அரிதார புருஷர்களின் அவதார மோகம்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

பொன் முத்துக்குமார்


சில வாரங்கள் முன்பு ராஜ்ஜியம் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. (முறைக்காதீர்கள் தயவு செய்து)

பேரூந்து மற்றும் புகைவண்டி நிலையங்களில் இறங்குபவர்கள் எல்லோருக்கும், அவர்கள் பாதம் தரையில் பாவுமுன்னே தங்கள் நிறுவனத்திலேயே வேலை நியமன உத்தரவு தருவதாகட்டும் (வளாக நேர்முகம் – கேம்பஸ் இன்டர்வியூ கேள்விப்பட்டிருக்கிறோம், பஸ்ஸ்டாண்ட்/ரெய்ல்வே ஸ்டேஷன் இன்டர்வியூ கேள்விப்படுவது இதுவே முதன் முறை. புதுமையான கருத்துக்கு இயக்குநருக்கு வாழ்த்துக்கள்), தகுந்த நிறுவனங்களுக்கு ஆற்றுப்படுத்துவதாகட்டும் – தனியார் துப்பறிவாளராக நடிக்கும் விஜய்காந்த், தன் படையினரை நிறுத்தி தேவை அறிந்து சேவை செய்யும் பாங்கு; அடடா, புல்லரிக்க வைத்துவிட்டது. (ஏன் விமான நிலையத்தை விட்டுவிட்டார்கள் என்று புரியவில்லை)

படத்தில் கிஞ்சித்தும் சம்பந்தமின்றி தன் ரசிகர் மன்ற கொடியை முன்னிலைப்படுத்தியது தவிர (படத்தில் அவர் தம்பி கதாபாத்திரம் உடுத்தும் சட்டையின் வண்ணம் கூட அவர் ரசிகர் மன்ற கொடி வண்ணம். மேலும் எந்த தனியார் துப்பறிவாளர் தன் அலுவலகத்தில் தனக்கென கொடியோடு வேலை செய்கிறார் ?) உருப்படியாக என்ன செய்திருக்கிறார் என்றே புரியவில்லை.

அது சரி, தனியார் துப்பறியும் நிபுணராக சமர்த்தாக துப்பறிந்துகொண்டிருக்க மாட்டோரோ ? ஏன் திடாரென்று ‘தமிழன் தமிழன், இவன்தான் தமிழன், தலைவன் தலைவன், இவன்தான் தலைவன் ‘ என்று வீர நடையும், திறந்தவெளி ஜீப்பில் கையசைப்பும், ஆளுயர மாலையுமாய் மக்கள் வெள்ளத்தில் (அரசியல்வாதிகளின் தொண்டர் பலம் காட்டும் திறமைக்கு ஒரு சவால்; சபாஷ், சரியான போட்டி) மூழ்க ஆரம்பித்துவிடுகிறார் ?

அங்கே ரஜினிகாந்த் ‘நாளைக்கு என்ன நடக்கும்-னு இன்னைக்கு என்னால சொல்ல முடியாது ‘ போன்ற பிரசித்தி பெற்ற வசனங்கள் மூலமும், தன் மெளனம் மூலமும் வெற்றிகரமாக எல்லோரையும் மர்மத்தில் ஆழ்த்தி தத்தம் யூகங்களுக்குள் பிராண்டவைத்திருக்கிறாரென்றால், இவர் வெளிப்படையாக தன் ஆசையை இந்த படத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். ஒருவேளை மதுரையில் இவரது ரசிகர் மன்றத்தினர் சிலர் உள்ளாட்சித்தேர்தலில் வென்றது ஊக்கம் தந்திருக்கக்கூடும். நடிகர் சங்கத்திற்கு தலைமை வகிக்கும் அனுபவம் மாநிலத்திற்கு தலைமை ஏற்க உதவும் என்று கணக்கு போட்டிருக்கலாம். ( ‘என் ராஜ்ஜியத்தில் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் ‘ என்று வசனம் பேரிய இவரே தன் சம்பள பாக்கிக்காக தயாரிப்பாளர் கெளன்சில் கதவை தட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி)

என் சிற்றறிவுக்கெட்டியவரையிலான, திரைத்துறைக்கும் நிஜவாழ்க்கைக்குமான சில வேறுபாடுகளை சுட்டிக்காட்டிவிட ஆசை.

