கரு.திருவரசு, மலேசியா.
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்
— நல்ல தமிழ்க்கவிஞன்
தமிழர்தம் பெயர்களுக்கு முன்னால் எழுதப்படும் தந்தையர் பெயரைக் குறிப்பிடும் எழுத்துகள் பற்றியும், பொதுவாகத் தமிழர்தம் பெயர்களை எழுதும் முறைபற்றியும் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாமா ?
இந்தத் திசையில் ‘தமிழில் பெயரிடுவோம் ‘ எனும் பெயரில் நண்பர் நாரண.திருவிடச்செல்வன் 1980ஆம் ஆண்டு ஒரு நூல் வெளியிட்டு அதன் மறுபதிப்புகளும் வந்துள்ளன. அந்த நூலில் வரும் ‘தமிழர் பெயர்களின் முன் ஆங்கிலத் தலையெழுத்து ‘ பற்றிய சிறு பகுதி:
தந்தை பெயரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் ஏன் ?
ஒரு சீன நண்பரும் நானும் தமிழ்ப்படம் பார்க்கப் போயிருந்தோம். படம் தொடங்கியதும் ‘M.G.ராமச்சந்திரன் ‘, ‘B.S.சரோசாதேவி ‘, ‘V.K.ராமசாமி ‘, ‘M.S.விசுவநாதன் ‘ என்றெல்லாம் கலைஞர்களின் பெயர்கள் வெண்திரையில் காண்பிக்கப்பட்டன. சீன நண்பர் கேட்டார்: ‘ஏன் பெயர்களுக்கு முன்னால் ‘M.G., B.S., V.K., M.S. என்று ஆங்கில எழுத்துகளைக் காட்டுகிறார்கள். அந்த எழுத்துகளைத் தமிழில் காட்டமுடியாதா ? அல்லது தமிழில் எழுத்துகள் இல்லையா ?
எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவது எனத் தெரியாது சற்று நேரம் தடுமாறிவிட்டேன். பின்னர், ‘இருக்கிறது. ஆனால் எப்படியோ தெரியவில்லை, இப்படியே எழுதி எழுதிப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. இன்றுவரை தந்தை பெயரை ஆங்கிலத்தில் எழுதுவது தவறு என்பதை உணராமலேயே இருக்கிறார்கள் எங்கள் தமிழர்கள். ‘ என்று கூறிச் சமாளித்தேன்.
இந்த உரையாடலில் வந்தபடி ‘தமிழர் பெயர்களின்முன் வரும் தந்தையர் தலையெழுத்து எழுதும் முறை ‘ மாறியிருக்கிறதா ?
இந்தக் கேள்வி அப்படியே இருக்க, அண்மையில் நம் நாட்டுத் (மலேசியா) தேசியப் பதிவுத்துறை நாம் பெயரெழுதும் முறையில் ஒரு மாற்றம் கொண்டுவரத் திட்டமிடுவதாகச் செய்தி வந்தது. ‘பெயருக்கிடையில் A/L,(S/O) A/P (D/O) அதாவது Anak Lelaki, Anak perempuan என்று எழுதுவதற்கு மாறாக நம் பெயருடன் தந்தை பெயரையோ குடும்பப் பெயரையோ சேர்த்து எழுதும் முறையைக் கொண்டுவரலாம் ‘ எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரைக் கண்ணங் கூத்தனார்.
தமிழர் பெயரெழுதும் முறை அல்லது மரபு என்னவெனப் பின்னோக்கிப் பார்த்தால்,
தந்தை பெயரை முதலிலும் அதோடு தன் பெயரையும் சேர்த்து எழுதிவந்தது தெரிகிறது. இம்முறை இருந்த காலத்திலேயே தம் ஊர்ப்பெயரையும் பெயரோடு சேர்த்து எழுதுவதும் பெருக நடந்துள்ளது.
அகநானூற்றில் வரும் பெயர் அன்னி மிஞிலி, சங்ககாலக் குறுநில மன்னன் அன்னி தந்தை, மிஞிலி மகள். பொதும்பில் கிழார் வெண்கண்ணியார், பொதும்பில் கிழாரின் மகள் வெண்கண்ணியார். இனியவை நாற்பது பாடிய பூதஞ்சேந்தனார், பூதன் மகனாகிய சேந்தனார். நாமலார் இளங்கண்ணன், நாமலார் மகன் இளங்கண்ணன். கார்நாற்பது பாடிய மதுரைக் கண்ணங் கூத்தனார், தந்தை கண்ணன், மகன் கூத்தன்.
ஊர்ப்பெயர், தந்தையார் பெயர், தன் பெயர் என்ற முறையில், இடையில் இருந்த தந்தை பெயரை விட்டுவிட்டு, கணியன் பூங்குன்றனார், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனப் பெயரோடு ஊரைமட்டும் சேர்த்தெழுதும் முறையும் தொடர்ந்தது.
தன் பெயரில் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துக்கொள்வது, அதனோடு சிலர் அன்னை பெயர் முதலெழுத்தையும் சேர்த்துக்கொள்வது, அதனோடு ஊர்ப்பெயர் முதலெழுத்தையும் சேர்ப்பது போன்ற எல்லா முறைகளிலும் வென்ற முறையாக நிற்பது அந்த முதலெழுத்துகளை ஆங்கில எழுத்தால் எழுதும் அவலம்தான்.
