தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

மாலன்


பாலியல் கதைகள் எழுதியதற்காக தளைய சிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியில் ஜெயமோகன் எழுதியிருந்ததாக ராஜநாயகம் தனது திண்ணைக் கடிதத்தில் கூறும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

ஜெயமோகனின் இந்தத் தகவல் உண்மைக்கு மாறானது. ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு செய்யப்படும் அவதுெறு இது. தளைய சங்கம் மறைந்து 30 வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவரது வரலாறு, அவர் நுலெ¢கள் பரவலகக் கிடைக்காத சூழ்நிலையைப் பயன்படுத்தித் திரிக்கப்படுவது கவலை தருகிறது.

தளைய சிங்கத்தின் மரணத்தைப் பொறுத்தமட்டில் சுந்தர ராமசாமி தந்துள்ள தகவல்கள்தான் சரியானது. 1971ல் புங்குடுத் தீவில் நடந்த நன்னீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க நடந்த போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு தளையசிங்கமும் கலந்து கொண்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகிறார். அதன் பின் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973 ஏப்ரல் 3ம் தேதி காலமாகிறார். மரணமடையும் போதுஅவருக்கு வயது 38.

தான் நம்புகிற லட்சியங்களுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுகிற எழுத்தாளர்கள் இப்போது தமிழில் அருகிவிட்டார்கள்.சமூகத்திற்கான போராட்டங்களில் எழுத்தாளன் ஈடுபடுவது தமிழில் இகழ்சியாகக் கூடப் பார்க்க, பேசப்படுகிறது. (ஆனால் கன்னட எழுத்தாளர் சிவராம் கராந்த் கடைசிவரை சுற்றுச் சூழலுக்காகப் போராடி வந்தார். மலையாளக் கவிஞர் சுகிதகுமாரி குடிப்பழக்கத்திற்கெதிராய்ப் போராடி வருகிறார். தெலுங்கில் கத்தார் சமூக விடுதலை இயக்கத்தில் நேரடியாக ஈடுபட்டவர். வங்க எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி மலைவாசிகளின் உரிமைக்காகப் போராடி வருகிறார்.) தளையசிங்கம் பலவிஷயங்களுக்காக களம் இறங்கிப் போராடியவர் அதிலொன்றுதான் புங்குடுத் தீவில் நடந்த நன்னீர் கிணற்றுப் போராட்டம். புங்குடுத்தீவுதான் அவர் பிறந்த இடம். அவர் துறவறம் பூண்ட பின் நடந்த போராட்டம் இது என்பதைக் கவனித்தால் அவர் துறவு நிலையிலும் தன் சமூகக் கடமைகளைத் துறந்துவிடவில்லை, மாறாகக் களம் இறங்கிப் போராடினார் என்பது புரியும்.

1966ம் ஆண்டு , அவரது 31ம் வயதில் நந்தகோபாலகிரி என்கிற துறவியுடன் அறிமுகம் ஏற்பட்டபின், தியானம், சமூகப்பணி, சர்வோதயம் என்று அவர் வாழ்க்கை திரும்புகிறது. நந்தகோபாலகிரி, அவருக்கு ‘விநாயகதாஸ் ‘ என்று ஆசிரமப் பெயர் இடுகிறார். சசி என்றும் தளையசிங்கத்திற்கு ஒரு பெயர் உண்டு.

மாணவப் பருவத்திலிருந்து அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர் தளையசிங்கம்.இலங்கைத் தமிழர்களது அரசியல் பிரசினைகளுக்கு தனிநாடுதான் தீர்வு என்று 1960ம் ஆண்டே எழுதியவர். ‘ நாங்க சம்ஷ்டி கேட்கக் கூடாது மாஸ்டர்.இனி தனித் தமிழ்நாடு கேட்பது, அதற்காகப் போராடுவதுதான் தமிழன் செய்ய வேண்டிய வேலை. அதில் வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாது.அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது.சரித்திர நியதி அது. சுதந்திரம் கிடைக்கும்வரை நாம் போராடுவோம். போராடுகிறபோது எங்களில் பலர் சாவினம்.அதுக்காக நாங்க பயந்திர மாட்டம் ‘ என்று அவருடைய பாத்திரம் ஒன்று 1960ல் எழுதப்பட்ட நாவலில் பேசுகிறது. ( சிங்கராசன் ெ ஒரு தனி வீடு)

அவரது அரசியல்/சமூகப் பார்வையை கம்யூனிசம், காந்தியம் என்ற கருத்தாக்கங்கள் செல்வாக்குச் செலுத்தியதாகக் கருத இடம் இருக்கிறது.ஈழப் பிரிவினையைக் கம்யூனிஸ்ட்கள் எதிர்த்ததால் அவர்களை விமர்சித்து இவர் எழுதினார்.

இப்படி ஒரு வாழ்வை மேற்கொண்டவரை ‘ பாலியல் கதைகள் எழுதி அதற்காக அடிபட்டுச் செத்தவர் என்பது போல் சித்தரிப்பது வருந்தத்தக்கது.சாரு நிவேதிதாவை தொழுகை படிக்குமாறு சிபாரிசு செய்யும் ஜெயமோகனை, தளையசிங்கத்தினுடைய போர்ப்பறை (குறிப்பாக அதன் முன்னுரை) ஒரு தனி வீடு ஆகிய நுலெ¢களைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையில் இன்று விவாதிக்கப்பட வேண்டியது தளையசிங்கத்தின் ஆன்மீகக் கருத்துக்கள் அல்ல.கம்யூனிசம்/ மார்க்சியம் மீது அவர் வைக்கும் சில கருத்துக்கள்/ கேள்விகள். ‘ கம்யூனிசம் காட்டும் சமூக, அரசியல், பொருளாதாரப் பார்வையின் பக்க பலத்தோடு, எமது ஆழமான சமய கலாசார உரிமைகளையும் ஏற்றுக் கொண்டு, எவன் போராடுகிறானோ அவனே எந்த விடுதலை இயக்கத்திற்கும் தலமை தாங்கக் கூடியவனாக இருப்பான் ‘ என்று அவர் ஓரிடத்தில் எழுதுகிறார்.

மண்ணின் ஆழமான சமய கலாசாரத்தை மார்க்சியத்தோடு இணைப்பதில் உள்ள முரண்பாடுகள் எண்பதுகளின் இறுதியில்,

தொண்ணுெறுகளின் துவக்கத்தில் லத்தீன் அமெரிக்காவில் சில புதிய இயக்கங்களுக்கு இட்டுச் சென்றது. நெகிழ்ந்து கொடுத்து மண்ணின் கலாசார, நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத ‘டாக்மாட்டிசம் ‘ சோவியத் யூனியனின் சிதறலுக்குக் ஒரு, காரணமாயிற்று. இந்தியாவில் வகுப்புவாத, மதவாத, பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் காரணமாயிற்று. தமிழ்நாட்டில் ஜெயகாந்தன் போன்றோர், கம்யூனிச இயக்கத்திலிருந்து அந்நியப்பட நேர்ந்தது.

இது குறித்து ஆராய்வது ஊட்டியில் தொழுகை நடத்துவதை விட அவசியமானது.

***

Series Navigation

மாலன்

மாலன்