அ. இங்கே ஒரு குத்தில் அந்தரத்தில் சுழன்று விழ வில்லன்கள் இல்லை.

ஆ. பறந்தும் சுழன்றும் தரும் உதைகளை சில நிமிட இடைவெளிகளில் ஒவ்வொருவராய் வந்து வாங்கிக்கொள்ள தயாராக ஒப்பனை எதிரிகள் வரிசையில் காத்திருக்கவில்லை.

இ. செல்லுலாய்ட் வெளிச்சத்தில் எதிரிகளை பந்தாடுவதும் பிரச்சினைகளுக்கு விரல்முனைகளில் தீர்வு இருப்பதான பாவனையும் இரண்டரை மணிநேர திரைப்படத்தை நிரப்ப மட்டுமே உதவும். நிஜவாழ்க்கைக்கு ஆகாது.

ஈ. உங்கள் தலைமையேற்புக்குப்பின் ‘அதற்குப்பின் நாட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியோடும் மகிழ்வோடும் வாழ ஆரம்பித்தனர் ‘ என்னும் அளவுக்கு ஏதேனும் அற்புதம் நிகழும் என்று எங்கேனும் மனதின் ஒரு மூலையில் நம்பிக்கொண்டிருந்தீர்களானால், மன்னிக்கவும், நமது தேச பிரச்சினைகள் நீங்கள் நினைக்குமளவுக்குமேல் வலுவானவை, ஆழமானவை, அகலமானவை, வேரோடிப்போனவை. ஒரு தீக்குச்சியால் அடர்ந்த இருளை அகற்றும் செயல் போலல்ல இது.

தமது நூலொன்றின் முன்னுரையில் ( ‘விவாதங்கள் விமர்சனங்கள் ‘ என்று ஞாபகம்) ‘திரையில் நடித்து நடித்து தம் நிஜ முகமே மறந்து போனவர்கள் ‘ என்று நடிக நடிகையரைப்பற்றிய ஒரு புகழ்பெற்ற வாக்கியம் எழுதியவரும், ‘ஒரு நாள் முதல்வன் ‘ புகழ் முதல்வன் படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமன்றி திரைக்கதை அமைப்பிலும் உதவியவருமான எழுத்தாளர் சுஜாதா அந்த படத்தைப்பற்றி வெகு அற்புதமாகவும், வலிமையாகவும் எளிமையாகவும் ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.

‘அது ஒரு fairy tale ‘.

இந்த மகா வாக்கியத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மட்டுமின்றி திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான பொது செய்தி இருக்கிறது.

திரைப்படங்களில் நடிப்பதும், சடங்குகள் போல பிறந்த நாளின்போது ஏதேதோ தானங்கள் வழங்குவதும் மட்டுமே மாநில முதல்வராவதற்குரிய தகுதிகளை தந்துவிடாது.

படத்தின் கதையோட்டத்திற்கு துளியும் சம்பந்தமின்றி என்னவோ மண்ணிற்கு இறங்கிவந்த இறைதூதர் என்ற நினைப்பில் ‘தலைவன் தலைவன், இவன்தான் தலைவன் ‘ என்று எல்லோர் மனங்களிலும் திணிக்கும் வன்முறை, அறிவுடைமை செயலாக தெரியவில்லை. இதுபோன்ற காட்சிகள் மூலம் ஏதோ உங்களை விட்டால் இந்த மாநிலத்தை காக்க வேறு நாதியேயில்லை என்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை உலகை உருவாக்க முயல்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. திரையரங்க இருளில், காகித துணுக்குகளையும் காசுகளையும், விசில்களினூடே வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களே உங்கள் ரசிகர்கள், அவர்கள் வேண்டுமானால் எதோ உங்கள் தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல்வதாக கற்பிதம் செய்துகொண்டு பீடமேற்றி சூடம் கொளுத்தலாம். ஆனால் அதையே ஒட்டுமொத்த மக்களிடத்தில் எதிர்பார்ப்பது அர்த்தபூர்வமாக இருக்காது.

