இந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

மஞ்சுளா நவநீதன்


தேர்தல் கமிஷன் கூத்துகள்

சைதாப்பேட்டை இடைத் தேர்தல்

சைதாப்பேட்டையில் நடந்த ‘தேர்தல் ‘ தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அவமானமாக இருக்கவேண்டும். சென்னையைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்று அதிமுகவின் வெறியர்கள் இடைத்தேர்தலை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆட்சியில் ஒரு கட்சி இருக்கும்போது, அதன் சொல்படிக் கேட்கவேண்டிய போலீஸார் எப்படி ஒரு இடைத்தேர்தலைப் பாரபட்சமின்றி நடக்க அனுமதிப்பார்கள் ? ‘கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்டரஸ்ட் ‘ விசுவாசத்திற்கு முரண்பட்ட வேலை என்று நல்லெண்ணம் கொண்டவர்கள் வழக்குத்தொடுத்துப் பார்க்கலாம். சமீபத்தில் தினமணியில் ஒருவர் இடைத்தேர்தலை நடத்தாமலேயே அந்த தொகுதி வாக்காளர்களுக்கு எப்படி பிரதிநிதித்துவம் வழங்குவது என்று கட்டுரை எழுதினார்.

நம் அரசியல் சட்டத்தை மறுபார்வை பார்க்கக் கிளம்பிய குழு சம்பந்தமில்லாததை எல்லாம் இழுத்துப் போட்டு அறிக்கை கொடுத்தது. இது போன்ற விஷயங்களை விவாதிக்க ஒரு பொது விவாதத் தளம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இல்லாமல் போவது வருந்தத் தக்கது.

ம தி மு க , சிதம்பரத்தின் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை குறிப்பிட்ட சதவீத மக்கள் செல்வாக்கு இருந்தும் கூட பெரும் கட்சிகளின் தயவின்றி , சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெற முடியாத ஒரு அவலம் தொடர்கிறது. விகிதாசார பிரதிநிதித்துவ முறை வரும் வரையில், சமச்சீரற்ற முறையில் அதிகாரக் குவிப்பும், மிருகப் பெரும்பான்மை கொண்ட பெரும் கட்சிகள் அராஜகம் செய்வதும் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

*****

கோவா இடைத்தேர்தல் : தடை செய்யப்பட்ட படங்கள்

ஹேராம் திரைப்படம், கம்யூனலிஸம் கம்பாட், குஜராத் கலவரத்தின் ஒளிநாடாக்கள் என்று கோவாவில் கண்டதையும் தடை செய்திருக்கிறது தேர்தல் கமிஷன். காரணம் ஒழுங்கான தேர்தல் நடக்க இவை தடையாக இருக்குமாம்.

இவை எல்லாமே தேர்தல் பிரச்சாரங்கள் தான் என்பது தேர்தல் கமிஷனுக்குத் தெரியாதா ? மக்கள் என்ன மாங்காய் மடையர்களா ? குஜராத் கலவரங்கள் இந்தியாவில்தானே நடந்தது ? காஷ்மீரில் இறக்கும் இந்துக்களை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முனையும் போது, குஜராத்தில் இறந்த முஸ்லீம்களை வைத்து ஏன் காங்கிரஸ் ஆதாயம் தேட முனையக்கூடாது ? (ஒரு மாறுதலுக்கு வேண்டுமென்றால், காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்படும் முஸ்லீம்களை வைத்து ஓட்டுக்கேட்கலாம்)

காங்கிரஸ் எப்போதும் பிணத்தை முன்னிருத்தி ஓட்டுக்கேட்கும் கலாச்சாரத்தைச் சேர்ந்ததுதானே ? (நேரு, இந்திரா, ராஜீவ் என்று ஒரு நீண்ட வரிசை இருக்கிறது) ஒரு கட்சியின் அடிப்படையையே உடைத்தால் எப்படி ? இப்படி காங்கிரஸை தடுப்பது, இன்னும் பல கட்சிகள் பிணங்களை வைத்து ஓட்டுக்கேட்பதையும் தடை செய்யுமே ? தேர்தல் கமிஷன் முன்னுக்குவந்து, பாஜக காஷ்மீர் இந்துக்களின் பிணங்களை வைத்து ஓட்டுக்கேட்கக்கூடாது என்று கூறுமா ?

கருத்துகளைத் தடை செய்வது, பொறுப்பற்ற அரசியல் கட்சிகளுக்குப் பொறுப்பை வரவழைக்கும் என்று தோன்றவில்லை.

சைதாப்பேட்டையிலும், வாணியம்பாடியிலும் முதல்வரால் தேர்தல் வாக்குறுதிகள் வாரி வாரி வழங்கப்பட்டன. அதன் அத்துமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை.

***

முஷாரஃப்பும் வாஜ்பாயியும் : ஏச்சும் பேச்சும்

கத்தி முனையில் நடக்கும் ஒருவரைப் பார்க்க வேண்டுமென்றால் முஷாரஃபைத் தான் பார்க்கவேண்டும். கனவுகள் கற்பனைகள் காகிதங்களாகப் போன காஷ்மீர் கனவுகளும், விடுதலைப்போர்வீரர்கள் கற்பனைகளும், லாகூர் ஒப்பந்தக் காகிதத்தைக் கிழிக்காமல் இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும் எல்லாமும் முஷாரஃபின் வரிகளில். நடுவில் அணுகுண்டு இந்தியாவில் வீசுவோம் என்று வீர வார்த்தைகள். பிறகு, பைத்தியக்காரர்கள் தான் அணுகுண்டை உபயோகிப்பார்கள் என்று பின்வாங்கல்.