இலக்கியம், பண்பாடு, மரபு என்பதற்கெல்லாம் நமக்கு முதல் அன்றும் இன்றும் தமிழ்நாடுதான். பெயர்களில் ‘ஆங்கிலத் தலையெழுத்து ‘ அவலமும் அங்கிருந்துதான். ஆங்கிலக் கலப்பு என்பது அங்கே ஓர் அளவில் நிற்குமென நம்புவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. அதற்கு மாறான நடைமுறைதான் வளர்வதாகத் தெரிகிறது. அங்கே சோறு சாப்பிடுவதைவிட ‘ரைசு ‘தான் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். காலையில் பசியாறமாட்டார்கள். ‘டிபன் ‘தான் சாப்பிடுவர். உணவகத்தில் ‘புல் சாப்பாடு ‘தான் கிடைக்கும், முழுச் சாப்பாடு அல்ல. அவர்களின் பழக்க வழக்கம் இப்போதைய வேகமான ஊடக வளர்ச்சியால் உடனுக்குடன் தமிழர் வாழுமிடமெல்லாம் பரவினாலும் அதையும் மீறி, புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழிப் பயன்பாட்டு முறை, நிலை சிறப்பாகவே விளங்குகிறது. அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதை விடக் காரியங்களைப் பார்ப்போம்.
நம் இனத்தின் சரிபகுதி மக்களான பெண்கள் ஏற்கெனவே தம் தந்தை பெயரைத் தம் பெயருடன் சேர்த்தே எழுதிவருகின்றனர். அவர்களுக்குத் திருமணமானதும் தந்தை பெயரை எடுத்துவிட்டுக் கணவர் பெயரைச் சேர்த்துக்கொள்கின்றனர். இது மேற்குநாட்டு இறக்குமதிப் பழக்கம் என்பதாலோ என்னவோ இதுவும் ஒரு பெண்ணடிமைத்தனம் என்பதை அவர்கள் உணரவில்லை. அந்த ஆங்கிலவழியே
இன்னும் கொஞ்சம் மேலேபோய்த் தன்பெயர், தந்தைபெயர் அனைத்தையும் விட்டுவிட்டு கணவர் பெயரை மட்டுமே (திருமதி குப்புசாமி, திருமதி கந்தசாமி) வைத்துக்கொள்கின்றனர். திருமதி என்பது மதிப்புக்கான அடைமொழியா ? இன்னார் மனைவியெனக் காட்டும் அடையாள மொழியா ?
இப்படியே பார்த்தால் தமிழர்கள் தாங்கள் பெயர்வைத்துக்கொள்ளும் முறையிலும் ஒரு சீர்மையைக் கடைப்பிடியாமை தெரிகிறது. எனவே, நம் நாட்டுத் தேசியப் பதிவுத் துறையின் கருத்துரையைப் பயன்படுத்தி மலேசியத் தமிழர்கள் தாங்கள் பெயரெழுதும் முறையைச் சீர்மைப்படுத்திக்கொள்ளலாம்.
ஆறுமுகம் வெள்ளைச்சாமி
பெயர்களுக்கு முன் தந்தை பெயரின் தலையெழுத்தை எழுதுவதை விடுத்து தன் பெயரோடு தந்தை பெயர் முழுவதையும் சேர்த்துப் பயன்படுத்தும் முறை ஆங்காங்கே தொடங்கிப் பரவி வருகிறது. அது கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. ஆறுமுகம் ஏறுமுகம், சந்திரசேகர் சுப்பையா, நம் வானொலி (மலேசிய வானொலி) செய்திப்பிரிவின் ஆறுமுகம் வெள்ளைச்சாமி போன்றாரோடு வானொலி யில் புதிதாக வந்துள்ள அறிவிப்பாளர் பலரின் பெயர்கள் அறிவிக்கப்படும்போது, தந்தையர் பெயர்களும் சேர்த்தே சொல்வதைக் கேட்க முடிகிறது. சந்திரன் இரத்தினம், சுப்பிரமணியம் கந்தசாமி, முருகையா முத்துவீரன், வாசன் ஆறுமுகம். இந்த மாற்றத்தின் வழி தந்தைபெயர் முதலெழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
புதிய தலைமுறை இனிய தமிழ்ப் பெயர்களோடு, முறையான ஒரே சீர்மையான பெயர்களோடு வளர நாம் வழி திறக்கலாம். சிந்து திருவருள், செல்வி மணிமாறன், அன்பன் திருமாமணி, அமுதன் கண்ணன் என்றே இனித் தொடரலாம்.
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்
- ஒரே ஒருமுறை
- இசையோடியைந்த தமிழ்க்கல்வி
- தமிழில் சிறுபான்மை இலக்கியம்
- சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.
- துக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா ? – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )
- விர்ஜின் மேரி
- தேங்காய் பப்பாளி
- பாலும் தேனும்
- பழத்தயிர் (ப்ரூட் லஸ்ஸி)
- கலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்
- அறிவியல் மேதைகள் -மேடம் மேரி கியூரி (Madamme Marie Curie)
- செந்நிறக் கோளம் செவ்வாய் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- நிதர்சனம்
- இந்த வார வெண்பா நான்கு
- வன மோகினி
- விழுவதால் விருதா ?
- புதைகுழி
- சின்ன கவிதைகள் – 3
- ஏடுகள் சொல்வதுண்டோ ?
- இசையோடியைந்த தமிழ்க்கல்வி
- சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.
- ‘மயங்குகிறாள் ஒரு மாது.. ‘ இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் மறைவுக்கு அஞ்சலி.
- தமிழர் பெயரெழுத்தும் தலையெழுத்தும்
- எண்ணமும் அன்பும்
- தமிழில் சிறுபான்மை இலக்கியம்
- புத்தர் ?
- லு பென்னின் தோல்வியும், பிம் போர்டுயின் கொலையும்
- விபத்து