நீங்கள் தலைமை ஏற்றபின் எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டுவிடாத திரைத்துறை பிரச்சினைகளை நினைத்துப்பாருங்கள். உங்கள் துறையினரிடமே ஒரு குறைந்த பட்ச ஒற்றுமை கூட ஏற்படுத்த முடியவில்லை. நீங்கள் எப்படி மாநிலத்தை ஒன்றுபடுத்தி கட்டிக்காக்கப் போவதாக எங்களை நம்பச்சொல்கிறீர்கள் ?

தமிழகம் ஏதோ கூறு போட்டு விற்கப்படும் சந்தைபொருள் என்றோ, இசை நாற்காலி என்றோவா எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள், முந்திக்கொள்ள ஆவேசப்படுவதற்கு ? எங்கே தாமதித்தால்/அயர்ந்தால் அடுத்தவர் தட்டிக்கொண்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் உங்களை நீங்களே வேக வேகமாகவும் அவசர அவசரமாகவும் முன்னிலைப்படுத்திக்கொள்வது அவமானமாக மட்டுமல்லாது ஆபாசமாகவும் இருக்கிறது.

திரைப்படக்கலைஞர்கள் என்பதாலேயே தீட்டுப்பட்டவர்கள் என்ற மனோபாவம் எனக்கில்லை. (விஞ்ஞானம், பொறியியல், அரசியல், ஆன்மீகம், சமூகம், தத்துவம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆழ்ந்த படிப்பும் அனுபவமும் பெற்ற அற்புதமான நபர்கள் திரைத்துறையில் இருப்பதை மறுத்தால் நான் ஒரு முட்டாளாவேன் ! ஆனால் அவர்கள் எல்லாம், கொச்சையாக சொன்னால் இப்படி ‘அலைபவர்கள் ‘ அல்ல)

ஆனால், நன்கு படித்த, பண்புள்ள, ஆழமும் அகலமுமான அறிவுள்ள, நிர்வாகத்திறமை மிகுந்த, பொருளாதாரம், அரசியல், சட்டம் போன்ற மிக முக்கிய துறைகளில் அறிவும் அனுபவமும் கொண்ட, வெறும் அறிக்கை அரசியல் நடத்தாத பொறுப்புணர்ச்சியும் நிதானமும், காழ்ப்புணர்ச்சியற்ற பக்குவமும் கொண்ட, தன் திறமைகளை ஏற்கனவே ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிரூபித்துவிட்ட ஒரு தப்பிப்பிறந்த தமிழக அரசியல்வாதி இருக்கிறார். அவர் போன்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதே சாலப்பொருத்தமாகவும் மாநில நலம் பேணுபவர்கள் செய்ய விரும்பும் செயலாகவும் இருக்கும்.

ஏன், இந்த மாநிலத்திற்கு அப்படிப்பட்ட யோக்கியதையோ, அருகதையோ இல்லாமல் போய்விட்டதா ? அப்படிப்பட்டவர்களால் ஆளப்படுமளவு இன்னும் தமிழகம் ஆசீர்வதிக்கப்படவில்லையா என்ன ? அல்லது இந்த ஆசை வெறுங்கனவாய் – உடோபிய மனோபாவமாகத்தான் போய்விடவேண்டுமா ?

