், என் மச்சானுடையது இந்த மாளிகை என்று சாக்குச் சொன்னால் , இந்தக் கணக்கு வழக்குகள் பகிரங்கமாக்கப் படவேண்டும். இதிலும் சிக்கல் உண்டு தான். உடன்பிறவா சகோதரிகள் முளைக்கக் கூடும் தான்.
எந்த தமிழினத்தலைவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்கிறார்கள்; ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள் ? எந்த இந்துமதப் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை கிரிஸ்துவப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் ? எந்த இஸ்லாமியப் பாதுகாவலர்களின் குழந்தைகள் என்ன, எங்கே வேலை செய்கிறார்கள் ? இவர்களது குழந்தைகள் யாருக்காக வேலை செய்கிறார்கள் ? அவர்களது சம்பளம் என்ன ? அவர்களுக்கு எப்படி இந்த வேலைகள் கிடைத்தன ? இவை யாவும் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் அரசியல் வாதிகளின் குழந்தைகள் எல்லோருக்கும் பொதுவான அரசாங்கப்பள்ளிகளில்தானே படிக்க வேண்டும் ? இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், இந்தியாவின் பிரத்யேக ஆங்கிலப் பள்ளிகளிலும் சிறப்பான கல்வி பெறவேண்டும் ?
சுருக்கமாய்ச் சொல்லப் போனால் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பிரதிநிதியாய் ஆக எண்ணுபவர்கள் வாழ்க்கை திறந்த புத்தகமாய் இருக்க வேண்டும். இவர்களூக்குச் சம்பளம் போதவில்லை என்றால் அதிகபட்சச் சம்பளம் , சட்டபூர்வமாய்க் கிடைக்க வழி செய்ய வேண்டும். சட்டபூர்வமற்ற வழியில் பணம் ஈட்டும் வழிகள் அடைக்கப் படவேண்டும்.
***
இந்த அரசியல்வாதிகளின் சொத்து எந்த வருடம் என்னவாக இருந்தது ? வருடா வருடம் இவர்கள் கட்டிய வருமானவரி படிவங்கள். எல்லாமும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
எந்த எந்த சொத்து எப்படி ஈட்டப் பட்டது என்பதற்கான விளக்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
***
எல்லா அரசியல்கட்சிகளின் கணக்கு வழக்குகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். எவ்வளவு பணம் யார் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். பொது மக்களிடன் வசூலித்த பணம் என்ன ? எப்போது வசூலிக்கப்பட்டது ? யார் வசூலித்தார்கள், அதற்கான ரசீது, ஆகியவை அனைத்தும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதே போல, இந்த அரசியல் கட்சிகள் செய்யும் ஒவ்வொரு செலவும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். (ஆடிட்டர்கள் இதனை சரிபார்த்து விட்டார்கள் என்று தப்பமுடியாது. ஆடிட்டர் சரிபார்த்ததை பொதுமக்கள் சரிபார்த்தால் என்ன தவறு நடந்துவிடப்போகிறது ?)
***
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்யும் முறையில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு நம்மிடம் முன்பெ உதாரணங்கள் உண்டு. அலகாபாத் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு அவசரநிலைப் பிரகடனம் கொண்டுவந்து அதனால் இந்தியாவை இருண்ட காலத்தில் தள்ளினார் இந்திரா காந்தி. ஷா பானு வழக்கில் தீர்ப்பை உதாசீனம் செய்து, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி , இந்து தீவிரவாதிகளின் வாய்க்குத் தீனி போட்டார் ராஜீவ் காந்தி. வாஜ்பாய் இப்போது இந்தத் தீர்ப்பை உதாசீனம் செய்து அரசியலில் சற்றே நேர்மையாளர்கள் வரவிருக்கும் வாய்ப்பையும் குழி தோண்டிப் புதைக்கப் போகிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் இருந்திருந்தால் இன்னேரம் இதை முன்னிட்டுப் போராட்டமே தொடங்கியிருக்கும். ஆனால் நம்மிடையே அரசியல் தாண்டிய சிந்தனை யாருக்குமே இல்லாத ஒரு அவலமான நிலை.
***
ஜனநாயகம் என்பது ஓட்டுப்போடும் சக்தி மக்களிடம் இருப்பதில் மட்டும் இல்லை. ஓட்டு பெறுபவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள்தானா என்று அறிவதிலும் இருக்கிறது. யாருக்கு ஓட்டுப்போட்டாலும், ஓட்டுப்பெறுபவர்கள் அவர்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்பது போன்ற உணர்வு மக்களிடம் வந்தால், சாதாரண மனிதர்கள் இவர்களது அரசியல் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்ற உணர்வு வந்தால் இரண்டு நாட்கள் இருக்காது நம் ஜனநாயகம். அந்த நம்பிக்கையை உடைக்காமல் இருக்கும் பொறுப்பு இன்றைய பிரதிநிதிகளிடம் இருக்கிறது.
***
manjulanavaneedhan@yahoo.com
- அவள் அழுகிறாள்….
- மருமகள்
- ஒலிக்கும் சதங்கை
- யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்
- விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)
- திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘
- மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்
- கண்ணே! கவிதைப் பெண்ணே!
- கனவு வந்து போனது
- இதுவும் அதுவும்
- ஆழம்
- ஐந்தாம் வகுப்பு நண்பன்.
- நட்பு
- அந்த ஒரு மாதம்…
- ஆழ்ந்த ஆசை
- அதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்
- சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.
- இந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)
- ஒலிக்கும் சதங்கை
- கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..
- இலைக் குணம்