முஷாரஃபும் வாஜ்பாயியும் மீண்டும் கஜாகஸ்தானில் இருக்கும் அலாமட்டியில் சந்திக்கச் செல்கிறார்கள் அடுத்த வாரம். வாஜ்பாயியின் விடாமுயற்சியைப் பார்த்தால் காந்திக்கே புல்லரித்திருக்கும். லாகூர் பஸ் என்ன, கார்கிலுக்குப் பிறகும் ஆக்ரா பேச்சுவார்த்தை என்ன, ஜம்மு சட்டமன்றம், இந்திய பாராளுமன்ற தாக்குதல்களுக்கு அப்புறமும் காட்மண்டுவில் கைகுலுக்கல் என்ன, மீண்டும் ஜம்முவில் பெண்கள் குழந்தைகள் படுகொலைக்குப்பின்னரும், அலாமட்டியில் கைகுலுக்கலும் பேச்சு வார்த்தையும்.

இதற்கப்புறமும் முஷாரஃபின் விடுதலை வீரர்கள் இந்தியப் பெண்களைக்கொன்றும், இந்தியக்குழந்தைகளைக் கொன்றும் வெறியாட்டம் ஆடுவார்கள் நிச்சயம். வாஜ்பாயி மீண்டும் சில கோப வார்த்தைகளைப் பேசிவிட்டு தாய்லாந்தில் பேச்சுவார்த்தை செய்தாலும் செய்வார்.

நினைத்தால் திறந்துவிடவும், நினைத்தால் மூடிவிடவும் பயங்கரவாதம் ஒன்றும் குழாய்த் தண்ணீர் அல்ல என்பது முஷரஃபிற்குத் தெரியாததல்ல.

புணரபி மரணம், புணரபி பேச்சுவார்த்தை

*****

காஷ்மீர் மக்கள் யாருடன் ?

காஷ்மீரில் கருத்துக்கணிப்பு செய்து இந்திய அரசாங்கத்தின் மூக்கை உடைக்கவேண்டும் என இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய எதிர்ப்பு எம்பி ஒருவர் ஒரு தனியார் நிறுவனம் மூலம் கருத்துக்கணிப்புக்கு ஏற்பாடு செய்தார்.

கருத்துக்கணிப்பில் அந்த தனியார் நிறுவனம், சுமார் 61 சதவீத காஷ்மீர மக்கள் இந்தியக் குடிமக்களாகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். சுமார் 6 சதவீத மக்களே பாகிஸ்தான் குடியுரிமை பெற விரும்பியிருக்கிறார்கள். 33 சதவீதத்துக்கு தெளிவாகக் கருத்துசொல்லத் தெரியவில்லை. இவர்கள் ஒருவேளை தனிநாடு கேட்க விரும்பியிருக்கலாம் என கருத்துக்கணிப்பு சொல்கிறது. அது ஒரு கேள்வியாக இல்லை. சுமார் 84 சதவீத மக்கள் பாகிஸ்தான் காஷ்மீரில் குட்டையைக் குழப்புகிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

எனக்கு இது ஆச்சரியமாக இல்லை. காஷ்மீர மக்களும் எல்லா மக்களைப்போலவே சுதந்திரமும், வளமையையும் தான் எதிர்பார்க்கிறார்கள். இவ்வளவு கோடி கோடியாக செலவு செய்தும் சுமார் 6 சதவீத மக்களைத்தான் பாகிஸ்தான் ஆதரவாகத் திருப்ப முடிந்திருக்கிறது என்பது பாகிஸ்தானிய ராணுவத்தலைவர்களுக்கு அவமானம். ஆனால், அவர்கள் மக்கள் உணர்வை கருத்தில் கொள்ளும் தலைவர்கள் இல்லையே.

காஷ்மீர் பற்றி இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறிப் பேசுகின்றனவே தவிர காஷ்மீர்வாசிகளின் குரல் எங்கே என்று தேடித் தான் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் ஒரு குரல் எழுந்தால் அந்தக் குரலை நெறிக்க ஃப்ரூக் அப்துல்லா உடனே தயார். பாகிஸ்தானும் உடனே ஆட்களை அனுப்பி, குரலுக்குச் சொந்தமான ஆட்களைத் தீர்த்துக் கட்டிவிடும். பாகிஸ்தானில் மாறி மாறி அராஜகமான சர்வாதிகார ராணுவம் ஆட்சிக்கு வருகிற அவலட்சணம் காஷ்மீர் மக்களுக்குத் தெரியாததல்ல. ஜனநாயக இந்தியாவைக் காட்டிலும், சர்வாதிகார பாகிஸ்தானுடன் சேர காஷ்மீர் துடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் செய்யும் முயற்சி ஒரு பெரும் கேலிக்கூத்து.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்