இன்னொருபக்கம் என்னடாவென்றால், என்னவோ ‘வேண்டாம், வேண்டாம் ‘ என்பவரை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து நாற்காலியில் திணித்து, தலைக்கு கிரீடம் சூட்டி ஆட்சிக்கட்டிலை தாரைவார்க்க ஒட்டு மொத்த தமிழகமும் தவம் இருப்பது போலவும், திராவிட கட்சிகளின் கரங்களிலிருந்து இவரால்தான் தமிழகத்திற்கு மீட்சியே என்பது போலவும் ரஜினிகாந்த் தன் திரைப்படங்கள் மூலம் ஒரு மாயையை உருவாக்குவது அருவருப்பாக இருக்கிறது. (அவருடைய ஆதரவு சதவீதம் வெறும் ஆறு சதம்தான் என்று சில வருடங்கள் முன் வெளியான புள்ளிவிபரம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா ?) இதற்கு சோ போன்றவர்களும், ‘இளைஞர்கள் பக்கத்துணையுண்டு, உடன்வர மக்கள் படையுண்டு, முடிவெடு படையப்பா ‘, ‘உனது ராஜாங்கம் இதுதானே, ஒதுங்கக்கூடாது நல்லவனே ‘ என்று அபத்தக்களஞ்சியங்களாக எழுதிக்கொண்டிருக்கும் ( ‘இவன்தான் தலைவன் ‘ பாடலின் கேவலத்திற்கு சற்றும் குறைவில்லாதவை இந்த பாடல்களும், படத்திற்கு துளியும் சம்பந்தமே இல்லாத பாடல் காட்சிகளும்) வைரமுத்து போன்றவர்களும் பக்கபலம்.

எனக்கென்னவோ ஒரு வெற்றிகரமான சினிமாக்காரராக ரஜினிகாந்த் தன் திரைப்படங்கள் ஓடுவதற்கு செய்யும் சில எளிய மலிவான தந்திரங்கள் அவை என்றுதான் தோன்றுகிறது. அவருடைய ஆசை வள்ளி-யிலும் முத்து-விலும் வெளிப்பட்டுவிட்டது. (இல்லறம் துறந்து ஆன்மீகப்பித்தராக அலைவது; இருப்பினும் ‘எப்போ வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது; ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் ‘ என்று பேசின வசனம் இன்னும் உயிரோடு இருக்கிறதோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது)

போதாக்குறைக்கு தான் முன்கூட்டியே கணித்திருந்து பலித்ததாக சில நிகழ்வுகளின் பட்டியலை ஆதாரமாக காட்டி, 2006-ல் ரஜினிகாந்த்-தான் தமிழக முதல்வர் (அப்போது ஜெ. பிரதமராய் இருப்பார் என்றும்) என்று ஒருவரும் விஜய்காந்த்-தான் முதல்வர் என்று ஒருவருமாய் ஆரூடம் சொல்லிக்கொண்டு சில ஜோதிடர்கள் கிளம்பியிருக்கிறார்கள். (விஜய்காந்த் முதல்வராவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, ராஜ்ஜியம் ஆளப்பிறந்தவர்களின் முதுகில் இருக்கும் மச்சம் அவர் முதுகிலும் இருப்பதாம். குமுதம் இதழில் வெளிவந்த சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தவிர வேறெந்த இதழிலாவது வேறெதாவது ஜாதக / கிளி / நாடி / சோழி இன்னபிற ஜோதிட வல்லுனர்கள் வேறேதேனும் கணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை)

தவிரவும், இது எதேச்சையா, கொம்பு சீவி விடலா, குளிர்காயலா அல்லது ஆழம் பார்த்தலா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

இதெல்லாம் விட பெரிய கொடுமையான நகைச்சுவை என்னவென்றால், இவர் அடியொற்றி அவர் என்ற கணக்காக, சொற்பமான படங்களே நடித்திருக்கும் இளைய நடிகர்கள் சிலரும் ‘நாளைய முதல்வர் ‘ என்ற கனவில் இருப்பதாக வரும் செய்திகள்தான்.

உண்மையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது இங்கே என்றே புரிந்துகொள்ள இயலவில்லை.

ஒன்று மட்டும் கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

போதும், விட்டுவிடுங்கள் !

***

pmkr@hotmail.com

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்